நூல் அறிமுகம்: பாதியில் படிப்பை விட்டவர்கள் ஜெயிப்பது எப்படி? – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நூல் அறிமுகம்: பாதியில் படிப்பை விட்டவர்கள் ஜெயிப்பது எப்படி? – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

எல்லார்க்கும் சமமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது மிகச் சரியான அணுகுமுறை. ஆனால் எல்லோர்க்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது சரியா? என்ற ஆணித்தரமான கேள்வியை முன்வைக்கிறது ம.சுசித்ரா எழுதிய ‘பன்முக அறிவுத்திறன்கள்: ஓர் அறிமுகம்’ என்ற புத்தகம்.
ஒவ்வொரு மனிதரையும் மூன்று வழிகளில் (Visual, Auditory, Kinesthetic) அணுகலாம் என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருக்கலாம். கண் பேசும் வார்த்தைகள் (காட்சி), தேன் வந்து பாயுது காதினிலே (கேட்டல்), நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே (அசைவுகள்) இவற்றில் நாம் எந்த வகை என்று தேடிப்பார்த்திருக்கலாம்.

இவைகளைத் தாண்டி 9 விதமான அறிவுத்திறன்களை விவரிக்கிறது இப்புத்தகம். அமெரிக்க உளவியல் அறிஞர் ஹாவர்ட் கார்டனர் முன்வைத்த பன்முக அறிவுத்திறன்கள் கொள்கையை (Theory of multiple intelligences) அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. மேம்பாட்டு உளவியல் (Developmental psychology) போன்ற தூக்க மாத்திரை கருத்துகளை பொதுவெளியில் பேசுவது அவ்வளவு சுலபமல்ல. பலப்பல உதாரணங்களோடு பிரபலமான ஆளுமைகளின் வெற்றிக்கூறுகளோடு லாவகமான நடையில் சுவையாக செய்திகளைச் செல்கிறார் சுசித்ரா.
வாசித்தல், எழுதுதல், கனித அறிவு இவை கைவரப் பெற்றவர்கள் கல்விக்கூடங்களில் சிறந்த மாணவர்களாகக் கொண்டாடப்படலாம். ஆனால் உலகம் இயங்க இவர்கள் மட்டும் போதாது என நமது நெடுங்கால நம்பிக்கைகளின் (Law professor mindset) மீது அழுத்தமான ஆதாரங்களோடு கல்லெறிகின்றன இப்புத்தகத்தின் வரிகள்.

ஒரு விஞ்ஞானியையும் ஓவியரையும் சமமாக நோக்க மறுக்கிறோம். இப்படிப்பட்ட பார்வைக் கோளாறுகளைப் பதிவு செய்கிறது இந்நூல். ‘எந்தத் திறனையும் இது உயர்வு அது தாழ்வு எனப் பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. பன்முக அறிவுத்திறன்கள் அத்தனையும் தன்னளவில் சமமானவையே’ என அடிக்கோடிட்டு சொல்கிறது.

பன்முக அறிவுத் திறன்: இஷ்டப்படி ...

‘ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின்னடைவு ஏற்படக்காரணம், ஒருவருடைய கற்கும் ஆற்றலில் உள்ள குறைபாடு அல்ல. அவருக்கு அந்தப் பாடம் கற்பிக்கப்பட்ட முறையில் தான் சிக்கல் உள்ளது….. கற்றல் என்பது ராணுவப்பயிற்சி போல இறுக்கமான வடிவில் இயங்க வேண்டியதில்லை. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை, ஆற்றலைக் கண்டறிந்து அதை மென்மேலும் வளர்த்தெடுப்பதே சரியான கல்வி’. இப்படி கற்பித்தல் சார்ந்த சிந்தனைகள் இந்நூலில் நிறைய இருக்கின்றன.

வழக்கமான படிப்பில் பின் தங்கி, பள்ளியை விட்டு விலகிய பலர் வாழ்கையில் ஜொலிக்கிறார்களே எப்படி? செயலாக்க அறிவுத்திறன் ஈவு (Performance Intelligent Quotient) என்ற ஐ.க்யூ அவ்வளவு கண்டு கொள்ளப்படாமல் சொல்லாக்க ஐ.க்யூ (Verbal intelligent Quotient) நம் பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்படுவதை கவலையோடு சுட்டுகிறது இந்நூல்.

தொடுதிரைகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டும் தொலைத்துக்கொண்டும் இருக்கிற மனுகுலத்தின் மற்றொரு புதிய எதிர்கால மனநோய் எது தெரியுமா? இயற்கை பற்றாக்குறை (Nature Deficit Disorder). இயற்கைக்கான நிமிடங்கள் நம் அன்றாட வாழ்வில் அவசியம். ‘குழந்தைகளை குறைந்தபட்சம் வீட்டின் கொல்லைப்புறத்தில் மணலைக் குவித்து துழாவி விளையாட அனுமதிக்க வேண்டும்’ என்கிறார் உளவியல் அறிஞர் ரிச்சர்ட் லோவ். (கொல்லைப்புறம் என்பதை பால்கனி என்று அடுக்குமாடி வாசகர்கள் வாசிக்க!) இப்படி பாதை நெடுக்க போதிமர நிழலை விரிக்கின்றன இப்புத்தகத்தின் பக்கங்கள்.

நமது பெற்றோர், நலவிரும்பிகள், தலைவர்கள் நமக்கு பாதைகாட்டுகிறார்கள். ‘உங்களுக்கான வழிகாட்டிகள் கூட தங்களுக்கான கற்பிதங்களின் அடிப்படையில் தான் உங்களுக்கான பாதையைக் காட்டுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்’ என்று இப்புத்தகம் ஒரு முக்கிய மூக்குக் கண்ணாடியை வழங்குகிறது. மூக்கு கண்ணாடி நமக்கு மட்டுமல்ல வழிகாட்டிகளுக்கும் தான்.

இப்புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து ஏதோ ஒரு பாடப்புத்தகம் என வாசகர்கள் விலகிப்போகலாம். ஆனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இவர்களைத் தாண்டி வாழ்க்கையை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சுவாரசியமான புத்தகம் இது.
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரத்தை தமிழ்மொழியில் எளிமையாகப் படைத்த நூலாசிரியர் சுசித்ரா தனது முயற்சிகளை தொடர வாழ்த்துகள். வெற்றிக்கொடி இணைப்பிதழில் தொடராக வெளியிட்டு, பின் புத்தகம் செய்த இந்து தமிழ்திசைக்கு பாராட்டுக்கள்.

ஆராயப்படாத வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்றார் சாக்ரடீஸ். ஆராய்வதற்கு வெவ்வேறு ஆடிகள் தேவை. இப்புத்தகமும் ஒரு பூதக்கண்ணாடி தான்.

போர்முனை டூ தெருமுனை | war corner to street ...

மதிப்புரை: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
நூல்: பன்முக அறிவுத்திறன்கள்: ஓர் அறிமுகம்
ஆசிரியர்: ம.சுசித்ரா
வெளியீடு: இந்து தமிழ் திசை
விலை: ரூ.150/-

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *