எழுத்தாளர் அமுதா ஆர்த்தியின் “பருந்து”

எழுத்தாளர் அமுதா ஆர்த்தியின் “பருந்து”

 

வாசகரை வசீகரிக்கும் எழுத்து

”தூரத்தில் தெரியும் படகுகளும் கப்பல்களும் ராசாத்திக்கு பிடிக்கும் என்றாலும் ஒரு நாள் கூட அதில் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதில்லை.”
அவள் எப்போதும் படகாகவே இருக்க விரும்புகிறாள். பயணிக்க விரும்பியதேயில்லை. நம்மைச் சுற்றி பல ராசாத்திகள் இன்னமும் படகாகவே இருந்துத்தான் வருகிறார்கள் என்பதை சமூகத்தின் புறப்பார்வை புறக்கணிக்கலாம் ஆனால் எழுத்தாளர் அமுதா ஆர்த்தியின் பேனா பதிவிட மறக்கவில்லை. பேசாப் பொருட்களையும் அறியப்படாத மனிதர்களையும் காணக் கிடைக்காத நிலப்பகுதிகளையும் கவனிக்கப்படாத தாவரங்களையும் பார்வையிலிருந்து விலகிய ஜீவராசிகளையும் தமது கதைகளில் பேசவைத்துள்ளார் அமுதா ஆர்த்தி.

‘பருந்து’ சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர் அமுதா ஆர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தின் படிமங்கள் என்றால் மிகையாகாது. முதல் தொகுப்பு என்று அடையாளப்படுத்தமுடியாத அளவிற்கு ஒவ்வொரு கதையும் பல தரப்பட்ட மனித மனங்களைக் காட்சிப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனின் குணங்களையும் செயல்களையும் அர்த்தப்படுதுகிறது. தொகுப்பின் முத்தாய்ப்பான கதையாக ”நெகிழிக்கனவு”

ஆத்திரத்தைக் கூட அடக்கிடலாம் மூத்திரத்தை அடக்க முடியாது என்பார்கள். மூத்திரத்திலும் வதைக்கக் கூடியது மலக்கழிவு. ‌மனித உடலில் வெளியேற வேண்டிய மலக்கழிவை வெகு நேரம் அடக்கி வைக்கமுடியாது. உண்ண உணவில்லாத ஊரில் கூட இருந்து விடலாம், ஆனால் மலஜலம் கழிக்க வழியற்ற இடத்தில் வாழவே முடியாது வெளியேற வேண்டியது விதிமீறல் செய்யும். மனிதனின் மானம் ரோசம் கூச்சம் நாச்சம் அனைத்தையும் சுக்குநூறாக்கி, கடக்கவே முடியாத அதீத நிலையில் தன்னிலை இழக்கும். “நெகிழிக்கனவு” வாசிக்க ஒருவித ஒவ்வாமையை உண்டாக்கினாலும் அசலில் கழிப்பறையின் அத்தியாவசியதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. நம் முன்னோர்கள் கழிப்பறைக்கு முக்கியத்துவம் வழங்கி வந்ததை வரலாறுகள் பேசுகின்றன. பாலஸ்தீன மலைப்பகுதி அகழ்வாய்வில் தாழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இறந்த அரசனின் பிணமும் அதனருகில் பண்டைய கழிப்பறையும் கண்டுபிடிக்கப்பட்டது. உயிருடன் இருக்கும் போது கழிவுகளை வெளியேற்ற வசதிகள் உள்ளது. ஆனால் இறந்தபின் அரசன் கழிவுகளை வெளியேற்ற அல்லாடக் கூடாது என்கிற கரிசனத்தில் இப்படியான சமாதிமுறை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மூட நம்பிக்கைகள் தாண்டி கழிப்பறைக்கு அத்தனை முக்கியத்துவம் அளித்து வந்தனர் நம் மூத்த குடிகள் என்பதை இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். கதையின் நாயகன் தாசில்தார் அலுவலகத்தில் வருவோருக்கு மனு எழுதித் தரும் சாதாரண கடை நிலை சாலையோர ஊழியன். கிழவி ஒருத்தியின் குடிசையில் இருந்த அவனை வீடொன்றின் உரிமையாளர் வம்பாகத் தமது வீட்டில் குடியிருக்க பல தளர்வுகளை வழங்குகிறார். அனைத்தும் அவனுக்கு ஒத்து வந்தாலும் மலக்கழிவைக் கழிக்க அவனுக்கு வசதி அங்கு இல்லாமல் போக வீட்டில் காகிதத்தில் மலம் இருந்து நெகிழிப் பையில் சேமித்து காலை வேளையில் பணிக்குப் போகும் முன் அடுத்தத் தெருவில் குப்பைக் கழிவுகளில் வீசுகிறான். துப்புறவு பணியாளர் ஆள்தெரியாது போட்ட கூச்சலால் மாட்டிக் கொண்டு விடுவோம் என்கிற அச்சத்தில் அந்த முயற்சியை கைவிடுகிறான். பல கடும் பிரயத்தங்களுக்குப் பிறகு வீட்டில் பாத்திரம் விளக்கும் கால்வாய் வழியாக மலம் இருந்து விட்டு அவ்வப்போது அதை சுத்தம் செய்து நீர் அதிகளவில் விட்டு தள்ளி விடுவான். சில நாட்களுக்குப் பிறகு குழாய் அடைத்துக் கொள்ள வீட்டு உரிமையாளரும் அவர் மனைவியும் சுத்தம் செய்யும் போது கண்டு பிடித்து அவனை திட்டிக் குமித்துஅவனை வீட்டை விட்டு காலி செய்ய உத்தரவிடுகிறார். வேண்டி வேண்டி அவர் அழைத்தும் வேண்டாம் வேண்டாம் என இவன் மறுத்துப் பெயர்ந்த வீடல்லவா… லேசில் விட்டுவிடுவானா.. நிம்மதியான உறக்கம் வாய்க்கப்பெற்ற இடமாதலால் அவர்களின் கூச்சலுக்கு செவிமடுக்காமல் எப்போதும் போல வீட்டைப் பூட்டி கிளம்பிவிடுகிறான் அவன். உண்மையில் மனிதக் கழிவுகளால் நிலத்திற்கு பாதிப்போ கழிவுநீர் தொட்டிகளில் பெரிதாக அடைப்போ வராது. நெகிழிக் கழிவுகளே நிலத்தை மலடாக்கும் கொடிய கழிவு என்பதை அரசாங்கமும் மனிதர்களும் உணர்வதில்லை. இது போன்ற மனிதக் கழிவுகளின் அடக்குமுறைகளில் உண்டாகும் உடல் உபாதைகள் சார்ந்த படைப்புகள் இலக்கிய தளத்தில் குறைவாகவே காணக்‌ கிடைக்கின்றன. ஆசிரியர் கதையில் மனித உடலின் மலக்கழிவின் வெளியேற்றத்தைத் தனது வார்த்தைகளால் தத்ரூபப்படுத்தியுள்ளார். பெண் எழுத்தாளராக இருந்து இத்தனை அப்பட்டமாக கொஞ்சமும் தயக்கமின்றி எழுதியது பாராட்டப்பட வேண்டியது.

வலியது தப்பிப் பிழைக்கும் என்பது மனிதக்கூட்டத்திற்கு மட்டுமல்ல பிற ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.‌ அசலில் மனிதன் மட்டுமே பிறரை நம்பியும் அடுத்தவனைக் கீழேதள்ளியும் பிழைத்து வருகிறான். படைப்பின் பிற உயிர்கள் தனது இனத்தின் பிறிதொரு ஜீவனை அடித்துப் பிழைத்ததில்லை. தேவை ஏற்படும் பொழுதுகளில் தேடல் வேட்டை மட்டும் நிகழுமே ஒழிய அடித்துப் பிடுங்கும் மனநிலை பொதுவாக பிராணிகளிடத்தில் காண்பது அரிது. அதேபோல தமது வயிறும் மனமும் நிரம்பிய பின் இயல்பாகி விடும் அவை.மனிதன் மட்டுமே விதிவிலக்கு. அடுத்தவேளைக்காக தொடங்கும் அவனது வேட்கையின் தீவிரம் பல தலைமுறைகள் சுகித்து வாழ, பிறரின் பலகீனத்தைப் பயன்படுத்துகிறான். ”மொட்டை வாலு” கதையில் வரும் மொட்டை வாலும் அப்படித்தான். ஊரில் ஒருவரையும் விட்டு வைக்காது..‌ அனைவரின் வாயிலும் எளிதாக விழுந்து விடும். ‌ஆனால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது. தனக்கானதை கள்ளத்தனம் செய்தாவது அடைந்து விட்டு பின் வாலாட்டிக் கிளம்பிவிடும்.. எதுவும் நடவாதது போல.. அளப்பறிய சேட்டை.. மொட்டை வாலுவின் சேட்டைகளை கதை நாயகியின் ஆதங்கத்துடன் விவரித்த வரிகள் ஹாஸ்யப்பூர்வமானவை. ரசனைமிக்க தோரணை. ஆசிரியரின் சிலாகிப்பிற்குப் பின் மொட்டைவாலு அருவமாகி எங்கள் வீட்டுச் சுட்டிப்பிள்ளையாகவே மனதில் நிரம்பியது. நாஞ்சில் பகுதியின் வழமைகள் வட்டார மொழியின் பயன்பாடு என கதை நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் கொஞ்ச நேரம் வாழ்ந்து களித்த திருப்தியைத் தருகிறது.

தொகுப்பு முழுக்க நாஞ்சில் நிலப்பகுதியை மொழியாகவும் விழியாகவும் தரிசிக்க வழங்குகிறது. மொட்டை வாலுவின் அராத்து போல இல்லாமல் செல்வி பாசத்தையும் நேசத்தையும் நன்றியுணர்வையும் பிறப்பு முதலே வாசித்து வளர்ந்து வந்தவள். எதிர்பாராத வாழ்க்கைச்சூழல்களால் புறக்கணிக்கப்பட்டவர்களின் உளவியல் சிக்கலை அவர்களின் நேரடிப் பாதிப்புகளைத் தத்ரூபமாகக் காட்சிப்படுதுகிறது “செல்வி” கதை. தாயின் மாற்றானுடனான உறவை நேரில் கண்ட தாஸின் மன நிலை பாதிப்புகள் தனது கால்களை எப்போதும் கட்டியே கிடக்கும் செல்வியை பிற ஆண் நாய்கள் நெருங்குவதை சகித்துக்கொள்ள முடியாத மன நிலையை இரண்டு இடங்கள் பதிவு செய்கின்றன. ஒன்று செல்வியை நெருங்கும் நாய்களைக் கல்லெறிந்து விரட்டியும் மற்றொன்று தனது ஆற்றாமையை ஆற விட ஓடி ஒளிந்து விளையாடும் கரப்பான்களை அதன் உணர்கொம்புகளைப் பிடித்துத் தூக்கி உலையின் சாம்பலுக்குள் எறிவதும் அவைகள் சாம்பலில் புரண்டு ஓடுவதையும் அவன் மனம் ரசித்துக் கிடக்கும் தாஸின் விரக்தி, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட அனாதைகளுக்கு, கேட்பாரற்ற விளிம்பு நிலை மனிதர்களின் முகங்களும் சூழல்களும் காயங்களின் ரணங்களில் ஆற்றவியலா வகையில் நாங்களும் எப்படியோ வாழ்ந்து தான் மடிகிறோம் என்கிற வெறுமையில் முடிந்து விடும் துர்பாக்கியத்தைப் பதிவிட்ட படைப்புகள் சில.. ஆசிரியரின் இந்தக் கதை அதில் ஒன்று என்றே குறிப்பிடலாம். செல்லப்பிராணிகளின் மீதான மனித நெருக்கத்தை, வாயில்லா ஜீவன்களின் உணர்வுகளை, தொகுப்பின் மற்றொரு கதையும் தரிசிக்க வழங்குகிறது. வாயில்லா ஜீவனின் நேசம், பிணைப்பு, நன்றியுணர்வு, பிரியம், கிலேசம், வெறுப்பு என உயிருக்குள்ளிருந்து வெளிப்படும் உணர்வுகளை பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளாலும் உணரப்படும். இது உயிரற்ற பொருட்களுகளுக்கும் பொருந்தும். அதன் பொருட்டே நாம் தொலைத்த நமது மனதிற்கு மிக நெருக்கமான பொருட்கள் மீண்டும் நம்மிடம் கையப்படுகின்றன. டாம்பீகமற்ற உள்ளார்ந்த ஆன்மீக அன்பு செலுத்துபவர்களை மனித இனத்தைத் தாண்டிய பிற உயிர்கள் எளிதில் கவ்விக் கொள்ளும். அரவணைத்துக் கொள்ளும். விட்டுவிலகாது. கூடுதலாக நீண்டகாலங்களாகப் புழங்கிய சூழல்களும் உறைவிடங்களும் வளர்ப்புப் பிராணிகளுக்குக் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும். அவைகளை ஏழ்கடல் ஏழுமலை தாண்டிக் கடத்தினாலும் தங்களது நுண்ணுணர்வுத் தன்மையில் மீண்டும் தமது பழக்கப்பட்ட இருப்பிடத்தை அடைந்து விடும் என்பதற்கு தொகுப்பின் முடிசூட்டிய கதையாக “பருந்து” வாயில்லா ஜீவனின் உணர்வை கதை முழுதும் எல்லா தரப்பிலும் உணர்த்தி நகர்கிறது. கதையின் எழுத்து நடையையும் மொழி வளத்தையும் சிலாகிக்க கூடுதல் பக்கங்கள் தேவை. கவித்துவ எழிலில் தோய்ந்துள்ளன வர்ணணைகள்.. இயற்கையை ரசித்துத் தீர்க்க மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டும் கதையொன்றும். என.. பருந்து வாசகரின் உச்சியை முகரச் செய்து காட்சிப் பிம்பங்களில் தொலைதூரம் கடத்திச் செல்கிறது.

“கரிச்சான்” மற்றும் ”சைக்கிள் சவுட்டு” இருகதைகளும் மாறுபட்ட காதல் கதைகள். கிராமப்புறங்களில் நடக்கும் காதல் விவகாரங்களில் ஒன்று. நடோடிகளாய் ஊருக்குள் தங்கி வித்தை காட்டுபவர்கள், ராட்டினம் சுற்றுபவர்கள், விழாக்காலங்களில் சிறுதொழில் வியாபாரம் செய்பவர்கள் , வேடமிட்டு கூத்துக் கட்டுபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஊருக்குள்ளையே கொட்டகை போட்டு குத்தகை அடிப்படையில் தங்கிக் கொண்டு பல ஊர்களுக்குப் புலம் பெயர்ந்து கொண்டு பிழைப்பை ஓட்டும் கூட்டத்திலொருவருடன் பருவவயதில் ஏற்படும் ஈர்ப்பில காதல் வயப்பட்டு கற்பை இழப்பதும் அல்லது வீட்டிற்குத் தெரியாமல் மணம் முடிப்பதும் என வயதின் கோளாறில் உண்டாகும் உணர்வில் சிக்கிப் பாதிக்கப்பட்ட பெண்கள் அநேகர்.. பலதரப்பட்ட சம்பவங்களை நிறைய திரைப்படங்களும் படைப்புகளும் அறிமுகப்படுத்தியுள்ளன. அப்படியானதொரு காதல் கதையே “சைக்கிள் சவுட்டு” கதை. நடிகர்கள் போல வேடமிட்டுக் கூத்துக் கட்டும் நாயகனாக கதிரேசனின் மீது அதே ஊரைச் சேர்ந்த டென்சிலி ஏற்படும் தீராத காதலைப் பேசுகிறது கதை. தனக்கான உறவை விட்டுக்கொடுக்காத மனம் இருபாலினருக்கு மட்டும் உரித்தானதல்ல எங்களுக்கும் காதல் திருமணம் உறவு பிணைப்பு உரிமை அன்பு விட்டுக்கொடுக்க மறுக்கும் பரிதவிப்பு உண்டு என்பதை கதிரேசனை திருமணம் செய்த திருநங்கையைக் கொண்டு சமூகத்திற்கு உணர்த்துகிறார் ஆசிரியர். சைக்கிள் சவுட்டின் விழாக்காலத்தைத் தத்ரூபமாகப் பதிவிடுகிறது கதை. திரைப்படங்களில் கண்டு களித்த உணர்வைத் தருகிறது ஆசிரியரின் எழுத்து வழியிலான காட்சிப்பிரதிமை.

காதல் என்பது வந்துவிட்டு மறைந்துவிடும் உணர்வல்ல..‌ பிரமாதமாக வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் அழுந்த அடக்கினாலும் அதன் குமைச்சல் புகைமண்டலங்களாகச் சூழ்ந்தேயிருக்கும். காதல், தீ அல்ல அணைந்து விட.. வாழும் காலங்கள் வரை நெஞ்சை விட்டு நீங்காது மருகிக் கிடக்கும் அதுவொரு உணர்வுப் பொக்கிஷம்.. இளமை முதுமை என்கிற பாகுபாடும் பக்குவமும் நெருங்காத ஒரே உணர்வு காதல் உணர்வு மட்டுமே…. எங்கிருந்தாலும் வாழ வைக்கும் என்கிற காதல் வரையறையை மாறுபட்ட புனைவாக இதுவரை வாசித்திராத வடிவமாக கரிச்சான் கதையில் வழங்கியுள்ளார் அமுதா ஆர்த்தி அவர்கள்… இந்தக்கதையில் பெரிதாக பிரம்மாண்டப்பட்ட காதலை அவர் காட்சிப்படுத்தவில்லை‌ கொண்டாடவுமில்லை.. மாறாக முதுமையிலும் வாழச்செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பு ஆகாதாவைக் காதலித்தார் சவடியடிமை. திருமணமான பின்பும் மறக்க முடியாமல் உறவைத் தொடர்கிறார் மனைவி தொறட்டியின் கடும் எதிர்ப்பில் ஆகாதாவை விட்டு விலகுகிறார் சவுடியடிமை. காலங்கள் அவர்களுக்குப் பிரிவை வலுக்கட்டாயமாக வழங்கினாலும் நூலிழையாய் அவர்களுக்குள் புதைந்திருந்த காதல் வயோதிக நோய்மையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஆகாதாவிடம் சவுடியடிமையைக் கொண்டு சேர்க்கிறது. மனைவியாகப் பணிவிடை செய்ய வாய்க்காத தனது கையாலாகாத்தனத்தில் தாயாகத் தொண்டு செய்து காதலுக்கு மரியாதை செலுத்துகிறார் எழுபதுகளைக் கடந்த காதலன் சவடியடிமை.. தொறட்டியின் புரிதலில் ஏற்பட்ட கோளாறைப் புறக்கணித்து காதலிக்கு மரணநெருக்கத்தில் நெற்றியில் முத்தமிட்ட ஈரத்தின் குளிர்ச்சியை உணர்ந்த படியே காயங்களை ஆற்றிக் கடக்கிறார் இடத்தை விட்டும் அழுத்தத்தை விடுத்தும்.. நாஞ்சில் மொழிவளத்தில் காதல் சுவாரஸ்யத்தைக் கலந்து வழங்கி மாறுபட்ட மொழியியலில் கதை வாசக வசீகரிப்பு மீண்டும் வாசிக்கத் தூண்டும் ஒரு படைப்பாகவே இந்தக் கதை இனிக்கிறது.

வாசகரை பால்ய காலங்களுக்குக் கடத்திச் சென்று பிராய நினைவுகளில் மூழ்கடித்த காவியமாக ”ஆம்பக்காய்” கதை மணக்கிறது. பிள்ளைப்பருவத்தில் நம்மைப் பெயர்த்துக் கொண்டு கதையை வாசித்தால் குளத்தில் நாமும் முழுக்குப் போட்டு வரலாம். பிள்ளைகளின் குதூகலம் என்பது அவர்களுக்குப் பிடித்த ஒன்றில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இறுக்கமாக இல்லாமல் விருப்பத்தோடு செய்து கொண்டாடுவது… பிள்ளைகளின் தேடல்களும் விளையாட்டுகளும் கொண்டாட்டங்களும் அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கு . பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆபத்தாகவும் அபத்தமாகவும் தெரியும்.. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை எதுவொன்றிலும் எல்லையைத் தொடும் அதீதம்.. விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் தீவிரவாதிகள் நம் பிள்ளை மனிதர்கள் என்பதை “ஆம்பக்காய்” கதை பெண்பிள்ளைகளின் குளத்துடனான விடுமுறைக் கொண்டாடத்தில் முழுமையாக நனைக்கிறது. சோபி,கவிதா, ஜெயா, மாலா என பெண்பிள்ளைகளின் பட்டாளங்கள் அணிவகுக்கின்றன. பள்ளி விடுப்பில் ஒன்றுகூடி குளத்தில் தாமரை பறிப்பதும், மீன் பிடிப்பதும்,தொட்டு  விளையாடுவதும்,முங்கி நீச்சலிடிப்பதும் என தொடர்ந்த நாளொன்றின் கும்மாளங்கள் கைதை முட்கள் மத்தியில் அடைக்காத்துக் கிடக்கும் தாழம்பூ பறிக்க பாம்புகள் அதிகமாகப் புழங்கும் பூவகை என்று அறிவுறுத்தியும் கொஞ்சமும் பயமின்றிப் பறித்து வரும் கவிதாவின் துணிச்சல் பிள்ளைமைக்கேயுரிய இயல்பான கம்பீரம்.

தொடரும் இவர்களின் நீர்ப்பயணங்கள் குளத்தின் மத்தியில் வளர்ந்திருக்கும் ஆம்பக்காயைப் பறித்து ருசிப்பதை அடுத்த விளையாட்டின் இலக்காகக் கொண்டு சாதிக்கின்றனர். நாஞ்சில் நிலப்பகுதியின் வட்டார வழக்கு மொழியில் பிள்ளைகளின் நாவில் கொஞ்சுகிறது. நாஞ்சில் நிலப்பகுதிகளின் காட்சிகள் ஆசிரியரின் எழுத்தில் ஈரம் காயாமல் மணக்கின்றன.

தனிமை என்பது குரூரம், உளவியல் சிக்கல், வெறுமையின் உறைவிடம் என்றெல்லாம் தனிமையின் அவஸ்தைகளைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவம் வெவ்வேறு.. அதை உணராமல் வாழ்க்கையைக் கடத்தியவர் ஒருவரும் இல்லை இங்கு. அனைவருக்கும் ஏதோவொரு வகையில் தனிமை வலுக்கட்டாயமாகப் போர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். தனிமையே மனப்பிறழ்வுகளுக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் , பல சமயங்களில் வன்முறைக்கும் கூட முக்கிய காரணியாகிறது. தனிமை என்றவுடன் அனைவரின் சிந்தனையும் கணவனைப் பிரிந்த பெண்களையோ அல்லது காதலனைப் பிரிந்த வாழ்வையோ மட்டுமே வெகுவாகப் பேசும். இந்தத் தனிமையின் ஆக்கிரமிப்பு ஒருபுறம் அலைகழித்தாலும் மழலைச் செல்வமற்ற ஒரு மணமான பெண்ணின் வாழ்க்கைப் போக்கு கேள்விக்குறியைப் போல தலைநிமிர்ந்து நிற்கும். கைம்பெண்ணின் தனிமையைக் கூட ஆற்றிவிடும் வல்லமையும் வாழும் பிடிமானத்தையும் வழங்கிடும் பேராற்றல் கொஞ்சும் மழலைச் செல்வத்திற்கு அலாதி‌ என்கிற யதார்த்தத்தைக் கதை அழகான காட்சிகளின் மத்தியில் நம்மைப் புகுத்திப் போதிக்கிறது. ”அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் கதை.

“என்ன ஒரு முரட்டுத்தனமான தழுவல்! இணைவிட்டுப் பிரியா குச்சிகளின் மீது ஏனோ ஒரு நெருடல் அவளுக்குள்..”
என அவள் தமது தனிமையின் ஏக்கத்தை உடைமரத்தின் முட்டுக்குச்சிகளைக் கண்டு ஒப்பிட்டுக் கொள்கிறாள்.

“புறாக் கூட்டைக் கலைக்க மனமில்லாமல் இவை சிறகசைத்துப் பறந்து போவது வரையிலும் இந்த மரம் மட்டும் நிற்கட்டும்.” என்று தினமும் தோணும்போதெல்லாம் அவற்றுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் கவனித்து வந்தாள்.. என தாய்மையின் உள்ளுணர்வை பேறற்ற தனது மலட்டுத்தனத்தை மறைக்க மறக்க புறாக்களையும் வகைவகையான குருவிகளையும் அரவணைத்து மருகிக் கிடந்தாள் அவள். தாம்பத்தியம் என்பது தம்பதியர் இருவருக்குமானது என்பது எத்தனை கணவன்மார்கள் அறிந்திருக்கக்கூடும் என்பது இதுவரையிலும் கேள்விக்குறியே… கேலிக்குரியதும் கூட ஆண்கள் தனக்கான தேவையை மட்டுமே முன்னிறுத்தி பெண்களின் உணர்வுகளை மறுத்தலிக்கும் பட்சம் அந்தரங்க ஒவ்வாமை பெண்களுக்கு காலம்முழுதும் மாறாத ரணமாகி விடுகிறது என்பதை கதை, அவளின் உணர்வுக்கு முகம் சுளித்த ஆரோக்கியசாமியின் ஆண்வக்கிரத்தைக் காட்சிப்படுத்துகிறது இந்தச் சொற்றொடர்: “உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பவும் இந்த நினைப்பில தான் இருப்பியா?” கூனிக்குறுகிய அவளின் பெண்மை அந்த நொடி முதல் மலடாகிப் போனதை, மற்றொரு இடத்தில் ஆதிக்க ஆணின் புரிதலற்ற நிராகரிப்பில் வெளிப்படுத்தத் தவிக்கும் பெண்களின் மனமாகத் திட்டியும் தீர்க்கிறது..
“ச்சீ..நான் என்ன அதுக்கு அலைபவளா..”

தாம்பத்தியத்தில் அவளுக்குக் கிடைத்த புறக்கணிப்பின் காயம் அவளுக்குள் இதுவரை கனன்ற வெறுப்புத் தீயைக் கக்கியது. எப்படியும் பணிந்து போவாள் என்கிற ஆண் ஆணவத்தை உடைக்கிறது இந்த வரிகள். ஆசிரியரின் எழுத்து காட்சிப்பெருக்காய்க் கண்முன் கானகத்தைக் கூட்டி நின்றன. கவித்துவ மொழியில் களைகட்டுகிறது தொகுப்பின் கதை ஒவ்வொன்றும்.

மற்றுமொரு ஆதிக்க ஆணவத்தின் கூகை ஒலியாய் “இரவை வெளிச்சப்படுத்தும் வானம்” . காலங்களாக மணம் முடித்த பெண்களின் மீது அராஜகம் செலுத்தும் கணவன்மார்களின் வக்கிரப் புத்தியை மையமாகக் கொண்டு பல படைப்புகள் இலக்கியத்தில் சூழ்ந்துள்ளன.. ஆனால் இந்தக்கதை மதம் பிடித்த ஆண்மையில் மனிதத்தின் கடைசி ஈவும் தொலைத்த மிருதத்தை, பிறழ்வின் அதீதத்தில் இளம் மனைவியை வீட்டிலிருந்து வெளியேற்றி இரவு முழுதும் அவள் வீதிகளிலும் சாலைகளிலும் முச்சந்திலும் என பரந்து பட்ட தேசத்தின் முக்கொன்றிலும் தனக்கான உயிரையும் உடலையும் மனைவி என்கிற உறவையும் காத்துக் கொள்ள மேற்கொள்ளும் கடும் பிரயத்தினத்தில் ஓய்ந்து போன பரிதாபத்தில், உச்சி குளிர்ந்து வெறுப்பை ஒவ்வோர் இரவும் ஆற்றியும் மறுஇரவிற்குக் குமையச் செய்தும் தீராத் தாகமுற்றமாவனாகப் பரிமளிக்கும் வஞ்சக ஆணை சமூகவெளியில் காட்டிக் கொடுக்கிறது கதை.

பெண்களை அடித்து நொறுக்கி வேதனைப்படுத்தும் ஆண்கள் ஒருபுறம், சூடுபோட்டு பாலியல் துன்புறுத்தும் ஒரு ரகம், முகம் சுளித்து எப்போதுமே எரிந்து விழும் சிடுமூஞ்சுகள் வேறு.. இவனோ மனைவியை சாலையில் கிடத்தி அவளின் அவதியில் நிம்மதியான நித்திரையை போர்த்திக் கொள்ளும் ஆண்மை நோய்மையின் தீவிர பாதிப்பிற்குட்பட்டவன்…. இப்படியான ஆண்கள் சிலரை நானும் கண்டுள்ளேன். கதையின் நாயகி கணவனால் அவ்வப்போது துரத்தி விடப்பட்டு அல்லல்பட்ட இரவுகளின் குரூரங்களைக் காட்சிகளாகத் தத்ரூபமாகத் தருகின்றன.

“காலையில் எல்லாருக்கும் நல்லவனாகத் தோற்றம் கொள்வதும் இரவு நேரம் ஓநாய் போல் வேட்டைக்கான மூர்க்கத்தோடு காத்திருக்கும் அவனைப் புரிந்து கொள்ளவே முடியாத புதிராகவும் இருந்தது அவளுக்கு..”

இதுவே பெருவாரியான ஆணாதிக்க ஆண்களின் அசல் ரூபம் என்பதை வெளிச்சப்படுத்த இந்த வரிகளே போதுமானது. தனியாக உலவும் பெண்ணை அச்சுறுத்தும் இருட்டின் மாறுபட்ட பரிணாமங்களைக் கண்முன் தரிசிக்க வழங்குகிறது கதை முழுதும். காட்சிகளின் நினைவலைகள் இதயச்சுவற்றின் உயரத்தைத் தொட்டுச் செல்கின்றன. இந்தக் கொடிய இரவுகளிலிருந்து விடுபட அவள் இதுகாறும் சகித்து வந்த கணவன் என்கிற கனவிலிருந்து வெளியேறி நிம்மதிக்கான நனவிற்குள் குடியேற உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்கிறாள் கதையின் நாயகி. ஏங்கித் தவிக்கும் பிள்ளைமுகங்களில் அவளும் ஒருவளாகிறாள்‌. பள்ளியின் லீவு நாட்களில் கூட வீடு திரும்பாத மாணவர்களோடு அவளும் அங்கேயே ஐக்கியமாகிப் போகிறாள்… இனி நினைக்கவே கூடாது என்கிற குரூர இரவுகளை மட்டுமல்ல உறவுகளற்ற பெண்களின் நிராதரவையும் சேர்த்தே வெளிச்சப்படுத்துகிறது கருமை சூழ்ந்த வானம்.. மனக் குழப்பங்களில் புத்தி புரண்ட தாயின் அரவணைப்பில் கொஞ்சமாக வளர்ந்தாலும் பிராய காலம் முதலே மகளைத் தாங்குவது போல இப்போதும் தாயைத் தாங்கும் ஒரு மகளின் விழிகள் கடல் நீர் சுமந்தும் சுரந்தும் அலையடிக்கும் ஓசையை சன்னமாகக் காட்சிப்படுத்துகிறது “கடல் கரம் பற்றிய தடம்” கதை. நமது கதையின் நட்சத்திரமான ராசாத்திக்குக் கடல் தான் எல்லாமே… கடலைக் கண்டால் சோகங்களையும் சுகமாக்கிக் கொள்வாள். அதன் லயிப்பில் துயரமும் கூட துச்சம் தான்.‌ஆனால் ஒருநாளும் தன்னைத் தேடி ஓடோடி வரும் அலைகளை ஒருமுறை கூட பாதங்களை தரிசிக்க அனுமதித்ததில்லை..‌ காரணம் அவளுக்கு உண்டான ஆற்றவியலா கீறல்..‌ அதன் வலி பயமாகவே அவளுக்குள் எப்போதும் உயிர்த்திருக்கும். தொலைவில் கொண்டாடும் கடலை ஒரு அடி தள்ளி வைத்தே ரசிப்பாள் ராசாத்தி.

மனிதம் மண்ணில் தனது சுகந்தத்தை இன்னமும் தக்க வைத்துள்ளதை கஸ்தூரியின் பசிக்கு டீயும் பன்னும் ஊர்போய் சேர வண்டி ஏத்திவிட்ட டீக்கடைக்காரர் பாத்திரமும், அவளை விட்டுக்கொடுக்காது விட்டு விலகாது உடன் துணையாய் இருக்கும் மல்லிகா பாத்திரமும் மனதில் இடம் பிடித்துள்ளன. தொகுப்பு முழுதும் இப்படியன நெஞ்சை உரசிச் செல்லும் அனேக பத்திரங்களின் படைப்பு கதைகளுக்குக் கூடுதல் பலம். இப்படியான மனிதர்கள் திரைகளிலும் இலக்கியத்திலும் வாசிக்கக் கிடைப்பர். அசலில் படைப்புகள் ஒவ்வொன்றும் அது கலையோ காவியமா கடந்தும் போகும், நினைவில் படர்ந்து நிற்கும் மனிதர்களைத் தானே சுமந்து மெருகேறுகின்றன என்பதற்கு இந்தக் கதையும் ஒரு சாட்சி.

கதி கலங்கிய தாயை ஆதரிக்கும் பிள்ளையாக ராசாத்தி. தந்தையின் திடீர் மரணத்திற்குப் பின் சிறுபிள்ளையான ராசாத்திக்குத் தான் பலத்த இழப்பு. நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் காணாமல் போகும் தாயைத் தேட இனி இவளும் கடலும் மட்டுமே உள்ளனர்… இழப்புகளும் வாழ்க்கைப்பாடுகளும் இப்போது ராசாத்தியின் பாதங்களைக் கடலலை நனைக்க அனுமதிக்கிறது… வார்த்தைகளற்ற மனிதர்களை எப்போதும் நாம் இயல்பிலிருந்து பிறழ்வுற்றவர்களாக விலக்கியே மருகுகிறோம். அசலில் அவர்கள் தான் ஜீவிகள். வாழ்க்கை தார்மீகத்தை அதன் போக்கில் எடுத்து வாழும் யதார்த்த மனிதர்கள். இயற்கையின் பிற ஜீவராசிகளுக்குள் இருக்கும் யதார்த்தவாதம் இவர்களிடம் ததும்பிநிற்கும். நேர்த்தியாக இருப்பதாக நினைத்து நம்மை நாமே போற்றிக் கொள்ளும் நமது போக்கே இயல்பிலிருந்து நம்மைத் தள்ளி வைக்கும் விசித்திரம். காரணம் இந்த மனிதர்களை அருவருப்போடும் அவதானிப்புடனும் பார்ப்பதாக நினைத்து நம்மின் பக்குவத்தை இழந்து வருகிறோம். அவர்களோ சுற்றியுள்ள அனைவரின் அனைத்தின் அனாயாச செயல்களை கொஞ்சமும் அசட்டை செய்யாது தன்னையும் தனக்குவப்பானதையும் மட்டுமே கவனத்தில் கொண்டு வாழும் பொறாமையற்ற மனிதர்கள். நாகரீகத்திலும் கலாசார மேம்பாட்டிலும் பாந்தமாக இருப்பதாக எண்ணி சுயநல விரும்பிகளாய் நாமே மனப்பிறழ்வுற்றவர்கள்…”அடையாளம் அற்றவனின் ஆடை” நாயகனும் இப்படியான மனித அருவருப்பில் புறந்தள்ளப்பட்ட சாமான்யன். உளவியல் பிறழ்வு உள்ளதாய் சமூகத்தின் விழிகளும் மொழிகளும் அவனைத் தூற்றும். அவனோ கொஞ்சமும் விசனமின்றித் தனது அன்றாடத்தை அலட்டாமல் வாழும் படைப்பின் நேர்த்தி.. மனிதக் கண்களுக்கு அவன் ஒரு தற்குறி.. கதை சொல்லியாக இல்லாமல் அவனை நிதம் கடந்து போகும் கதையின் நாயகியான கவிதாயினி விழிகளில் விழுந்து எழும்புகிறான். பின் இறுதியில் அவளின் கவிதைத் தொகுப்புடன் காணாமல் போகிறான். ஆசிரியர் அவனின் இருப்பைக் காட்சிப்பேழையாகத் திரையிட அவன் தொலைந்த சேதியை மட்டும் வாசகப் பரிசீலனைக்கு விட்டுவிட்டார் ஆசிரியர். கதையின் ஆதியாகவும் அந்தமாகவும் நீக்கமற நிரம்பி வழிந்த மற்றுமொரு பிரதான பாத்திரங்களாக அவனின் சில்வர் டம்ளர். அதில் அவன் நிதம் பருகிய தேனீரும் தாகத்திற்கான தண்ணீரும் அதை அவன் முந்நூறு முறை அலம்பி உலர்த்திய அவன் ரேகைகளும்… அவனும் சரி அவன் டம்ளரும் சரி தீவிர மழை சிநேகிதர்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் ஆபத்பாந்தவனாக மழையும் தேனீரும்.. அவனது இழப்பின் குறியீடாக அவனிடமிருந்து கைமாறிய டம்பளரைக் கொண்டு சூசகமாக உணர்த்துகிறார் நூலாசிரியர். இதற்குள் மனித வாழ்வின் தத்துவத்தைப் பலவாறாகப் பதுக்கியுள்ளார்‌ நம் வீட்டு மூத்தோர் தமக்காக வாழ்ந்து சுகித்தனர் என்பதை விட அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற முன்னோடிகள். வாழ்வின் இறுதிநொடியிலும் உழைப்பின் உத்தமத்தைத் தரிசித்த மாமனிதர்கள் நம் மூத்தோர். இயற்கையை உணர்வதிலும் நுகர்வதிலும் கைதேர்ந்தவர் என்பதை “பெரிய ஆடு” கதை நமது முப்பாட்டன்களின் அறிவியல் ஞானத்தை இன்றைய தலைமுறையினருக்கு வெளிச்சப்படுதுகிறது..இயற்கையை வாசித்து நுட்பமாகக் கலையாக்கி மகிழ்ந்த நமது முன்னோர்களின் செயலொன்றிற்குப் பின்புலம் மெய்ஞானம் நிச்சயம் மறைந்திருக்கும்.

கட்டிடக்கலையில் விற்பன்னர்கள் அவர்கள். வெறும் மண்ணை வைத்தே வீடு கட்டி பல நூறு காலங்கள் சிதிலமடையாத உறைவிடங்களை நமக்கு நினைவுக்கூடங்களாக விட்டுச் சென்றுள்ளனர். பெரிய ஆடு கதையின் தாத்தா கட்டிய குடிசையும் அப்படித்தான். ஒக்கிப்புயலில் சேதமடையாத குடிசையாக நிலைத்திருந்தது தாத்தாவின் கூனலுக்கான காரணத்தைக் கேட்கும் நமது கதைசொல்லியிடம் கடவுளின் வாழைத்தோட்டத்தில் தனது ஆடுகள் மேய்ந்து விட்டதால் கோபித்துச் சாபமிட்டார் கடவுள். அதற்குப் பிறகு தான் முதுகு இப்படி வளைந்ததாகக் கதைச் சொல்லும் தாத்தா அசலில் உணர்த்தியது.. “தோட்டத்தின் உரிமையாளரின் பட்டப்பெயர் கடவுள் என்று..” முதலாளித்துவ வன்முறையை தாத்தா லாவகமாக பேத்திக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரின் சார்பிலும் காட்டிக் கொடுக்கிறார்.

காதல் வைபவம் கல்யாண வைபோகம் எல்லாம் விளிம்பு நிலையின் அன்றாடங்காய்ச்சிகளை நெருங்கக் கூடாத ஒவ்வாமைகள்… வயிற்றுப் பாட்டைக் கழிக்கவே அவர்களது வருமானம் இழுத்துப் பறிக்கும்.. ஒருவருடன் காதல் வயப்பட்டால் காலம் தான்சும்மாயிருக்குமா… “ரயில்பூச்சி” கதையின் நாயகியின் காதலும் அவ்வாறே. தன்னுடன் வேலை பார்ப்பவனைக் காதலிக்கிறாள்.. பெண்பார்க்கும் படலத்தில் பெத்தவளும் அக்காளும் உயிருக்குயிராய் காதல் செய்த பெண்வீட்டாரிடம் வரதட்சனை கேட்கும் போது மௌனத்தை மட்டுமே அவளுக்கு பதிலாகத் தருகிறான். வரதட்சணைக்கு ஒத்து வராது போக விலகி விடுகிறான். எப்படி கதையின் பாதியில் ஒட்டிக் கொண்டானோ அதேபோல தனக்கு ஒத்துவராத காதலிலிருந்தும் ஒதுங்கிப் போகிறான்.. கதையிலிருந்தும் காதலியிடமிருந்துக் கழன்றும் போகிறான்….

ஆசைகளும் நிராசைகளும் பெரிதாய் ஆர்ப்பரித்து வரத்தேவையில்லை… ஆசைகளும் ஏக்கங்களும் கூட முளைக்கும் இடத்திற்கேற்றார் போல சிறுத்தும் பெருத்தும் பிறக்கும். “வெற்றுடல் குளம்” கதையின் அவளும் இப்படித் தான்.. பெரிதாக ஆசைகள் சிறகு முளைத்துப் பறக்கவில்லை..கொலுசொலியின் நாதத்தில் தன்னை லயித்துக் கொண்டு மகிழ்ந்திருந்தாள்… அந்த ஒற்றை ஓசைக்காகவே காடு கரை களத்து மேடு சுற்றி வந்தாள். கொலுசு சூடிய பாதங்கள் பல அவளுக்கு மயக்கத்தை ஏற்படுத்தினாலும் எப்போதோ ஒலித்து நகரும் ஓசையில் பெரிதாகத் தாகம் தீரவில்லை அவளுக்கு… இறுதியாக வைக்கோலில் பாதம் பதியும் அந்தநொடிகள் மட்டுமே தனக்கான சாந்தியை அடைகிறாள்.. சித்தி ஒருத்தியின் கொலுசு வாங்கித் தரும் வாக்குறுதியில் காய்ச்சலிலிருந்து தேறுகிறாள். கொடுத்த வாக்கு சுயவாழ்வில் தொலைந்து போக ஆற்றங்கரை பரிசளித்த அந்த ஒற்றைச் சலங்கையோடு தனித்து வழியனுப்பி வைக்கிறாள் சித்தி.. ஆசை நிராதரவாய் போனது .அந்த ஒற்றைக் கொலுசு நிரந்தரமாய் ஆனது. கதையில் அவளும் கோமதியும் பாத்திரங்களாக… சித்தியும் பாட்டியும் உறவுகளாக…‌என இந்நால்வரைச் சுற்றியே முடிகிறது..வெற்றுடல் குளம் ஆகவில்லை.. வெற்றுடலாக அவள் பாதங்கள் நிர்வாணப்படுத்தப்படுகிறது பெற்றோரின்றி… எத்தனை பாசம் காட்டினாலும் பித்தளை கருக்கத் தானே செய்யும்.. என்பதைக் கதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

கதை எழுத பாத்திரங்களின் வசீகரப் பெயர்களுக்காக மூளையை கசக்க வேண்டிய அவசியமில்லை , கருவைத் தேடி கால் கடுக்க வேண்டியதில்லை, உரையாடல்களின் அலங்காரங்களுக்கும் ஒப்பனைகளுக்கும் கொஞ்சமும் மெனக்கிடத் தேவையில்லை ….‌ எழுத்தில் ஒளியும் கதை கடக்கும் பகுதிகளை அப்பட்டமாகக் காட்சிப்படுத்த மொழிவளமும் நிலத்துடனான காதலும் மட்டுமே போதுமானவை வாசகரை வசீகரிக்க என்பதை அமுதா ஆர்த்தி அவர்கள் படித்துள்ளார்.. அதைத் தமது தொகுப்பின் வழியாக செயல்படுத்தி நிரூபித்தும் உள்ளார்.பாத்திரங்கள் என பெரிதாக வரிசை கட்டவில்லை. கதைகளில். விரல் விட்டு எண்ணும் படிக்கு பாத்திரச் செருகலும் கனகச்சிதமான கதை வடிவமும் சோர்வற்ற வாசிப்பிற்கு உறுதுணை..‌எழுத்து அமுதா ஆர்த்தியின் கைப்பக்குவம்..‌சொன்னபடி கேட்கிறது‌. இயற்கையின் எழிலில் பருந்து சிறகு விரித்து வானளாவிப் பறக்கிறது.

 

        நூலின் தகவல்கள் 

நூல் : “பருந்து”
நூலாசிரியர் : எழுத்தாளர் அமுதா ஆர்த்தி
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கம் : 151
விலை : 200/-

            எழுதியவர் 

    து.பா.பரமேஸ்வரி

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *