“ஏம்மா ராணி! சின்ன வயசுலேயே கைக்குழந்தையோட நீ தனியா நிற்கறதைப் பார்க்க மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. உனக்காக இல்லேன்னாலும் பாலுவின் எதிர்காலத்துக்காகவாச்சும் நீ ரெண்டாவது கல்யாணம் செய்துக்கம்மா. என் அக்காள் மகன் சுப்பன் நல்லவன். உழைப்பாளி. அவன் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்றான். யோசிச்சு நல்ல முடிவாச் சொல்லும்மா…..” கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஓத ஆரம்பித்திருந்த ராணியின் மாமியார் கற்பகம் இன்றும் அதையேத் திரும்ப கூறினாள்.
இதனைக்கேட்ட ராணிக்கு எப்போதும் போல் கோபமும் எரிச்சலுமே வந்தது. இருப்பினும் அத்தை மனிதாபிமானி, நேயமிக்கவள் என்பதால் அவர் மனசு வருத்தப்படும்படி பதில் கூறுவதைத் தவிர்த்து வந்தாள் ராணி.
கற்பகமும் தன் மருமகளின் மனதை மாற்றும் முயற்சியை தொய்வில்லாமல் மேற்கொண்டபடியே தான் இருந்தாள்.
பண்ணையில் மரக்கன்றுகளைப் பராமரிக்கும் தினக்கூலி ஊழியர்கள் தாம் ரங்கனும் ராணியும். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள அந்த பண்ணை வேலைக்கு தினசரி நடந்தே சென்றுவருவர். பண்ணையில் தேவைக்கேற்றாற்போல் வேலையாட்களின் எண்ணிக்கை கூடும் குறையும். அவர்களில் கண்ணும் கருத்துமாகக் கடமையாற்றுபவர்கள்ச் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பண்ணை நிர்வாகம் தினசரிப் பராமரிப்பு வேலைகளுக்கு வைத்துக் கொள்வதுண்டு. அந்த சிலரில் ராணியும் ரங்கனும் அடங்குவர்.
வறுமை காரணமாக எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை என்றாலும் ராணி, அறிவுக்கூர்மை உடையவள். சின்னத்தனமான ஆசைகளுக்கும் சின்னச்சின்ன ஆசைகளுக்கும் இடம் தராதவள். தொலைநோக்குப் பார்வையும், தெளிந்த சிந்தனையும் உடையவள். பண்பில் சிறந்தவள். முறை தவறியோ நேர்மைத் தவறியோ வசதியாக வாழ நினைப்பவர்களைக் கண்டு முகம் சுளிப்பவள்.
கருத்த நிறமும், முழுமதி போன்ற முகமும், விற்புருவமும், வண்டாடும் விழிகளும், கருகமணி தவழும் கழுத்தும், காதில் மின்னும் நட்சத்திரத்தோடும், நீண்டு நெளிந்தப்பின்னலும், நேர்த்தியாக உடுத்த தாவணியும், ஒற்றைக்கல் மூக்குத்தியும், கண்ணாடிக் கைவளையுமென கிராம தேவதையாகவே வலம் வருபவள்.
இப்படிப்பட்டவள் மனதிலும் விரிந்தமார்பும் உயர்ந்த தோள்களும் கொண்டு குணமென்னும் குன்றேறி நின்ற ரங்கன் சிறுசலனத்தை ஏற்படுத்தியிருந்தான் என்றாலும், அதன் அர்த்தத்தையோ அடையாளத்தையோ அவள் உணர்ந்து தெளியுமுன்னரே ஏதோ ஒரு உறவு வளையத்துக்குள் அவன் முறைப்பையன் என்று அவனுக்கே அவளை மணமுடித்து வைத்துவிட்டனர் இருவீட்டாரும்! முழுமையாக மூன்று வருடங்கள் குடும்பம் என்ற அந்தக் குட்டி சாம்ராஜ்யத்தின் அதிதேவதையாக ராணியாக மாசற்ற வாழ்வு வாழ்ந்த அவள் தலையில் பேரிடித் தாக்கியது ஏனோ? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்!.
பண்ணையில் கரும்பு வயலுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பாம்பு கடித்து ரங்கன் இறந்து போக, ஒரு வயதே நிரம்பிய குழந்தை சந்திரபாலனுடன் ராணி தனிமையாய்த் தவித்து துடித்து துவண்டுபோனாள். குழந்தை சந்திரபாலன் தான் அவள் உயிரை அவளிடம் தக்க வைத்திருக்கிறான் என்றால் அதில் மிகையில்லை.
வயிற்றில் பூசினாற்போன்ற வெண்மையும் உடல் முழுவதும் செம்பஞ்சு நிறமும் உடைய அந்த அழகான நாய்க்குட்டிக்கு என்ன ஆயிற்று? மார்கழிப்பனியில் அதிகாலை நேரத்தில் வாசல் தெளித்துக் கோலமிடும் போது உறங்குவதாய்த்தானே நினைத்தேன். மணி எட்டரை ஆகி சூரியனின் இயக்கத்தில் ஊரே சுறுசுறுப்பாய் மாறி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னமும் அதே இடத்தில் படுத்தபடி அதே நிலையில் ஒரு நாய்க்குட்டியால் இருக்கமுடியுமா? பக்கத்திலேயே அந்தக்குட்டியை அவ்வப்போது முகர்ந்தபடியே அமர்ந்திருந்தது அதன் தாய். சிறிதுநேரம் வாசலில் நின்றவாறே கவனித்தாள்.
சிறியதும் பெரியதுமாய் வரிசையாய் அடுக்கியப் பெட்டிகளாய் வீடுகள் இருக்கும் தெருவில் சற்றுத்தள்ளி வைத்த பெட்டிபோல தனித்திருந்தது இவள் குடிசை. பசுஞ்சாணம் மெழுகிய செம்மண் தரையுடன் கூடிய அந்த ஒற்றையறை சாம்ராஜ்யம் தான் சமையல், பூஜை, டிரஸ்ஸிங், படுக்கை எல்லாத்துக்குமாய்…! குளிக்கவும், துலக்கவும் வெளியில் தனித்தடுப்பு.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்தத் தெருவில் சுற்றித்திரிந்த கருப்புநிற நாய் ஒன்று நான்குக் குட்டிகளை ஈன்றிருந்தது. பிஞ்சுக்குட்டிகள் குளிரைத்தாங்க முடியாமல் வாசலில் இவள் கால்துடைக்கப் போட்டிருந்த கோணியில் சுருண்டுப் படுத்துக்கொண்டிருக்கும். இரவு நேரங்களில் அந்தக் கோணி அதுகளுக்கு படுக்கை விரிப்புகளாகவும், பகலில் அவ்வப்போது வந்தமர்ந்து செல்லும் இருக்கைகளாகவும் இருந்தது. சில இரவுகளில் அந்த குட்டிகளின் கழிப்பிடமாகவும் அந்தக் கோணிப்பை மாறி விடுவதுண்டு. அப்போதெல்லாம் வாசல் பெருக்கிய கையோடு அந்த கோணியை தூக்கிக்கொண்டு கவுண்டர் தோட்டத்து வாய்க்காலில் அலசிக்கொண்டுவந்து கூரையில் காயவைத்துவிட்டு மாற்றுக்கோணியை கால் துடைக்க போடுவாள். கடந்த ஒரு வாரமாகத்தான் அந்த வேலை அவளுக்கு இல்லாமல் இருந்தது. குட்டிகளும் கொஞ்சமாக வளர்ந்து விட்டிருந்தது.
அந்தக் குட்டிகளில் ஒன்றுதான் இப்போது படுத்துகிடப்பது. வயிற்றுப்பகுதி அசைவு அதற்கு இன்னும் சுவாசம் இருப்பதை உணர்த்தியது. அதன் இடது மண்டைப்பகுதியில் இரத்தக்கசிவு இருப்பதை அப்பகுதியிலிருந்த சிவப்பு நிறம் உணர்த்தியது.
அது கிடந்த நிலையும் அதனருகில் சோகமே உருவாக அமர்ந்திருந்த அதன் தாயின் பரிதாப நிலையும் ஏனோ அவள் மனதைக் கசக்கிப்பிழிந்தது. வீட்டுக்குள் ஓடி ஒருசெம்பில் தண்ணீர் கொண்டுவந்தாள். குட்டியை நெருங்கியதும் அதன்தாய் எழுந்து பரிதாபமாக ஒருமுறை குரைத்துவிட்டு மீண்டும் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டது. சிறிதளவுத்தண்ணீரை அந்தக்குட்டியின் முகத்தில் தெளித்தாள். அது லேசாக கண்களை இமைத்துவிட்டு மூடிக்கொண்டது. அதன்வாயில் தண்ணீரை ஊற்ற முயற்சித்தாள். பலனில்லை.
சில நிமிடங்களில் அதன் வயிற்றுப்பகுதி அசைவும் நின்றுபோனது. அவளுக்குப் புரிந்துவிட்டது. அதன் சுவாசம் நின்றுவிட்டதென்று! அதன்தாய் உயிரற்ற தன்குட்டியை முகர்ந்து முகர்ந்து பார்த்தது! அதன் கண்களிலிருந்து கோடாய் கண்ணீர்………
“எந்தப் புண்ணியவான் அந்தக்குட்டியினை அடித்துப்போட்டுவிட்டு போனானோ” அதன் தவிப்பையும் அதன் தாயின் பரிதவிப்பையும் கவனித்து வந்தவளின் இதயம் கனத்துக் கண்களில் நீராய் கசிந்தது.
இடுப்பில் பாலுவை இருத்திக்கொண்டு துயரத்தில் தன்னை மறந்து நின்றிருந்தவளை அந்த வழியாக வந்து கொண்டிருந்த முனைவீட்டு முனிசாமி அண்ணன் தான், “என்னம்மா ராணி, கைக்குழந்தையோட வெயிலுன்னும் பாராம செலபோல நின்னுட்ட” என்று கேட்டார்.
“தோ, அந்த நாய்க்குட்டி அடிபட்டு இறந்து போச்சுண்ணே. அதோட தாய் ரொம்ப நேரமா அப்படி இப்படி நகராம அதன் பக்கத்திலேயே இருந்து அழுதுக்கிட்டே இருக்கு! நான் கிட்டபோனாலும் குரைக்குது. பாவமா இருக்குதுண்ணே” என்றாள்.
சில வினாடிகள் அந்த நாயின் நிலையை கவனித்த முனிசாமி அண்ணன் தெருவில் கிடந்த சிறுகல் ஒன்றை எடுத்து வீசி தாயை விரட்டிவிட்டு, இரண்டு பாலிதீன் உறைகளை எடுத்து ஒன்றை கையுறையாக பயன்படுத்திக்கொண்டு நாய்க்குட்டியை எடுத்து மற்றொரு உறைக்குள் போட்டுக்கொண்டு “நான் வயக்காட்டுக்குதான் போறேன். எருக்குழியில இத போட்டுடறேன். நீ போய் வேலையைப்பாரு. அஞ்சுக்கும் பத்துக்கும் மனுஷனையே சர்வசாதாரணமாக கொல பண்றானுவ. நீ நாய்க்காக அழுதுகிட்டு நிக்கிறியே. போம்மா! போய் வேலையைப்பாரு” என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.
அவர் பின்னாடியே அதன் தாயும் ஓடியது. தெருமுனைவரை ஓடிய நாய் என்ன நினைத்ததோ திரும்பிவந்தது. குட்டி இறந்து கிடந்த இடத்தை முகர்ந்துப் பார்த்தது. அவ்விடத்தைச் சுற்றிச்சுற்றி வந்து மறுபடியும் முகர்ந்து பார்த்தது. சில நிமிடங்கள் அவ்வாறேத் திரும்பத்திரும்பச் செய்த அது ஏனோ அவளை நோக்கியது. அதன் பரிதாபப்பார்வை அவள் வயிற்றைக்கலக்கி மனதைப்பிசைந்து என்னவோ செய்தது. விடுவிடென குடிசைக்குள் ஓடினாள். காலை ஆகாரத்திற்காகக் காய்ச்சி வைத்திருந்த கஞ்சியை கொஞ்சம் கிண்ணத்தில் வார்த்துக்கொண்டு வந்து அதனருகில் வைத்தாள். அதுவோ அந்தக்கஞ்சியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சற்றுத் தள்ளிப்போய் அமர்ந்து கொண்ட நிகழ்வு அவளை மேலும் வாட்டியது. ஏனோ அவளுக்கும் அன்றுச் சாப்பிடப் பிடிக்கவில்லை.
‘ஐந்தறிவு விலங்கினங்களில் காணும் அன்புணர்ச்சி ஆறறிவு மனிதர்களிடத்தில் தேய்ந்து கொண்டிருக்கிறதே‘ என்று வருந்தினாள். பின்பு ஏதோ சிந்தனையில் தன் வழக்கம்போல அன்றிரவும் மருமகளிடம் தன் எண்ணத்தையும் விருப்பத்தையும் மீண்டும் நினைவூட்டத் துவங்கிய கற்பகத்திற்கு, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசை வார்த்துக்கொண்டே பதில் கூறத் துவங்கினாள் ராணி மிக நிதானமாக! அதேசமயம் மிக தீர்க்கமாக!
“அத்தை உன் மகனோட நான் வாழ்ந்த வாழ்க்கை மூன்று வருஷம் தான்! ஆனாலும் அது முழுமையான வாழ்க்கை! எத்தனைப் பிறவி எடுத்தாலும் அந்த வாழ்க்கையை என்னால் மறக்கமுடியாது. வேறு ஒருவருடன் அந்தவாழ்க்கையை என்னால் வாழமுடியாது. அவருடன் வாழ்ந்த நினைவுகளேப் போதுமெனக்கு! அதுமட்டுமல்ல! ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்துகொண்டபின் அவளது முதல் மணவாழ்க்கையைக் கிளறி வக்கிரப்புத்தியோடு அவள் மனதைக் குதறும் ஆண்கள் தான் அதிகம். அதோடு இன்னொருவருக்கு பிறந்தப் பிள்ளையைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையானப் பண்பினை ஆண்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் நான் மறுமணம் செய்து கொண்டு என் பிள்ளையை வளர்ப்பேனானால், மேற்சொன்ன சங்கடங்களால் பாதிப்படையும் போது, கேவலம் சிற்றின்பத்துக்காக நம் தாய் இன்னொருவரை மணந்துகொண்டு தனக்கு இத்தனை துன்பம் நேர காரணமாகிவிட்டாளே என்று நினைப்பானானால் நான் வாழ்ந்துப் பயனென்ன? என் பிள்ளையின் நிம்மதியும் கெட்டு…. என் நிம்மதியும் கெட்டு…… ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை.
என் அன்பு முழுவதையும் செலுத்தி என் பிள்ளையை வளர்க்க விரும்புகிறேன். என் வாழ்க்கை இனி அவனைப் பற்றியது. என்னால் அவனை அன்புள்ளவனாக பண்புள்ளவனாக நல்லவனாக வல்லவனாக வளர்க்க முடியும் என்ற மனத் திடமும் நம்பிக்கையும் இருக்கிறது. அவனைச் சிறப்புற வளர்ப்பது தான் என்குறிக்கோள். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவனைப்பற்றியது தான்! அவனுக்கானது தான்! தயவு செய்து இது பற்றி பேசி மேலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் அத்தை” என்று ஆணி அடித்தாற்போல் கூறி முடித்தாள்!.
நன்றிகளுடன்,
ப. சிவகாமி,
புதுச்சேரி.