கிரேட் நிகோபார் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த கட்டுரையை விளக்கும் வகையில் பங்கஜ் ஷெக்சாரியா மற்றும் டி.கே. ஜோஷி உருவங்களுடன் வடிவமைக்கப்பட்ட வண்ண பென்சில் ஓவிய அட்டைப்படம்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பதிலளிக்க வேண்டிய முக்கிய கேள்விகள்! – பங்கஜ் ஷெக்சாரியா (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)

இந்தியக் கடற்படையின் முன்னாள் தலைவரும், அந்தமான் நிகோபார் தீவுகளின் தற்போதைய துணைநிலை ஆளுநரும் தலைமை நிர்வாகியுமான டி.கே. ஜோஷி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ‘Ideas Page’ல் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதியன்று விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.. ”கிரேட் நிகோபார் திட்டம்: சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய தேசியப் பாதுகாப்பு’ (Great Nicobar task: Pursuing national security with ecological responsibility)” என்று தலைப்பிடப்பட்ட இக்  கட்டுரை, ஐந்து வருடங்களுக்கு முன்பு 92,000 கோடி ரூபாய் மதிப்பில்  பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டபோது பொறுப்பில் இருந்த ஒருவரின் குறிப்பிடத்தக்க பொதுக் கருத்தாகவும், அவரது நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையாகவும் அமைந்துள்ளது. சமீபத்தில் அவர் ஆற்றிய உரைகள் மற்றும் அளித்த நேர்காணல்களிலிருந்து இது பரந்த அளவிலான கருத்துருவாக்க முயற்சியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. தேசியப் பாதுகாப்பின் கட்டாயத் தேவைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்திற்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டும் என்ற வாதம் இதில் முன்வைக்கப்பட்டாலும், அவர் எந்தவொரு குறிப்பிட்ட விவரங்களையோ அல்லது ஆழமான விஷயங்களையோ விவாதிக்காததால், அந்த வாதம் வெறும் சம்பிரதாயமானதாகவே தோன்றுகிறது.

இது முக்கியமானது; ஏனெனில், யாரும் மறுக்காத அந்தப் பொதுவான கூற்றுகளுக்கு அப்பால் (அல்லது அவற்றுக்கு பின்னால்), ஆரம்பத்திலிருந்தே விடை காணப்படாத பல கசப்பான உண்மைகளும் சங்கடமான கேள்விகளும் புதைந்து கிடக்கின்றன. தீவுகளின் தலைமை நிர்வாகியின் பரிசீலனைக்காக நான்கு கேள்விகள் இங்கே முன்வைக்கப்படுகிறது:

செயல்படுத்தும் முகமையாக ANIIDCO-வைத் தேர்ந்தெடுத்தது: இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘அந்தமான்  நிகோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம்’ (ANIIDCO) ஒரு quasi-government அமைப்பாகும். இதுவரை இந்த அமைப்புக்கான அனுபவம் சுற்றுலா விடுதிகளை நடத்துவது மதுபானம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பால் ஆகியவற்றை விற்பனை செய்வதில்தான் இருந்து வந்தது.. கடந்த சில நிதியாண்டுகளில் அதன் சராசரி ஆண்டு வருவாய் மற்றும் லாபம் முறையே ₹420 கோடி மற்றும் ₹40 கோடி எனத் தெரிய வந்திருக்கிறது. கிரேட் நிகோபார் தீவின் மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டம் போன்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் அவர்களுக்கு எந்தவித அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ இல்லை. .

நாட்டின் மிகவும் சவாலான, சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, புவித்தட்டு நகர்வு (tectonic) ரீதியாக நிலையற்ற நிலப்பரப்புகளில் ஒன்றில், இவ்வளவு பெரிய, மாபெரும் லட்சியம் கொண்ட திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை ANIIDCO-விடம் ஒப்படைப்பதை எது நியாயப்படுத்துகிறது?  மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய சுனாமி 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 26 ஆம் தேதியன்று நிகழ்ந்த பெரும் நிலநடுக்கத்தினால் கிரேட் நிகோபார் தீவு சுமார் 15 அடி அளவு நிரந்தரமாகத் தாழ்ந்து போனது; இதனால் இந்திரா முனையில் உள்ள கலங்கரை விளக்கம் அந்தமான் கடல் நீரால் சூழப்பட்ட நிலைக்கு வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

இதற்கான அனுபவமோ, அதிகார வரம்போ அல்லது திறனோ இல்லாத ஓர் அமைப்பிடம் இத்திட்டத்தை ஒப்படைப்பது உயிர், சொத்து மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்காதா? இது எத்தகைய தேசியப் பாதுகாப்புப் புரிதல்?

கலாதியா விரிகுடாவின் நிலை: கலாதியா விரிகுடா பகுதி ‘கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1a’ (CRZ-1a) வகையைச் சேர்ந்தது இல்லை என்று வாதிட்டு, அங்கு துறைமுகம் அமைப்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) தனது பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவின் மூலம் நியாயப்படுத்தியுள்ளது. அந்த விரிகுடாவும் அதன் கடற்கரையும் பவளப் பாறைக் கூட்டங்களையும், சதுப்புநிலக் காடுகளையும், அப்பகுதிக்கு மட்டுமே உரிய நிகோபாரி மெகாபோட் பறவைகளையும், ராட்சத லெதர்பேக், பச்சை கடல் ஆமை, ஆலிவ் ரிட்லி மற்றும் ஹாக்ஸ்பில் ஆகிய நான்கு வகையான கடல் ஆமைகளின் முட்டையிடும் மேடுகளையும் இக்கடற்கரை கொண்டுள்ளது என்பது நன்கு நிறுவப்பட்ட உண்மையாகும். இது இப்பகுதியை சந்தேகத்திற்கு இடமின்றி CRZ-1a வகைக்குள் கொண்டு வருகிறது; எனவே, துறைமுகம் உள்ளிட்ட எந்தவொரு பெரிய வளர்ச்சித் திட்டமும் இங்கு அனுமதிக்கப்படக்கூடாது.

அந்தமான் நிகோபார் (A&N) நிர்வாக அமைப்புகள் – யூனியன் பிரதேசத்தின் வனத்துறையும்  இதில் அடங்கும் – இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை மீண்டும் மீண்டும் வழங்கியுள்ளன. 2024-ஆம் ஆண்டு முட்டையிடும் பருவத்தில் கலாதியாவில் 619 ‘லெதர்-பேக்’ (leatherback) வகை ஆமை கூடுகள் இருந்ததாக வனத்துறையின் பதிவுகள் காட்டுகின்றன. ஆமை குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து பெறப்பட்ட 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதப் புகைப்படங்கள், கலாதியாவில் குறைந்தது 1,000 ஆமைகள் முட்டையிட்டதைக் காட்டுகின்றன.

Leatherback turtles under threat as government considers 'development' in  Little Andaman

Leatherback turtles in the Andamans: Highest number of turtle nests in a  decade found this year – Firstpost

(கலாதியா விரிகுடாவில் ராட்சத லெதர்-பேக் ஆமையின் முட்டையிடலும் குஞ்சுகளும் – பிப்ரவரி 2026)

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையிலேயே, கலாதியா விரிகுடாவில் 20,000-க்கும் மேற்பட்ட பவளப்பாறை கூட்டங்கள் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிகோபார் தீவுகளுக்கே உரித்தான ‘நிகோபாரி மெகாபோட்’ (Nicobari Megapode) பறவைகளின் கூடு கட்டும் மேடுகளும், அடர்த்தியான சதுப்புநிலக் காடுகளும் உள்ளன. இவை அனைத்தும், கலாதியா விரிகுடா இந்தத் தீவுக்கூட்டத்தின் மகுடத்தில் உள்ள ஒரு ரத்தினம் போன்றது என்பதையும் நாட்டின் சட்டத்தின்படி இது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகத் திகழ்வது மிக முக்கியமானது என்பதையும் உணர்த்தும் மறுக்க முடியாத சான்றுகளாகும்.

நிகோபாரி மெகாபோட் பறவை

அப்படியிருக்க, ஏன் சட்டம் புறக்கணிக்கப்படுகிறது? கலாதியா விரிகுடா ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம் மற்றும் மறுக்க முடியாத CRZ-1a பகுதி என்று வாதிடுவதற்கு, A&N நிர்வாகம் ஏன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன் அதனுடைய சொந்த ஆதாரங்களைக் கூட முன்வைக்கவில்லை? அங்கு துறைமுகம் கட்ட அனுமதிக்கப்பட்டால், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு குறித்த அவர்களின் கூற்று வெறும் வெற்று வார்த்தையாகவும் பொய்யாகவும் அமையாதா?

வன உரிமைச் சட்டத்தை மீறுதல்: அந்தமான் நிகோபார் நிர்வாகம், பழங்குடியினர் மற்றும் வன நிலங்களை மாற்றுவதற்கும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியின சமூகங்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதற்கும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 22 நாள்களுக்குள் அனுமதி அளித்து வழிவகுத்தது.

பழங்குடியின நிலங்களை மாற்றுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றிய கிராம சபைகள், குடியேறிய பழங்குடியினர் அல்லாத மக்களைக் கொண்டவையாக இருந்தன; வன உரிமைச் சட்டத்தைப் பொறுத்தவரை இவர்களுக்கு இதில் எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லை. சட்டப்படி பிரதிநிதித்துவம் பெறுவதற்கான எந்தவொரு ஏற்பாடும் இல்லாத நிலையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவான ஷோம்பென்’ மக்களின் சார்பில், அந்தமான் நிகோபார் நிர்வாகத்தின் பழங்குடியினர் நல அமைப்பான ‘அந்தமான் ஆதிம் ஜன் ஜாதி விகாஸ் சமிதி’ (AAJVS) பிரதிநிதித்துவம் வகித்தது. காடுகள் மீதான தங்கள் உரிமைகள் தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஷோம்பென் மக்கள் பங்கேற்கவே இல்லை; இருப்பினும், அவர்கள் பெயரிலேயே வனப்பகுதியை மாற்றுப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. நிகோபாரியரும் இத்திட்டத்தின் மீதான தங்கள் கவலையையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தங்கள் பாரம்பரிய நிலங்களுக்குத் திரும்பவே முடியாது என்று அவர்கள் அஞ்சுகின்றனர். தீவுகளின் இப்பகுதிகளில் அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தனர்; ஆனால், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஏற்பட்ட சுனாமியையும் நிலநடுக்கத்தையும் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்

இது சட்டத்தையும், நாட்டின் மிகத் தொன்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளையும் அப்பட்டமாக மீறும் செயல் அல்லவா? இக்காடுகளுக்கும் இச்சமூகங்களின் உரிமைகளுக்கும் முதன்மைப் பாதுகாவலராகத் திகழும் அந்தமான் நிகோபார் நிர்வாகம், ஏன் இந்தச் சட்ட மீறலையும் ஷோம்பென் மக்களின் உரிமைகள் மீறலையும் அனுமதித்தது?

சுற்றுலா மற்றும் தேசியப் பாதுகாப்பு: ‘கிரேட் நிகோபார் மேம்பாட்டுப் பகுதி (GNIDA) 2047’-க்கான அண்மையில் வெளியிடப்பட்ட பிரதான வரைவுத் திட்டத்தின் (Draft Master Plan) தொலைநோக்குப் பார்வையில், பல முன்மொழிவுகளுடன் பின்வருவனவும் இடம்பெற்றுள்ளன

  • கிரேட் நிகோபார் தீவுகளை உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் இணைக்கும் வகையில் ஒரு சொகுசுப் பயணக் கப்பல் (cruise) முனையம்;
  • 2050-க்குள் ஆண்டுக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை;
  • டிஸ்கோதேக்குகள், தீம் பார்க்குகள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் போன்ற குடும்ப பொழுதுபோக்குத் திட்டங்கள்;
  • பூசான் (Busan) சர்வதேச நிதி மையம் (BIFC) மற்றும் சிங்கப்பூரின் மெரினா பே நிதி மையம் ஆகியவற்றின் பாணியில், 2.5 என்ற தளப் பரப்பு குறியீட்டுடன் (FSI) 8 முதல் 10 தளங்களைக் கொண்ட கட்டிடங்களைக் கொண்ட ஒரு நிதி மையம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

சுற்றுலாப் பயணக் கப்பல் முனையம், டிஸ்கோதேக்குகள் கட்டுமானம் மற்றும் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் கார்பன் தாக்கத்தை (carbon footprint) ஏற்படுத்தக்கூடிய நிதி மையத்தை உருவாக்குதல் ஆகியவை, தேசிய பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பது தெளிவாக இல்லை. கிரேட் நிகோபார் திட்டத்தின் பொருளாதார உந்துதல்களும் தொலைநோக்குப் பார்வையும், முன்வைக்கப்படும் வாதங்களுக்கு முற்றிலும் முரணாகவும் தெள்ளத் தெளிவான வேறுபாட்டுடனும் இருக்கின்றன. .

இக்கேள்விகள் அமைப்பு ரீதியான நெறிமுறைகள், நலன்களுக்கு இடையேயான முரண்பாடு (conflict of interest), தக்க / முறையான நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் கிரேட் நிகோபாரின் புவியியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகும் தன்மை (geological vulnerability) தொடர்பான கவலையளிக்கக்கூடிய விஷயங்களுடன் தொடர்புடையவை ஆகும். மிக முக்கியமாக, இக்கேள்விகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் அமைந்த உண்மையான கூற்றுகளாகும். யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநரால் முன்வைக்கப்படும் இத்திட்டம் குறித்த ஆய்வறிக்கையில் மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் விளக்கங்களும் மையமாக இருப்பது முக்கியமாகும்.

( *இந்தக் கட்டுரையின் ஆசிரியரான பங்கஜ் ஷெக்சாரியா அந்தமான் நிகோபார் தீவுகள் குறித்து ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் The Great Nicobar Betrayal – Frontline,2024 and Islan on Edge: The Great Nicobar Crisis – Westland,2025 ஆகியவை சமீபத்திய வெளியீடுகள். இக்கட்டுரை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிலில் இவர் எழுதி வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்டப் பதிப்பு)

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *