Parameshwari Poems. து.பா.பரமேஸ்வரி கவிதைகள்
நிழல்
******************
நித்தமொரு நிழல்
அவ்வப்போது
எனையாற்றும் புல்லாங்குழல்..
நான் அதைத் தொடர்வேனா
என்னிடத்து அது விலகுமா..
ஏதும் புரியாத புதிர்..
எது எப்படியோ..
பெரும் போர்தொடுப்பிற்குப்பின்
மிச்சசொச்சமான அந்த நிழல்..
அது மட்டுமே எனக்கான பேராறுதல்
எனது மீப்பெரும் அமைதிக்குப் பின்..

உலகின் பரிசுத்தம்
**************************
புனிதம்
மனித சக்தியின்
அதீதம்
என்பன இரண்டுண்டு..
ஒன்று நீர்..
மற்றொன்று மனித மனம்..
இரண்டுமே..
அதிதூய்மையில் வழங்கப்பட்ட
அதிவேகத்தின் ஓட்டத்தில்
அதிவிரைவில் மாசடையும்
இயல்பு கொண்டவை.
ஆதலால்…
மானிடா
இரண்டையும்
அதனதன் போக்கில் இருத்தி வை..

உன் கையோ
பிறர் செய்கையோ
உரசாமல் பார்த்துக்கொள்..

 காத்திருப்பு
******************
அந்தி மேகம்
மஞ்சள் வெயில்
மந்த மாலை
மயக்கும் வேளை
உன் வருகை வேண்டி
பூச்சூடி
புத்தாடையுடுத்தி
மைபூச்சிட்டு
சிவந்த பொட்டிட்டு
முன்புறம் நோக்கியே
விழியிரண்டும் வழிதேட
தவிக்கும் கால் கட்டைவிரல்கள்
தவம் கிடக்கின்றன பாதகமலங்கள்…
வாசலைத் தாங்கியே..
காதல் தெய்வத்தின் வருகைக்காக..
நினைவுகளின் நெரிசல்
ஐம்புலன்கள் சிதைவுற்றன..
பார்வையின் பலவீனம்
செவிகளின் செயலிழப்பு
சுவாசத்தின் சூடு
சுவையில் சுணக்கம்
உணர்த்தலின் ஊடல்
மொத்ததில்  யாவும் முடக்கம்
முழு ஊரடங்கு சற்றும் தளர்வின்றி
ஆனால் …
இதயம் மட்டும் துளியும் ஓய்வின்றி
உன் நினைவுகளை உள்வாங்கியும் வெளிப்படுத்தியும்
விழிகளின் வழியே
அடர்த்தியாய் வார்க்கிறது கண்ணீர் ரசம்
சிறிதும் தடையின்றி..
இத்தனை கட்டுக்கோப்பிலும்
தளர்வின்றி இயங்கும்
இதயம் ஒரு இயக்கவாதி
விழிகள் வாழும் ரசவாதி..
அன்பே வருவாயா…
நெரிசலை நெறிபடுத்த..
கடைந்தெடுத்த காந்தத்தைக் 
கண்களில் சுமக்கும் கண்மணியே….
*************************************************
யார் சொன்னது..
இருவேறு துருவங்கள் இணையும்
ஒன்றான துருவங்கள்
ஒரு போதும் சேராது என..
நம் காதலில்லையா..
யாதொரு விதியையும் உடைத்தெறிய.
ஏதொரு கோட்பாட்டையும் தகர்த்தெறிய
ஒற்றைச் சிந்தனை
ஒன்றான பார்வை
ஒருங்கிணைந்த செயல்
ஒரே நெறியாளளண்மை
ஒவ்வாத தலைக்கனம்
திமிர்த்தனம் மட்டும் சற்றே கூடுதல்..
எனைக் காட்டிலும் உன்னிடத்தில்
ஆனால் என்ன???
காதல்‌ மனம்‌ இருவருக்குள்ளும்
ஒன்று தானே..
அதே ஒற்றைச் சிந்தனையில்
ஒருகூடும் பார்வையில்
 ஒருசேரும் செயலில்
 ஒன்றான நெறியில்
 ஒத்திசைந்த தலைக்கனத்தில்
 உனது மேல்போக்குத் திமிர்த்தனத்தில்.
உயிர்த்தெழுந்த நம் காதல்
விண்வெளியின் துருவங்களைத்
 தாண்டிய அருவம்..
பொதுவுடமைக்கப்பாற்பட்டது
நம் காதல்
இனி படைப்போம்..
காதலுக்கான புதிய விதியொன்றை ..
காதலின் புனிதத்துவம்
*******************************
நொடிக்கொரு அழைப்பு
நிமிடமொரு உரையாடல்
மணிக்கொரு முத்தம்
கணமொரு கொஞ்சல்
தினமொரு கெஞ்சல்
இதுவல்லவே காதல்…
இதுவெறும் உணர்ச்சித்தூண்டல்
பலநூறு மைல் தொலைவில்
பல்லாயிரம் தடைகளுக்கிடையில்
பலகோடி மனிதர் மத்தியில்
பல லட்சம் நட்சத்திரவெளியில்
உயிரும் உயிரும்
கடக்கும் நாழிகையிலும்
கடந்த வினாடியிலும்
நினைப்பின் நனைப்பில்
உரையாடும் உன்னதமே காதல்.
எங்கோ வாழும் உயிர்
தனது விழைகளை
தமது விருப்பங்களை
ஏழ்கடல் தாண்டி
ஏழண்டம்‌ கடந்து
தூதாகக் கடத்திச் சென்று
தனது ஜீவனிடம்
சேர்க்கும் நொடியொன்றில்
நிகழும் அதிசயங்கள்
நான் நினைத்தேன்
நீ முடித்தாய்
என வியக்கும் நிமிடமே
காதலின் தூரம் …
காதலரின் அருகாமை..
எத்துனை பேருக்கு அமையும்
இப்படியான காதல்..
ஜீவனே..
நம் காதல் புனிதம்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *