“ஐலேண்ட் ஆன் எட்ஜ் (Island On Edge)” – நூல் அறிமுகம்
கிரேட் நிக்கோபார் தீவுகளின் பிரம்மாண்டத் திட்டம்
விமர்சனப் பார்வை!
ஆங்கில மூலம்: ராஜ்கமல் கோஸ்வாமி
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
Island On Edge: The Great Nicobar Crisis என்கிற இந்த நூலானது மத்திய அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் `கிரேட் நிக்கோபார் திட்ட’த்தின் (Great Nicobar Project) கீழ் ஏற்படவிருக்கும் சமூக மற்றும் சூழலியல் தாக்கங்கள் குறித்த ஒரு பதிவாக விளங்குகிறது. இது குறித்த விமர்சனமானது வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியது இல்லை, மாறாக அதை ஒரு மாபெரும் திட்டம் என்று கூறிக்கொண்டு அவசரமாகச் செயல்படுத்துவதைப் பற்றியது.

கேம்ப்பெல் பே, கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள ஒரு கிராமம். | புகைப்பட உதவி: ஆர். சதீஷ் பாபு/AFP
Island on Edge: The Great Nicobar Crisis’ எனும் நூல், பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது; இவற்றுள் பல கட்டுரைகள் ‘Frontline’ என்கிற ஆங்கில இதழில் முன்னதாகவே வெளியாகி இருந்தன. இக்கட்டுரைகள் அனைத்தையும் ஒருசேர வாசிக்கும்போது, கிரேட் நிக்கோபார் தீவிற்காக முன்மொழியப்பட்டுள்ள — ஒரு சரக்கு மாற்றத் துறைமுகம், புதிய சர்வதேச விமான நிலையம், மின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதனோடு இணைந்த குடியிருப்பு நகரம் ஆகியவற்றை உள்ளடக்கிய — பல்வேறு பிரம்மாண்டமான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த, ஆழ்ந்த கவலையூட்டும் ஒரு சித்திரத்தை அவை நமக்கு அளிக்கின்றன. இவை, உத்திசார் மற்றும் தேசியப் பாதுகாப்பு நலன்கள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகின்றன; மேலும், இப்பகுதியில் இந்தியாவின் புவிசார் அரசியல் (geopolitical) நிலைப்பாட்டிற்கு இவை இன்றியமையாதவை எனவும் சித்தரிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நூல் அந்தக் கண்ணோட்டத்திற்கு அப்பால் கவனம் செலுத்துமாறு நம்மைக் கேட்டுக்கொள்கிறது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் அத்தியாயங்கள் முழுவதும், இத்தகைய ஒரு மாற்றத்தின் சமூக, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை, கணிசமான அனுபவப்பூர்வமான ஆதாரங்களுடன் விவரிக்கிறது. மிகவும் குறுகிய வாழிடங்களைக் கொண்ட, குறைந்தது 10 உள்ளூர் உயிரினங்கள் நேரடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். இந்தத் திட்டம், leatherback கடல் ஆமைகளின் இனத்தொகைக்கு ஒரு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்; இந்தியப் பெருங்கடலில் இந்தத் தீவுதான் அவற்றுக்கான மிக முக்கியமான முட்டையிடும் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், காடழிப்பின் அளவும் ஒரு பெரும் சுமையாகும். சுயாதீன விஞ்ஞானிகளின் மிதமான மதிப்பீடுகள் கூட, கிட்டத்தட்ட அறுபது லட்சம் பழமையான மரங்கள் வெட்டப்படக்கூடும் என்று கூறுகின்றன—இந்த மரங்கள் தங்களின் தற்போதைய சூழலியல் செயல்பாட்டை அடைய பல பத்தாண்டுகள், ஏன் நூற்றாண்டுகள் கூட எடுத்துக்கொண்டவை. ஆகவே, இவையெல்லாம் சாதாரணமான தாக்கங்கள் இல்லை. .

கிரேட் நிக்கோபார் தீவின் கடற்கரையில் முட்டையிடும் ஒரு பிரம்மாண்டமான leatherback ஆமை. | புகைப்பட உதவி: கெட்டி இமேஜஸ்/ஐஸ்டாக்ஃபோட்டோ
இந்தப் பிரச்சினையே சில காலமாகப் பொது விவாதங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நூலைப் படிக்காதவர்கள் கூட, கட்டுரைகள், விவாதங்கள் அல்லது விமர்சனங்கள் மூலம் அதன் வாதங்களை மறைமுகமாக அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், குணால் கம்ராவின் ‘ஜன் ஹித் மே ஜாரி (Jan Hith Me Jaari)’ நிகழ்ச்சியாகும், இது அந்த விவாதத்தின் சில அம்சங்களை மிகவும் பரந்த பொதுவெளிக்குக் கொண்டு வந்தது. அந்த வகையில், இந்தப் புத்தகம் அதன் உடனடி வாசகர் வட்டத்தைத் தாண்டி, வளர்ச்சி, ஆளுகை மற்றும் சூழலியல் வரம்புகள் பற்றிய ஒரு பரந்த உரையாடலில் நுழைந்துள்ளது.
இந்த உரையாடலின் மையத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தென்கோடித் தீவான பெரிய நிக்கோபார் தீவு அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென்கோடி மூலையான இந்திரா முனையின் (Indira Point) இருப்பிடமாகும். அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகள், சதுப்புநிலக் காடுகள், பவளப்பாறைகள் மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த கூடு கட்டும் கடற்கரைகளால் வரையறுக்கப்பட்ட ஓர் இடம் இது. மேலும், இது நிலநடுக்கங்கள், சுனாமிகள் மற்றும் புயல்கள் உருவாகும் ஒரு பிராந்தியத்தில் அமைந்துள்ளதால், நில அதிர்வு மிகுந்த பகுதியாகவும் உள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியின் நினைவு இந்த நூல் முழுவதும் மெளனமாகப் பரவியுள்ளது; எனவே, வழக்கமான அர்த்தத்தில் பார்க்கையில் இது ஒரு நிலையான நிலப்பரப்பு இல்லை என்பதை நினைவூட்டுகிறது.
பல பங்களிப்பாளர்கள், தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய எளிமையான ஒரு கேள்விக்குத் திரும்புகிறார்கள்: இத்தகைய ஒரு சூழலில், சூழலியல் பலவீனமும் உள்கட்டமைப்புப் பிரம்மாண்டமும் ஒருங்கே இணைந்து வாழ முடியுமா?
இதை மறுவரையறை செய்வது முக்கியமானது. பாதுகாப்பு என்பது பெரும்பாலும் கான்கிரீட், எஃகு மற்றும் தளவாட வலையமைப்புகள் என எளிமையான முறையில் கற்பனை செய்யப்படுகிறது, ஆனால் சிதைக்கப்படாத காடுகள், நிலையான கடற்கரைகள் அல்லது மீள்திறன் கொண்ட சூழல் அமைப்புகளில் இவை அரிதாகவே கற்பனை செய்து பார்க்கப்படுகிறது. சூழலியல் நிலைத்தன்மையே ஒரு வகையான உத்திசார் உள்கட்டமைப்பாக அமையக்கூடுமா என்று சிந்திக்க இந்நூல் வாசகரைத் தூண்டுகிறது: ஒருவேளை, அது அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் மிகவும் நீடித்த ஒன்றாகும். .
இத்திட்டத்தின் அரசியல் பொருளாதாரம் இந்நூல் முழுவதும் படிப்படியாக வெளிப்படுகிறது. எல்லைப்புறப் பகுதிகள், தொலைதூரத் தீவுகள், எல்லைக் காடுகள் மற்றும் கனிம வளப் பகுதிகள் ஆகியவை நீண்ட காலமாக விரைவான வளர்ச்சிக்கான இடங்களாக இருந்து வருகின்றன; இதற்கானக் காரணம், அவை தேர்தல் மையங்களிலிருந்தும் தொடர்ச்சியான ஊடகக் கண்காணிப்பிலிருந்தும் தொலைவில் இருப்பதுதான். நகர்ப்புறச் சூழல்களில் எதிர்ப்பைத் தூண்டக்கூடிய ஒழுங்குமுறை குறுக்குவழிகள், இங்கு பெரும்பாலும் குறைந்த கவனத்துடனே கடந்து செல்கின்றன. கிரேட் நிக்கோபார் திட்டமும் இந்த பரந்த வடிவத்திற்குள் பொருந்துகிறது: இங்கு நிறுவன ரீதியான எச்சரிக்கையை விட லட்சியம் வேகமாக வளர்கிறது.
வளர்ச்சியை கேலிச்சித்திரமாக சித்தரிக்க மறுப்பதே இந்நூலுக்கு அதன் கூர்மையைக் கொடுக்கிறது. முழுமையான பாதுகாப்பிற்கோ அல்லது தனிமைப்படுத்தலுக்கோ சில பங்களிப்பாளர்களே வாதிடுகின்றனர். மாறாக, அத்தியாயங்கள் முழுவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் அழைப்பு, விகிதாச்சாரம், வெளிப்படைத்தன்மை மற்றும் அறிவியல் தீவிரத்தன்மை ஆகியவையே ஆகும். இந்த விமர்சனம், வளர்ச்சி என்பதல்ல, மாறாக தொலைநோக்குப் பார்வை என்று அலங்கரிக்கப்பட்ட அவசரத்தின் மீதானது.
ஓர் இடைவெளி இருக்குமானால், அது இத்திட்டத்தின் நிறுவன ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ச்சியான, நேரடி வெளிப்பாடு இல்லாததில்தான் உள்ளது. அரசாங்கத்தின் நியாயங்கள் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன, ஆனால் அந்த முன்னெடுப்பை முன்னெடுத்துச் செல்பவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்பது அரிது. அந்தச் சமச்சீரற்ற தன்மையானது, இவ்வகையான பெரிய அளவிலான முடிவெடுக்கும் செயல்முறைகளைச் சூழ்ந்திருக்கும் வெளிப்படைத்தன்மையற்ற தன்மையையே பிரதிபலிக்கக்கூடும். இருப்பினும், இணைப்புப் பகுதியில் பகிரப்பட்டுள்ள கடிதங்களும் உரையாடல்களும் அந்த இடைவெளிகளில் சிலவற்றை நிவர்த்தி செய்கின்றன.
‘ஐலேண்ட் ஆன் எட்ஜ்’ நூலைப் படிக்கும்போது தவிர்க்க முடியாமல் சில ஒப்புமைகள் எழுகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இமயமலையில் நீர்மின்சக்தி விரிவாக்கம், கடலோரத் தொழில் வழித்தடங்கள், மற்றும் மத்திய இந்தியாவில் காடுகளை அழித்தல் போன்றவை சூழலியல் எச்சரிக்கை, சமூகப் பதற்றங்கள், மற்றும் வளர்ச்சி அவசரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்த பதற்றங்களை வெளிப்படுத்துகின்றன. நிக்கோபார் தீவுகளின் நிலை தனித்துவமானது அல்ல, ஆனால் அதன் அளவும் கவனமும் அசாதாரணமாகச் சுருங்கியுள்ளன. தீவுகள், சமரசங்களைப் புறக்கணிக்க முடியாதபடி செய்யும் ஒரு தன்மையைக் கொண்டுள்ளன. மேலும், காலப் பதற்றத்தின் ஒரு தொடர்ச்சியான உள்ளோட்டமும் உள்ளது. காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, மற்றும் அடிக்கடி நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் தொலைதூரக் கணிப்புகள் அல்ல. ஆயினும், இத்தகைய சூழல்களில் உள்ள உள்கட்டமைப்புகள், பெரும்பாலும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களால் நடத்தப்படும் தாக்க மதிப்பீடுகளின் அடிப்படையில், வழக்கமான சுற்றுச்சூழல் அனுமதிகளைத் தொடர்ந்து பெற்று வருகின்றன. இந்தச் செயல்பாட்டில் பொதிந்துள்ள வெளிப்படையான நல முரண்பாடுகள் குறித்து சிறிதும் அங்கீகாரம் அளிக்கப்படாமலும், ஆய்வு செய்யப்படாமலும் இருக்கின்றன.
வளர்ச்சி vs பாதுகாப்பு, மேம்பாடு vs சூழலியல் போன்ற இருமைகளுக்குப் பழகிய வாசகர்களுக்கு, இந்த நூல் இன்னும் சங்கடமான ஓர் ஈடுபாட்டைக் கோருகிறது. உண்மையான கேள்வி, வளர்ச்சி நிகழ வேண்டுமா என்பதல்ல; மாறாக, அது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது, யாருடைய நலன்களுக்கு அது சேவை செய்கிறது, மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலப்பரப்புகளில் நிச்சயமற்ற தன்மை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதே ஆகும் இதைத்தான் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
கட்டமைப்பு ரீதியாக, இந்த நூல் “அபாயகரமான எதிர்காலம்”, “பூர்வகுடி நிலப்பரப்புகள்”, “சுனாமிக்குப் பிறகு இருபது ஆண்டுகள்”, “பலவீனமான சூழலியல்கள்”, “நிபுணர் கருத்து” மற்றும் ஒரு பிற்சேர்க்கை என கருப்பொருள் பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் சூழலியல் விளக்கத்திலிருந்து சமூகச் சூழலுக்கும், ஆளுகை விமர்சனத்திலிருந்து பரந்த சிந்தனைக்கும் நகர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இவற்றை ஒன்றாகப் படிக்கும்போது, சொல்லாட்சியின் மூலம் அல்லாமல், சான்றுகள், விவரங்கள் மற்றும் கண்ணோட்டத்தை படிப்படியாக மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் ஒரு ஒட்டுமொத்த வாதத்தை உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், இந்த நூல் ஒளிவுமறைவு ஏதுமின்றி பிரச்சனைகளை நேரடியாகப் பேசுகிறது.: பக்கம் பக்கமாக உண்மைகள், ஆவணங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் நிறைந்துள்ளன. இத்தகைய சான்றுகளின் திரட்சி, திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து தீவிரமாக மறுபரிசீலனை செய்யத் தூண்டும் என்று ஒருவர் நியாயமாக ஊகிக்கலாம். ஆனால், அந்த இடத்தில்தான் சங்கடம் தொடங்குகிறது. ஏனெனில், அத்தகைய மறுபரிசீலனைக்கு வழிவகுக்க வேண்டிய செயல்முறைகள், பல சமயங்களில், சுருக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ அல்லது நடைமுறை சம்பிரதாயங்களாகக் கருதப்பட்டோ இருப்பது போல் தெரிகிறது.
சமகால அரசியல் சொற்களஞ்சியத்தில் “வளர்ச்சி” என்ற சொல் ஒருவேளை மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் — மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் —சொல்லாகவே உள்ளது. இது அடிக்கடி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்தப்படுவதால், அதன் தனித்தன்மையை முற்றிலுமாக இழக்கும் அபாயம் உள்ளது.
பொருளாதார வல்லுநர்களும் சர்வதேச நிறுவனங்களும் நீண்ட காலமாக வளர்ச்சியை வெறும் உள்கட்டமைப்பு அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கத்தின் அடிப்படையில் மட்டும் வரையறுக்காமல், நல்வாழ்வு, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுத்து வருகின்றனர். அந்தப் பரந்த புரிதலுக்கு எதிராகவே இது போன்ற திட்டங்களுக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
பல்லுயிர்ப் பாதுகாப்பில் பணியாற்றுபவர்களைப் பொறுத்தவரையில் இந்த நூல் தனித்துவமானது இல்லை. இது, ஷெக்சாரியா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்தும், பயணித்தும் உருவாக்கிய ஒரு பணித் தொகுப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது — அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சூழலியல் மற்றும் சமூக யதார்த்தங்களின் மீது தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்த பணி. இந்த முயற்சிகளின் மூலம் வெளிப்படுவது, தீண்டப்படாத நிலப்பரப்பின் மீதான ஏக்கம் அல்ல; மாறாக, அதிகரித்து வரும் அழுத்தங்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து ஒன்றிணைந்து நிற்கும் ஒரு செயல்படும் அமைப்பின் அங்கீகாரமே ஆகும்.
கிரேட் நிக்கோபார் தீவு தூய்மையானதும் அல்ல, நிலையானதும் அல்ல. ஆனால் அது இந்தியாவில் மிகக் குறைவாகத் துண்டாடப்பட்ட வெப்பமண்டல நிலப்பரப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்த ஒருமைப்பாடுதான் இதன் முக்கியத்துவத்தை மிகவும் அதிகமாக்குகிறது. முன்மொழியப்படுவது படிப்படியான மாற்றம் அல்ல. இது ஒரு “பெருவெடிப்புடன்” தீவை அடிப்படையாக மறுவடிவமைக்கும் ஒரு முயற்சி. அதிகாரப்பூர்வ உரையாடல்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் சிங்கப்பூருடனான ஒப்பீடுகள், லட்சியத்தை மட்டும் குறிக்கவில்லை, மாறாக நிலப்பரப்பை மறுவடிவமைக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் ஒரு குறிப்பிட்ட பார்வையையும் வெளிப்படுத்துகின்றன. களத்தில், இது மழைக்காடுகளிலிருந்து துறைமுக உள்கட்டமைப்பிற்கும், கூடு கட்டும் கடற்கரைகளிலிருந்து விமான நிலைய வளாகங்களுக்கும், மற்றும் பழங்குடி வாழ்விடங்களிலிருந்து தொழில்துறை வழித்தடங்களுக்கும் ஒரு மாற்றமாக வெளிப்படுகிறது. இந்த ஒவ்வொரு உருமாற்றத்தையும் வளர்ச்சி என்று கட்டமைக்க முடியும். இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து, மிக முக்கியமான மற்றும் மீளமுடியாத ஒன்றைப் பிரதிபலிக்கின்றன.
இவை அனைத்திற்கும் மத்தியில், இன்று அரசால் அனைத்து நெறிமுறைகளும் உரிய செயல்முறைகளும் அழிக்கப்பட்டு, சுதந்திரமான நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்ட போதிலும், இது போன்ற ஒரு நூல் இருப்பதுதான் உண்மையாகவே மனதிற்கு இதமளிக்கிறது. ஏனென்றால், இந்தத் தருணத்தின் வரலாறு ஒருநாள் எழுதப்படும்போதும், எதிர்கால சந்ததியினர் திரும்பிப் பார்த்து, இத்தகைய முடிவுகள் எப்படி எடுக்க அனுமதிக்கப்பட்டன என்று கேட்கக்கூடும்போதும், இந்த நூல் ஒரு பதிவாக நிலைத்து நிற்கும். எச்சரிக்கைகள் இருந்தன, சான்றுகள் கிடைத்தன, வாதங்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டன என்பதற்கான ஒரு பதிவாக அது விளங்கும்.
ஒருவேளை, வரலாற்றுத் தீர்ப்பு குறித்த அந்தக் கவலை சுயநலமாகத் தோன்றலாம், ஆனால் அது முற்றிலும் அப்படியல்ல. நாம் செய்யும் பல செயல்கள், குறிப்பாகப் பாதுகாப்பு போன்ற துறைகளில், இன்று எடுக்கப்படும் முடிவுகள் நமக்குப் பிறகும் நிலைத்திருக்கும் என்ற விழிப்புணர்வால் வடிவமைக்கப்படுகின்றன. நாம் எதைப் புறக்கணிக்கத் தேர்வு செய்கிறோமோ அல்லது எதை எதிர்கொள்ளத் தேர்வு செய்கிறோமோ, அது நாம் மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு நிலப்பரப்புகளை வடிவமைக்கும்.
மேலும், இவை அனைத்தும் முடிவுக்கு வரும்போது – எப்படியாவது அது முடிவுக்கு வந்தே தீரும் – மிகவும் முக்கியமானது என்னவென்றால், என்ன நடந்தது என்பது மட்டுமல்ல, அது நடந்து கொண்டிருந்தபோது அந்த நீரோட்டத்திற்கு எதிராக யார் நின்றார்கள் என்பதும், வெளிப்படையாகவும் கவனக்குறைவாகவும் வளர்ச்சி என்று கட்டமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தப்பட்ட ஒரு பேரழிவு தொடங்கப்பட்டபோது யார் குரல் கொடுத்தார்கள் என்பதுமே ஆகும்.
கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் இருந்தன என்பதற்கும், அதற்கான சான்றுகள் இருந்தன என்பதற்கும், வாதங்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டன என்பதற்கும் இந்நூல் ஒரு சான்றாக விளங்குகிறது. .
(ராஜ்கமல் கோஸ்வாமி பெங்களூரில் அசோகா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி மையத்தில் ஓர் ஆய்வாளராக இருக்கிறார். இந்நூல் அறிமுகம் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் இணையதளத்தில் ஏப்ரல் 28 அன்று வெளியானது).
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஐலேண்ட் ஆன் எட்ஜ் (Island On Edge)“ |
| ஆசிரியர்: | பங்கஜ் ஷெக்சாரியா |
| வெளியீடு: | வெஸ்ட்லேண்ட் |
| விலை: | ₹.499 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 ஆங்கில மூலம்: ராஜ்கமல் கோஸ்வாமி தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

