பூமியை கிழித்து மேலெழும் பனையொன்று, தன் பச்சயத்திற்காக மட்டுமல்லாமல் வாழ்வின், இறப்பின் சூட்சமம் அறிந்து; மேலெழும்புவதை விட இன்னும் வேகமாக தன் வேரதனை, பார்த்திடும் பாறையின் பலமறிந்து, துளையிட்டும் பிளந்தும் வளைந்தும் நெளிந்தும் செலுத்தி தன்னை வானின் உச்சம் தொடுமளவிற்கு ஓங்கி நிற்கும் கசியும் ஈரம் உறிஞ்சி.

“பணிக்கர் பேத்தி” சகர்வானை அறியும் போது தனித்த அந்த ஒற்றைப் பனையாகவே உயர்ந்து நிற்கிறார். வாசிப்பவரின் இருதயத்தை கிழித்து சுகமன வலியான சவல் மிகுந்த வாழ்வினை முழுவதும் நேசித்த ஒரு சக்திமிகுந்த பெண்ணாக..

நாவலாசிரியர் “ஸர்மிளா ஸெய்யித்” நாவலில் வரும் ஒவ்வொரு காதாபாத்திரத்தை சொல்லிடும்போதும், விவரணைகளூடாக அவர்களை உரையாடலுக்குள் இழுத்து வரும் போதும் மண்ணைத் தீண்டாத குளிர்ந்த மழைத்துளி உடலின் மேல்விழும் அனுபவத்தை யொத்த திரைப்படமொன்றினை பார்த்த அனுபவமாக..

நாவல் முழுதும் அன்றயை சிலோனில் எற்றாவூரின் கொத்துக் கொத்தாக மலர்ந்து கிடக்கும் அடையாளம் தெரியாத காட்டுப் பூக்களின் நறுமணத்திற்குள்ளும் இயற்கையின் அத்தனை எழிலையும், வனப்பையும் நிர்மூலமாக்கி எழுந்து நிற்கும் இன்றைய இலங்கை மட்டக்களப்பின் காங்கிரீட் கம்பிகளுக்கூடாகவும் உள்நாட்டு போரின் துப்பாகி வெடி சத்தத்திற்கிடையே, உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு மேல் விழும் குண்டு வெடிப்பின் அலறல்களூடாக சூழ்ந்தலையும் நச்சு கலந்த கரும்புகையினுள் புகுந்து நகர்த்திச் சென்றிருப்பார் ஸெய்யித்.

ஒரு பாதைக்கு.. ஒரு வட்டத்திற்கு, ஒரு தண்டவாளத்திற்கு ஒரு நூலுக்கு இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவின் எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் உம்மா சகர்வான் தனது 65 வயதில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, தனது நான்கு மகள்களின்; அவர்கள் கணவர்களின், 19 பேரக் குழந்தைகளின் பேரன்பு தாங்கி நிற்க, சுனை ஊற்றின் ஒலியொத்து சிரித்திடும் தன் பேத்தி அவானாவின் கைபிடித்து பார்த்து நிற்கும் பார்வையில் இருந்து தொடங்கி இருப்பார் ஆசிரியர். பார்வையின் பரிபாஷைகளை
அறிந்து தெளிந்திட விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கும் என்று வாய்ப்பில்லைதான் என்பதை வலியும்.. மகிழ்ச்சியுமாக சொல்லி இருப்பார் ஆசிரியர்.

புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ...

பணிக்கர் பேத்தியான சகர்வானின் வட்டத்திற்குள்தான்.. அவள் வாழ்வின் தண்டவாளத்தில்தான் எத்தனையெத்தனை ரகசியங்கள்! ரகசியங்கள் அத்தனையுமே அழுகை மிகுந்த, போராட்டம் மிக்க, சக்திவாய்ந்த மெச்சத்தகுந்த உழைப்பாகவே ஓங்கி வளர்ந்திருக்கும். தன் மூதாதையரின் வாழ்வினை, தொன்மத்தினை; தனியொரு மனிதனாக காட்டுக்குள் சென்று யானையை லாவகமாக பிடித்து; தனது கால்களால் பூமியை உதைத்து பிளிர்ந்து தப்பிக்க அந்த யானை நினைத்தாலும் தோற்று நிற்கும் நெளிவு சுளிவான வலுவான காட்டுக் கொடிகளால் பிணைத்து,  அதன் விருப்பமறிந்து வேண்டிய அளவுக்கு குமியல் குமியலாக கரும்பு, மூங்கில் குருத்து, வாழை, விலாம்பழங்கள், இலை தழைகள் இவைகளை உணவாக்கி தன் வயப்படுத்தி அந்த யானையை வேலைவாங்கிடும் திறமையையும் அதன் தொடர்ச்சிதான் நாம் என்று பேசிடும் பொழுதினில் சகர்வானின் கண்களுக்குள்தான் மிளிர்திடும் வனப்பினை அயானா மட்டுமே அறிவாள்.

ஆயிரம் ரூபாய்த்தாளில் கொம்பன் யானையும், உமர் லெப்பை பணிக்கர் மூத்தப்பாவும் இடம் பிடித்த கதையை சகர்வான் சொல்லி முடிக்கும்போது “உம்மம்மா இதை எனக்கு கொடுப்பீங்களா”
என அயானா மெல்லிய குரலில் கேட்க, “தருவேன், பத்திரமா வச்சிகனும், அது நம்மோட கெளரவம்” என அயானாவின் காதுகளுக்கு மட்டும் சொல்லிடும் சகர்வானின் குரலின் ஒலியுணர்வில் தெரித்திடும் தொன்மங்கள் குறித்தான வரலாறுகள்.

சகார்வானின் தணடவாளத்தில்தான் சொல்லமுடியாத துயரங்கள், தன் உம்மா பீரிசா மரணமடையும்பாது காக்கா இஸ்மாயில், றத்தாக்களான ஸீனத், முத்தும்மா, தம்பி அபூபக்கர் இவர்களோடு அனுபவித்த துயர நாட்களைத்தான் எதைக் கொண்டு அழித்திட முடியும்.. ஒரு பகலில், குடியிருக்கும் வீட்டின் கூரையை பிரித்து போட்டு உருவிச்சென்ற அத்தனை கம்புகளையும், கழிகளையும் இழந்து நிற்கும் சிறுமிகளின் ஈரக்குலை நடுங்கும் அலறலை எவரின் செவிகளும் கேட்க மறுத்து கிடந்தபோது, கூரை பிடுங்கி எறியப்பட்ட அக் களிமண் உதிர்ந்த வீட்டின் மேல் கூரை துளிர்த்ததின் நம்பிக்கையில் தெரிந்தது காக்கா இஸ்மாயில் உழைப்பும்.. றாத்தாக்களின் வியர்வையும் சகர்வானுக்கு.

இயற்கையின் பரிவர்த்தனைதான் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வாறாக, ரசனைமிக்கதாக.. அழகொளிர்வதாக.. வாஞ்சை கொண்டதாக.. வளிப்பு மிக்கதாக, ஆனால் சகர்வானுக்கோ துயரத்தின் அடையாளமாக.. ஆம் எறாவூரின் தொலை தூரத்தில் இருந்து வந்த சக்காரியாவை மணக்க நேர்கிறது.. பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தாள் சகர்வான் என்ற ஒற்ற அழுக்குக்காரணம், சக்கிரியாவின் மனசை விஷமாக்கியது.. அந்த விஷத்தை சுமந்த சக்கிரியா ஒரு நாள் விடியற்காலை சகர்வானை விட்டு பிரிகிறான்.. சகர்வானும் ஏன் போகிறீர் என்று கேட்டதுமில்லை.. இத்தனை கொடூரமிக்க சக்கிரியாக்காளை இன்றளவும் நாம் பார்த்துவந்து.. கடந்து கொண்டே இருக்கிறோம் தெருக்களில் கிராமங்களில், நகரங்களில்; பெண்களை சதையாக பார்க்குமிடமெங்கிலும்.

மகளிர் நூல்கள் 2019: வாசிக்கத் ...

நூர்ஜஹான், சாஜஹான், கயறுநிஸா, உம்மு ஜெஸிமா ஆகிய பெண் குழந்தளோடு வாழ்க்கை தண்டவாளத்தில், பிளிர்ந்து நிற்கும் யானையையொத்து உழைப்பை செலுத்தி பயணத்தை தொடங்குகிறாள் சகர்வான்.. உழைப்பு.. உழைப்பு..உழைப்பு.. தன் மகள்களை உச்சத்தில் ஏற்றி அமர வைக்க உழைப்பு மட்டுமே நிஜமாக்கிடும் என்பதை முழுமையாக உணர்ந்தாள்..
எத்தனையோ பின்னடைவை சந்தித்த வேளையிலும் உழைப்பை மட்டுமே நம்பினால்.. உழைப்பு சகர்வானை போராளியாக்கியது.. மட்டக்கிளப்பு பூங்கா அருகினில் தனியொரு மனுசியாக
வறுத்த முந்திரி வியபாரத்தை தொடங்கி அது எண்மர் பெண்களின் அமைப்பாக வளர்ந்து பல போராட்டங்களின் வெற்றியாக மட்டக்களப்பு பூங்கா அருகிலேயெ அந்த பெண்களும் அவர்களின் வாரிசுகளும் பயன்படுத்திக் கொள்ள மட்டக்களப்பு நகரசபை தீர்மானத்தை நிறைவேற்றி ஆணையாக வெளியிட்டது சகர்வானின் 28 ஆண்டுகால அங்காடி அனுபவத்தில் மிகப் பெரிய வெற்றியாகும். இந்த காலங்களில் மிகப்பெரிய மூலதனம் அவளின் உழைப்பும்.. எல்லையற்ற நேர்மையும்..

எல்லோர் மீதான அளவுகடந்த நேசமும் மட்டுமே..

நிதமும் தன்னை புடம்போட்டு மெருகேற்றி வருவது உழைப்பு மட்டு என்று நிஜமாக விரும்பினாள், உழைத்தாள்.. இந்த விநாடி வரை தன் நான்கு மகள்களையும், பத்தொன்பது பேரபிள்ளைகளையும் எடைமாறாத தராசக ஏந்தி அவர்களின்பால் அன்பை நெஞ்சிலும் நினைப்பிலும் சுமந்து வருகிறாள்.

வாழ்க்கை தன்மீது சொடுக்கிடும் ஒவ்வொரு கசையடியையும் தாங்கி; இருக்கும் சக்தியனைத்தையும் தன் கால் குளம்புகளுக்குள் இறக்கி பூமியின் மேற்பரப்பில் படர்ந்தெழும் உயிர்களுதற்கும் காயமேற்படாதவாறு கால்களை நீண்டு விரித்து கடந்த 50 ஆண்டுகளாக ஓடிக் கொண்டே இருந்த குதிரையாக தன்னை பாவித்த சகர்வான் மருத்துவமனையில் தண்டவாளத்தின்
கடைசி எல்லையில் தற்போது

என்னவானாள்..? பனித்துளியின் குளிர்ச்சியை ஒத்த தன் அயானாவின் விரல் பிடித்து பேச வருவாளா…?  ஸர்மிளா ஸெயித் முடிவை சொல்லி இருப்பார்.. என்னால் அதை ஏற்கும்
மனசில்லை.

பணிக்கர் பேத்தியை சிறந்த முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் காலச் சுவடு பதிப்பகம்.  ஸர்மிளா ஸெய்யித்திற்கும் காலச் சுவடு பதிப்பகத்திற்கும்
பேரன்பும் வாழ்த்துகளும்.

அவசியம் வாசியுங்கள்.. “பணிக்கர் பேத்தி” சகர்வான். யானையின் உழைப்பை இப்பூமியில் கால் பதித்த இடமெங்கிலும் செலுத்தி இருப்பாள் சகர்வான்.

நாவல் வாசித்த முடித்ததும் எப்படி.. எங்கிருந்து தொடங்குவது என்பதே எனக்கு. நான் பார்த்து நேசித்த இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் உம்மாக்களிடம் தொடங்கலாமா என்று கூட யோசித்தேன்.. எத்தனை உம்மாக்களை நான் கொண்டுவருவது.. நான் சென்னை வந்த காலம் தொட்டே தரமணியில் சகர்வான் போன்ற பல உம்மாக்களின் உழைப்பிலான சோற்றுப் பருக்கையில் வளர்ந்திருக்கிறேன்.. நிறைய உம்மாக்கள் சக்ரியாக்கள் போன பிறகும் சகர்வானாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக பெண்கள் எப்போதுமே சக்தி மிக்கவர்கள்.. நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனத்திடம் கொண்டவர்கள்.. அதிலும் முஸ்லீம் சமூகத்தில் கணவனுக்கு தான் மட்டுமே கடைசிவரை மனைவியாக தொடர வாய்ப்பிருக்காது என தெரிந்தா மணம் புரிபவர்கள்.. என்றாவது ஒரு நாள் தன் கணவன் தன்னை வஞ்சகமாக ஒரு பொய்க் காரணம் கூறி பிரிந்திடுவான் என்று மனதை தயார்படுத்தியே தொடர்ந்திடுவாள்.. அடிப்படை வாதத்திற்குள் இருந்தே போராடும் போராளியவள்.. நிறைய சகர்வான்கள் கண்முன் வந்து கொண்டே இருக்கிறார்கள் நாவல் ஒவ்வொரு இடத்திற்குள் நகரும் போதும்.

சகர்வான்கள் வாழட்டும்.

இதை நான் உங்களோடு பகிரவில்லையென்றால், பணிக்கர் பேத்தி சகர்வானின் வாழ்வதனில்… கொம்பன் யானையையொத்த அவளின் முப்பதியேழு வயதிலிருந்தாலான உழைப்பினில்; பன நுங்கின் குளிர்சியைப் போன்ற சக மனிதர்களின் நேசிப்பை, அரவணைப்பை; மட்டக் களப்பு பூங்காவிற்கு அருகாமையிலான கடைதனை தொடர்ந்து நடத்திட ஆலோசனை தந்திட்ட நல்ல மனிதர்களை பேசியே ஆகவேண்டும்.
கொரோனாவுக்கு மத்தியிலும் ...
உலகம் முழுமைக்கும்  “தீவிரவாதிகள்” என்றும் “பயங்கரவாதிகள்” திட்டமிட்டே முத்திரை குத்தப்பட்டு வரக்கூடிய முஸ்லிம் சமூகத்தை இன்று கொரோனா தொற்று பரவிடும் காலத்திலும் தமிழகத்தில் திட்டமிட்டே கொரோனாவுக்கு ஆடை நீக்கி சுன்னத் செய்ததனுப்பிய கீழ் மதியாளர்களை நாம் பார்த்து வருகிறோம்.. ஊடகங்களும் அவர்களின் வாயாக நின்று; தங்கள் வயிறு வலிக்கும்வரை வாந்தியெடுத்து வருகிறார்கள்.. தொற்று நோய்க்கானவர்களாக முஸ்லீம் பெருமக்களை குறிப்பிட்டு, ஒன்று பட்ட மக்களிடையே தொடர்ந்து பதட்டத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் திட்டமிட்டே வளர்த்து வருகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் வேறு வகையாக நாம் நமது கண்ணெதிரிலேயே பார்த்து வருகிறோம்.
ஆன்மெனும், இனியன் ராமமூர்த்தியும் பெரோஸ்பாபுவும், சம்சுதீன் ஹீராவும், கறீமும்,  நெல்சன்பாபுவும்.. இப்படி இன்னும் பல முகம் தெரியாக மாமனிதர்கள் தங்களின் சக்தி அனைத்தையும் திரட்டி தமிழகம் முழுமையும் பல தொண்டுள்ளங்களை இணைத்து; ஊரடங்கால் பட்டினிக் கிடக்கும் லட்சக்கணக்கான தினக்கூலிக் குடும்பங்களுக்கு கடந்த பல நாட்களாக உணவு கொடுத்து வருகிறார்கள். இதுதான் இங்கும், எங்கும் களத்தில். ஒற்றுமையே இங்கு எல்லோருடைய சக்தி. மனிதமே நம் அனைவரின் உயிர்..
இப்படியானவர்களால்தான் மனிதம்.. பேரன்பு எப்போதும் எங்கேயும் உயிர்ப்புடனே இருந்து வருகிறது.. அப்படித்தான் மட்டக்களப்பில் பெரும்பான்மையானவர்களாக இந்துக்களும், சிறுபான்மையா முஸ்லீம்களும், பேகர்களும்.. தமிழகத்தைப் போன்றே அந்த நகர மெங்கிலும் இந்துகள், முஸ்லீம்கள், கிருஸ்துவர்களின் வழிபாட்டுத் தளங்களும். பன்மைத்துவத்தின் கலாச்சார அடையாளங்கள் கொண்ட நகரமாக மட்டக்களப்பு. உள் நாட்டுப் போரின் கோரமுகம் குண்டுகளாகவெடித்துச் சிதறும் போதெல்லாம் சகர்வானும்கும் அவளோடு வியபாரம் செய்திட்ட முஸ்லீம், இந்து ஏழை உழைக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருந்தது அங்கே இருந்த மயூரி நகைக் கடையும்; அதன் உரிமையாளரான குமரகுருபரனும் அவரின் சகக் கடைக்காரர்களுமே.
வெறும் ஐநூறு முந்திரியோடு தன் வியபாரத்தை தொடங்கிய சகர்வான் இன்று மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்  பட்டிருக்கும் சூழலில் தினமும் காலையும் மாலையுமாக பல ஐம்பது பேர் வந்து தினமும் பார்த்துச் செல்கிறார்கள்.. மருத்துவ நிர்வாகம் கூட, சகர்வான் ஏதோ அரசு நிர்வாகத்தின் சொந்தம் என்றே நினைத்து விட்டனர். சகர்வானின் உதவியாளர்களாக, நாளுக்கு ஒருவர் என மாறி மாறி அவரை உம்மாவாக இருந்து பணிவிடை செய்து வருகின்றனர்.. பார்ப்பதற்கோ செல்வச் செழிப்பு மிக்க பலரும் வந்து போகின்றனர். இவைகள் அனைத்திற்கும் காரணம் சகர்வானுடைய உழைப்பு மட்டுமல்லாது அவரிடமிருந்த விடாமுயற்சியும்.. அன்பு நிறைந்த விழிகளுமேயாகும். அது பல நல்ல உள்ளங்களை அவர்பால் மறியாதைக்குரியவராக மாற்றியது.
                                          எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்
அப்படிப்பட்ட நபர்களில் முக்கியமானவர்தான் மயூரி நகைக்கடை உரிமையாளர் குமரகுருபரன்.. குமரகுருபரன், சகர்வானின் உழைப்பினை, நேர்மையினை, சொன்ன சொல் தவறாது நடந்திடும் பண்பினைப் பார்த்து வருகிறார். குமரகுருபரனைப்  போன்ற மதபேதம் பார்க்காத பல  நல்ல மனிதர்களால்தான் சகர்வானைப் போன்றவர்ககாளால் சமூகத்தில் நல்ல மதிப்புறு நிலைக்கு உயர்ந்திட முடிகிறது..
“உம்மா.. நகைக் கடைக்காரர் வந்திருக்கிறார்” என குனிந்து காதினில் மெல்ல சொல்வார் ஜெஸ்சீமா.. எதிரில் மயூரி நகைக்கடை உரிமையாளர் குமரகுருபரன் தன் மார்பில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு  உழைப்பின், போராட்டத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்;
“முட்டையின் ஓடுகளைத் தகர்த்துக் கொண்டு மெல்லத் தலை நீட்டும் குஞ்சுப் பறவையைப் போன்று சகர்வானின் விழிகள் இமைகளைப் பிரித்து மேல் நோக்கிப் பார்ப்பார்” என எழுதி இருப்பார்.
முடுவுக்கு வரும் ஒருவரின் வாழ்க்கையைக் கூட பிறப்பெடுத்து வெளியே வரும் குஞ்சுப் பறவையை உருவகப்படுத்தி சகர்வானின் மரணமற்ற உழைப்பைச் சொல்லிய ஆசிரியர் ஸெர்மிளா ஸெய்யித் அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்துக்களும். “பணிக்கர் பேத்தி” என்கிற அற்புதமான நாவலை வெளியிட்ட  காலச் சுவடு பதிபகத்திற்கும் அன்பும் பாராட்டுதல்களும்.
மனிதமே முதல்..
மதம் அடுத்தே..
அதுவும் மதம் பிடிக்காத வரையே..

ஸெர்மிளா செய்யித்.

இலங்கையின் ஏறாவூரில் பிறந்தவர்.
பத்திரிக்கையாளராக பணியாற்றியவர். சமூகச் செயற்பாட்டாளர்.
மந்த்ரா லைஃப் நிறுவனத்தின் பிரதம இயக்குநர்.

– கருப்பு அன்பரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *