பஞ்சும் பசியும் – தொ. மு சி ரகுநாதன் | மதிப்புரை இரா.சங்கர் 

 

தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கான ஒரு புதிய தடம் வகுத்து தந்த முன்னோடிகளில் மூத்த முதல்வர் தொ.மு.சி. என அழைக்கப்படும் தொ.மு.சிதம்பர ரகுநாதன்
ஆவார். மிகச் சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம்பெறும் முற்போக்கு நாவல. இந்நூலினை கமில் சுவலபில் என்ற செக்கோஸ்லோவியா நாட்டுத் தமிழறிஞர் செக் மொழியில் மொழிபெயர்த்தார் .1951ஆம் ஆண்டு வெளியான இந்நாவல் அக்காலத்திலேயே 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

1940- களில் நமது நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றியுள்ள அம்பாசமுத்திரம், பாபநாசம் மற்றும் மதுரை பகுதியின் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையானது அன்றைய அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கையால் கைத்தறி நெசவுத் தொழிலை எந்த அளவுக்கு சீரழித்தது, அதிலிருந்து விடுபட அந்த மக்கள் நடத்திய போராட்டங்கள், தனி மனிதர்களின் வாழ்க்கையில் இந்த அவல சூழ்நிலையால் ஏற்பட்ட சூறாவளிகள் ஆகியவற்றை இந்நாவல் விவரிக்கிறது.

‌ இந்நூலில் லோகநாயகி அம்மனின் கோயிலை ஒட்டியுள்ள நெசவாளர் குடும்பங்கள் பெருவாழ்வு ஆசைப்படாத ,ஆசைப்பட முடியாத அன்றாடங்காய்ச்சி வாழ்க்கையை, *வடிவேலு முதலியாரை க்கொண்டு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக துவங்குகிறது.
முதலாளிமார்களுக்கு வேவுபார்க்கும் நாரதமுனியாய் சுப்பையா முதலியார்.
வயிற்றுப் பசியைப் போக்க நெசவாளர்களுக்கு வெற்றிலை பாக்கும் புகையிலையுமே உணவாய் போகிறது பெரும்பாலான மாலை நேரங்களில்.

இந்நாவலின் முதலாளிமார்கள் மூவர். கோவில் தர்மகர்த்தா எனும் பெருச்சாளியாய் அருணாச்சல முதலியார், பரம்பரை பணக்காராய் ,சுரண்டல் வாதியாய் நெசவாளர்களின் வயிற்றில் அடிக்கும் பூதமாய் தாதுலிங்க முதலியார், இரண்டாம் உலகப்போரில் பகாசுர பசிகொண்ட யுத்த தேவதைக்கு கைத்தறி துணியின் தேவையினால் உற்பத்தியும் அதற்கான கூலியும் உயர, யுத்தகாலத்தில் கிடைத்த அபரிமிதமான வருவாயினால் தறிகாரர் என்ற நிலையிலிருந்து முதலாளி என்ற அந்தஸ்துக்கு கைலாச முதலியார் உயர்ந்தார் .
தீவிர முருக பக்தரும் கூட.

‌‌ நெருப்பினை தொட்டவனுக்குத்தான் அக்னியின் உக்கிரம் உணர முடிவது போல வறுமையை உணர்ந்த கைலாச முதலியாரே கிராமத்து நெசவாளர்களுக்கான நம்பிக்கையாய் இருந்தார் .

நான்கைந்து ஆண்டுகளாய் ஏற்றாத கூலியை உயர்த்தக் கோரி நெசவாளர்களுக்கு முதலாளிகளுக்குமான வாக்குவாதம். நூல் விலை உயர்வினை காரணம் காட்டி மறுத்த இரு முதலாளிகளுள் ஆமோதித்த கைலாச முதலியாரால் நிறைவேற்றப்படுகிறது கூலி உயர்வும் , தர்மகத்தா பதவியும்.

மின்னம்பலம்:பருத்தியிலிருந்து ...

கோவில் பணத்தை கொள்ளையடித்து சுகமாய் வாழ்ந்த அருணாச்சல முதலியார் தாதுலிங்க முதலியாரின் தன்மானத்தை தூண்டி விட
‘தம்பி கைலாசம் நான் வளர்த்துவிட்ட பயிர், வளர்த்து விட தெரிஞ்ச மாதிரி அதை சாகடிக்கவும் எனக்கு வழி தெரியும் அந்த கவலையை விடுங்க’ என்ற தாதுலிங்க முதலியாரின் வன்மமொழியைக் கேட்ட பின்னர்தான் மைனர் முதலியாருக்கு ஆசுவாசம் வந்தது.
வைரத்தை வைரத்தல் தான் அறுக்க முடியும் என்பதுபோல தாது லிங்க முதலியாரின் பிள்ளைகள் சங்கர், கமலா.

உழைப்பாளர் வர்க்கத்திற்கு ஆதரவாயும் , நாட்டு நடப்புகளை அறிந்தும் செயல்படும் சங்கரும், கமலாவும் இன்றைய கல்லூரி இளைஞர்களுக்கான வழிகாட்டிகள்.
கமலாவின் அறிமுகம் அவர் வாசிக்கும் சோஷலிசமும் பெண்களும் என்ற நூலின் வழியே உணரமுடிகிறது. இதற்கான வார்ப்பு அண்ணன் சங்கர். வாசிப்பும் உலகத் திரைப்படங்களும் சங்கருக்கு உலக அனுபவத்தை கொடுத்தன

இவர்களுடன் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று முதலாளி வர்க்கம் உருவாக்கிவரும் கைக்கூலியாய்,சமூகப் பார்வையற்ற கைலாச முதலியாரின் மகன் சுப்பிரமணி.
சுப்பிரமணிக்கும், கமலாவுக்கும் இடையே காதல் மலர்கிறது.
‌. கைலாச முதலியாரின் வீட்டு வேலை செய்யும் இருளப்ப கோனாரின் சோகம் நிறைந்த வாழ்க்கை.

‌ இந்நிலையில் கூட்டத்தில் ஏற்கப்பட்ட கூலி உயர்வை தர மறுக்கிறார்கள் தாதுலிங்க முதலியாரும் அருணாச்சல முதலியாரும்.
இவ்வுரையாடலில் ‘இப்ப கொடுக்கிற கூலி உங்களுக்கு கட்டாமலே போச்சு. உங்களுக்கெல்லாம் கூலிய உசத்தி கொடுக்கப்படாது. கொடுக்கிறதையெல்லாம் காப்பி கடைக்கும், சினிமாவுக்கும் அழுது தொலைச்சுட்டு எங்கய்ய போறது!’ என்ற பேச்சும்

‘பசிச்சி அழுது ஒருவா பருக்கை கேட்டா அதிகம் சாப்பிட்டா அஜிரணம்னு புத்தி புகட்ட வர்ர கதையாயிருக்கு அண்ணாச்சி.’ என்ற நெசவாளர்களின் குமுறல்களும் எக்காலத்திலும் உழைப்பவனுக்கு வாழ்க்கை திண்டாட்டம்தான்.

இந்நிலையில் ஆகஸ்ட் புரட்சி சுயராஜ்யம் தந்த பரிசாய் ஏற்றுமதிக்கு தடை செய்த ஆளும் வர்க்கத்தின் ஜவுளிக் கொள்கை. மேலும் ஏகாதிபத்திய அமெரிக்காவிடமிருந்து அதிக விலை பஞ்சு வாங்குவதால் நூல் விலை ஏற்றம்; நூல் விலையேற்றத்தால் கைத்தறி துணிகளின் அடக்க விலை ஏற்றம்; விலையேற்றத்தை எட்டிப்பிடிக்க முடியாத நாட்டு மக்களின் பொருளாதார நெருக்கடி ;பொருளாதார நெருக்கடியால் வியாபார மந்தம்; வியாபாரம் மந்தத்தால் கைத்தறி துணி தேக்கம்; கைத்தறி துணி தேக்கத்தால் உற்பத்தி முடக்கம்; உற்பத்தி முடக்கத்தான் நெசவாளர் பிழைப்புக்கு ஆபத்து; இப்படியெல்லாம் தர்க ஞானத்தோடு உண்மை தெரியாது கவலையை மறக்க உதவும் கஞ்சா போதை போல் முருக நமஸ்காரணை கைலாச முதலியாருக்கு உதவி செய்கிறது

ஏனெனில் அன்றும் முதல் இன்று வரை பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ஆளும் ஜனநாயக முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாகவே செயல்படுகின்றன.
நாட்டு மக்களின் மானத்தைக் காப்பதற்காக உழைத்த மக்கள், தங்கள் மானத்தைக் காப்பதற்காக வகையற்றுத் திரியும் அலங்கோல நிலையிலேயே நெசவாளிகள் இருந்தனர்

கைலாச முதலியார் இப்பிரச்சினையில் இருந்து மீண்டாரா? நெசவாளர்களின் வாழ்வாதாரம் என்னவாயிற்று? அதை மீட்டெடுக்க அவர்கள் என்ன செய்தார்கள்?சுப்பிரமணி கமலா காதல் நிறைவேறியதா?
தொழிற்சங்கம் ஏன் தேவை? உள்ளிட்ட சுவாரசியங்களுடன் இந்நாவல் விரிவடைகிறது.

இந்நாவலின் சில பக்கங்கள் வாசித்த எனக்கு கண்ணீரை வரவழைத்து ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்பின. இறுதியில் வாசிப்பாலனுக்கு வாழ்வின் மீது ஒரு பெரும் நம்பிக்கையை இந்நாவல் ஏற்படுத்துகிறது.

வெறும் தத்துவமாக கூறுவதைவிட வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதை உணர வைப்பதில் நாவல் வெற்றி அடைகிறது.

மீளும் கைத்தறி: பெருகும் ...

2000-வது ஆண்டில் பவானி- குமாரபாளையத்தில் வாழ்வாதாரத்திற்கு வழியில்லா நிலையில் மே 1 தொழிலாளர் தினத்தன்று திருப்பூரில் குடியேறி 12 மணி நேரத்திற்கும் மேலான ஓய்வற்ற உழைப்பு, அதிக வாடகை, விலைவாசி உள்ளிட்டவற்றால் சமாளிக்க இயலாமல் ஒரு வருடத்திற்குள்ளாகவே 2001 ஆண்டில் என் சித்தியின்ஆலோசனையில் நெசவு தொழிலில் போர்வைக்கு தனியொரு தரத்தினைப் பெற்ற சென்னிமலையில்தான் 20 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பம் குடியேறியது.

தந்தைக்கு வேலையற்ற நிலையில் நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மூலமாக என் அம்மாவிற்கு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பாவிற்கான தார் போடும் வேலை கிடைத்தது.

வறுமையான சூழலில் 10 ம் வகுப்பு தேர்வெழுதிய எனக்கு மேல் படிப்பிற்கு வாய்ப்பற்ற நிலையில் நெசவுத்தொழிலின் வருமானமே அடுத்த வகுப்பிற்கான அடியெடுக்கவைத்து இன்று என்னை ஆசிரியனாக்கி உள்ளது.

2003-மாவது ஆண்டில் பவர்லூம் தறியின் ஆதிக்கமும், வேலியே பயிரை மேய்வது போல கூட்டுறவு சங்க அதிகாரவர்க்கத்தின் தனிமனித லாப வெறியும், நெசவாளர்களின் அறியாமையும் படிப்படியாக நெசவுத் தொழிலை நசிய செய்தது.
—————————————-
இறுதியாக

வேலை அல்லது நிவாரணம்!

நூல் கொடு அல்லது சோறு கொடு!

மக்கள் வயிற்றில் அடிக்காதே!

இந்நூலின் இறுதியில் நெசவாளர் சங்கத்தின் ஊர்வலத்துக்காக ,பல தெருக்களில் இருந்து மக்கள் வந்து குழுமி ஊர்வலத்தோடு செல்லத் தொடங்கினார்கள்.

பல்வேறு சிற்றாறுகளை தன்பால் இழுத்து சேர்த்து மகா பிரவாகமாய் செல்லும் நதியைப் போல் அந்த ஊர்வலம் கணத்துக்கு கணம் பலம்பெற்று விரிவடைந்து கொண்டேயிருந்தது‌.

“மக்களின் அவல நிலையை கண்டு கண்ணீர் வடிக்க நான் அழுகுணிச் சித்தன் அல்ல. கண்ணீர்விடும் அவனோடு கண்ணீர் விடுவது, அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பது எழுத்தாளனுக்கு அழகல்ல. கண்ணீரை துடைக்க வழிகாணும் பாதையிலே செல்பவன் தான் சிறந்த எழுத்தாளன்” என்று எழுத்தாளருக்கான இலக்கணத்தை முன்வைக்கிறார் நாவலாசிரியர் தொ. மு. சி.ரகுநாதன் அவர்கள்.

அவசியம் வாசியுங்கள்…..

பஞ்சும் பசியும்
தொ. மு சி ரகுநாதன்.
200 பக்கம்
விலை: 160
வெளியீடு: பாரதி புத்தகாலயம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/panjumpasium/

இரா.சங்கர்
TNSF,ஈரோடு.