1951 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற நூல் ‘பாரபாஸ்’. ஸ்வீடிஷ் எழுத்தாளரான லாகர்க்விஸ்ட் கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என பல படைப்புகளை வெளியிட்டவர். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாமலும் நிராகரிக்க முடியாமலும் இருந்த இவரின் தவிப்பே இந்நாவளுக்கான கருவாக அமைந்திருக்கிறது.

இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார் க. நா. சுப்பிரமணியம் அவர்கள்.
ஏசு கிருஸ்துவை சிலுவையில் அறையப்போகும் காட்சியில் இருந்து ஆரம்பமாகிறது கதை. பல குற்றங்கள் செய்து சிறையில் இருந்த பாரபாஸ்க்கு கிடைக்க வேண்டிய மரண தண்டனை, அவனுக்கு பதில் கடவுளின் மகனுக்கு தரப்படுகிறது. தன் தோள்களில் இருந்த சிலுவை கடைசி நேரத்தில் கிறிஸ்துவிற்கு மாறியது அவனே எதிர்பாராத ஒன்று. எதிர்பாராமல் கிடைத்த அந்த விடுதலையே, கதையின் இறுதி வரை அவனுக்கு பெரும் போராட்டமாக அமைகிறது.
கிருஸ்துவை பற்றிய எந்த அறிமுகமும் இல்லாததால், அவரை பற்றி அறிய பாரபாஸ்யும் சிலுவையில் அறைய போகும் இடத்திற்கு பின்தொடர்கிறான். அங்கு தான் அவனுக்கு அவரை பற்றி தெரியவருகிறது. மக்கள் கூட்டமும், சீடர்களுமாக ஒரு தண்டனையை பார்க்க இவ்வளவு பேர் கூடுவதை கண்டதும் ‘மக்களின் குருநாதருக்கா, நமக்கு பதில் தண்டனை தருகிறார்கள் ‘ என பாரபாஸ்கே குற்றவுணர்வு ஏற்படுகிறது. ஏழைகளின் கடவுளாகவும், அவதார புருஷராகவும் மெய்சிலிர்த்து வணங்கும் மக்கள் கூட்டதிற்கு நடுவில் அவனால் நிற்க முடியவில்லை. இதில் ஒரு பெண் கிறிஸ்துவின் தாயாரிடம் இவனை காட்டி ஏதோ சொல்ல, அவர் திரும்பி இவனை பார்க்கும் பொழுது எழுந்த வேதனை அவனை அங்கிருந்து வேகமாக வெளியேற்றுகிறது.
விடுதலை ஆனாலும், அதை கொண்டாட முடியாத மனநிலையோடு கிருஸ்துவை பற்றி யாராவது தவறாக சொல்ல மாட்டார்களா என்ற பரிதவிப்புடன் ஊரில் உள்ள ஒவ்வொருவரிடமும் அவரைப் பற்றி விசாரிக்கிறான். நோயுற்றவர்களை காப்பவராகவும், இறந்தவரை மீட்பவராகவும் இருந்த அந்த மனிதரை தங்கள் குருநாதராக போற்றுகின்றதை அறிகிறான்.’ நம் பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக் கொண்ட கடவுளின் மகன்’ என்று சொல்வதை அவனால் ஏற்க முடியவில்லை.
‘அவ்வளவு சக்தி உள்ளவர் அவரையே காப்பாற்றி இருக்கலாமே.. அதனால் அவர் கடவுள் இல்லை.. தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்..’ என்று அவனை அவனே சமாதானப் படுத்திக் கொள்கிறான். இறந்தவனை உயிர்த்தெழ செய்தார் என்பதை அறிந்து, அவனை சந்திக்க செல்கிறான். அங்கும் அவனுக்கு ஒரு தெளிவில்லாத அனுபவமே கிடைத்தது. ‘சாவு என்பது வெறுமை ‘ என தன் சாவை பற்றி ஆரம்பிக்கும் அந்த மனிதருக்கும் பாரபாஸ்க்கும் நடக்கும் உரையாடல் அருமை.
தேவன் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என அறிந்து அவருடைய கல்லறைக்கு அதிகாலையே சென்று காத்திருந்து அங்கு எந்த ஒரு அதிசயமும் காணக் கிடைக்காதது அவனுக்கு ஒரு நிம்மதியை தந்தது. ஆனால் அங்கு இருந்த ஒரு உதடு பிளவுபட்ட பெண்ணிற்கு தேவதை தெரிவதாக கூறும் பொழுது அவனுக்கு குழப்பமே மிஞ்சியது. இவ்வளவு குழப்பத்திற்கு தானே மரணித்து இருக்கலாம் என்ற புலம்பி அவனுடைய இயல்பான குணத்தை இழக்கிறான்.
இதற்கிடையில் உதடு பிளவு பட்ட பெண் நோயுற்று, அதை சரி செய்ய தேவன் வருவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து, அவர் புகழை பரப்பியதால் அதிகாரிகளின் தண்டனையால் இறக்கிறாள். இது அவனுக்கு கடவுளின் மேல் இன்னும் வெறுப்பை அடையச் செய்கிறது. நம்பியவளை ஏமாற்றுவது தான் கடவுளின் செயலா என தனக்குள் கூறி அதிருப்தி அடைகிறான். அவனோடு சுரங்கத்தில் வேலை செய்த கடவுள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்த ஸஹாக் இறக்கும் பொழுது, இறப்பு தன்னை நெருங்கி வந்து, அவனுக்கு பதில் ஸஹாக் இறப்பதை கண்டு மேலும் சோர்ந்து நிற்கிறான்.
கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கிடையே , அவனுடைய நாத்திக வாதம் எடுபடாமல் அமைதியாகிறான். சமூகத்தோடு ஒன்ற முடியாமல் தனி மனிதனாக வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இப்படி அலைகழிக்கப்பட்டு வாழ்ந்த வாழ்வு இறுதியில் சிலுவையில் அறைந்து இறக்கதானா.. என்ற கேள்வியோடு முடிகிறது கதை.
கிருஸ்துவை அவன் முழுமையாக நம்பவில்லை என்றாலும், கடவுளின் விசுவாசியாக இருந்த தன் சக மனிதர்களுக்கான மரியாதையை அவன் செய்ய தவறவில்லை. ‘ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்’ என்கிற தேவனின் உபதேசம் மட்டும் இங்கு இறுதி வரை உயிர்ப்புடன் இருக்கிறது என்பது மட்டும் உண்மையாகி போகிறது. நன்றி.
நூலின் தகவல்கள்
நூல் : “ பாரபாஸ்”
ஆசிரியர் : பேர் லாகர் குவிஸ்ட்
தமிழில் : க. நா. சு
பதிப்பகம் : அன்னம்
ph:04362 239289, 44 2433 2924 thamizhbooks.com
விலை : Rs.130
அறிமுகம் எழுதியவர்
கு.ஹேமலதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான நூல் அறிமுகம் வாழ்த்துகள் 💐
Pingback: பாரபாஸ் - நூல் அறிமுகம் - Book Day