”எக்கா….. ஜன்னத்தக்கா…. இங்க வந்து பாரு ஓ மகே செஞ்சுருக்க காரியத்த….” என்று தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டே சத்தம் போட்டாள் பேகம். பெரிய இரண்டு தெருக்களை இணைக்கும் சந்தில் தெருக்குழாய் அமைந்திருந்தது. சிறிது சிறிதாக நான்கு ஐந்து முட்டுச் சந்துகளும், அடர்த்தியாக வீடுகளும் அங்கிருந்தன. அந்த ஊரிலேயே முதன் முதலில் அவர்களின் சந்துக்கு தான் அடிகுழாய் போட்டார்கள் என்று புதிதாக வருபவர்களிடம் பெருமை பேசுவார்கள் அப்பகுதி மக்கள்.
அதிகமாக அந்த தெருவில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்காரர்களாகவே இருந்தனர். இரண்டு மூன்று அடுக்கு மாடி வீடுகளும், நிறைய குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இருந்தன. அதில் ஒரு பெரிய காம்பவுண்டு வீடும் இருந்தது. அந்த தெருவில் ஜன்னத் கணவன் இன்றி ஒரு மகனுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் இருந்தார். ஜன்னத்திற்கு ஒரு கண்ணில் பூவிழுந்தது என்று கூறுவார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலையில் தெருக்குழாயில் தண்ணீர் வந்து விட்டது. பெண்கள் காலை வேலைகளைப் பார்த்துக்கொண்டே தண்ணீர் பிடிப்பது என்பதே சிரமமான வேலை. அதிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் இவை நடந்தால்…
“நாசமா பேறவே…. எந்த நேரத்துல தண்ணிவிடனும்ன்னு தெரியாதா.. பொசகெட்டவே” இன்னும் திட்டுவதற்கு என்ன என்ன வார்த்தைகள் உள்ளதோ அனைத்தையும் பெண்களிடம் இருந்து கேட்கலாம், தெருக்குழாய்களில் தண்ணீர் வரும் போது.
“ஆமாடி… அவே…. நாசமா போனா பத்து நாளைக்கு விடுற தண்ணியும் விடமாட்டே. கொடம் நெறஞ்சுருச்சு மூடிட்டு தூக்கிட்டுப்போ..” என்றாள் பக்கத்தில் நிற்கும் பெண் ஒருத்தி. இவ்வளவு பரபரப்பிலேயும் ஜன்னத்தின் மகனைப் பார்த்தவுடன் சத்தம் குடுத்தாள் பேகம்.
பேகத்தின் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் ஜன்னத். மனதிற்குள் ஏதேதோ ஓடின ”அவனுக்கு தண்ணி போடும் பழக்கம் இல்லையே. அத எங்கினையும் பழகிட்டானா….” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே வெளியில் வந்தாள். அந்த சந்தின் துவக்கத்திலேயே அவனையும், உடன் ஒரு பெண்ணையும் நிற்க வைத்திருந்தனர். அவனைச் சுற்றி பெண்கள் கூடிவிட்டனர். ஜன்னத்திற்கு ஒரு கண்ணில்தான் பார்வை என்பதால் பதறிய நிலையிலேயே அருகில் போனாள். ஜன்னத் பார்ப்பதற்கு குட்டையாக இருந்தாலும், உழைத்து உழைத்து இறுகிய உடல். மகன் நிஜாம் லாரியில் டிரைவராக வேலை செய்கிறான். ஆந்திராவுக்கு அடிக்கடி லாரியில் போனவன் அங்குள்ள பெண்ணை விரும்பி தன்னுடன் அழைத்து வந்துவிட்டான். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவள். ஒல்லியான உடல் வாகு. வெள்ளைநிறம், சுருட்டை முடி. பார்த்த உடன் ஈர்க்கும் முக அமைப்பு. நேர் வாகு எடுத்து பின்னலிட்டிருந்த சடை. இடுப்புவரை நீளமிருந்தது. புடவையை தலையில் பேட்டு அவனுடன் நின்றிருந்தாள். இதற்கு நேர் எதிரானவன் நிஜாம். நிஜாமின் மீது கொண்ட அதீத அன்பினால் அவனுடன் வாழ ஆசைப்பட்டு வந்துவிட்டாள். தமிழ் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தாள் அந்த பெண். லாரியில் இருந்து இறங்கும் நாள் என்று எதிர் பார்த்து காத்திருந்த ஜன்னத்திற்கு அந்த நிகழ்வு அதிர்வை ஏற்படுத்தியது.
”அடப் பாவி யாருஞ் செய்யாத காரியத்த, ஏண்டா இப்டி ஏ தலையில கல்லத்தூக்கி போட்ட… பாவிப்பயலே…. எந்தக் காட்டுச் சிறுக்கியோ… எங்க இருந்துடா இவள இழுத்துட்டு வந்த ” என்று அழுது கொண்டே அவனை அடித்தாள் ஜன்னத்.
“ம்ம்மா… நல்ல புள்ளமா… எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதேம்மா… அவளுக்கு யாருமில்லமா, நம்மாளுகதே…” என்று கெஞ்சும் தொனியில் அவன் சொல்லி முடிப்பதற்குள் ஜன்னத் துவங்கினாள்.
“அட நாசமா பேற பயலே, யாருமில்லாத அனாதச் சிறுக்கிதான ஒனக்கு கிடச்சுச்சு… அதுவு……மில்லாம மூஞ்சியப் பாத்தா நம்மாளுக மாறியா இருக்கு….காஃபிரு {மற்ற மதத்தினரை அவ்வாறு கூறுவார்கள்} கூப்ட்டு நடுமனைல ஏத்தவா” என்று கத்திக்கொண்டே அவளையும் கன்னத்தில் இரண்டு அறை அறைந்தாள் ஜன்னத்.
“ம்ம்ம்மா…… காஃபிரு இல்ல உருது பேசுற முஸ்லிதே” என்றான் நிஜாம்.
“துலுக்க பய… மாதுரியடா பேசுர….. காஃபிருகலோட சேந்து சேந்து எப்டி பேசுறே பாரு” என்று கோபத்திலும், பதட்டத்திலும் என்ன பேசுவதென்றே தெரியாமல் புலம்பினாள் ஜன்னத்.
சத்தம் கேட்டு பெரிய வீட்டு அத்தா வெளியில் வந்தார். அவர் பெயர் கான் முகமது என்றாலும் அந்த தெருவில் பெரிய வீட்டுஅத்தா என்றே அழைப்பார்கள். அவர் பேச்சிற்கு மறுப்பு கூற மாட்டார்கள். அனைவருக்கும் அவர்மேல் தனி மரியாதை உண்டு. உதவி என்று கேட்பதற்கு முன்பே அவர்களின் நிலை புரிந்து உதவி செய்வார். அவரின் சொந்த வீடுதான் அந்த காம்பவுண்டு வீடு. மிகவும் குறைந்த பணத்திற்கு வாடகைக்கு விடுவார். அங்கு வாடகைக்கு வந்து தங்குபவர்கள் வெளியூர்களுக்கு சென்றால் மட்டுமே மாறிப்போவார்கள்.
“ஏ…. ஜன்னத்து ஏ…. என்ன சத்தம் போட்டுட்டு இருக்க” என்றார்.
“அத்தா… இவஞ் செஞ்ருக்க காரியத்த பாத்திங்களா..” என்று கதறினாள் ஜன்னத்.
“ம்ம்ம்ம்… கேட்டுக்கிட்டுதே இருந்தேன். அவனுக்கு புடிச்ச புள்ளைய கட்டலாம்ன்னு கூப்ட்டு வந்துருக்கான். முஸ்லிம் புள்ள தான. என்ன நாம தமிழ் பேசுவோம்… அவங்க உருது பேசுவாங்க… அவ்வளவுதேன. அவே விருப்பத்த ஒண்ட்ட தான சொல்றேன். எங்குனையும் போய் கல்யாணம் பன்னியா கூட்டிட்டு வந்துட்டான்.. அத்தா, அம்மா இல்லாத புள்ள ஜன்னத்து ஒன்னிய அண்டி இருந்துக்கும்… வீட்டுக்கு கூப்ட்டு போ. ஆக வேண்டியதப் பாரு” என்றார்.
“கல்யாணோம் என்னாண்டு முடுச்சானோ வீட்ல என்னான்டு ஏத்துறதுத்தா” கொஞ்சம் நிதானித்துக்கொண்டு ஜன்னத் கேட்டாள். அதற்குள் முந்தரிக் கொட்டையாய் முந்தினான் நிஜாம்
“இன்னுங் கல்யாணம் முடிக்கலத்தா… ”
”கல்யாணம் முடிக்காம சின்னப்பிள்ளையை வீட்ல வைக்க முடியாது நிஜாமு… இன்னக்கி சாந்தரோ மகரிபுக்கு அப்புறோம் கல்யாணம் முடிச்சர்லாம்… நா ஜமாத்துல பேசிர்றேன்” என்றார் கான் முகமது.
பேகம் முன் வந்து “கல்யாணம் முடியுற வரைக்கும் பொண்ணு எங்க வீட்ல இருக்கட்டும்” என்றாள். மாலையில் மகரிபு தொழுது முடித்து வீட்டிற்கு வரும்போது கான் முகமது ஜமாத்துடன் வந்தார்.
“பொண்ணு பேரு என்ன நிஜாமு… அதாவது தெரியுமா…?” கான் சிரித்துக் கொண்டே கேட்டார். “வச்ச பேரு நொக்கத்து…. நான் பரக்கத்துன்னு கூப்டுவேன்” என்றதும் கான் சிரித்துக்கொண்டே
“பரக்கத்….. நல்ல பேரு …. அதுவே இருக்கட்டும்… நம்ம பக்கம் நொக்கத்துண்ணா புரியாது” என்றார். அனைவரின் சம்மதத்துடன் கல்யாணம் நடந்து முடிந்தது. ஜன்னத் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானமானார்.
“அத்தா… ஒன்னு சொல்லனு” தயக்கத்துடன் ஜன்னத் கூறினாள்.
“ என்ன… சொல்லு” என்றார் கான்.
“வீடு சின்னது அங்க தங்க சவுரியம் பத்தாது… அதுனால தனியா வீடு பாத்து வச்சுறலாம்ன்னு யோசிக்கிறேன்” என்று இழுத்தாள்.
“ம்ம்ம்… புரியுதும்மா…. நம்ம காம்பவுண்டு வீடுகல்ல ஒன்னுகாலியாத்தே இருக்கு அதுல இருக்கட்டும்” என்றார் கான்.
“சரிங்கத்தா… “ என்று ஜன்னத்தின் மகன் கூறினான்.
” சரிப்பா…. மாசம் இருபது ரூபா வாடக குடுத்துரு, அம்மாவையும், சம்சாரத்தையும் நல்லா பாத்துக்க” என்றார் கான்.
”சரிங்கத்தா…” என்று சந்தோஷத்துடன் சென்னான் நிஜாம்.
புது வீட்டில் வாழ்க்கையைத் துவங்கினார்கள். ஜன்னத்தும் முதலில் கோபமாக இருந்தாலும், மகனின் பாசம் அவளை மாற்றியது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவள் என்றாலும், தமிழ் நாட்டில் ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம் கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டாள். அங்கிருந்தவர்கள் ஒரே குடும்பத்தினரைப் போன்று பழவதால் அவர்களின் பேச்சு வழக்கு அவளுக்கும் அப்படியே வந்து விட்டது.
திருமணமாகி எட்டு மாதங்கள் ஆயின. அந்த தெருவில் இருந்தவர்கள் பரக்கத்திடம் ஏதும் விசேசமில்லையா என்று கேட்க துவங்கினர். ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்தாள் பரக்கத். ஒரு நாள் இரண்டு நாள் தள்ளி இருந்தாலே இந்த மாதம் கரு உருவாகிவிட்டதோ என்று எதிர்பார்த்தாள். ஓரிரு நாட்களிலேயே தலைக்கு குளிக்கும் போது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. திருமணமாகி ஒரு வருடம் முடிந்தது. முதல் திருமண நாள் அன்று லாரி ஓட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டான் நிஜாம். பரக்கத்தை வெளியில் கூட்டிக்கொண்டு போக ஆசைப்பட்டான்.
“பரக்கத்து… நாளைக்கு நாம வெளியில போகனும். சீக்கிரமாவே கெளம்பிரு. ஏ ஃபிரண்டுட்ட பைக்கு கேட்ருக்கி அதுல போலாம்” என்றான் நிஜாம்.
“எங்க போறோம்” என்றாள் பரக்கத்.
“அதெல்லாம் சொல்லமுடியாது…. நம்ம போகும்போது பாத்துக்க” என்றான் கொஞ்சும் தொனியில் நிஜாம்.
“இல்லங்க இன்னக்கி பீரியட் ஆக வேண்டியது….. இன்னு வரல நாமவெளில போய் அலையுறதுல வந்துருச்சுன்னா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள் பயத்துடன்.
“இங்க வாடி…. ஏ அருமபொண்டாட்டி. புள்ள அல்லா குடுக்குறது. நம்ம எதுவு செய்ய முடியாது. அவனுக்கு தெரியும்ல எப்ப குடுக்கனும்ன்னு. சும்மா…. மூச்சுக்கு முன்னூறுதடவ அல்லா, அல்லான்னு சொன்னா போதுமா … நம்பு” என்று அவளை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைத்தான்.
மறுநாள் காலையில் பரக்கத் சீக்கிரமாக கிளம்பினாள். நிஜாம் வாங்கிக் கொடுத்த புதுச் சேலையை கட்டி, தலை நிறைய பூவைத்து அது வெளியில் தெரியாத வாறு தலையில் சேலையை போட்டுக்கொண்டு வண்டியில் ஏறினாள். முதல்முறை என்பதாள் வண்டியில் உள்ள கம்பியை ஒருகையில் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். இன்னொரு கையில் சேலை தலையிலிருந்து கீழே விழாமல் அதையும் அவ்வப்போது சரி செய்து கொண்டாள். அவள் முகத்தில் தெரியும் சந்தோசத்தை கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்துகொண்டே வண்டியை ஓட்டினான் நிஜாம்.
நேராக வண்டி வைகை டேமை நோக்கி போய் நின்றது. பரக்கத்திற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
“ஏங்க இந்த எடத்த நா ஒரு படத்துல பாத்துருக்கே…” என்று பரபரப்பாக கூறினாள். நிஜாமின் ஊரில் இருந்து நாற்பது நிமிடம். ஆனாலும் சந்தோசத்தில் களைப்பே தெரியவில்லை இருவருக்கும். டிக்கட் வாங்கிவிட்டு உள்ளே போனதும், அங்கு இருக்கும் செடி, கொடியில் மலர்ந்திருக்கும் பூக்கள், பூப்போன்று தண்ணீர் வருவது அனைத்தையும் அதிசயமாக பார்த்தாள். சிறிது தூரம் மேலே சென்றவுடன் குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்றவுடன் பரக்கத்திற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. கீழே விழுவது போல சிரித்தாள். நிஜாமிற்கு எதுவும் புரியாமல் அவள் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். இங்கு வந்த பிறகு, அப்படி அவள் சிரித்து ஒரு முறைகூட அவன் பார்த்தது இல்லை.
“ஏண்டி இப்டி சிரிக்கிற, என்ன….” என்று அவனும் சிரித்துக்கொண்டே கேட்டான்.
ஒரு யானையின் சிலையை காண்பித்து மறுபடியும் சிரிக்க தொடங்கினாள்.
“என்னடி லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்க, என்னன்னு சொல்லிட்டு சிரி” என்றான்.
“அந்த யானைய பாத்திங்களா குண்டி வழியா போய்ட்டு வாய்வழியா வர்ர மாதிரி கட்டிருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே குழந்தை போல மறுபடியும் சிரித்தாள். சிரிது நேரத்திலேயே அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் விளையாட துவங்கினாள். அங்கு விற்ற மாங்காய், சிப்ஸ், சர்பத் என்று சாப்பிட்டதால் மதிய உண்வு தேவைப்படவில்லை இருவருக்கும். மாலை மணி ஐந்தை நெருங்கியது. வீட்டிற்கு போவதற்கு தயாரானாள். இரவு நன்றாக தூங்கினாள் பரக்கத். பத்து நாட்கள் கடந்த பின்பு காலையில் எழுந்ததும் ஒமட்டிக்கொண்டு வாந்தி வந்தது. பரக்கத்தின் மாமியாரின் வருகைக்காக காத்திருந்தாள். பத்துமணிக்கு அவள் வந்ததும், பரக்கத் அவளிடம் கூறினாள். “நாள் தள்ளிப் போயிருக்கு மாமி…” ஜன்னத்திற்கு மகிழ்ச்சி தலைக்கேறியது
“இதுக்கு பேருதேல மசக்க… ஒனக்கு புடிச்சத சாப்டு. இனிதே நீ கவனமா இருக்கனும். புடிச்சத சாப்டனும்ன்னு இஷ்ட்டத்துக்கு சாப்ட்டுட்டு இருக்க கூடாது. சத்தானதா சாப்டு. ஒனக்கு என்னா வேணுமே எண்ட்ட கேளு… அவன்ட்ட சொல்லிட்டியா” என்றாள் ஜன்னத்.
“வெளிய பேய்ருக்காங்க வரவும் சொல்லனும்” என்றாள் பூரிப்புடன். நிஜாமிடம் சொன்னதும் தலைகால் புரியவில்லை. வேலைக்கு போன நாட்கள் போக வீட்டில் இருக்கும் நாட்களில் அவளைத் தாங்கினான். பத்து மாதத்தில் ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றாள். அழகாக நாட்கள் நகர்ந்தது. மாதங்கள் போய் வருடங்கள் ஆகின.
“ஏங்க இந்த மாசம் லாரிக்கு போய்ட்டு சீக்கிரம்மா வந்துருங்க புள்ளைக்கு பொறந்த நாள் வருது” என்றாள். மறுநாள் லாரிக்கு கிளம்பினான்.
“பரக்கத்து நா ஓனர்ட்ட பேசிட்டீ… லாரி திரும்ப லேட் ஆச்சுன்னா நா அந்த தேதிய ஒட்டி பஸ்ல வந்துர்ரீ. கூட வர்ரவுங்க லாரிய எடுத்துட்டு வந்துருவாங்க” என்றான்.
நாட்கள் கடந்து பிறந்த நாள் தேதி வந்தது. பரக்கத்தும் குழந்தையும் ஆவலுடன் எதிர் பார்த்தனர். பரக்கத்தின் கணவன் வேலை செய்யும் லாரியின் ஓனர் பெரிய வீடு அத்தா கானை பார்க்க வந்தார். ஜன்னத்தையும், பரக்கத்தையும் கான் ஆள்விட்டு அழைத்தார். இருவரும் வந்ததும் லாரியின் முதலாளி ஜன்னத்திடம் தயங்கித் தயங்கி வார்த்தைகள் தடுமாறி
”அம்மா……. லாரி திரும்ப வரும்போது மதுர பக்கத்துல வேற ஒரு லாரில மோதிடுச்சு………” என்று அவர் முடிப்பதற்குள்
“அவருக்கு ஒன்னு ஆகலைலண்ணே…….” என்றாள் பரக்கத்.
“இல்லம்மா……ரெண்டு பேரு……..” என்று அவர் கூறும்போதே புரிந்தது அவர்களுக்கு.
ஜன்னத் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்… “என்ன…. பெத்தவனே…… எனக்கு முன்னாடி என்னிய விட்டுட்டு போய்ட்டியா, ஏ புள்ள இல்லாம நா என்னாம்பி…… ஏ ராசாவ நா என்னாண்டு பாப்பி….” ஜன்னத்தின் குரல் கேட்டு தெருவே கூடின. பரக்கத்தால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடிய வில்லை. உலகமே நின்றதுபோல இருந்தது.
“அங்க ஆக வேண்டியத நான் பாத்துட்டீன்த்தா இன்னு மூனுமணி நேரத்துலகொண்டு வந்துருவாங்க, இங்க நீங்க பாத்துக்கோங்க…” ஜன்னத்தின் அருகில் போய் “உங்களுக்கு எந்த உதவினாலும் கேளுங்கம்மா…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் முதலாளி.
கான் கூறுவதற்கு வார்த்தைகள் அற்று அமர்ந்திருந்தார். அங்கு கூடியவர்கள் பரக்கத்தை அழைத்துக்கொண்டு போனார்கள். பரக்கத்தின் அமைதியைப் பார்த்து ”அழுதுரு அழுதுரு..” என்று கூறிப்பார்த்தனர். ஆனால் அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மீண்டும் அனாதை ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். உலகமே இருட்டிவிட்டது போல இருந்தது.
மூன்று மணி நேரத்தில் பரக்கத்தின் கனவனைக் கொண்டு வந்தனர். போஸ்ட்மார்டம் செய்து குடுத்திருந்ததால் முகத்தை முழுமையாக யாராலும் பார்க்க முடியவில்லை. எல்லோரும் கதறும் சத்தம் கேட்டும் பரக்கத் அமைதியாகவே இருந்தாள். நிஜாமின் உடல் அருகில் அமர்ந்து முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். அரை மணி நேரத்தில் உடலை பள்ளிவாசலுக்குத் தூக்கிச்சென்றனர். அப்போதும் பரக்கத் அழவேயில்லை என்பதை தெருவே பேசியது. ஒரு வாரம் கடந்தது, பரக்கத் மகனையும் மறந்து தன் நினைவே இல்லாமல் இருந்தாள். ஜன்னத்திற்கு பயம் வந்தது. எழுந்து பரக்கத்தின் அருகில் போனாள். பேகம் பரக்கத்திடம் ஏதேதோ பேசிப்பார்க்கிறாள், எதற்கும் அசைவு இல்லை அவளிடம்.
ஓங்கி பளார் என்று பரக்கத்தின் கன்னத்தில் அறைந்தாள் ஜன்னத். அப்போது தான் நிலைகுத்தி நின்றிருந்த கண்கள் அசைந்தன.
“என்னாடி ஆச்சு ஒனக்கு, நீயு இப்டி இருந்து போய்ட்டனா புள்ளைய தெருவுலையாடி விட முடியு. அவெஞ் சாப்டானா இல்லையான்னு பாத்தியா. ஏ எனக்கு மட்டு புள்ளையில்லையா நிஜாமு….. கஷ்டமாத்தே இருக்கு அதுக்கு அப்டியே ஒக்காந்திருந்தா போனது திரும்ப வந்துரும்மா…. வருத்தோ வயித்துக்கு தெரியுமா, அடுத்தவேலையே பசிக்கும். அதாண்டி வாழ்க்க.. எந்திருச்சு பொழப்ப பாப்பிய இருளடிச்ச மாதிரி ஒக்காந்துருக்கா” என்று கண்களில் கண்ணீருடன் சொல்லிக்கொண்டே நடந்தாள். நின்றிருந்த அம்மாவை ஓடி வந்து கட்டி அனைத்தான் பரக்கத்தின் மகன் காஜா.
“ம்ம்மா…. பசிக்கிது, ஏதாவது செஞ்சு குடும்மா” என்றான் காஜா. வெளியில் வந்தாள் பரக்கத் மகனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அப்போது கண்ணீருக்கு இடையில் ஒன்றை முடிவு செய்தாள். மகனை பசியுடன் விட்டுவிடக் கூடாது என்று. கையில் இருந்த பணத்தை வைத்து ஒரு மாதம் ஓடியது. தினமும் பேகம் பரக்கத்தை வந்து பார்த்துவிட்டு குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை சாப்பிடுவதற்கு கொண்டு வருவாள். வீட்டுக்கு வந்த ஜன்னத்திடம்
“மாமி கையில பணம் ஏது இல்ல அடுத்த மாசத்துல இருந்து என்ன பன்றதுன்னு தெரியல” என்றாள் பரக்கத். பகலில் வேலையை முடித்துவிட்டு பரக்கத்திற்கு துணையாக வந்துவிடுவாள் பேகம். அன்றும் அவள் உடனிருந்தாள்
”ஏதாவது வேலைக்கு போகவா” என்றாள் பரக்கத்.
“புள்ளையை என்ன செய்வ… ஒன்னையவிட்டுட்டு இருக்க மாட்டானே” என்றாள் ஜன்னத்.
ஆழ்ந்து யோசித்துவிட்டு ”பேசாம ஏதாவது கட போடுறியா” என்றாள் ஜன்னத்.
”ஏ…. இட்லி கட போடுல நல்லா…. ஏவாறோ ஆகும் . அதும் ஒ பஞ்சு போல இட்லி, தண்ணியா தேங்கா சட்னி, கூடவே அந்த மொளகா சட்னி எல்லருக்கு புடிக்கும்ல நமக்கு தெரிஞ்ச வேலைய நம்ம திருப்தியா பன்னலாம். என்னா ஜன்னத்தக்கா நா சொல்றது” என்றால் பேகம்.
“ஆமா பரக்கத்து அல்லா மேல ஈமான வெச்சு ஆரம்பிக்கலாம். ஒங்க மாமா ஒ… புருசே சின்ன பயலா இருக்கும்போதே எறந்துட்டாரு. என்னா பன்றதுன்னு ஒன்னு வெளங்கல. நாம சும்மா இருந்தாலு நம்ம வயிறு சும்மா இருக்குமா. புள்ளைக்காக வாவது ஏதாவது செய்யனும்ல. வட சுட்டுத்தே விக்க ஆரம்பிச்சேன், அதுல இருந்து வந்த பணத்துலதே அவன ஆளாக்குனே… அதுலதே ஏ… பேரு ஊர்ல எல்லாரு வட ஜன்னத்துன்னு கூப்ட ஆரம்பிச்சாக. நோம்பு நேரத்துல நல்லா ஏவாரம் இருக்கும். இட்லிக்கடைல என்ன வந்தர போகுதுன்னு யோசிக்காத அல்லா மேல ஈமான வை, அவே வெதச்சதுக்கு தண்ணி ஊத்த மாட்டானா” என்றாள் ஜன்னத்.
பரக்கத் மிகவும் தயக்கத்துடன் கேட்டாள்
“ இல்ல மாமி இன்னு இத்தா முடியல, அதா யோசனையா இருக்கு”.
“படச்சவனுக்கு தெரியாதா..? யாரு….எதுக்காக என்னா செய்யிறாங்கன்னு..? சட்ட திட்டமெல்லா நம்ம போட்டுக்கிட்டதுதானே… ஊரு பேசும்ன்னா, நேத்து என்னைய பேசுச்சு, இன்னக்கி ஒன்னைய பேசும், நாளைக்கு யாரையோ…. எப்பிடி இருந்தாலும் பேசுவளுக பேசிக்கிட்டுத்தான் இருப்பாளுக… பேச்சு வரத்தாஞ் செய்யும்….கண்டத யோசிக்காம வேலைய ஆரம்பி..” என்று சொல்லிக்கொண்டே வெளியே நடந்தாள் ஜன்னத். பரக்கத்தின் மனதில் நம்பிக்கை துளிர்த்தது.
பரக்கத்தின் இத்தா காலம் முடிவதற்குள் வீட்டு வாசலில் ஒர் இட்லிக் கடை உருவாகிவிட்டது. இட்லியைப் பற்றிய பேச்சு தெரு முழுவதும் நிறைந்திருந்தது. யாரும் இத்தாவைப் பற்றி பேசவேயில்லை.
– மு.அராபத் உமர்
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அராபத் எழுதிய. பரக்கத் கதை வாசித்தேன். இஸ்லாமிய மக்கள் பேசும் தமிழில் இத்தா எனும் விதவை சடங்கினை ஊர்ப்பேச்சுகளைத் தாண்டிக் கடந்து செல்லுவதை லாவகமாக கதையாக்கப் பட்டுள்ளது.வாழ்த்துகள் தோழர் அராபத்.
சிறுகதை துவக்கத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக படிக்க படிக்க வாழ்க்கையின் படிகளை கடந்த நிலையில், சாதாரண மக்களின் அடித்தட்டு வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பதை சமுதாயத்தின் முன்னிலையில் நடக்கின்ற செயல்களை காட்சிப்படுத்தி, ஒரு மனிதன் செயல்களிலே தன்னுடைய அனைத்தையும் காண முடியும் என்று ஜன்னத் மூலம் உணர்ந்த பர்கத் தன்னை சரிசெய்து கொண்டு வாழ்க்கையை பாதையை சீராக கடக்க துவங்கியது சிறப்பு. இக்தா முடிவதற்குள் செயலுக்கு வந்தது ஜன்னத் அவர்களின் செயல் திறமை அனைத்தையும் உடைத்துவிட்டு கதை நகர்கிறது சிறப்பு தோழர் நல்வாழ்த்துகள்..💐💐💐