பரமபத சோபன படம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பரமபத சோபன படம்
ஆசிரியர் : பொன். தனசேகரன்
வெளியீடு : போதிவனம்
நூல் வாங்கத் தொடர்பு எண்கள்: 98414 50437 / 94440 50437
விரிகோணப் பார்வையில் ஒரு கவிதை நூல்
பொன். தனசேகரன் அவர்களை ஒரு பத்திரிகையாளராக ஆண்டு பலவாக நான் அறிவேன். கல்வி சார்ந்த அவரின் கட்டுரைகளையும் நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் அவரது கவிதை தொகுப்பு உள்ளிட்ட பிற நூல்களை வாசிப்பில் தவறவிட்டது எனது அறியாமையின் வெளிப்பாடு என்பதன்றி வேறல்ல.
நல்வாய்ப்பாக “பரமபத சோபன படம்” என்ற பொன். தனசேகர் அவர்களின் கவிதைத் தொகுப்பு எனக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறது. காத்திரமான எழுத்தாளரின் கவிதைகள் வண்ண வித்தை காட்டுகின்றன. கவிதைகளை வாசிக்கும் போது அவரது உரையாடலைப் போலவே மென்மை இருந்தாலும் கருத்தாழத்திற்கும் குறைவில்லை.
கவிதைக்கு முரண் என்பது ஓர் அழகு. அதனை மிக லாவகமாகக் கையாளும்போது வாசகர்களுக்கு விருந்துண்ட நிறைவு கிடைக்கும்.
“பல ஆண்டுகளான பிறகும்
எனது கையைப் பிடிக்காமல்
அதற்கு எழுத தெரியவில்லை
எனக்கும் அப்படித்தான்
பேனா இல்லாமல்
எழுத முடிவதில்லை”
என்ற கவிதையில் அதனை அனுபவிக்க முடிகிறது.
அங்கதச்சுவை கவிதைக்கு இன்னொரு அழகு. இதனால் யாரையும் நையாண்டி செய்து பார்க்கலாம். இவரோ கடவுளை வம்புக்கிழுப்பது புதுமை.
“ஆக்கல், காத்தல், அழித்தல்
வேலைகளில்
அலுத்துப்போன கடவுள்
தன்னை வேண்டி வந்த
பக்தரிடம் கேட்டார்
தனக்கு ஒரு நாள்
விடுப்பு கிடைக்குமா என்று”
பாவம் பக்தர் எப்படி கடவுளுக்கு விடுப்பு கொடுக்க முடியும்? நையாண்டி தொடர்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு,
“வீட்டிலிருந்து கொண்டே
வேலை செய்யவாவது
அனுமதி கிடைக்குமா”
என்று மீண்டும் கோரிக்கையை முன் வைத்தார் கடவுள். இது நிறைவேறியதா இல்லையா என்பதை தொகுப்பைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு அடுத்தபடியாக அவர் எடுத்துக் கொள்ளும் நையாண்டி பாத்திரம் யார் தெரியுமா? தர்மன்….. எமதர்மன்…..
ஒரு தலையை எங்கே விட்டோம்?
எடுக்க தவறிவிட்டோமா?
எடுக்காமல் விட்டோமா?
திகைத்தார் எமன்”
இந்தத் திகைப்பின் விளைவால் எமனுக்குக் கிடைத்தது இடை நீக்க உத்தரவு. இதற்குப் பிறகு எருமை வாகனமும், பாசக்கயிறும் சரண்டர் செய்யப்பட்டது.
“அடுத்து என்ன செய்வது என்று
புரியாமல்
கால்நடையாக வாசலுக்கு வந்தார்
எமன் மீது பாசக்கயிறு பாய்ந்தது
ஒரு தலைக்கணக்கு
நேர் செய்யப்பட்டது” எமனின் தலையையும் இறந்தோர் கணக்கில் சேர்த்த இந்தக் கவிதையின் சொற்செட்டும் சொற்செறிவும் அதன் அழகைக் கூட்டுகின்றன.
தான் கூவுவதால்தான் பொழுது விடிகிறது; சூரியன் உதிக்கிறது என்று சேவல் நினைத்துக் கொண்டால் அது கர்வத்தின் அடையாளம் என்று சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனைக் கொஞ்சம் முனைதிருப்பி மூடநம்பிக்கையின் உதாரணம் ஆக்கியிருக்கிறார் பொன் . தனசேகரன்.
“ஒரு நாள் சேவல் தூங்கிவிட்டது
அன்றைய தினம் மேகம்
மறைத்திருந்ததால்
சூரியனும் வரவில்லை
அதிலிருந்து
சேவல் கூவாமல் சூரியன்
விழிக்காது என்று
நம்பத் தொடங்கியது உலகம்” மூடநம்பிக்கையின் முளையைக் கிள்ளிவிடலாம் என படைப்பாளி முயற்சிக்கிறார். என்னதான் எடுத்துச் சொன்னாலும் அது கிளைத்துக்கொண்டே இருப்பதும் புது வடிவில் கடத்தப்படுவதும்தான் அவலம்.
“பார்க்கிற அனைத்தையும்
எண்களில் கூட்டிக் கழித்து
பெருக்கி வகுத்துப் பார்த்து
எடைபோட்டுப் பழகியது உலகம்” என்ற ‘எண் அதிகாரம்’ கவிதையின் நிறைவு வரிகளுக்குமுன் அடுக்கப்படும் எண்கள் அசர வைக்கின்றன.
“எத்தனை டிகிரி வெயில்?
எத்தனை சென்டிமீட்டர் மழை?”
என எளிதான எண் கேள்விகளால் கவிதையைத் தொடங்கி,
“எத்தனை பேர் போட்டி?
எத்தனை வேட்பாளருக்கு எத்தனை
வாக்குகள்?
எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்?”
என்ற அரசியல் எண் கணிதத்தை கவனப்படுத்துகிறார்.
“அதிகாரத்தைப் பிடிப்பதற்கும்
ஆட்சியை இழக்க வைப்பதற்கும்
இயங்குதளம் எண்கள் தானே!”
தெளிவான சிந்தனையை எளிய கவிதை வரிகளில் பதியமிடுகிறார். இது வாசிப்பு அனுபவத்தை இரட்டிப்பாக்குகிறது.
வழக்கமாக கேட்டு வைக்கும் சொற்களை, சொலவடைகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு கவிதை அழகு பார்க்கும். ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று அடிக்கடி நாம் கேட்டிருப்பதைக் குப்புறக் கவிழ்த்துப் போடுகிறார் – “குற்றம் தன் கடமையைச் செய்யும்” என்ற தலைப்பின் மூலம். அது மட்டுமல்ல, “சட்டம் கொண்டு வரும்போதே / குற்றமும் பிறந்து விடுகிறது” என்ற வரிகள், குற்றம் என்றால் என்னவென்றே தெரிந்திராத ஆதிப் பொதுவுடமை சமூகத்தை நினைவுறுத்துகின்றன. “சட்டங்களை ஒழித்து விட்டால் / எதுவும் குற்றமில்லை” என்கிற வரிகள் சிந்தனைக்கும் விவாதத்திற்கும் உரியவை.
சட்டங்கள் இருப்பதால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதில்லை. அவை இல்லாத காலத்தும் மனிதர்கள் வாழத்தான் செய்தார்கள். “ஆடையின்றி வெளியே நடமாடுவது சட்டப்படி குற்றம். அந்த சட்டத்திற்காகவா நான் ஆடை அணிகிறேன். இல்லை. அது ஒரு நாகரிகம். அவ்வளவுதான்” என்று ஒரு முறை எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது நினைவுக்கு வருகிறது.
மரபுகளை, பண்டைய பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை இன்றைய தலைமுறை அறியட்டுமே என்று பதிவிடுவது படைப்பாளியின் நன்னோக்கங்களில் ஒன்று. இது போன்ற பதிவுகள் நாம் கடந்து வந்த பாதையைத் தெரிந்துகொள்ள உதவும்.
குடுகுடுப்பைக்காரர்களைப் பலரும் அறிவார்கள். ஆனால் சாமக் கோடாங்கி யார் என்பதை வயதில் மூத்தவர்கள் சொன்னால்தான் தெரியும். சாமக் கோடாங்கி பற்றிய நுட்பமான பதிவு ஒன்று இந்நூலில் உள்ளது.
“இரண்டாம் சாமத்தில்
இருட்டு உறங்கும் அந்தத் தெருவில்
சாமக்கோடாங்கியின்
குடுகுடுப்பை சப்தத்துடன்
நல்ல காலம் பொறக்குது
இருட்டோடு இருட்டாக
இருளில் கரைந்து போகும்
அந்த வெண்கல குரலின் முகத்தை
நேருக்கு நேர் பார்த்தவர்கள் இல்லை
பகலில் அந்தத் தெருவில் வந்தாலும்
அவரை யாருக்கும் அடையாளம்
தெரியாது
அவருக்கு நல்ல காலம்
பிறந்ததா என்பதும் தெரியாது”
பகலில் அந்தத் தெருவில் வந்தாலும் அவரை யாருக்கும் தெரியாதது ஏன்? சாமக்கோடாங்கியின் குரல் கேட்டு விழித்துக் கொண்டவர்களின் காதுகள் கூர்மையடையும். பொதுவாக தெருவில் குறி சொல்லிக் கொண்டே அவர் சென்றாலும் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்கான ஆர்வம் மிதமிஞ்சியது. கேட்பதற்கு மனம் பதைபதைத்தாலும் சொல்பவரைப் பார்ப்பதற்கு அந்தச் சாமத்தில் மனம் மயான அச்சத்தில் இருக்கும். அதனால் சாமக்கோடாங்கியை யாரும் பார்க்கத் துணிவதில்லை. அவரைப் பார்த்துவிட்டால் சொன்னது பலிக்காது. அல்லது கேடு வரும் என்று காலந்தோறும் சொல்லப்பட்டு வந்ததும் ஒரு காரணம்.
இப்படியாகப் பல நினைவுகளை மனதில் நிழலாடச் செய்யும் பொன். தனசேகரன் அவர்களின் “பரமபத சோபன படம்” கவிதைத் தொகுப்பு முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலம் அமைப்பதாய் உள்ளது. மேலும் மேலும் சுவைக்கவும் விசாலப் பார்வைக்கும் இது இடம் கொடுக்கிறது. நூலை முழுமையாக வாசிப்பதால் மட்டுமே அதனை உணர முடியும். போதி வானம் வெளியீடாக வந்துள்ள இந்நூல் வாசகப் பரப்பால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
மயிலை பாலு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.