Part 1: இந்திய ஊடகங்கள், ஏழைகளின் எதிரி, அறிவியலுக்கு எதிரானவை, பொய்களைப் பூஜிப்பவை: ரவிஷ் குமார் (தமிழில்: ச.வீரமணி)

பரஞ்சய் குஹா தாகுர்தா: இப்போது நான் கொஞ்சம் கடந்த காலத்திற்குச் செல்கிறேன். எனக்கு வயது 64. அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் நான் என் இதழியல் வாழ்க்கையைத் தொடங்கினேன். 1977 மார்ச்சில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, 1980 ஜனவரியில் மீணடும் ஆட்சியைக் கைப்பற்றி, இந்திரா காந்தி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்னர், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அவரிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டது: அவசரநிலைக் காலத்தில் நீங்கள் செய்திட்ட மாபெரும் தவறு என்ன?

இதற்கு அவருடைய பதில்: “பத்திரிக்கைத் தணிக்கை”

Paranjoy Guha Thakurta: When ‘Good People’ Give Up on Good Sense | NewsClick

இந்திரா காந்தி ஏராளமான பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைத்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, குல்தீப் நய்யார் மற்றும் பலரை சிறையில் அடைத்தார். மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தில், லால் கிருஷ்ண அத்வானி, தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்தார். இப்போது அவருக்கு வயது 92. இந்திரா காந்தியை எதிர்ப்பதற்கான தைரியம் ஏன் பல பத்திரிகையாளர்களிடமும், பத்திரிகை ஆசிரியர்களிடமும் (எடிட்டர்களிடமும்) இல்லை என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் விடையளித்தது என்ன தெரியுமா? “அவர்களிடம் (பத்திரிகை ஆசிரியர்களிடம்) சற்றே குனியும்படி கேட்கப்பட்டதற்கு, அவர்கள் சாஷ்டாங்கமாகப் படுத்தேவிட்டார்கள்” (“When they (the editors) were asked to bend, they crawled.”) என்றார்.

இன்றைய தினம், அவசரநிலையின் ஒரு புதிய வடிவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அரசாங்கம், ஊடக சீமான்களிடம் தங்கள் தலையைச் சற்றே குனியுங்கள் என்றுதான் கேட்டது. ஆனால் அவர்களோ, தரையில் படுத்தே விட்டார்கள். பிரதமர், மார்ச் 23 அன்று, ஊடக முதலாளிகளிடமும், எடிட்டர்களிடமும் அரசாங்கத்திற்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, செய்திகள் வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கண்ணுக்குப்புலப்படாத நுண்ணிய மைக்ரோபோன்களை (boom microhphones) பயன்படுத்தும்போதுகூட கவனமாக இருக்க வேண்டும் என்றும், பேட்டி எடுப்பவரிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும் என்றும் கூறினார். எனவே, நாம் 45-45 ஆண்டுகள் பின்னே சென்றுகொண்டிருக்கிறோமா?

ரவிஷ் குமார்: இது ஒரு பழைய கேள்விதான். கடந்த ஐந்தாண்டு காலமாகவே, நாம் புதிய அவசரநிலைக் காலத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மக்கள், ஊடகங்களின் இன்றைய அரசு ஆதரவு நிலையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இதனை நான் “கோடி மீடியா” (“godi media”) என்று விளிக்கிறேன். இந்த “கோடி மீடியா”,  மோடியை ஆட்சியில் அமர்த்திட வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வாக்காளர்கள் இன்றைய தினம் எண்ணற்ற சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள், இல்லையா? அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனைகள், வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்சனைகள், தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணங்களைக் கட்டுவதில் பிரச்சனைகள், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள்தான் அவருடைய வாக்காளர்கள். ஆனால் அவர்களின் குரல்கள், அரசாங்கத்தினால் கேட்கப்படவில்லை. நாடு கடுமையான சிரமதிசையில் இருக்கிறது என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டியது முக்கியம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் நாம் அரசாங்கத்தைப் பார்த்து எவ்விதமான கேள்வியும் கேட்கக் கூடாது என்று இதற்குப் பொருளா?

Online Akhand Ramayana Path,Online Ramcharitmanas Path
Ramcharitmanas Photo Courtesy: Divine Rudraksha

மகா கவி துளசிதாசர் தன்னுடைய ராமசரிதத்தில் (Ramcharitmanas) வெகுகாலத்திற்கு முன் எழுதியதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அவர்,  “அமைச்சர், மருத்துவர் மற்றும ஆசிரியர் முதலானவர்கள் ஆட்சிபுரிபவர் விரும்புகிறபடி விஷயங்களைச் சொல்கிறார்கள் என்றால்,  அதன் பொருள் ஆட்சிக்கும், ஆட்சியாளரின் வாழ்க்கைக்கும்,  அவர் உடம்புக்கும் முடிவு கட்டப்படுகிறது என்பதாகும்,” என்று கூறினார். இத்தகைய நாட்டின் பாரம்பர்யங்களைக்கூட நம்முடைய “கோடி மீடியாக்கள்” தெரிந்து கொள்ளவில்லை. குண்டர் கும்பல்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மதத்தின் பெயரால் இவர்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மன்னிக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பர்யம் எப்போதுமே உண்மையின் பக்கம் நிற்கக் கூடியதாகும். ஆனால், ஊடகங்களில் பெரும்பாலானவை, இன்றைய தினம், பொய்களின் பின்னே நின்றுகொண்டிருக்கிறது. இத்தகைய ஊடகங்களிடமிருந்து என்னவிதமான நம்பிக்கையை நாம் பெற முடியும்?

நான் மக்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், நீங்கள் எந்த விதமான அரசியலையும் பின்பற்றிக்கொள்ளுங்கள். அதில் தலையிட எவரும் விரும்பக் கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் அவர்களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். ஊடகங்களின் பங்கு வேறு. அரசாங்கம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவிக்கும்போது, எத்தனை பேருக்கு அது சென்றடைந்தது என்று ஊடகங்கள் தெரிவிக்க வேண்டாமா? இது குறித்து எந்த ஊடகமாவது, ஒரு சமூகத் தணிக்கையை மேற்கொண்டதா? இதற்குப் பதிலாக அவை என்ன செய்தன? உங்களைக் குஷிப்படுத்தக்கூடிய விதத்தில் பாடல்களை ஒளிபரப்பின.

மருத்துவர்களும், செவிலியர்களும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் போது, ஊடகங்களின் கேமராக்கள் அங்கே செல்கின்றன. மக்கள் கைதட்டுகிறார்கள். ஆனால், அதே மருத்துவர் அடித்து நொறுக்கப்படும்போது, கேமராக்கள் அங்கே இல்லை. மருத்துவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படும்போது அளிக்கப்பட வேண்டிய பர்சனல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. முறையீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமை இல்லையா? என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனையுடனும் அறிவியல் பூர்வமாகவும் எடுத்தச் செல்வதற்கு இது சரியானதொரு வாய்ப்பு இல்லையா? இந்திய ஊடகங்களில் பல இதனை யெல்லாம் செய்யாமல் இவற்றுக்குப் பதிலாக மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன. மக்கள் இவற்றை நம்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் அமைப்பு ஒன்றின்கீழ் ஒப்பந்த அடிப்படையில்  வேலைபார்த்துவந்த 70க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் அவர்களின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சிலரிடம் ஒரு சில கேள்விகளை நான் கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு ஊதியம் அளித்து வந்தார்கள் என்றும், எத்தனை ஆண்டு காலமாக நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள் என்றும் நான் கேட்டேன்.  மேலும் அவர்களிடம் மார்ச் 22 அன்று பிரதமர் கேட்டுக்கொண்டபடி கைதட்டினீர்களா, தட்டுகளைத் தட்டினீர்களா என்றும் கேட்டேன். ஒருவர் அவ்வாறு கைகளையும், தட்டுகளையும் தட்டியவர்களில் நானும் ஒருவன் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

World Press Freedom: Difficult times for journalism

எந்த ஊடக சகோதரியாவது அல்லது சகோதரனாவது இந்தப் பொறியாளர்களின் இக்கட்டான நிலையைப்பற்றி எழுதியிருக்கிறார்களா? இந்தச் செய்தியை அவர்கள் பிரதமர் பார்வைக்கு எடுத்துக் சென்றிருக்கிறார்களா? ஒருவேளை அவர் இவர்களின் பிரச்சனைகளைக் கேட்டால், ஏதேனும் உதவியை அவர் செய்யலாம். பள்ளிக் கட்டணங்களைக் குறைத்திட அவர் கேட்டுக் கொள்ளலாம். ஆசிரியர்களின் சம்பளங்களை வெட்டக்கூடாது என்று அவர் கூறலாம். ஆனால் ஆட்சியாளர்களிடம் இவ்வாறு செய்திகளை எடுத்துச்செல்கின்ற ஊடகம் ஏதாவது இருக்கிறதா? ஆட்சி  புரிபவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான இணைப்புச் சங்கிலி இப்போது உடைந்து கிடக்கிறது. இந்த ஊடகங்கள் மக்களுக்கு எதிரானவைகளாகவும், ஏழைகளுக்கு எதிரானவைகளாகவும் இருந்து வருகின்றன.

நாட்டின் தலைநகரில் இருக்கக்கூடிய தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியாகக் கிடைத்தது, இங்கே இருக்கின்ற புலம்பெயர்ந்து வந்துள்ள ஏழைகளாகும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளுக்கு விரட்டப்பட்டிருந்தார்கள்.  ஆனால் இவர்களைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக, மக்களைத் திசை திருப்புவதற்காக ஜமாத் கதையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களையெல்லாம் விட, ஜமாத் குறித்து இவர்கள் பரப்பிய கதைகள்தான் மிகப்பெரிய அளவில் ஊடகங்களின் இடத்தை ஆக்கிரமித்திருந்தன. ஸ்தலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கூறுவதை அநேகமாக அனைத்து ஊடகங்களும் நிறுத்திக்கொண்டுவிட்டன. அரசாங்கத்தின் முடிவுகள் எதுவும் கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை. அரசாங்கம், நல்ல நோக்கத்துடன்கூட சில முடிவுகளை எடுக்கலாம். ஆனால் அந்த முடிவுகள் அமல்படுத்தப்படாவிட்டால், அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது, ஊடகங்களின் வேலையாகும். இது நடக்கவில்லை. சுதந்திரமான ஊடகத்திற்கான இடம், ஏற்கனவே சுருங்கி இருந்தது, இப்போது மேலும் சுருங்கியிருக்கிறது.

பரஞ்சய் குஹா தாகுர்தா: கடைசியாக ஒரு கேள்வி. ஏப்ரல் 8 அன்று, (காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருக்கும்) சோனியா காந்தி, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், எண்ணற்ற பரிந்துரைகளைச் செய்திருந்தார். அதில் தலைநகரில் மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் மத்திய தில்லியை புணரமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். மேலும் அவர் அளித்திருந்த மற்றுமொரு பரிந்துரை மீது ஊடகங்கள், அதிலும் குறிப்பாக “கோடி ஊடகங்களின்” உரிமையாளர்களை மிகவும் கோபத்திற்குள்ளாக்கியது. அந்தப் பரிந்துரையில் அவர், கோவிட்-19 மற்றும் பொது சுகாதாரப் பாதகாப்பு தொடர்பான விளம்பரங்களைத் தவிர  இதர விளம்பரங்கள் அனைத்தையும் ஓர் இரண்டாண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்மூலம் மத்திய அரசாங்கம் 1,250 கோடி ரூபாய் சேமித்திட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பரிந்துரைதான் ஊடக அமைப்புகளின் உரிமையாளர்களைச் சத்தமாகக் கத்த வைத்தது. “எங்களை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?” என்று அவர்கள் கேட்டார்கள். சோனியா காந்தியின் பரிந்துரைகள் குறித்து நீங்கள் கஎன்ன கூறுகிறீர்கள்?

ரவிஷ் குமார்:   ஊடக அமைப்புகளின் உரிமையாளர்களின் எதிர்வினை என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. அந்தக் கடிதத்தில் அவர், மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் மத்திய தில்லியின் புணரமைப்புப்பணித் திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். உங்கள் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை எல்லாம் வெட்டக்கூடிய அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், பின் மத்திய தில்லியின் புணரமைப்புத் திட்டத்தையும் கிழித்தெறிய வேண்டியததானே! ஆனால், செய்வார்களா?

ஊடகங்களுக்கான விளம்பரங்களைப் பொறுத்தவரை, இந்த 1,300 கோடி ரூபாயில் யார் எவ்வளவு பெறுகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. இதில் 80 சதவீதத் தொகை, ஐந்து பெரும் ஊடக நிறுவனங்களுக்குப் போகிறதா? சிறிய பத்திரிகை நிறுவனங்கள், தங்களுக்குப் போதுமான அரசு விளம்பரங்கள் வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றன. இந்தத் தொகை முழுமையாக மக்கள் பணம். எனவே, இந்தத் தொகைகளை யார் பெறுகிறார்கள், அவர்கள் எவ்வளவு பெறுகிறார்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக முழுமையான அளவில் வெளிப்படைத்தன்மை இருந்திட வேண்டும். ஆனால் இதுவெல்லாம் ஒரு முன்மாதிரியான இலட்சிய நிலைமையாகும்.

Twitter is donating $1M across two foundations to support ...

சோனியா காந்தி, இந்த அரசாங்கம் கோவிட்-1 தொடர்பாக விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதில், “அரசாங்கம் விரும்பினால், குரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் கொடுக்க முடியும்…” என்பதும் தொக்கி நிற்கிறது. ஆனால், அது அல்ல அவர்களின் பிரச்சனை. அவர்களுக்கு ஓர் எதிரி தேவை. ஓர் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அரக்கத்தனமாகச் சித்தரித்திட வேண்டும். தப்லிகி ஜமாத் நிகழ்வுகுறித்து சத்தமாகப் பேசுகிறவர்களால், முஸ்லீம் மதகுருக்கள் சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் தொழுகைக்காக ஒன்றுதிரண்டு வராதீர்கள் என்று திரும்பத்திரும்பக் கேட்டுக்கொள்வதை எப்படிக் கூறுவார்கள்? முஸ்லீம் முல்லாக்களாகிய நாங்கள், பிரதமரின் உத்தரவுகளுக்கு முழுமையாக ஆதரவுடன் இருக்கிறோம் என்று கூறுவதை எப்படி ஒளிபரப்புவார்கள்? ஊடகங்கள் அவர்களைப் பாராட்டியிருக்கிறதா? இல்லை. ஒரு சர்வதேச அமைப்பான தப்லிகி ஜமாத் பொறுப்பற்று இருந்ததுதான். ஆனால் அதேபோன்று அரசாங்கமும் இருந்தது.

அந்த சமயத்தில் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது? அது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வரவேற்பதற்கான பேரணிகளை நடத்துவதில் சுறுசுறுப்பாக இருந்தது. அதன்மூலம் அது மக்களுக்கு அனுப்பிய செய்தி என்ன? இப்போது கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கு என்ன தார்மீக அதிகாரம் இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது?  இவ்வாறு நான் சொல்வதற்கு எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. தங்கள் குழந்தைகள், முஸ்லீம்களை வெறுக்கும் விதத்தில் வளர்க்கப்படக் கூடாது என்று ஒருநாள் மக்கள் உணர்வார்கள் என்று இப்போதும் நான் நம்புகிறேன். மதவெறிக்கு ஆளான ஒரு நபர் ஒரு நல்ல பிரஜையாக இருக்க முடியாது, ஏனெனில் மதவெறி என்பது பொய்களால் கட்டி எழுப்பப்படுவதாகும் என்று நான் திரும்பத்திரும்பக் கூறுகிறேன். நீங்கள் உங்கள் சொந்த மதத்தையே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையைச் சொல்வதற்கான வலு நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கீதையில் கூறியிருப்பதை நீங்கள் புறக்கணித்துக் கொண்டிருக்கிறீர்கள். பொய்களைக் கூறிக் கொண்டு அதே சமயத்தில் கீதையில் எழுதியிருப்பதன் கீழ் பிரமாண வாக்குமூலம் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் என்ன கூற முடியும்?

(நன்றி: நியூஸ்கிளிக்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *