பசி கொண்ட இரவு | Pasi konda iravu bookreview | அமுதா செல்வி

ஆசிரியர் அமுதா செல்வியின் “பசி கொண்ட இரவு” இரவில் எழுதப்பட்ட கதைகள் போலும்.

கருப்பு இன‌ப் பெண்களின் உரிமைக்குரலாக செயல்பட்ட மாயா ஏஞ்சலோ என்ற புகழ் பெற்ற அமெரிக்கா பெண் எழுத்தாளர் தான் எழுத காலைப் பொழுதையே தேர்ந்தெடுப்பார் என்றும் அப்போது அவரது அறையின் சுவற்றில் எந்த ஒரு ஓவியமோ ஒளிப்படமோ இல்லாத படி செய்து கொள்வார் என்பது போல எழுத்தாளர் தனது கதைகளை இரவில் வடித்துள்ளார்.

அனைத்தும் பெண்ணின் இருண்ட பக்கங்களின் நீட்சிகள்.
பெண் கதைகளை பல்வேறு வகைகளில் வாசித்தாலும் பெண் கண் வழி வாசிக்கும் போது வலி தன் அடர்த்தியை அதிகரிக்கிறது.

தன் கை கொண்டு தன் கதை எழுதும் கலை அரிது. அக்கலை அறிந்திருக்கிறார் ஆசிரியர்.

அனைத்து தரப்புப் பெண் வலிகளையும் கொண்ட கதைத் தொகுப்பு இந்நூல்.

“காதல் என்னும் ஊழ்வினை” ஜெயக்கொடியை நீண்ட சிறைச்சாலை சுவரில் படர கதை ஆரம்பமாகிறது ஆசிரியர் கி. அமுதா செல்வியின் “பசி கொண்ட இரவு ” என்ற சிறு கதைத் தொகுப்பு.

சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவின் அடையாளங்களை மேற்கு வங்க மாநில புள்ளிவிவரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரம், ஒத்த பாலின இச்சையையும் இழுத்து வந்து காட்டி இருக்கிறார் ஆசிரியர் தன் முதல் கதையில்.

எத்தனை இடுபொருட்கள் இட்டாலும் பெண் தனக்கான விளைச்சலைப் பெற முடியாதபடி உள்ளதாக கூறும் முதல் கதை “காதல் என்னும் ஊழ்வினை” சிறுகதை.

மானுடவியலில் மறக்கப்பட்ட பெண் மனம் என்று எண்ணும் படியாக இருக்கும் ” சீதை வேசியாக்கப்பட்டாள்” என்ற சிறுகதை.

“கனலி” கதையோ ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பும் பெண்ணின் போக்குவரத்து பற்றியது.

இயற்கை சீற்றமும் பெண்ணும் பெண்ணிற்கே நஞ்சாகும் “தீட்டு” சிறுகதை கூடுதல் வலி.

தன் வாழ்வின் கசடுகளைத் தானே எத்தனை முறை தூர்வாரித் துடைத்தாலும் காணாப் பிணமாக்க காத்திருக்கும் ஆண் மனம் அதற்குத் துணை போகும் அவன் உடல் பற்றிப் பேசும் “பாக்கெட் சாராயம்” கதை.

இச்சமூகம் தன் குளிருக்கு பெண்களை எரிபொருளாக்கும் என்பதை உணர்த்திய
“மூன்றாம் நாளும் விடிந்தது” என்ற கதை.

“மீனாட்சி அத்தை” கதையே ஆறுதல் இச்சிறுகதை தொகுப்பில்.
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட இருவர். ஒருவர் மாயழகி பாட்டி. பெண்ணுக்கு மட்டும் மறுக்கப்படும் மறுவாழ்வு என்கிறது “பூரணச்சந்திரன்” கதை. அச்சிறுவனுக்கேனும் வாழ்வு கிடைத்ததில் மகிழ்ச்சி அடையலாம். ‌முதியோரை அரவணைக்க எத்தனை ஜுன் 15 வந்தாலும் போதாது போதாது.

நள்ளிரவில் பூக்கும் பிரம்ம கமலம் கங்காவின் “பசி கொண்ட இரவு” தாகம் கொண்ட ஆணின் எச்சம்.

நீண்ட நெடிய விவரிப்புகள் இல்லாத
மொழி நடை, கதை ஓட்டத்தை நீட்டி முழக்காமலும் இருப்பது சிறுகதைகளின் பலம் குறையாமல் இருக்கச் செய்கிறது.

மீனுக்கு நீரே அனைத்தும். கனவு, நினைவு, காதல், கலவி, களைப்பு, உறக்கம், விளிப்பு, தாகம், தீர்வு, என அனைத்தும் நீரிலே என்பது போல பெண்ணுக்கு துன்பமே நிரந்தரம் என்கிறார் கதையாசிரியர்.

தன் எண்ண ஓட்டத்தைக் கதைகளாக்கும் வித்தை தெரிந்தவள் பெண் என்பதற்குச் சான்றாக எழுத்தாளர் கி. அமுதா செல்வி.

உளவியல் நிபுணத்துவம் இருக்கும் எண்ணங்கள் ஏராளம் சிறுகதை ஆசிரியரின் எழுத்தில்‌.

பெண் தன்மை கொண்ட கதைகளில் மருத்திற்குக் கூட ஆண் அன்பைக் காண முடியவில்லை என்பது அவ்வளவு கசந்த உண்மை.

கதைகளில் முடிவு மனக் கணம் கூட்டும் இடம் என்பதில் ஐயமில்லை.

சமூகம், ஒழுக்கம், மரபு, பண்பாடு என பெண்ணை ஆட்கொண்ட அனைத்தும் கதைகளில் ஊடுருவி விரவிக் கிடக்கிறது.

அலங்கார வார்த்தைகள், வரிகள் இல்லா பெண் பற்றிய ஒரு கூட்டாஞ்சோறு இப் “பசி கொண்ட இரவு” சிறு கதை தொகுப்பு.

எவ்வளவு பெண் எழுத்துக்களை, பெண் கதைகளை படித்திருந்தாலும் தீராக் களம் பெண் என்னும் பெருங்கதை.

கண் சிமிட்டாமல் வாசிக்க, பெண் நரம்புகளிலே கோர்க்கப் பட்ட அவளின் மாமிசப் பிண்டங்களின் சாளரம் இந்நூல் என்பது ஆகச்சத்தியம்.
பெண் வலியின் அதிர்வெண் அனைத்து கதைகளிலும் உள்ளபடி அதிகமாக உள்ளதாக உணர்கிறேன்.

பெண் தன் நினைவில் உள்ள நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சேர்மங்கள் தடை செய்யப்பட்டு, நினைவாற்றலை இழப்பது மட்டுமே அவள் பிரச்சனைகளை மறப்பதற்கு ஒரு வழிப் பாதை.

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : “பசி கொண்ட இரவு”

நூலாசிரியர் : அமுதா செல்வி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

நூலைப் பெற44 2433 2924

விலை : ரூ.150 /-

நூலறிமுகம் எழுதியவர்:- 

பேராசிரியர் கவிதா

 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *