கவிஞர் அப்புத்துரை ஜெகன் (Abdul Jegan) எழுதிய பனி மூடிய புல்வெளி (Pani Moodiya Pulveli) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பனி மூடிய புல்வெளி – நூல் அறிமுகம்

பனி மூடிய புல்வெளி – நூல் அறிமுகம்

சமகாலத்தின் வரையோவியம்

 

கவிஞர் அப்புத்துரை ஜெகன் அவர்களின் பனி மூடிய புல்வெளி எனும் இக்கவிதை நூலில் தன்னுணர்ச்சிக் கவிதைகள் (Lyrical poet) மிகுதிப்படயிருக்கின்றன என்று கூறலாம். வெடித்துக் கிளம்பும் லார்வாக்களின் அழுத்தம் ஒத்திருக்கின்றன கவிதைகளின் மையப்பொருள். தீக்குச்சிகளின் மௌனம் போல் உரசிக் கொண்டு கிடந்தாலும், நிசப்த இருள்பூசி, விஸ்வரூபதரிசன நிலையில் பசியுடன் காத்திருக்கின்றன. கவிதைகள் ஆழமானவைகளாகவும், உள்ளாழம் நோக்கி இழுத்துச் செல்லும் தன்மையுடையதாகவும் விளங்கி நிற்கின்றன.

நீண்ட தூரப் பயணங்களின் அனுபவவெளி கவித்துவ மிகுதியுடன் தன்னுணர்ச்சிக் கவிதைகளாக மிளர்கின்றன. சிற்றோடையின் தூய்மையும் சலசலப்பும் உள்கட்டமைப்பை ஒத்திருக்கின்றன. “இலக்கியப் படைப்புகள் என்பவை ‘நிஜ உலக’க் கூற்றுகளின் புனைவு ரீதியான போலச் செய்தல்கள் தான் என்பதே அவ்வகை அணுகுமுறைக்கான செறிவான நியாயமாக இருக்கலாம். அப்படிப் பார்க்கும்போது தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்பவை தனிநபரின் அந்தரங்கக் கூற்றுடைய புனைவு ரீதியான போலச் செய்தல்களேயாகும். அது ஏதோ ஒவ்வொரு கவிதையும் கண்ணுக்குப் புலப்படாத வார்த்தைகளுடன் தொடங்குவது போல உள்ளது” எனும் ஜான் ஸ்டூவர்ட் மில்லின்(Jan sṭuvarṭ millin) விளக்கம் கவிஞர் ஜெகனின கவிதைகளுக்கான இலக்கியக் கோட்பாடாக விளங்குகின்றன எனலாம்.

இவரின் கவிதைகளில் அகதிகளின் நிர்மூலமான வாழ்வின் அவலம், பிறந்த நாடு குறித்த ஏக்கம், தனிமைத்துயர், கலாச்சார ஒத்துணர்வின்மை, மொழிப்பற்று, இயற்கை, சமூக அவலங்கள் என்பவை தன்னுணர்வு வெளிப்பாடுகளாகக் காணப்பெறுகின்றன. ‘பணம் தான் வாழ்வு என்று எங்கெல்லாமோ அலைகிறோம் இருக்கும் இடத்திலேயே முயன்றால் அது இருப்பதை மறந்து என்ற அர்த்தத்தில்’, உலகம் முழுவதும் அகதிகளாகச் சுற்றிய தம்மவர்களைக் கண்டு,

“வாழ்வைத் தேடி

அலைந்து திரிந்தார்கள்

இருக்கும் இடத்தின்

விடியலை மறந்து”

என்கின்றார். எங்கு, எதில், விடியல் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்க வேண்டும். தம் விடிவு எனும் உணர்வு மேலிடப் புனைவு ரீதியான போலச் செய்தல் வார்த்தைகளாக விரிந்திருக்கின்றன. அதேபோல் இன்னொரு கவிதையில்,

“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

மகிழ்வாய் கிராமத்து விழா

மக்களுக்காகக் காலை இழந்தவன்

வீட்டின் உள்ளே முடக்கம்”

என்கின்றார். இரண்டு காட்சிகள் வேறு வேறு. ஆனால் அதன் மைய இழை இரண்டையும் ஒன்றிணைக்கிறது. அதுதான் தன்முனைக் கவிதைகள் (self- ASSERTIVE VERSES) இக்கவிதையினூடாக, நாட்டில் இழைக்கப்பட்ட பெரும் அவலம். ஏற்பட்டுள்ள அவலநிலை இவை உள்ளெழுந்த கோபத்தீயின் மௌனக் குரல்.

சமூகத்தை உற்றுநோக்கும் கவிஞன், அங்கு நடக்கும் நடப்புகளைக் கண்டு வெகுண்டெழுகிறான். அவ்வாறே கவிஞர் ஜெகனும்,

“முடங்கியது சாலைகள்

கட்சிகளின் போராட்டம்

அவசர ஊர்தி ஓடவில்லை

குடும்பத்தை சுமப்பவன் மரணம்”

இக்கவிதையைத் தந்துள்ளார். ஒருமரணத்தின் பின்னால், எத்தனையோ ஆசைகள், தேவைகள், இழப்புகள், சோகங்கள், வலி, வேதனை இருக்கின்றன. அதைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாத கட்சிகள் நாட்டு மக்களைக் காப்பதற்காகப் போராடுகிறார்கள் என்பது எவ்வளவு போலித்தனம் எனக் கேள்வி கேட்கிறார். தனிமை மற்றும் வறுமையின் துயரை அனுபவதித்தவர்களினால் தான் உணரமுடியும். அதனை இக்கவிஞர் இருகவிதைகளில் எளிய வார்த்தைகளால் மலையின் சுமையைத் தூக்கிக் கவிதையைப் பிடிப்பவரின் மனதில் ஏற்றி விட்டுச் செல்லுகிறார். அக்கவிதைகளானது,

“நாடுகளைக் கடந்து வந்து

பாதுகாப்பு என்று குடியேறினோம்

சுரண்டுபவர்களுக்காக உழைத்து

தனிமையில் வாடுகிறோம்”

“பசியோடு வந்தவர்க்கு

தானும் பட்டினி என்றது

குடிசையின் வெளியே

சமையல் பாத்திரம்”

இவைகளாகும். சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டும் தன்மையும் பல கவிதைகளில் காணப்படுகின்றன. இவைகளெலாம் தன்னுணர்ச்சிக் கவிதைகளின் மிக உன்னதமான கவிதைகளெனலாம். மதச் சடங்குகளில் சிலயிடங்களில் தத்துவார்த்தத்தைத் தாண்டி எதார்த்தம் ஏனில்லை என்பதனை,

“ஆண்டவன் குளிக்கும் போது

பக்தர்கள் பார்க்கிறார்கள்

ஆடை மாற்றும் நேரம்

மூடிய திரைகள் எதற்காக?

இவ்வாறு கேள்வி கேட்கின்றார்.

கவிஞர் ஜெகன் அவர்களின் இக்கவிதை நூல், சமகால நிகழ்வுகள் மற்றும் தனிமனிதவுணர்வுகளின் அற்புதமான பதிவுகளாகத் திகழ்கின்றன. இலக்கியக் கோட்பாடுகளின்படி, தன்னுணர்ச்சிக் கவிதைகளாக எழுதப்பட்டுள்ள இக்கவிதைநூல் சமகாலத்தின் வரையோவியமாகத் திகழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நூல் அறிமுகம் ஏழுதியவர் :


பாரதி சந்திரன்

(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)

வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *