ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு “பார்த்தீனியம்”. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு. அப்படியே ஷோபாசக்தி அவர்களின் “ம்”, “கொரில்லா”, “இச்சா” என தொடர்ந்து கூர்வாளின் நிழலில், நீண்ட காத்திருப்பு என தொடர்ந்து இப்போது பார்த்தீனியம். சில பெயர்கள் மறந்துவிட்டன. {ஒரு பனை… என தொடங்கும் நூலும் இதில் அடக்கம்}.

நாவல்கள் வாசிப்பில் ஒரு சுக அனுபவம் இருக்கிறது. அது நமக்காக காலங்களை கடத்தும். கொரானா நோய் தொற்று பரவல் ஊரடங்கு என வெறுமை சூழந்திருந்த காலத்தில் பரணி, தமயந்தி, அமரநாயகம், தனபாக்கியம், ஜெனிபர் என பாவப்பட்ட ஈழதமிழர்களோடும், எங்கே வானூர்தியும் ஹெலிகாப்டரும் தலைக்குமேல் பொம்ப் இடுமோ என்ற கவலையுமாக 512 பக்கங்கள் சுவாரசியமாக கடக்க செய்திட்ட எழுத்து வித்தைக்கும், நாவல் நிகழ் காலத்தில் நம்மை காலமாற்றம் செய்தமைக்காக தமிழ்நதி பாராட்டுக்குரியவர்.

 

Sri Lanka : « Un véritable génocide du peuple tamoul »

80களில் நடக்கும் கதை களம். இதில் எத்தனை கதாபாத்திரங்கள் உண்மை, எவை புனைவு என்பது தமிழ்நதிக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று சொல்ல இயலும், கதாபாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் புனைவாக இருக்க கூடும், ஆனால் கதை மாந்தர்களின் இயல்புகள் உண்மையாகவே இருக்கும் என்பது ஈழப் போர் நாவல்களின் யதார்த்தமாக இருக்கிறது. ஒரு பரணியோ, அமரநாயகமோ, ஈஸ்வரியோ, சுகந்தன், தமயந்தி, வானதி என எல்லோரும் ஏதோ ஒரு பெயரில் நிச்சயமாந்தர்களாகவே இருப்பர்.

முதலில் இலங்கை ராணுவத்தின் அட்டூழியம், கொடுமைகள், வன்முறைகள், பிறகான இயக்கங்களிடையே இருந்த கசப்புணர்வு கொலைகளாக மாறுவது, என்பதிலிருந்து ஈழப்போரில் இந்திய ராணுவம் செய்திட்ட அட்டூழியங்கள் அக்கிரமங்களே கதையின் மைய சரடாக மெல்ல நகர்கிறது. பிரதானமான கருப்பொருளாக தோழமை இயக்கங்களிடையே நிகழ்ந்த கசப்பான போரின் இயல்பை குலைத்த பகைமை, கொலைகள் என்பதாகவே இருக்கிறது. இயக்கம் உண்மையானது நீதியானது என நினைத்து சேரும் இளைஞன் இயக்கத்துள் நடக்கும் காம்ப்ரமைஸ் கண்டு வருந்தியும், இயக்கங்கள் காலப்போக்கில் செய்திட்ட தேவையற்ற கொலைகள் என்பதை கண்டு வேதனையும் கொள்கிறான்.

From Sandy Strip of Sri Lanka, Tales of Suffering as War Traps ...

சக மனிதர்கள் சாக கொடுத்துவிட்டு, இனத்தின் பெண் குழந்தைகள் வேட்டை இரையாக மாறிவிட்ட பொழுதிற் கூட கையறு நிலையில் இருப்பதாக இயக்கத்தில் இருப்பவர்களே உணரும்படியாக வல்லாதிக்க அரசின் கொடுமையும், அந்த வல்லாதிக்க அரசோடு இணைந்து சொந்த குடிகளையே சாகடிக்கும் இயக்கங்களின் செயல்பாடும் அவனை பெரிதும் வருந்த செய்கிறது, குழப்புகிறது, முடிவில் தேவைப்படும் காலத்தில் தேவையற்ற முடிவினையும் எடுக்க செய்கிறது. [இங்கே வல்லாதிக்க அரசு என்பது இந்திய அரசே என சொல்ல தேவையில்லை}. ரொம்பவும் நாசூக்காக பிரதான இயக்கமாக மாறிய விடுதலைப்புலிகள் இயக்கத்துள்ளும் எழுந்திட்ட சிக்கல்கள், காம்ப்ரமைஸ்கள், தவறுகள் குறித்தும் குறிப்பிட தவறவில்லை தமிழ்நதி.

ஆனால் இக்கதை அந்த இயக்க இளைஞனின் பார்வையில் மட்டுமே நாவல் நகர்வதில்லை. அவனின் காதலியாக முதலில் அறிமுகமாகும் வானதி என்னும் பாத்திரம் வழியாகத்தான் நாவல் பெரிதும் கடக்கிறது. அந்த வகையில் பெண்களின் பார்வையில் போரினை பார்த்திட்ட இலக்கியப் பார்வை கொண்ட நாவல் என சொல்லலாமா என்றால் நிச்சயமாக. குடிகார கணவரோடும் போர் சூழல் தவிர்த்த இயல்பானதொரு வாழ்வு வாழ ஒவ்வொரு கணமும் ஏங்கும் தனபாக்கியம், எந்த வம்பு தும்புக்கும் போகாதவனாகிய மகனை இராணுவம் பிடித்து செல்ல அதற்காக உயிரற்ற உடலாக நடை போட்ட ஈஸ்வரி அம்மகன் விடுதலை பெற்று நேராக இயக்கத்தில் சேர்கையில் அம்முடிவினை ஆமோதிக்கிறாள். இதுதான் அநேக ஈழ தாய்களின் நிலை என புரிகிறது. முதலில் இயக்கத்திற்காக காதலை தவிர்க்கிறானே என தவித்த வானதி பின்பும் அவன் இயக்கத்தை தவிர்த்துவிட காலநிலை கருதாமல் எடுக்கப்பட்ட முடிவினால் காதலை தவிர்க்கும் பெண்ணாக மாறுகிறாள். ஆம், போர் என்ற கொடுமை காலத்திலும் பூக்கிற பூக்கள் போல காதலும் பூக்கத்தான் செய்கிறது, கைகூடாமல் போகிறது.

பார்த்தீனியம்: குருதி பீறிடும் ...

முதலில் துவக்குகள் கொடுத்து போரினை ஆதரித்த இந்திய அரசு பின் தனது துவக்குகளால் நேரிடையாக எதிர்கொள்ளாமல் சதியாக சமாதானம் என சொல்லி பின் கொலை புரிந்திட்ட அப்படுபாதகங்களைப் பேசிய நாவல் இது ஒன்றுதானா என தெரியவில்லை. ஆம், அஹிம்சை நாட்டிலிருந்து தான் அவ்வளவு வன்முறைகளும் நடந்தேறின. எப்படி சாதாரணர்கள் மென்மேலும் ஏழைகளாக நிராதவற்றவர்களாக, வெறுமை கொண்டவர்களாக பாவப்பட்ட சனங்களாக போர்ல் மாற்றுகிறது என்பதின் அடுத்த பதிவுதான் பார்த்தீனியம். ஆம், ஈழப்போரின் சிந்திய ரத்தத்தில், துவக்குகளால் சரியப்பட்ட உடல்களின் வெம்மையில், வாழ்வழிந்து அகதிகளாக மாறியவர்களின் தொலைந்த கனவுகளில் எழுதப்பட்ட அடுத்த எளிய படைப்பு இது.

புத்தகம் : பார்த்தீனியம்

ஆசிரியர்: தமிழ்நதி

வெளியீடு: நற்றினை பதிப்பகம் , 2016

பக்கங்கள் :  512

– ராம்கோபால்

One thought on “ஈழப்போர் குறித்து பேசும் பார்த்தீனியம் – தமிழ்நதி | மதிப்புரை ராம்கோபால்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *