பஞ்சும் பசியும் : நூல் அறிமுகம் - Panjum Pasium Tamil Book Review by Vijayakumar Periyakaruppan - Bharathi Puthakalayam - https://bookday.in/

பஞ்சும் பசியும் : நூல் அறிமுகம்

பஞ்சும் பசியும் : நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்:

நூல் : பஞ்சும் பசியும்

ஆசிரியர் : தொ.மு.சி.ரகுநாதன்

விலை: ரூ.160

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

 

’பஞ்சும் பசியும்’: தமிழின் முதல் சோசலிச யதார்த்தவாத நாவல். எனப் போற்றப்படும் தொ.மு.சி.ரகுநாதனின் நாவல்

 

சிறந்த கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பாராட்டப்படும் தொ,மு.சி.ரகுநாதன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். 1951இல் இவர் எழுதிய ‘பஞ்சும் பசியும்’ நாவல் தமிழின் முதல் சோசலிச யதார்த்த நாவலாகக் கொண்டாடப்படுகிறது. தொ.மு.சி. தன் நெருங்கிய நண்பரான புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். ‘பாரதி: காலமும் கருத்தும்’, ’இளங்கோ அடிகள் யார்?’, ‘புதுமைப்பித்தன் கதைகள்: விமர்சனங்களும், விஷமங்களும்’, ’பாரதியும், ஷெல்லியும்’, ’கங்கையும், காவிரியும்’, ஆகிய இலக்கிய விமர்சன நூல்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு தொ.மு.சி. நல்கிய அரிய கொடையாகத் திகழ்கின்றன. இவர் எழுதிய ‘ஆனைத்தீ’ சிறுகதையை தமிழின் சீரிய கதை என்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கருதுகிறார். ’வென்றிலன் என்ற போதும்’ சிறுகதை மகாபாரதத்தின் மிகச் சிறந்த மறுவாசிப்பாக உள்ளது. சாகித்திய அகாதமி விருது, சோவியத் யூனியனின் நேரு விருது, பாரதி விருது போன்ற பல விருதுகளை தொ.மு.சி. பெற்றுள்ளார். இவரால் நடத்தப்பட்ட சாந்தி பத்திரிகையே கி.ரா, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, டி.செல்வராஜ் போன்ற அன்றைய இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தியது.

பஞ்சும் பசியும் : நூல் அறிமுகம் - Panjum Pasium Tamil Book Review by Vijayakumar Periyakaruppan - Bharathi Puthakalayam - https://bookday.in/

இந்திய விடுதலைக்குப் பின்னர் கைத்தறித் தொழிலாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடியை ’பஞ்சும் பசியும்’ நாவல் சித்தரிக்கிறது. வலுவான தொழிற்சங்க இயக்கத்தின் மூலம் அந்த நெருக்கடியிலிருந்து தொழிலாளர்கள் மீண்ட வரலாற்றைச் சொல்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோர நகரான அம்பாசமுத்திரம் நாவலின் கதைக் களமாகும். அங்கே வாழ்ந்த முதலியார் சமூகம் நெசவுத் தொழிலில் மிகப் பெரிய அளவிற்கு ஈடுபட்டிருந்தது. நாள் முழுவதும் தறியில் உழன்றாலும் அவர்களால் வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பமுடியவில்லை. பெரிய மீனுக்கு சின்ன மீன் இரையாவதுபோல் பெரு முதலாளிகளால் மிகச் சிறிய நூல் முதலாளிகள் நசுக்கப்பட்டனர். ஹார்வி மில் போன்ற பெரும் ஆலைகளின் நுழைவு கைத்தறித் தொழிலை மிகவும் பின்னுக்குத் தள்ளியது. நாடு விடுதலை அடைந்த பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஒன்றிய, மாநில அரசுகளின் ஜவுளிக் கொள்கைகளால் கைத்தறி நெசவாளர்களின் தேவையை நிறைவேற்றித் தர இயலவில்லை. அந்நிய முதலாளிகளின் நிர்பந்தத்திற்கிணங்கி கைத்தறித் துணிகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்தது. அதனால் பெருமளவிலே கைத்தறித் துணிகள் தேங்கிக் கிடந்தன. நூல் விலை விஷம்போல ஏறிய போதிலும் நெசவாளர்களின் கூலி மட்டும் உயரவே இல்லை. அதன் காரணமாக நெசவாளர்கள் வாழ வழியின்றித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒற்றைக் கண் முதலாளியாக வலம் வரும் தாதுலிங்க முதலியார் ஒரு புறம், மனிதாபிமானம், நேர்மை போன்ற லட்சியங்களுடன் வாழும் கைலாச முதலியார் மறு புறம் என சமூகத்தின் இருவேறு விதமான மனிதர்களை இந்த நாவலில் காண முடிகிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் கச்சிதமான பிரதிநிதியாக இருக்கின்ற தாதுலிங்க முதலியாரின் பிள்ளைகளான சங்கர், கமலா இருவரும் அவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு சமத்துவச் சிந்தனையுடன் இருப்பது அதிசயமானதொரு முரணாகும். கல்லூரியில் படிக்கும் சங்கர் மார்க்சிய சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்படுகிறான். தனது தங்கை கமலா, ஆருயிர் நண்பன் மணி என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெல்லாம் மார்க்சியத்தின் பெருமைகளை சொல்லித் தருகிறான். மணி – கமலா ஆகியோருக்கு இடையிலான நட்பு காதலாக மலர்கிறது.

தாதுலிங்க முதலியார் ஊரின் நடுவே அமைந்திருக்கும் லோகநாயகி அம்மன் கோயிலின் தர்மகர்த்தாவாக இருக்கிறார். சரியான பராமரிப்பின்றி அந்தக் கோயில் பொலிவிழந்து கிடக்கிறது. கோயில் பரிபாலன சபை தேர்தலில் தாதுலிங்க முதலியார் தோற்றுப் போக கைலாச முதலியார் தர்மகர்த்தாவாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடைய பராமரிப்பில் லோகநாயகி அம்மன் கோயில் புதுப்பொலிவு காண்கிறது.

கைலாச முதலியார்-தங்கம் தம்பதிகளுக்கு மணி, ஆறுமுகம் என்று இரு புதல்வர்கள். கைலாச முதலியாரின் நேர்மையான பணியாளாக இருக்கும் இருளப்பக் கோனார் தனது மனைவியுடன் பஞ்சம் பிழைக்க தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று அல்லல்பட்டு ஊர் திரும்பியவர். தோட்டவேலை பார்த்த இடத்தில் அவர்கள் தங்களுடைய ஒரே புதல்வன் வீரையாவைத் தொலைத்து விட்டனர். தங்களுக்கு ஏற்பட்ட சோகங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு மகன் வீரையாவின் நினைவுகளுடன் கைலாச முதலியார் கொடுத்த சிறு நிலத்தில் குடிசை கட்டி அவர்கள் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. நூல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கைத்தறித் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. நெசவுத் தொழிலை விட்டுவிட்டு பஞ்சம் பிழைக்க தொழிலாளர்கள் வெளியூர் செல்கின்றனர். நூல் கட்டுகளை பெருமளவிற்குப் பதுக்கிவைத்திருக்கும் தாதுலிங்க முதலியார் போன்ற சில கள்ள மார்க்கெட் பேர்வழிகள் மட்டுமே அந்தப் பஞ்ச காலத்திலும் கொழுத்து வளர்கிறார்கள். கைலாச முதலியார் கடன் வலையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்குக் கடன் கொடுத்த தாதுலிங்க முதலியாரும், மற்றவர்களும் அவரை நெருக்குகிறார்கள். அவரது மகன் ஆறுமுகம் டைஃபாய்டு காய்ச்சலில் படுத்த படுக்கை ஆகிறான். மருந்து வாங்கக்கூடப் பணமின்றித் தவிக்கிறார் கைலாச முதலியார். உரிய நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளாததால் ஆறுமுகம் சாகிறான். துக்கம் தாளாத கைலாச முதலியார் தூக்கில் தொங்கி தன்னுயிர் துறக்கிறார். தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்ட மணி அதிர்ச்சியில் கீழே விழுகிறான். மண்டையில் பலத்த காயம் ஏற்படுகிறது. செய்தி அறிந்து நண்பன் சங்கர் ஓடோடி வந்து மருத்துவமனையில் மணியைச் சேர்க்கிறான். நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் மணி குணமாகிறான். வீட்டு நிலைமைகளை நினைத்து மனமுருகுகிறான். தந்தையை, தம்பியை ஒரே நேரத்தில் இழந்த கொடுமை, கடனில் வீடு மூழ்கியதால் இருளப்பக் கோனாரின் குடிசையில் வாழும் தனது தாயின் பரிதாப நிலைமையைக் காண முடியாமல் ஊரைவிட்டு ஓடிவிடுகிறான்.

ஊரில் கைத்தறி நெசவுத் தொழில் நசிந்ததால் தொழிலாளர்கள் படும் வேதனை கண்டு சங்கர் செயலில் இறங்குகிறான். நெசவுத் தொழிலாளிகளுக்கென்று சங்கத்தை உருவாக்குகிறான். வடிவேலு முதலியார் எனும் தொழிலாளி அவனுக்குத் துணை நிற்கிறார். சிறிது சிறிதாக தொழிலாளிகள் சங்கத்தில் வந்து சேருகிறார்கள். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எனத் தொடர் இயக்கங்கள் நடக்கின்றன. நூல் விலையை குறைக்கச் சொல்லி அதிகாரிகள், அமைச்சர்களிடம் மனு அளிக்கிறார்கள். சங்கர் கொடுக்கும் தைரியத்தில் ஊக்கமும், உற்சாகமும் பெறுகின்ற தொழிலாளிகளுக்கு அவன் மார்ச்சியம் கற்றுத் தருகிறான். தங்கள் அவல நிலைமைக்கு விதியல்ல காரணம். அரசின் தவறான தொழிற் கொள்கையே என்பதைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். “வேலை கொடு! அல்லது சோறு கொடு” என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கிறது. சங்கரின் தொழிற்சங்கப் பணிக்கு தங்கை கமலா துணை நிற்கிறாள். அண்ணனுடன் சேர்ந்து தொழிற்சங்கப் பணியில் ஈடுபடுவது காதலன் மணியின் பிரிவை நினைத்து வருந்தும் கமலாவுக்குச் சற்று மன ஆறுதலைத் தருகிறது. கணவனை, மகன் ஆறுமுகத்தை இழந்த சோகத்துடன் மூத்த மகன் மணியும் காணாமல் போனது கைலாச முதலியாரின் மனைவி தங்கத்தை மீளாத் துயரில் ஆழ்த்துகிறது. அவருக்கு இருளப்பக் கோனாரும் அவர் மனைவியும் ஆறுதலும், அடைக்கலமும் அளித்துக் காப்பாற்றி வருகிறார்கள்.

ஊரைவிட்டு ஓடிய மணி செல்லுமிடம் தெரியாது தவிக்கிறான். திருநெல்வேலி சென்று தன்னுடைய கல்லூரித் தோழன் ஒருவனின் அறையில் ஒரு நாள் தங்குகிறான். அங்கிருந்து மதுரை சென்று வேலை தேடி அலைகிறான். கிடைக்கும் வேலையெல்லாம் செய்கிறான். அரை வயிறுகூட நிறையவில்லை. பசியில் வாடுகிறான். ஊரில் தன்னை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் தாய் தங்கம், காதலி கமலா, ஆருயிர் நண்பன் சங்கர் எல்லோரும் கனவிலும், நனவிலும் வந்து அவனைத் தொந்தரவு செய்கின்றனர்.

ஒரு மாலைப் பொழுதில் பசியுடனும், மிகுந்த களைப்புடனும் மதுரை தெருக்களில் குறிக்கோள் ஏதுமின்றி நடந்து சென்று கொண்டிருந்த போது உணர்ச்சி மிகு முழக்கங்களுடன் ஊர்வலம் ஒன்று வருவதை மணி பார்க்கிறான். ”மதுரை நகர் நெசவுத் தொழிலாளிகள் சங்கம்” என்ற பதாகையைத் தாங்கி விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் “வேலை கொடு! அல்லது சோறு கொடு!” என்று முழங்கியவாறு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த ஊர்வலத்தில் வருகின்றனர். அவர்களின் உணர்ச்சி மிகு முழக்கங்கள் கேட்டு மணி பரவசம் அடைகிறான். அவன் கண்ட அந்தக் காட்சி நெசவுத் தொழிலின் நசிவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தின் துயரைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.

தன்னை அறியாமலேயே அவனும் ஊர்வலத்தில் இணைந்து கொள்கிறான். ஊர்வலம் முழுதும் தொழிலாளிகள் உற்சாகமாக முழக்கமிடுகிறார்கள். நெசவாளர்கள் சங்கக் கட்டிடத்தை ஊர்வலம் வந்தடைந்த போது, பசியுடன் நீண்ட தூரம் நடந்துவந்த மணி மயங்கி விழுகிறான். மணியை அலுவலகத்துக்குள் படுக்க வைக்குமாறு தொழிலாளர்கள் தலைவர் ராஜு சொல்கிறார். அவனுக்கு உண்ண உணவு கொடுத்து ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்கிறார். ஓய்வுக்குப் பிறகு மணி தெளிர்ச்சி பெற்றதும் அவனுடைய கதையை ராஜு கேட்டு அறிகிறார். நெசவுத் தொழிலாளர் சங்கம் மணியை அரவணைத்துக் கொள்கிறது.

தொழிற்சங்கத்தின் அலுவலகப் பணிகளை மணி பொறுப்புடன் பார்த்து வருகிறான். தொழிலாளர்களின் தோழமை அவனை பிரமிக்கச் செய்கிறது. ஒரு நாள் ராஜுவின் பெட்டியில் இருந்த புகைப்படத்தைக் காண நேர்ந்த வேளையில் மணி அதிர்ச்சி அடைகிறான். இருளப்பக் கோனாரும் அவரது மனைவியும் மகிழ்ச்சியுடன் இருக்கும் அந்த புகைப்படம் கண்டு அவனிடம் ஆச்சரியம் மேலிடுகிறது. ராஜுவிடம் அது குறித்து அவன் விசாரிக்கிறான். தனது பெயர் வீரையா, இருளப்பக் கோனார் தன்னுடைய தந்தை, தாய் தந்தையரைப் பிரிந்ததும் மதுரை வந்து நெசவுத் தொழில் செய்து அதன் மூலம் தொழிற்சங்கத் தலைவராகத் தான் உயர்ந்த கதையை ராஜு சொல்லி முடிக்கிறார். ராஜூவின் தாயும், தந்தையும் வீரையாவை நினைத்து எந்நேரமும் உருகிக் கொண்டிருப்பதை மணி அவரிடம் விவரிக்கிறான்.

விரைவிலேயே அம்பாசமுத்திரம் செல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது. அங்கே தொடங்கப்பட்டுள்ள நெசவாளர்கள் சங்க மாநாட்டுக்கு சிறப்புரை ஆற்ற வருமாறு ராஜுவிற்கு அழைப்பு வருகிறது. இருவரும் அம்பாசமுத்திரம் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஒரு புறம் தொழிற்சங்க அழைப்பு தரும் மகிழ்ச்சி, மறு புறம் அவரவர் குடும்பத்தினரைக் காணப்போகும் நெகிழ்ச்சி. இரண்டும் சேர்ந்ததால் சந்தோசத்தில் ஆழ்ந்திருந்தனர். அம்பாசமுத்திரம் ரெயில்வே நிலையத்தில் அவர்களை வரவேற்கப் பெருங் கூட்டம் காத்திருக்கிறது. சங்கர், வடிவேல் முதலியார் தலைமையில் நகரின் நெசவுத் தொழிலாளிகள் திரளாகத் திரண்டு நிற்கின்றனர். சிறப்புரை ஆற்ற வந்திருக்கும் ராஜு அந்த ஊரின் மைந்தன் வீரையா என்பதறிந்து அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்.

கூட்டம் முடிந்ததும் சங்கர் அவர்களை இருளப்பக் கோனாரின் குடிசைக்குக் கூட்டிச் செல்கிறான். பிரிந்தவர்கள் கூடினால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது! ராஜுவை (வீரையா) அவரின் பெற்றோர் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். மணியை அவன் தாய் தங்கம் கண்ணீர் மல்க அணைத்துக் கொள்கிறார். சங்கர் அனுப்பிய செய்தி கிடைத்து கமலாவும் ஓடோடி வருகிறாள். காதலர்கள் இருவரும் மீண்டும் இணைகின்றனர். நாவல் இனிதே நிறைவுறுகிறது.

இந்திய விடுதலை மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த விடியல் எதுவும் புலப்படாமல் வறுமையும், வேலையின்மையும் கோரத் தாண்டவம் ஆடியதால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாயினர். ரகுநாதன் அத்தகு அவலங்கள் மிகுந்திருந்த சமூகத்தையே தன்னுடைய பஞ்சும் பசியும் நாவலில் காட்சிப்படுத்துகிறார். நிலைமைகளை உள்ளது உள்ளவாறு யதார்த்த மொழியில் சித்தரிக்கிறார். ’பஞ்சும் பசியும்’ நாவல் எழுதப்பட்ட காலகட்டம் தமிழ் நாவல் களம் கற்பனாவாதத்தில் தோய்ந்திருந்த காலமாகும். நாவலாசிரியர்கள் யதார்த்ததிற்குப் புறம்பான அதீத கற்பனை உலகில் தாங்களும் திளைத்து வாசகர்களையும் திளைக்கச் செய்தனர். சோவியத் இலக்கியத்தை ஆழ்ந்து படித்தது மட்டுமல்லாது, அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கவும் செய்தவர் என்பதால் ரகுநாதனிடம் சோவியத் யதார்த்தவாதம் குறித்த முழுமையான புரிதல் இருந்தது. எனவே சோசலிச யதார்த்தத்தை தன்னுடைய முதல் நாவலிலேயே சோதித்துப் பார்த்த அவரால் அந்த முயற்சியில் வெற்றியும் பெற முடிந்தது.

இன்றைய வாசகர்களுக்கு 1950களில் பிரபலமாயிருந்த மொழிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருக்கும் பஞ்சும் பசியும் நாவலை வாசிப்பது சற்றே சிரமத்தைத் தரலாம். 1960களில் எழுந்த தனித் தமிழ் இயக்கம் மொழி நடையில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. சமஸ்கிருதச் சொற்களை முற்றிலும் தவிர்த்து தமிழ் உரைநடை இன்று தூய தமிழில் எழுதப்படுகிறது. அம்பாசமுத்திரம், மதுரை நகரங்களின் 1950களின் நிலைமையை நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டும் இந்த நாவல் எழுபத்தைந்தாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தை வாசகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறது. ’பஞ்சும் பசியும்’ என்றென்றும் வாசகர்களை ஈர்க்கும் நாவலாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

நூல் அறிமுகம் எழுதியர் : 

பெ.விஜயகுமார்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 1 Comment

1 Comment

  1. R.Krishnamoorthy

    This novel was translated into Russian and many other Indian languages also. Muta RK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *