பசி…. உலகின் மிகப் பழமையான நோய்…
உலகத்துல மனிதன் போதுமென்று சொல்லும் ஒரே விசயம் உணவுதான்…. எத்தனைதான் நல்ல உணவென்றாலும் வயிறு நிறைந்த பின் போதும் என்றே சொல்கிறோம்… அதே உணவு இல்லாத நிலை பசி… இரண்டு நாளைக்கு சேர்த்தும் சாப்பிட முடியாது. ஒரு நாளைக்கு சாப்பிடாமலும் இருக்கமுடியாது என அவ்வையார்,
“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.” என எடுத்துரைக்கிறார்.
பசி என்றால் என்னவென்று பசித்தவனால் மட்டுமே உணர முடியும்.
பசி மிகவும் கொடுமையானது….
கொரோனா காலத்தில்தான் தெரிகிறது எத்தனை மனிதர்கள் தன் இருப்பிடத்தை விட்டு, தனது ஊரைவிட்டு புலம்பெயர் மனிதர்களாக இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்கிறார்கள் என்று.
இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வேண்டுமானால் வசதியாக வாழ பொருள் தேடி சென்றிருக்கலாம். ஆனால் இந்தியாவுக்குள்ளே புலம்பெயர் மனிதர்களாக வாழும் பெரும்பாலான மக்களின் அடிப்படைத் தேவை உணவாகவே இருக்க முடியும்…
நிற்க…
நார்வேயைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட்ஹாம்ஸன். தனது இளமைப் பருவத்தில் பசியை நிரம்ப அனுபவித்தவர் என்று நினைக்கிறேன். தனது அனுபவத்தையே sult என்னும் புதினமாக 1890 ல் வெளியிட்டிருக்கிறார். இதன் ஆங்கில வடிவம் Hunger. க.நா.சு வால் மொழிபெயர்க்கப்பட்ட இதன் தமிழ் வடிவமே ‘பசி’.
ஒரு மிகப்பெரிய எழுத்தாளனாக வர ஆசைப்பட்டு பசியின் கோரப்பிடியில் சிக்கி நகரத்து தெருக்களில் அலையும் ஒரு இளைஞன் தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது.
தான் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தர வழியில்லாமல் வெளியேறியவன் செல்ல வழியின்றி பகல் முழுவதும் நகரத்து வீதியில் அலைந்து திரிகிறான். இரவில் கிடைக்கும் இடத்தில் தங்கிக்கொள்கிறான்.
பசிக்கு தின்ன அவனிடம் ஏதுமில்லை, ஆனால் பேய்ப்பசி அவனை பிய்த்துத் தின்கிறது.
எழுத்தாளர் கா.நா.சு
ஒரு நாள், இரண்டு நாள் ஏன் மூன்று நான்கு நாட்கள் கூட உணவின்றி கிடக்கிறான், வெறும் மரக்கட்டையை வாயில் வைத்து சப்பித் திரிகிறான். சில பத்திரிகைகள் அவனது எழுத்தை வெளியிடுவதால் கிடைக்கும் சொற்பத் தொகையில் சிலநாட்கள் அவன் பசியைக் கொல்கிறான், பின் பசி அவனைக் கொல்கிறது.
அடிக்கடி பசிநோயில் சிக்கும் அவன் உடல் நலிவடைந்து போகிறது. தலை முடியெல்லாம் கொத்துக் கொத்தாக உதிர்கிறது. பசிக்கு தன் விரலையே கடித்து இரத்தத்தைச் சுவைக்கிறான். இடையே ஒரு நிறைவேறாத காதல் வந்து போகிறது.
தன் எழுத்துத் திறமையால் இந்நகரத்தில் பிழைத்து விடலாம் என்று நம்பி தோற்றுப்போய் அந்நகரத்தைவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளிநாட்டுக்குக் கப்பலேறுவதோடு நாவல் நிறைவடைகிறது.
பசி… ரணம்…
வாசித்துப் பாருங்களேன்…
பசி
நட்ஹாம்சன்
தமிழில்… க.நா.சு
அகரம் வெளியீடு
70/- பக்கங்கள்..168
இவண்
இராமமூர்த்தி நாகராஜன்