“பேசினால் ஒரு பொருள் தான் ; துளிப்பா பேசுவதை விட பேசாமல் நம்மை நிறையப் பேச வைக்கிறது “ என்று நூலின் முன்னுரை கூறுகிறது. ஆம்! குறளைப் போல் சுருங்கச் சொல்லி, விளங்க வைப்பது தான் துளிப்பா .. இந்த நூலில் என்னையும் சேர்த்து மொத்தம் 72 கவிஞர்களின் துளிப்பாக்கள் இடம் பெற்றுள்ளன. தொகுப்பாளர்களின் மிக அழகான வடிவமைப்பில், நூலேணி பதிப்பகத்தின் சிறப்பான வெளியீடாக இது திகழ்கிறது.
நம் வாழ்வின் பல கூறுகளையும், அனுபவங்களையும் இந்தத் துளிப்பாக்கள் அலசுகின்றன ; சில துளிப்பாக்கள் நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் படம் பிடித்துக் காட்டுவன.
அழகு, வறுமை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள், புவி வெப்பமயமாதல், பெண்ணடிமைத்தனம், இயற்கையின் அழகிய கூறுகள், உளவியல் கருத்துக்கள் ……அப்பப்பா…! …எத்தனை விதமான கருத்துக்கள் ! எத்தனை விதமான பார்வைகள் …..! உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் கவிஞர்களின் பலதரப்பட்ட கவிதைகளையும் இதில் நீங்கள் படித்து மகிழலாம்.
என்னைக் கவர்ந்த சில துளிப்பாக்கள் :
இதில் இடம் பெற்றுள்ள எல்லா துளிப்பாக்களுமே சிறப்பாக உள்ளன. இருந்தாலும் சில மிகவும் சிறப்பாக , படித்ததும் அப்படியே நம் மனதில் சட்டென பதிந்து விடுகின்றன.
- கறுத்த வானம்
வெளுக்கத் தொடங்கும்
உழவன் வாழ்வு
மருத்துவர் ஜமீலா முஸம்மில், இலங்கை.
- கையிடுக்கில் நீர்
மெல்ல நழுவுகிறது
முழு நிலவு
ரவிஜி, புதுச்சேரி
- அலைந்து திரிந்தது
பிடித்துக் கட்ட முடியாமல்
மனம்
முனைவர் மு. கீதா, ஆலங்குளம்
- பேகனின் பெயரனுக்கு
மனதுக்குள் புழுக்கம்
மயிலிறகு விசிறி
புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி
- ஆற்றுப்படுகையில்
பாய்ந்தோடுகிறது தண்ணீராய்
மணல் லாரி
கா. கார்த்திக் ஆசாத், திருப்பத்தூர்
- மகள், தங்கை, மனைவி
பல்வேறு கதாப்பாத்திரங்கள்
காணாமலே போன ‘ நான்’
ஹேமமாலினி சுந்தரம், கோவை.
- கடந்தாண்டு கலங்கியது
காணவில்லை மரம்
வெளிநாட்டுப் பறவை
லி. சீனிராஜ், விருதுநகர்
துளிப்பா ஆர்வலர்களுக்கு இந்தத் தொகுப்பு கட்டாயம் சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தரும் ; வாங்கிப் படித்து மகிழும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன. நன்றி !!
ஹேமமாலினி சுந்தரம்.
கோவை.
நூல் : பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை – பன்னாட்டுத் துளிப்பா தொகுப்பு
நூல் வெளியான ஆண்டு : டிசம்பர் 11, 2023.
பதிப்பகம் : நூலேணி பதிப்பகம், சென்னை.
தொகுப்பாளர்கள் : புதுவைத் தமிழ்நெஞ்சன், கன்னிக்கோவில் இராஜா
விலை : ரூ. 180 /-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.