“பரதா (Paradha)” இந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியான தெலுங்கு திரைப்படம். பிரவீன் கண்டரேகுலா இயக்கியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran), தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் பருவம் அடைந்த பெண்கள் அனைவரும் முக்காடு அணிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்தை, சகோதரர் மற்றும் கணவர் தவிர வேறு எவருக்கும் முகத்தை காட்டக்கூடாதென ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஜுவாலா எனும் வீரமான பெண்மணி குதிரையேற்றம், வாள் சண்டை ஆகியவற்றில் சிறந்தவள். அவள் கருவுற்றிருந்தபோது குதிரையில் சாலை வழியாக செல்கிறாள். அங்கு வண்டியில் வந்த நான்கு ஆண்கள், கருவுற்றிருக்கும்போது குதிரையில் போகக்கூடாது ன்று சொல்லி தங்கள் வண்டியில் கூட்டி செல்கிறார்கள்.
வழியில் அவளை பாலியல் வன்முறை செய்ய முயற்சிக்கிறார்கள். அவள் அவர்களுடன் போராடி அவர்களைக் கொன்று தானும் இறந்து போகிறாள். அதற்குப் பிறகு அங்கு பிறக்கும் குழந்தைகள் இறந்து போகின்றன. இது ஜுவாலாமாவின் சாபம் என்று கூறி வயதுக்கு வந்த பெண்கள் அனைவரும் பிறருக்கு முகம் காட்டக் கூடாதென அவள் கட்டளை இட்டதாக கூறி அதை மீறுபவர்கள் அங்குள்ள கிணற்றில் விழுந்து இறந்து விட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஜுவாலாமாவுக்கு ஒரு சிலை எடுத்து அவள் முகமும் மறைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் அவளுக்கு திருவிழா எடுக்கப்படுகிறது.

அந்த கிராமத்தில் பர்தா விற்பனை செய்யும் மாதவ் என்பவரின் மகள் சுப்பு. தாயார் இறந்துவிடுகிறார். பின்னர் அவளுக்கு காதலன் ராஜேஷுடன் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் முக்காடு அணியாத அவளது முகம் அட்டைப்படமாக வருகிறது. பையன் வீட்டாரும் கிராமத்து பெரிய மனிதர்களும் சேர்ந்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள். தான் எந்த தவறும் செய்யவில்லையென்று சுப்பு சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறாள்.
அவளும் அதை ஏற்றுக்கொண்டு கிணற்றில் விழுகிறாள். ஆனால் ஜுவாலாமின் கோயிலில் விளக்கு அணைந்து போனதால் அவள் மீது தவறில்லை என்று அவளது அத்தையும் காதலனும் வாதிட்டு அவளைக் காப்பாற்றுகிறார்கள். ஆனாலும் அவளது சகோதரி கருவுற்றிருப்பதால் அவளுக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டுமென்றால் சுப்பு அந்த புகைப்படம் எடுத்தவரை கண்டுபிடித்து தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அந்த புகைப்படக்காரர் இமயமலை அருகில் தர்மசாலாவில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அங்கு சுப்புவும் அவளது அத்தை ரத்னாவும் செல்கிறார்கள். அவர்களுடன் வருகிறேன் என்று சொன்ன காதலன் ராஜேஷ் அவனது தந்தையால் தடுத்து நிறுத்தப்படுகிறான். அத்தை ரத்னாவின் தோழியின் மகள் அமி டெல்லியில் கட்டட பொறியாளராக பணிபுரிகிறாள். அவள் அவர்களுடன் தர்மசாலா செல்கிறாள். நிலச்சரிவினால் அவர்கள் புகைப்படக்காரரை சந்திப்பது தாமதமாகிறது. மலையேறுபவர்கள், சுற்றுலா பயணிகள் என ஒரு நட்பு வட்டம் உருவாகிறது. பிறகு வழியில் சில காமுகர்கள் சுப்புவை பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவளுடைய நண்பர்கள் வருகையினால் அதிலிருந்து தப்பிக்கிறாள்.

ராஜேஷிற்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சுப்புவின் மனம் மாறுகிறது. பர்தா அணிவதை துறக்கிறாள். சுப்புவின் அக்காள் பிரசவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவள் தந்தை பலியாக்கப்படுவார் என்பதை அறிந்த சுப்பு, ஊருக்கு திரும்புகிறாள். தன மீது தவறு ஏதும் இல்லை; எனவே புகைப்படக்காரரை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். அக்காவிற்கு சுகப்பிரசவம் நடைபெறுகிறது. சுப்பு ஒரு தீப்பந்தத்தை ஏந்தி சென்று ஜுவாலாமாவின் முக்காட்டை கொளுத்துகிறாள். கிராமத்துப் பெண்கள் எல்லோரும் தங்கள் முக்காட்டை விலக்குகிறார்கள்.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பெண்கள்தான் கிராமப்புற தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள் என்கிற தொ.பரமசிவன். ச.தமிழ்ச்செல்வன் போன்றோரின் கருத்து இந்த திரைப்படத்தில் எதிரொலிக்கிறது. ‘ஜுவாலாமுகி ஒரு வீரத்தாய். அவள் பெண்களை கிணற்றில் விழச் சொல்வாளா?’ என்கிற கேள்வியும் ‘கிணற்றில் விழவைக்கப்பட்ட பெண்களிடம் யாராவது கேட்டிருக்கிறீர்களா?’ என்றும் ரத்னா கேட்பது சரியானது. பஞ்சாயத்து தலைவர், அரசியல்வாதி, கோயில் அர்ச்சகர் என்கிற மூன்று பேரும் இந்த மூட நம்பிக்கையை கட்டாயப்படுத்துவதில் முன்நிற்கிறார்கள் என்பது நல்ல குறியீடு.
அதேபோல் ராஜேஷ் முதலில் தன காதலில் உறுதியாக இருக்கிறான். கிணற்றில் பாய்ந்து சுப்புவைக் காப்பாற்றுகிறான். ஆனால் பின்னர் தந்தை தடுக்கும்போது செயலிழந்து விடுகிறான். சுப்புவை பார்க்க செல்லலாம் என்று நினைக்கிறான். ரயில் நிலையத்தில் பத்திரிகையில் சுப்புவின் படத்தை பலரும் பார்த்துவிட்டு திரும்பி விடுகிறான். சுப்பு தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க மூன்று வார அவகாசம் கொடுத்துவிட்டு அதற்குள்ளேயே தனக்கு பெண் பார்த்து முடிப்பதை தந்தையிடம் கேள்வி கேட்கும்போது ‘ஆமாம் சொன்னேன். ஆனால் அவள் முகத்தை எல்லோரும் பார்த்து விட்டார்கள்.

அப்படிப்பட்ட பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது’ என்று கூறியதும் அவன் மனம் மாறிவிடுகிறான். இறுதிக் காட்சியில் சுப்பு முக்காடு இல்லாமல் வரும்போது தன் மனைவியை உள்ளே அனுப்பி கதவையும் சாத்தும்போது அவன் முழுமையாக மாறியதை பார்க்க முடிகிறது. ஒரு காதலின் மரணத்தையும் ஆணின் தடுமாற்றம், மூட நம்பிக்கையின் வெற்றியையும் இங்கு காண்கிறோம்.
தன்னுடைய முக்காடு தன்னை காப்பாற்றவில்லை என்று சுப்பு குமுறும்போது ‘நீ விண்வெளி உடை போட்டிருந்தாலும் அவர்கள் உன்னை தாக்கியிருப்பார்கள்’ என்று கூறும்போது பெண்ணிற்கு அவள் ஆடையால் அல்ல ஆபத்து என்பதை பளிச் என்று கூறுகிறார் இயக்குநர். சுப்புவையும் அவளது நம்பிக்கைகளையும் கேலி செய்யும் அமி பின்னர் அவளது உணர்வுகளை புரிந்து கொள்வது நல்ல இடம். ஆனால் அமிக்கும் பெண் ராணுவ அதிகாரிக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆடைகள், நகைகள், ஷாப்பிங் ஆகியவற்றில் பெண்கள் ஆர்வம் காட்டுவது தவறில்லை என்று கூறும்போது சுதந்திரமான வாழ்வு என்ன என்பது குறித்த ஒரு நுட்பமான விவாதத்தை முன் வைக்கிறார்.
இந்தப் படத்தை பத்திரிக்கையாளர்கள் பாராட்டினாலும் வசூலில் சரியாகப் போகவில்லை என்று கூறப்படுகிறது. மய்யக் கதையை மட்டும் அழுத்தமாகப் பதியாமல் அமியின் அலுவலகத்தில் அவள் திறமை மதிக்கப்படாமல் பெண் என்பதால் பதவி உயர்வு மறுக்கப்படுவது, ‘நாம் விரும்பியபடி வாழ வேண்டும்’ என்பதை தர்மசாலாவில் ஒருவர் சொற்பொழிவாக பேசுவது போன்றவற்றால் தொய்வு ஏற்படுகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை, மூட பழக்கங்கள் ஆகியவற்றை கலைப் படைப்புகளில் கையாளுவதற்கு இப்படிப்பட்ட படங்கள் உதவும்.
எழுதியவர் :
✍🏻இரா. இரமணன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
