சிறுகதை: *தன் கடன்* – ப.சிவகாமி* வண்ண நிலா நான் என்றால்
என் வானம் நீ
என் இதயம் நிறைந்த ராதை நீ
என் ஒளியும் நீ
என் உணர்வும் நீ
என்னை இயக்கும் உயிரும் நீ
…………..
…………………
நீ இல்லா என் வாழ்வு
நீரில்லாத மீனே!

உன் பார்வை வரம்
கிடைக்கா நாட்களெல்லாம்
என் வானத்தில்
உதயம் இல்லா நாட்களே!
…………….

கவிதாவுக்காக அவன் எழுதிய அத்தனை கவிதைகளும் கடிதங்களும் அவன் தலையணைக்கேத் திரும்பியிருந்தன. சில தூக்க மாத்திரைகளும் ரகசியமாய் அங்கே பதுங்கியிருந்தன. மகேஷும் கவிதாவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். ஆண்களும் பெண்களுமாக சுமார் இருநூறு பேர் பணிபுரியும் நிறுவனம் அது. இருவரும் காதலர்கள். இவர்களுடைய காதலுக்கு ஆண்டு இரண்டு ஆகிறது. எனினும் இவர்களின் காதலுக்கு வயதேது!.

மற்றப் பெண்களைப் போலில்லாமல் கண்களை உறுத்தாத உடை, எளிய அலங்காரத்துடன் கூடிய இயல்பான அழகு, நற்பண்பு, பணியில் அவள் காட்டும் கடமையுணர்வு, பெருந்தன்மை, உயர்ந்த ரசனை, பணிவு என அனைத்துமாய் நிறைந்திருந்த கவிதாவால் மகேஷ் கவரப்பட்டான்!
ஏழ்மையில் வளர்ந்தாலும் மகேஷ் நல்லத் திறமையும் அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன். வெட்டியாகப் பொழுதைக்கழிப்பதில் விருப்பம் இல்லாதவன். இரட்டை அர்த்தப்பேச்சுக்களை வெறுப்பவன். எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கண்ணதாசனோ வைரமுத்துவோ அவனது கைகளில் இருப்பார்கள். அல்லது அவன் செவிவழிச் செல்வார்கள். இவனது நேர்மைப்பண்பு கவிதாவை மெல்ல அவன்பக்கம் ஈர்த்தது. பூக்கள் மலர்ந்தால் வாசம் அதிலேயே தங்கிவிடுவதில்லை. காதல் மலர்ந்தாலும் அப்படித்தானே!

முதலில் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டவர்கள் பின்பு மனதைப் பரிமாறிக்கொண்டார்கள். இருவர் மனமும் உள்ளமும் ஒன்றாய் சங்கமித்தது. ஆனாலும் அவற்றிலும் கண்ணியத்தை கடைபிடித்தது. இந்த இரண்டு வருடங்களில் சில முறை இவர்கள் பூங்காவில் சந்தித்துக் கொண்டதுண்டு. அங்கிருக்கும் பென்ஞ்ச் ஒன்றில் அமர்ந்து சில மணித்துளிகள் பேசிக்கொண்டதும் உண்டு. அப்போதெல்லாம் இடையைத்தாண்டிய அவளது கூந்தலை கோதிவிட வேண்டுமென்றும், அந்திவானமாய்ச் சிவந்திருக்கும் அவள் கன்னங்களை வருடவேண்டுமென்றும், சில முத்தங்களையாவது அவளுக்குச் செப்பி விட வேண்டுமென்றும் ஆசை அலை மேலெழும்பும். ஆனால் அவளதுக் கட்டுப்பாடும், கண்ணியமும் அவனைத் தடை செய்துவிடும். ஒரே ஒருமுறை அவளது கைகளை ஸ்பரிசித்து தன் கன்னங்களில் ஒற்றிக்கொண்டிருக்கிறான். அந்தப்பேரின்ப அனுபவத்தை இதயக்கூட்டில் பதுக்கி இன்றுவரை ஆனந்தித்திருக்கிறான்.

இருவரும் வெவ்வேறு வகுப்பினர். கவிதா பொருளாதாரத்தில் நடுத்தரவர்க்கம். அப்பா அலுவலக எழுத்தர் பணியில் இருக்கிறார். வீடும் குழந்தைகளுமே உலகமென அம்மா. கவிதா மூத்தவள். அவளுக்கு அடுத்து புவனா, யமுனா என இருவர். யமுனா பள்ளியிலும், புவனா கல்லூரியிலும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மகேஷின் அப்பா இன்னொரு பெண்ணோடு குடித்தனம் செய்யப் போய்விட்ட பின்பு, அம்மா கல் சுமந்து காப்பாற்றியதால் இவனால் தொழில் கல்வியில் பட்டயம் பெற முடிந்தது. ஒரே தங்கை பள்ளியில் படிக்கிறாள், வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவி கொண்டு!.……….கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகவே கவிதா சோர்ந்து காணப்படுகிறாள். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதும், பார்வைச் சந்திப்புகளை தவிர்ப்பதும், உடலின் மெலிவும், வேதனையை மறக்க வேலையே கதி என்றிருப்பதும், அவனால் எவ்வளவு பொறுமையைக் கடைபிடித்தும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் கவிதாவிடம் அனுப்பவேண்டிய கோப்புகளுடனே ஒரு குறிப்பு எழுதி அனுப்பினான். “இன்று மாலை ஐந்தரை மணிக்கு வழக்கமான பார்க்கில் வழக்கமான பென்ச்சில் உனக்காக நான் காத்திருப்பேன் என்று.”

அன்று மாலை, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு அவள் வரவில்லை! அவள் தங்கை யமுனா வந்தாள். அக்கா கொடுக்கச் சொன்னதாக ஒரு கைப்பையை கொடுத்துவிட்டு சிட்டாய் பறந்து போனாள். பையைத் திறந்தான். அதில் பிறந்தநாள் பரிசாகத் தான் அவளுக்குத் தந்த வைரமுத்துவின் புத்தகமும் ஓர் உறையும் இருந்தது. உறைக்குள் அவன் அவளுக்காக எழுதிய கவிதைகளும் கடிதங்களும் (ஒன்றிரண்டைத் தவிர மற்றவை) அப்படியே இருந்தது! இதனோடு அவள் எழுதிய நான்கு வரிக் கடிதமொன்றும்! பிரித்தான்! படித்தான்!

எந்தன் உயிரே!

“ பிணமாய் வாழத் துணிந்தவள்! மனதுக்கும் உணர்வுக்கும் ஒருங்கே நஞ்சு வைத்துத் தோற்றுக்கொண்டிருப்பவள் எழுதுகிறேன்…. நம் வகுப்பில் பிரிவினையாம்! உன்னை மணந்தால் என் தங்கைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமாம்! என் பெற்றோரும் உயிர்வாழாராம்!”

இப்படிக்கு,
மனதால் உன்னை மணந்து உடலால் பிரிபவள்.

இவ்வளவுதான் கடிதம்! அவளிடம் இயல்பாகத் தங்கிவிட்ட தியாக உணர்ச்சியும், அளவுக்கு மீறிய கட்டுப்பாடும் தான் அவளின் இந்த முடிவுக்குக் காரணம் என உணர்ந்தான். தனக்குரியவள் தன் உயிராய் இருந்துத் தன்னை இயக்குபவள், தன்னிலிருந்து விடுபட்டுப்போகும் எதார்த்தத்தை மனதாலும் நினைத்துப் பார்க்க முடியாத வேதனையில் வேலையை ஒழித்து, தனிமையேத் துணையாய் வீட்டிற்குள்ளேயேத் தவித்திருந்தான் கடந்த ஒன்றரை மாதங்களாக!. விடிந்தால் கவிதாவுக்குத் திருமணமாம்! அவள் தனக்கு இல்லை என்பது நிச்சயமெனில் தன்னால் உயிர் வாழ்தல் இயலாது என்பது புரிந்ததால், தூக்க மாத்திரைகளுக்குத் தன்னைத் திண்ணக் கொடுக்கத் தயாராக இருந்தான்!. கடைசியாக ஒருமுறை தங்களின் அன்புப் பரிமாற்றங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது,…

அடுப்படியிலிருந்து அம்மா ஆ…..! என்று ஒரு அலறல்! சுவரைக் கிழித்து, இவன் காதைக் கிழித்து, உணர்வை உயிர்த்தது! அடுப்பங்கரைதான் அம்மாவுக்கும் தங்கைக்கும் படுக்கையறை. அடுத்துள்ள ஒரு சிறு அறைதான் இவன் உலகம்! ஒரு சின்னத்தாழ்வாரம் இவ்வளவுதான் இவன் வீடு.

உணர்வு கலைந்து எழுந்து ஓடினான்! அங்கே முழங்காலிலிருந்து பாதம்வரை எலும்புதெரியும் அளவிற்கு ரணமாய், அம்மா துடித்துக்கொண்டிருந்தாள். செங்கல் சரிந்துவிழுந்ததால் உண்டான கொடூரமான ரணம்! வயது நாற்பத்தெட்டு ஆகியும் இக்கடுமையான உழைப்பிலிருந்து அம்மா ஓய்வு பெறவில்லையே! தங்கையைக் கரைசேர்க்கும் வரைக்கும் தானும் உழைப்பதாய்ச் சொல்லிக்கொண்டிருந்தாளே! அவளுக்கா இப்படி? குற்ற உணர்வில் மனம் குருகுருத்தது. இதயம் ரணமாய் ரத்தமாய் கண்ணீராய் கண்களில் கசிந்தது! அம்மாவின் அருகில் அமர்ந்து அவள் கைகளை ஆதரவாய் எடுத்தனைத்து, அவள் கண்ணீரைத் துடைத்தான். “அம்மா! அம்மா! அம்மா! என்னை மன்னித்துவிடு! இதுவரை என் சுயநலம் என் கண்களுக்குத் திரையிட்டிருந்தது. இனி நீயும் தங்கையும் தான் என் உலகம். உங்களுக்காகவே உழைக்க நான் இருக்கிறேனம்மா! நீ இதுவரை உழைத்தது போதும். இனியேனும் ஓய்வெடு! வாங்கம்மா மருத்துவமனைக்கு! என்று மெலிந்த தேகத்தை மெதுவாகத் தூக்கித் தன்தோளில் சாய்த்து கொண்டான்!.”

ப.சிவகாமி,
புதுச்சேரி.