Pasi konda iravu பசி கொண்ட இரவு

வாசிப்பு இயக்கத்தின் வாயிலாக அறிமுகமானவர் அன்பு தோழி அமுதா செல்வி. அவரின் முதல் சிறுகதை தொகுப்பு “பசி கொண்ட இரவு” வெளியாகிறது என்ற செய்தி கிடைத்ததுமே இனம் புரியாத மகிழ்ச்சி. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்றாடம் பலவிதமான மனிதர்களை நாம் கடந்து செல்கிறோம். பலதரப்பட்ட மக்களின் கதைகளை அறிந்து கொள்கிறோம். ஆனால் அவை யாவும் எழுத்துரு பெறுவதில்லை . நாம் காண்கின்ற ஏதோ ஒரு காட்சி, கேட்கின்ற ஏதோ ஒரு செய்தி நம்மை உறங்கவிடாமல் நம் சிந்தனைக்குள் புகுந்து மூளை நரம்புகளின் வழியாக பரவி உடல் முழுவதும் நடுக்கத்தையும் வலியையும் ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் பிரதிபலிப்புகள் தான் கதைகளாக வெளி வருகின்றன . அப்படி அவரை உறங்கவிடாமல் செய்த நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது “பசி கொண்ட இரவு” தொகுப்பு.

இந்த தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் நாவலுக்கான களமும் கனமும் கொண்டுள்ளன. பெண்களுக்கு எதிராக கையாளப்படும் அவலங்களையும் அநியாயங்களையும் அவர்கள் சூழ்நிலை கைதிகளாக மாற்றப்படுவதையும் இதில் வரும் எட்டு கதைகள் விரிவாக விளக்கி செல்கின்றன. ‘பசி கொண்ட இரவு’ சிறுகதை மட்டும் இதிலிருந்து சற்று மாறுபட்டு நிற்பதாக நான் கருதுகிறேன். விபச்சார தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பெண்ணின் உடலை மையமாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கட்டழகு மேனியாய் இருந்த போது அவளின் நிலையும், கட்டழகு சீர்கெட்டு சீழ்பிடித்து நின்ற போது அவள் அனுபவிக்கும் வலியையும் இக்கதை பேசிச் செல்கிறது. இக்கதையின் எந்த ஒரு இடத்திலும் நூலாசிரியர் கதை நாயகியின் தொழிலை நியாயப்படுத்தவும் இல்லை குற்றம் சுமத்தவுமில்லை. அனைத்தையும் வாசகரின் கற்பனைக்கு விட்டு விட்டதே இக்கதையின் சிறப்பு.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தீட்டு’ சிறுகதை என்னை குலைநடுங்க வைத்துவிட்டது. இப்படி நடக்குமா? இது சாத்தியமா? கடும் புயலில் இருந்து காப்பாற்ற ஆடு மாடுகளை எல்லாம் வீட்டிற்குள் அடைத்து பத்திரப்படுத்துபவர்கள், தவமாய் தவமிருந்து பெற்ற பெண் பிள்ளையை தீட்டு எனக் கூறி வீட்டிற்குள் அனுமதிக்காமல் பலி கொடுத்த கொடூரம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா? இதையெல்லாம் தாண்டி வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டும்? என்று பல கேள்விகளை எழுப்புகிறது.

ஜாதி வெறியின் உச்சத்தை, வன்மத்தை, வக்கிர புத்தியை தோலுரித்து காட்டுகிறது ‘மூன்றாம் நாளும் விடிந்தது’ சிறுகதை. ஜாதி மாறி காதலித்த பெண் படும் பாடு, அவளுக்கும் அவள் குடும்பத்தாருக்கும் வழங்கப்படும் தண்டனைகள், அதை நினைக்கும் பொழுது உடல் நடுங்குகிறது. எந்த மாதிரியான சமூக கட்டமைப்புக்குள் நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

குடிகார தகப்பனால் சீரழியும் குடும்பத்தின் கதை பூரணச் சந்திரனின் கதை. சந்தேக பிசாசு பிடித்த கணவனால் அவமானங்களை அனுபவிக்கும் பெண்ணின் கதை ‘சீதை வேசியாக்கப்பட்டாள்’. தனது காதலாலும் பிறரின் காமத்தாலும் வாழ்க்கையை தொலைத்து சிறையில் வதைபடும் பெண்ணின் கதை ‘காதல் என்னும் ஊழ்வினை’. சூழ்நிலை கைதியாகி சுயத்தை இழந்து சின்னா பின்னமான பெண்ணின் கதை ‘பாக்கெட் சாராயம்’. இல்லாமையாலும் இயலாமையாலும் பல அவமானங்களை அனுபவிக்கும் பெண்ணின் கதை ‘கனலி’ என பெண்களின் வாழ்வில் சந்திக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகளையும் சவால்களையும் துயரங்களையும் தொகுத்திருக்கிறார் கி. அமுதா செல்வி.

‘மீனாட்சி அத்தை’ கதையில் வரும் அத்தை நம் குடும்பங்களில் இருக்கும் அத்தையை, அவளின் நேசத்தை, யாருக்கும் இல்லாத உரிமையை, அவளின் வாசத்தை நினைவூட்டி செல்கின்றன. குழந்தை இல்லாத பெண் சந்திக்கும் பாடுகளை மகேஸ்வரியின் மூலமும் அதனை கடந்து வரும் சூட்சமத்தை மீனாட்சி அத்தையின் வாயிலாகவும் சொல்லியிருக்கும் பாங்கு அருமை.

வரிகளின் வழியாக வலிகளை வாசகனுக்குள் கடத்துவதில் தான் எழுத்தின் வெற்றியும் எழுத்தாளனின் வெற்றியும் அடங்கியுள்ளது. அந்த வகையில் உங்கள் எழுத்துக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெண்களின் வலிகளை தொடர்ந்து எழுதுங்கள். வலிகள் இல்லா உலகம் பிறக்கும் வரை உங்கள் எழுத்துக்கள் பூமியில் வலம் வரட்டும் .

 

                  நூலின் தகவல்கள் 

நூல் : “பசி கொண்ட இரவு”

நூலாசிரியர் : கி.அமுதா செல்வி

வெளியீடு :  பாரதி புத்தகாலயம்

நூலைப் பெற  44 2433 2924 https://thamizhbooks.com/product/pasi-konda-iravu/ 

விலை : 150

பக்கங்கள் : 150

 

          நூலறிமுகம் எழுதியவர் 

              சப்திகா


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “கி.அமுதா செல்வி எழுதிய “பசி கொண்ட இரவு” – நூலறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *