கலையும் அரசியலும் – ரித்விக் கட்டக்கின் ஆய்வேட்டை முன்வைத்து
சித்தார்த்தன் சுந்தரம்
`கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்றார் மாவோ. புரட்சிகர இலக்கியமும், கலையும் பல உயிருள்ள கதாபாத்திரங்களைப் படைக்கும் வல்லமை கொண்டது. உதாரணம் மார்க்சிம் கார்க்கியின் `தாய்’ பெலகுயா நிலோவ்னோ விளாசோவாவும் அவரது மகன் பாவெல் விளாசோவாவும் ஆவார்கள்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கலையும் அரசியலும் நகமும் சதையுமாக இருந்து வந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நாட்டை ஆளக்கூடிய உரிமையைப் பெறுவதற்கு கலையும் பக்கபலமாக இருந்திருக்கிறது. அன்றைக்கு திரைப்படங்களின் மூலமும் நாடகங்கள் மூலமூம் அரசியல் கட்சியின் கருத்துகள் அனைத்துத் தர மக்களையும் எளிதாகச் சென்றடைந்தது. லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதற்கு இன்றைக்குப் போல் அன்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் அந்தப் பங்கை திரைப்படங்களும், நாடகங்களும் செவ்வனே செய்தன என்றால் அது மிகையில்லை.
இப்போதும் கூட பெரும்பாலான பண்பாட்டுக் குழுக்களும், கலை இலக்கியக் குழுக்களும் ஏதாவது ஓர் அரசியல் பின்புலத்தைக் கொண்டே இயங்கி வருகிறது. 1950களில் பொதுவுடைமைக் கட்சியின் பண்பாட்டு நிலைப்பாடு பற்றி பிரபல திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, நாடகாசிரியர் ரித்விக் குமார் கட்டக் ஓர் ஆவணத்தை 1950களில் மத்திய காலகட்டத்தில் எழுதியிருந்தார் என்பது அக்கட்சியைச் சார்ந்தவர்களுக்கும், இந்திய மக்கள் நாடக சங்கத்தின் (Indian People’s Theatre Association – IPTA) உறுப்பினர்களுக்கும் தெரியும். ஆனால் அது வெகுநாட்களாக பிரசுரிக்கப்படாமலேயே இருந்தது.
1993 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தலைவரும் மேற்கு வங்கத்தின் மேனாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கல்கத்தாவில் பொதுவுடமைக் கட்சியின் அலுவலகத்தில் பழைய கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ரித்விக் குமார் கட்டக் கைப்பட எழுதிய ஓர் ஆவணத்தைப் பார்க்க நேர்ந்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த புத்ததேவ் அதனை IPTAயின் 50 ஆண்டு நூலில் வெளியிடுவதற்கான அதன் செயலாளரிடம் ஒப்படைத்தார். அவர் 1996 ஆம் ஆண்டு ரித்விக் நினைவு அறக்கட்டளையிடம் கொடுக்க அது முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு ரித்விக்கின் 71 ஆவது பிறந்தநாளான நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று `On the Cultural Front’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வேட்டின் தமிழாக்கம் `பண்பாட்டு முகப்பில்’ என்கிற பெயரில் பேராசிரியர் ச. வின்சென்ட் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு கருத்து=பட்டறை வெளியீடாக 2021 ஆம் ஆண்டு வெளியானது.
1950களில் IPTAயின் பண்பாட்டு நிலைப்பாடு பற்றிய அவரது கருத்துக்களினாலேயே ரித்விக்கிற்கு எதிராக இரகசியப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. இது அவரது நாடக, திரைப்பட வேலைகளைப் பாதித்தது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளானது. இருப்பினும் அவர் தொடர்ந்து செயல்பட்டார். 1955 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர் பொதுவுடமைக் கட்சியின் மத்தியக் குழுவுக்கு விரிவான கடிதம் எழுதினார். அதில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்திருந்தார். அந்தப் பதில்கள் இந்நூலில் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆச்சரியமான விஷயம் என்னவெனில், அதே ஆண்டு (1955) அக்டோபர் மாதம் ரித்விக் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர் இல்லையென்று தெரிவித்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வேட்டில் இவர் தேசிய, பன்னாட்டு பண்பாடு பற்றிய அவருடைய புரிதலைக் குறிப்பிட்டிருக்கிறார். 1950 களில் எழுதியது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது அவருடைய மனைவி சுராமா கட்டக் குறிப்பிடுகிறார்.
இந்த நூல் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அவை பொதுவுடைமைக் கலைஞர்களும் கட்சியும், பொதுவுடைமைக் கலைஞர்களும் மக்களும், பொதுவுடைமைக் கலைஞர்களும் கலையும், முடிவுரைக்குப் பதிலாக என்பனவாகும். இதோடு ரித்விக்கின் ஓரிரு கடிதங்களும் பிற்சேர்க்கையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
`நாம் பொதுவுடைமைக் கலைஞர்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக உயர்தரமுள்ள ஒரு கலைப் படைப்பு கூட நம்மிடமிருந்து வந்ததில்லை. நாம் முந்தையப் படைப்புகளுக்கு மறு உரு தந்து, புதிய பெயர் கொடுக்கிறோம் அல்லது மூன்றாம் தரமான `அமெச்சூர்’ படைப்பைக் கொண்டு வருகிறோம். எல்லா நேரமும் `பேசுகின்ற தலைவர்களாக’ இருக்கிறோம். இது உறுதியாகவே பயங்கரமானது. உண்மையிலேயே நம்மிடமுள்ள படைப்பாற்றல் மிக்க கலைஞர்களும் கட்சியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்” என அன்றைக்கு கலைஞர்களுக்கும் கட்சிக்கும் இடையே இருந்து வந்த போக்கை மனச்சோர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கலைஞர்களுக்கும் கட்சிக்குமான இடைவெளி அதிகமாகி வருவதை இவர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியிருப்பதோடு இந்தப் போக்கால் அதிக இழப்பு கட்சிக்குத்தான் என்றும் கறாராக கூறியிருக்கிறார். அதோடு கலைஞர்களுக்கும் கட்சிக்குமான உறவு எப்படியிருக்க வேண்டுமெனவும் தனது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். `நமது சக்திகளை மாற்றியமைக்க வேண்டும்; வளர்ச்சி நிலைக்குத் தக்கவாறு பொருத்தமான முழக்கங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்; தேவையான போது அழுத்தம் தர வேண்டும், பணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும், கவனம் செலுத்த வேண்டும்.’ என்கிறார்.
பொதுவுடைமைக் கலைஞரின் பணி படைப்பின் வழியாகவும், நேரடிப் பங்களிப்பின் வழியாகவும் மக்களை ஒன்று திரட்டி வழி நடத்துவதாகும் என்று அவர் கலைஞரின் பணி என்னவென்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். ஒரு கலைஞன் தனது கலையின் மூலம் தனது கட்சிக்கும், தனது மக்களுக்கும் தொண்டு செய்கிறான். செயல்பாட்டோடு சிந்தனையும் ஒன்று சேரும்பட்சத்தில் கலைஞன் ஒருவன் மார்க்ஸிஸ்டாக மாறுகிறான். படைப்பாக்கம் இப்போது மார்க்ஸியத்தோடு இணைந்திருக்கிறது.
இவர் கட்சிக்கு விடுத்தக் கோரிக்கை என்னவெனில், `எங்களை, கலைஞர்களை, எங்களது சிறப்பான வரைமுறைக்குட்பட்ட தளத்தில், எங்களது கலைப்படைப்புகளை விவாதிக்கும் பொருட்டு ஆண்டுக்கொரு முறை சந்திக்க அனுமதியுங்கள். எங்களது பிரச்சனைகளை நாங்கள் தீர்க்க முடியும். தீர்ப்போம். அப்படிப்பட்ட மாநாடுகள் அதிக நாள் தேவை. உடனே அம்மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்’ என்கிறார்.
பொதுவுடைமைக் கலைஞர்களும் மக்களும் என்கிற பகுதியில், `கலை அமைப்புகளுக்கும் சுதந்திரம் வேண்டும். கலைஞர்களின் பரந்த குழுக்கள் நமது சித்தாந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அமைப்புக்குள்ளாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்களுக்கும் அவர்கள் மூலம் கட்சிக்கும் தொண்டாற்ற முடியும்’ என்கிறார்.
ரித்விக்கின் இந்த ஆய்வேடானது எல்லாக் களங்களையும் எல்லா மாநிலங்களையும் ஆய்வுக்குட்படுத்த முனையவில்லை. அதே சமயம், இது பொதுவாகக் கலையைப் பற்றியும், அதன் பரவலான பயன்பாடு பற்றியும், அச்சூழலில் வரம்புக்குட்பட்ட துறைகளிலும் கலையைப் பற்றி விவாதிக்க முயல்கிறது.
பொதுவுடைமைக் கலைஞர்களும் கலையும் என்கிற பகுதியில், மக்கள் திரள் கூட்டங்களில், தொழிலாளர் மண்டபங்களில், மறியல் தளங்களில், ஊர்வலங்களில் நடிப்பதற்குத் திறமைகளுள்ள நடிகர்கள் தேவை. ஒரு நாடக ஆசிரியர் ஒரு நாடக மேடை இல்லாமல், குழு இல்லாமல் சிறக்க முடியாது. ஷேக்ஸ்பியர், மார்லோ, தெம்பிஸ், பென் ஜான்சன், கதே முதலான பெரிய நாடக ஆசிரியர்கள் எல்லோருமே இப்படி செயல்பட்டவர்கள் தான் என்கிறார். இங்கு இவர் அலெக்சாண்டிரினஸ்கி நாடகக் குழுவின் தோல்வியை மாஸ்கோ ஆர்ட் தியேட்டரின் வெற்றியையும் அதற்கானக் காரணங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.
ரித்விக் தனது ஆய்வேட்டின் இறுதியில், ` இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முன் மொழிவுகள் எல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமா என்று எங்களால் கூற முடியாது. பல சிக்கல்கள் நமது மூளையைக் கசக்கிப் பிழியும். ஆனால் அமைப்பின் முயற்சி இவை அனைத்தையும் ஒதுக்கி விடும் என்று சொல்லிவிட்டு ஆய்வேட்டின் சாராம்சங்களைக் குறிப்பிடுவதோடு இது முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் பாசிச போக்குகளையும் அமைதியை விரும்பும் மக்களிடையே அள்ளித் தெளிக்கும் நச்சுகளையும் அழித்தொழிக்க வேண்டுமெனில் கலைஞர்களிடத்தில் பொதுவுடைமைக் கட்சிகளும் இயக்கங்களும் இணக்கமாக இருந்து கலையை இன்னும் தீவிரமாக மக்களிடத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமிருக்காது என நினைக்கிறேன்.
புத்தகம்: பண்பாட்டு முகப்பில்
ஆசிரியர்: ரித்விக் குமார் கட்டக்
ஆங்கிலம் வழி தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
பதிப்பகம்: கருத்து பட்டறை
விலை ரூ :130
பக்கங்கள் :112
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.