pasumai puratchiyin thanthai m.s.swaminathan avarkalin nerkaanal பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
pasumai puratchiyin thanthai m.s.swaminathan avarkalin nerkaanal பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.

நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் – சந்திப்பு : ப.கு.ராஜன்

4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை – 4 ஆண்டுகளில் சாதித்தோம்

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ள டாக்டர் பட்டங்களும் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ராமன் மக்சாயிசே விருது உட்பட பல விருதுகளும் இதில் அடக்கம்.90 வயதைக் கடந்து இன்றும் பணி தொடரும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இரண்டுநாட்களில் இரண்டு மணி நேரம் ஒதுக்கித் தந்து வழங்கிய நேர்காணல் இது.நேரமும், புத்தகம் பேசுது இதழின் பக்கங்களும்தான் கேள்விகளுக்கு வரம்பிட்டன.‘நான் ஒளிப்பதற்கு ஏதுமில்லை’ எனக் கூறும் அவர் எந்தக் கேள்வியையும் எதிர் கொள்ளத் தயங்கவில்லை.பல சந்தேக மேகங்களை நீக்கும் விளக்கங்களையும் பல புதிய விவாதப்புள்ளிகளையும்கொண்டதாக உள்ள டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் நேர்காணலை வழங்குவதில் ‘புத்தகம் பேசுது’ மகிழ்ச்சி கொள்கிறது.

 

நீங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண்மை மேம்பாட்டு நிகழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளீர்கள். இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் வேளாண்மை மேம்பாட்டில் உங்களுக்கு பங்குள்ளது. குறுகலான அறிவியல் தொழில்நுட்பப் புலம் தாண்டி சமூக அரசியல் தளங்களிலும் உங்கள் செயல்பாடு இருந்துள்ளது. படிப்படியான மாற்றங்கள் மட்டுமல்லாது புரட்சிகரமான மாற்றங்களையும் உள்ளடக்கிய இந்த வரலாற்றுப் போக்கில் நீங்கள் ஒரு முன்னணிப் பங்களிப்பாளராக இருந்துள்ளீர்கள். இன்றைக்கு இந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, உங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளிப்பது என்ன எனக் கூறமுடியுமா?

அத்தோடு உங்கள் நீண்ட அனுபவத்தில் இருந்து இன்றைய இளைய தலைமுறைக்குச் சொல்வதற்கு சில எச்சரிக்கைகளும் இருக்கும். அவை குறித்து சிறிது கூற முடியுமா?

எனது தந்தையார் திரு.எம்.கே. சாம்பசிவன் கும்பகோணத்தில் ஒரு பிரபலமான மருத்துவர். மிகுந்த பொதுநல நோக்கம் கொண்ட அவர் மகாத்மா காந்தியிடம் மிகுந்த பற்றுக்கொண்டவராகவும் இருந்தார். கும்பகோணத்தின் ‘புகழ்பெற்ற’ பைலேரியா உருவாக்கும் கொசுப் பிரச்சினையின் தீர்வுக்கு அவரும் ஒரு காரணமாக இருந்தார். பின்னர் அவர் அன்றைய திருவாங்கூர் அரசரின் மருத்துவராக திருவனந்தபுரம் வந்தார். நான் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் B.Sc- விலங்கியல் படித்து முடித்தேன். எனது தந்தையின் வழியில் மருத்துவராக அடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். ஆனால் 1942 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஆரம்பித்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கமும் 1942-43 இல் ஏற்பட்ட வங்காளத்தின் பெரும் பஞ்சமும் எனது பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. வங்காளத்தின் பெரும் பஞ்சத்தில் பல லட்சம் மக்கள் உணவின்றி இறந்தனர். விரைவில் இந்தியா சுதந்திரம் பெற்றுவிடும் என்பது தெரிந்தது. சுதந்திர இந்தியாவில் நான் நாட்டிற்கு பயனுள்ள முறையில் என்ன செய்ய முடியும் என யோசித்தேன். நான் மட்டுமல்ல; என் வயதினர் பலரும் அப்போது இயல்பாகவே அந்தக் கால கட்டத்தின் லட்சியவாதத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருந்தோம். நான் நாட்டின் உணவுப் பிரச்சனைக்கு ஏதேனும் இயன்றதைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். எனவே மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்திருந்த நுழைவு அனுமதியைப் புறமொதுக்கி வேளாண்மைக் கல்லூரியில் சேர முடிவு செய்தேன்.

அதன்படி கோவை வேளாண்மைக் கல்லூரியில் B.Sc – வேளாண்மை அறிவியல் படித்தேன். பின்னர் தில்லியில் இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தில் (Indian Agricultural Research Institute) ஓராண்டு மாணவனாக இருந்தேன். அப்போது தேர்வு எழுதி இந்தியக் காவல் துறைப் பணிக்கும் (IPS) தேர்வுசெய்யப் பட்டேன். சேர்வதா இல்லையா என இருமன நிலையில் இருந்தேன். நல்லவேளையாக ஹாலந்தில் படிக்க நிதிநல்கை கிடைத்தது. அப்படி மேற்படிப்பிற்காக முதலில் ஹாலந்திற்கும் பின்னர் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கும் சென்றேன். 1950 ஆம் ஆண்டில் பிஹெச்டி முடித்தபின் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் ஓராண்டு பணியாற்றினேன். பின்னர் அங்கு நிரந்தரமான பேராசிரியர் பணி கிடைத்த சமயத்தில் இந்தியாவிற்கு வந்து பணியாற்ற வேண்டும் எனும் ஆவலில் அதனை மறுதலித்து இந்தியாவிற்கு வந்தேன். அன்றைக்கே எனது நோக்கம் உணவு தானியங்களில் புதிய வகைகளை உருவாக்குவது என்பதாக இருந்தது. விவசாயிகள் ஒவ்வொரு விதைப்பின்போதும் விதைகளை வாங்க வேண்டும் என்ற நிலையில்லாது அவர்களது விதைகளை அவர்களது மகசூலிலேயே பெற வேண்டும் என்றும் விரும்பினேன்.

இந்தியா திரும்பிய நான் 1954 ஆம் ஆண்டு முதலில் கட்டாக்கில் CRRI எனப்படும் மத்திய அரிசி ஆய்வுக் கழகத்தில் (Central Rice Research Institute) ஒரு தற்காலிகப் பணியில் இருதேன். பின்னர் IARI இல் உதவி செல் மரபணு நிபுணர் (Assistant Cytogeneticist) எனும் பொறுப்பில் அமர்ந்தேன். பின் 18 ஆண்டுகள் IARI-ல்தான் பணியாற்றினேன். கட்டாக்கில் நான் சென்று சேரும்போதே இண்டிகா-ஜப்பானிகா ஒட்டுப்பயிர் உருவாக்க (Indica – Japanica Hybridisation) வகை அரிசி ஆராய்ச்சி துவங்கியிருந்தது. அந்தத் திட்டத்தில்தான் நான் முதலில் பணியாற்றினேன். அந்தத் திட்டத்தின் மூலம்தான் ADT 27 எனப்படும் ஆடுதுறை 27 வகை வெளிவந்தது. அதன்பின் நான் டெல்லியில் இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்தேன். அங்கு புதிய கோதுமை வகை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். கோதுமையிலும் எனது நோக்கம் அரிசியில் இருந்தது போலத்தான் இருந்தது. நம்முடைய விவசாய நிலங்கள் பசியும் தாகமும் கொண்டவையாகும். பயிர் விளைவதற்குத் தேவையான சத்துகளை (Nutrients) நாம் அளிக்க வேண்டும். நிலத்திலிருந்து கிடைப்பது போதுமானதாக இருப்பதில்லை. எனவே நாம் அவற்றை அளிக்க வேண்டியுள்ளது.

நமது மண்ணிற்கு சத்துக்களும் நீர்ப்பாசனமும் தேவை. சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அன்றைக்கு நேருவிற்கு பெரும் திட்டங்களின் மீதுதான் ஆர்வம் அதிகமிருந்தது, பக்ரா நங்கல், ஹிராகுட் போன்றவைதாம் அவரது கனவுத்திட்டங்களாக இருந்தன எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் சிறிய திட்டங்களும் முக்கியமானவைதான் என்ற புரிதல் இருந்தது. எனவே நீர்ப்பாசனத் திட்டங்கள், இஃப்கோ, என்.எஃப்.எல் போன்ற பொதுத்துறை உரத் தொழிற்சாலைகள் ஆகியவையும் கொண்டுவரப்பட்டன. எனவே எனது பணி நல்ல நீர்ப்பாசனத்தையும் உரங்களையும் நன்கு ஏற்று பயனளிக்கும் கோதுமை வகைகளை உருவாக்குவதாக இருந்தது. அந்தவிதமாகத்தான் அரைக்குட்டை (Semi Dwarf) வகை கோதுமை உருவானது. அடிப்படையான வித்துகள் மெக்ஸிகோவிலிருந்து நார்மன் போர்லாக் அளித்தவை. வேறு இடங்களிலிருந்தும் மரபணுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாக ஜப்பானின் நாரென் ஆராய்ச்சி மையத்திலிருந்தும் வித்துகள் கொண்டுவரப்பட்டன. அதற்குப் பின் நடந்தது வரலாறு.

நாம் அறிமுகம் செய்யும் தொழில்நுட்பம் எளிமையானதாகவும், ஆபத்தில்லாததாகவும், மலிவானதாகவும் இருந்தால் நமது விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிரூபணமானது. அதிர்ஷ்டவசமாக அன்றைய புதிய விதைகள் மலிவானவையாக இருந்தன. அத்தோடு இன்றுபோலல்லாது விவசாயிகள் விதைகளை மீண்டும் மீண்டும் வாங்க வேண்டியதில்லை. 1964 இல் விவசாயிகளின் நிலங்களிலேயே நாங்கள் செய்முறையில் பயிர் செய்து காட்டினோம். விவசாயிகள் ஏற்பு கிடைத்ததால் புதியவகை பயிர்கள் குறுகிய காலத்தில் காட்டுத்தீ போல பரவின. 1964 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை மகசூல் 1968 ஆம் ஆண்டில் 17 மில்லியன் டன்னாக உயர்ந்தது. அப்போதுதான் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஒரு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டார். கோதுமைப் புரட்சி என்ற வரிகளோடும், பிற்காலத்தின் எனது பெயரிடப்பட்ட IARI நூலகத்தின் பின்புலத்தோடும் அந்த அஞ்சல் தலை இருந்தது. அது ஒரு மிகவும் உத்வேகம் நிரம்பிய காலகட்டம். எல்லோரும் மனப்பூர்வமாக ஒத்துழைப்பு நல்கிய காலகட்டம். அதிர்ஷ்டவசமாக அன்றைக்கு ஒரு நல்ல மத்திய அமைச்சர் இருந்தார். அவர்தான் பாரதரத்னா சி.சுப்பிரமணியம். அவருக்கு அறிவியல் மீதும் அறிவியல் வல்லுநர்கள் மீதும் மதிப்பிருந்தது. அவருக்கு ஒரு நீண்டகால நன்நோக்கும் இருந்தது. அவர் அதிகார வர்க்கத்தினரின் முட்டுக்கட்டைகளைமீறி எங்களுக்கு ஆதரவளித்தார். அதிகார வர்க்கம் நாங்கள் என்ன சொன்னாலும் அதனை நிராகரிப்பதாக இருந்தது. சி.சுப்பிரமணியம் அவர்களது எதிர்ப்புகளை நிராகரித்து நாங்கள் பணியாற்ற வழிவகுத்தார். தொழில்நுட்பமும் அரசுக் கொள்கைகளும் இணைந்து செயல்பட்டால்தான் எந்தவிதமான நற்பயனும் விளைவிக்க முடியும். தொழில்நுட்பம் என்ன செய்ய இயலும் என்பதைத்தான் சொல்ல முடியும். அரசுக் கொள்கைதான் அதை உள்ளபடியே நடைமுறையில் சாத்தியமாக்கியது. தொழில்நுட்பம் எவ்வாறு மகசூலை அதிகரிக்க முடியும் எனக்கூற முடியும். ஆனால் அரசுக் கொள்கைதான் விவசாய இடுபொருட்களின் விலைகள், விளைபொருட்ளின் விலைகள், உற்பத்திச் செலவுகள், முதலீட்டில் வரும் லாபசதவீதம் ஆகியவற்றையெல்லாம் தீர்மானித்து இதனை சாத்தியமாக்கும். அது அன்று சாதகமாக இருந்தது. அத்தோடு அன்றைக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவாக இருந்தன. ஜோதிபாசு உள்ளிட்ட பலரிடமும் நான் இதுகுறித்து மிகவும் ஆழமாக விளக்கினேன்.

மொத்தத்தில் விவசாயிகள், அறிவியல் வல்லுநர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் இணைத்து நடத்தியதால்தான் இது வெற்றி அடைந்தது. எனவேதான் இதனை நாங்கள் பசுமைப் புரட்சியின் சேர்ந்திசைவு (Symphony of Green Revolution) என்றோம். பசுமைப் புரட்சி எனும் பதத்தை நாங்கள் உருவாக்கவில்லை. அது அமெரிக்க அறிவியலாளரும் யுஎஸ் எய்ட் (USAID) நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான வில்லியம் காட் உருவாக்கிய பதம். அது ஒரு ஊடகக் கவர்ச்சி கொண்ட பதம் (Media Savvy). அந்தப் பதம் நல்லதிற்கும் கெட்டதிற்கும் வெகு பிரபலம் ஆனது.

சிலர் சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக அதனை விமர்சித்தனர். 1962 ஆம் ஆண்டு ராசேல் கார்சன் எழுதிய புகழ்பெற்ற ‘மௌன வசந்தம்’ (Silent Spring) நூல் வெளிவந்தது. அது DDT (டிடீட்டி) மற்றும் ஏனைய பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டின் மோசமான விளைவுகள் குறித்து – அமெரிக்காவில் ஏற்பட்ட விளைவுகள்- ஏனெனில் அவர்கள்தாம் முதன் முதலில் இவற்றையெல்லாம் அதிக அளவில் பயன்படுத்தினர். ரசாயன உரம் ஜெர்மனியில் 1868 ஆம் ஆண்டுகளில் ஜஸ்டஸ் வான் லீபெக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் மிகவும் தாமதமாக 1964 ஆம் ஆண்டிலிருந்துதான் கணிசமான அளவில் வேதி உரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். நாம் காலங்காலமாக உயிர்க் கூளப் பொருட்களாலான உரங்களான தழைஉரம், கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றையே பயன்படுத்தி வந்தோம். அதில் தவறில்லை. ஆனால் மக்கள் தொகை பெருகி விட்ட காலத்தில், தேவையான அளவில் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய அவையெல்லாம் போதாது என்பதே உண்மை. பாரதி பாடியது போல முப்பத்து முக்கோடி மக்கள் இருந்தகாலத்திற்கு அது போதுமானது. ஆனால் இன்றைக்குள்ள 120 கோடி மக்களுக்கு உணவளிக்க அவை மட்டும் போதாது. 30 கோடி மக்களுக்கு பொருத்தப்பாடுடைய தொழில் நுட்பத்திற்கும் 120 கோடி மக்களுக்கு பொருத்தப்பாடு உடைய தொழில்நுட்பத்திற்கும் வேறுபாடு உள்ளது. தொழில் நுட்பத் தேர்வு என்பது தேவைக்கேற்ப இருக்க வேண்டும். மொத்தத்தில் அதிக மகசூல் தரும் பயிர்வகைகள், நீர்ப்பாசன வசதிகள், சரியான காலத்தில் சரியான அளவில் சரியான முறையில் சரியான வகை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது பாதகங்களைக் காட்டிலும் சாதகமான விளைவுகளையே அதிகம் உருவாக்கியுள்ளது என்றுதான் நான் கருதுகின்றேன். ஆனால் அதீத, முறையற்றப் பயன்பாடு, தொழில் நுட்பங்களுக்கும் அரசுக் கொள்கைச் சட்டகங்களுக்கும் ஒருங்கமைப்பு இல்லாது போவது, அரசின் வெவ்வேறுத் துறைகளுக்கு இடையேகூட ஒருங்கிணைப்பு இல்லாது போவது போன்றவையே பிரச்சனைகள் என்றும் கருதுகின்றேன். ஆரம்ப காலங்களிலேயெ சில விவசாயிகளின் அதீதப் பயன்பாடுகள் குறித்து நானும் மற்றவர்களும் எச்சரிக்கை செய்தோம். ‘பசுமைப்புரட்சி பேராசைப் புரட்சி அல்ல’ ( Green Revolution not a Greed Revolution) என்றெல்லாம் கூடக் கூறினோம். அதீத உரப் பயன்பாட்டோடு இணைந்ததுதான் அதீத நிலத்தடி நீர் பயன்பாடும் நிலத்தடி நீர் மட்டம் மேலும் மேலும் கீழே போவதும் மோசமான விளைவுதான். அதீதமானதும் மோசமானதுமான பூச்சிக் கொல்லிப் பயன்பாடும் ஒரு பிரச்சனைதான். நாங்கள் கருத்துகள் நெடுக்கு வசமாக (Horizontal Semination) பரவும்; ஒரு விவசாயியிடமிருந்து அடுத்த விவசாயி கற்பது நடக்கும் என கருதினோம். ஆனால் அது நாங்கள் நினைத்த வேகத்தில் நடக்கவில்லை.

இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தாலும் நிகழ்ந்த மாற்றம் ஒரு புரட்சிகரமான மாற்றம் என்பதில் எனக்கு ஏதும் ஐயமில்லை. 4 ஆண்டுகாலத்தில் உணவு தானிய உற்பத்தி 10 மில்லியன் டன்னிலிருந்து 17 மில்லியன் டன்னாக உயர்ந்ததை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. அது மெல்லச் சிறுகச் சிறுக நடந்த ஒரு மாற்றம் அல்ல; அது ஒரு பெரும் பாய்ச்சல்தான். அது ஒரு புரட்சிகரமான மாற்றம்தான். ஹரப்பா மொஹஞ்சதாரோ காலத்திலிருந்து 1947 ஆம் ஆண்டுவரையிலான சுமார் 4000 ஆண்டுகளில் நாம் சுமார் 6 மில்லியன் டன் அளவில் கோதுமை மகசூல் காணக் கற்றிருந்தோம். ஆனால் 1964 ஆம் ஆண்டிலிருந்து 1968 ஆண்டுவரையிலான 4 ஆண்டுகளில் 7 மில்லியன் டன்கள் அதிகம் மகசூல் காண வழி கண்டோம். அதாவது 4000 ஆண்டுகளில் சாதித்ததை 4 ஆண்டுகளில் சாதித்தோம். இது புரட்சிகரமான மாற்றம் இல்லையென்றால் வேறு எது புரட்சிகரமான மாற்றம். இது பல பண்டிதர்களும் இந்தியா உருப்படாது என முடிவு கூறியபோது நடந்தது. IARI பூசாவில் நான் ஏற்பாடு செய்த முதல் செமினாரின் தலைப்பே ’நசிவுவாத’ தீர்க்கதரிசிகளை தவறு என நிரூபிப்பது எப்படி?’ (How to make the prophets of the doom wrong?) என்பதாகும்.

நீங்கள் அவர்கள் தவறு என்பதை நிருபித்தீர்கள்.

நான் அந்தப் பெருமை நமது விவசாயிகளுக்கு உரியது என்பேன். அங்கே பாருங்கள்-அந்தப் புகைப்படம் இந்திரா காந்தி எங்கள் விதைக் கிராமம் ஒன்றுக்கு வருகை தந்தபோது எடுத்தது. நான் ஒரு கிராமம் முழுவதையும் சுமார் 800 ஏக்கர்கள், உயர் விளைச்சல் விதைகளை மட்டும் சாகுபடி செய்யும் கிராமமாக மாற்ற சம்மதிக்கச் செய்திருந்தேன். பிரதமர் ஆன பிறகு அவர் அங்கு வந்தார். உணவு தானியங்களுக்கு அமெரிக்கர்களிடம் கையேந்தும் நிலை இருக்கும்வரை நாம் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியாது என அவர் உணர்ந்திருந்தார். அமெரிக்கர்கள் பல்வேறு வகையில் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.வெளியுறவுக் கொள்கையும் உணவு தானியங்களில் தன்னிறைவும் மிகவும் நெருக்கமானத் தொடர்புடையவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். அது அவருக்கு மிகவும் கவலை அளித்தது. பிரதமர் ஆன சில வாரங்கள் கழித்து டாக்டர் விக்ரம் சாராபாயும் நானும் அவரை முதன்முதலாகச் சந்திக்கச் சென்றிருந்தோம். அவர் என்னிடம், ‘நம்முடைய உணவு தானியக் கையிருப்பு எப்போது 12 மில்லியன் டன்னை அடையும்?’ எனக் கேட்டார். ஏனென்றால் அந்த ஆண்டு அமெரிக்காவிடமிருந்து PL 480 திட்டத்தின்படி நாம் 12 மில்லியன் டன் உணவு தானியங்களைப் பெற்றிருந்தோம். நான், ‘எல்லாம் நன்கு நடந்தால் 1970 ஆம் ஆண்டு நாம் 12 மில்லியன் டன் உணவு தானியங்களை கையிருப்பாய் நம் சேமிப்பில் கொண்டிருப்போம் என்றேன். அது நடந்தது. சாதாரணமாக அது போன்ற ஹேஷ்யங்கள் நடக்காது. ஆனால் இந்த விசயத்தில் நடந்தது. உணவுப் பாதுகாப்பு இல்லாத நாடு வேறு எந்தப் பாதுகாப்பும் கொண்டிருக்க முடியாது.இது போன்ற நிகழ்வுகள் அறிவியல் வல்லுநர்கள் பற்றிய நம்பிக்கையையும் அரசியல் தலைவர்களுக்கும் ஏற்படுத்துகின்றது. வெற்றியைப்போல வெற்றிகரமான நிரூபணம் வேறேதுமில்லை ( Nothing Succeeds like success). கப்பலிலிருந்து வாய்க்கு (From Ship to Mouth) எனும் நிலையிலிருந்து உணவு என்பது உரிமை (Right to Food) எனும் நிலைக்கு வந்தது ஒரு வரலாற்று மாற்றம்தான்.

புவி வெப்பமாதல் மற்றும் அதன் பேரிடர்களை உருவாக்கும் பாதகங்கள் குறித்த விழிப்புணர்வு சிறிது ஏற்பட்டிருக்கும் நிலையில், கடந்த 200 ஆண்டு வளர்ச்சி மேம்பாடு ஆகியவை தீவிரமான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

புவி வெப்பமாதல் மக்களுடைய பங்கெடுப்போடுதான் எதிர்கொள்ளப்பட வேண்டும். அரசு மாத்திரமே இதனைச் சமாளிக்க இயலாது. சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது, மழைநீர் சேமிப்பு போன்றவற்றில் உள்ள சாத்தியங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவேண்டும். எங்கள் வளாகங்கள் எல்லாம் மழைநீர் சேமிப்பு மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவையெல்லாம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் இது போன்ற வாழுமிடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கான பயன்பாடு என்பது 20 சதவீதத்திற்கும் குறைவு. பிரச்சனையின் தீர்வுக்கு இவையெல்லாம் உதவலாம் – ஆனால் இது போதாதல்லவா?

ஆம்; பெருமளவிலான மின்னுற்பத்தி என்பதிலும் நவீன தொழில்நுட்பங்கள் சூழல் மாசுபடலைக் குறைத்துள்ளன அல்லவா? ஜெர்மனி போன்ற நாடுகள் அனல் மின்நிலையங்களிலேயே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சூழல் மாசுபடலைக் குறைத்துள்ளன. புனல் மின்னிலையங்கள் சூழலை மாசுபடுத்துவதில்லை ஆனால் பெரிய அணைகளால் வேறுவிதமான சூழல் பிரச்சனைகள் உள்ளன. அணு மின்னிலையங்கள் சூழலை மாசுபடுத்தாதவை. ஆனால் ஃபுக்குஷிமா போன்ற விபத்துகள்தாம் அதில் பிரச்சனை. பாதுகாப்பிற்கு சரியான ஏற்பாடுகள் இருந்தால் அணு ஆற்றலையும் பயன்படுத்தலாம்.

அது சரிதான். நான் கேட்க விரும்பியது புவி வெப்பமாதலில் வேளாண்மையின் பங்கு. மின்னுற்பத்தி, போக்குவரத்து அரங்கங்கள்தாம் முதன்மையான காரணம் என்றாலும் உர உற்பத்தி, பயன்பாடு ஆகியவையும் புவி வெப்பமாதலுக்குஒரு காரணம்தானே? இந்த விவகாரத்தில் குழந்தையைக் குளிப்பாட்டிய நீரோடு குழந்தையையும் வீசி எறியும் சில அதீத கருத்துகளும் முன்வந்துள்ளன. உதாரணமாக வேதி உரங்களை முழுமையாகத் தவிர்க்கும் கருத்து. வேதி உரங்களோடு இன்றைக்கு சாத்தியப் பட்டிருக்கும் மகசூல், குறிப்பாக நெல் கோதுமை ஆகிய உணவு தானியங்களில்.. கிடைக்கும் மகசூல், வேதி உரங்கள் ஏதும் இல்லாமலேயே சாத்தியம் எனும் கருத்து சில மட்டங்களில் உள்ளது. வேதி உர தொழிலரங்கத்தில் பணியாற்றிய என் சிறிய அனுபவத்தில் இது எப்படி சாத்தியம் எனத் தெரியவில்லை? இதில் ஏதேனும் சாத்தியம் உள்ளதா? வேறு வகையான நெல் கோதுமை இனங்களைப் பயன்படுத்தியோ அல்லது வேறு தொழில் நுட்பத்திலோ இது சாத்தியமா?

எப்படி சாத்தியம் ஆகும்? பொருட்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. உற்பத்திப் பொருள் எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அதற்கு சம அளவில் இடுபொருளும் இருந்தே ஆக வேண்டும். பயிர்கள் மந்திரவாதிகள் இல்லை. அவை இடுபொருள் இல்லாது எதனையும் உற்பத்திசெய்ய முடியாது. அவை சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு போன்ற ஒரு பகுதியை பயிர் தனது சூழலிருந்து எடுத்துக் கொள்கின்றது. நீரும் சத்துக்களும் மண்ணிலிருந்து வர வேண்டும். ஆனால் நமது மண் பசியும் தாகமும் கொண்டதாக இருக்கின்றது. எனவே சத்துக்கள் (Neutrients) நீர்ப் பாசனைத்தை நாம் அளித்தாக வேண்டும். மூக்கொழுகும் ஒரு சிறு குழந்தைக்கு தினசரி ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருமாறு கூறலாம். அல்லது ஒரு விட்டமின் C மாத்திரையை சாப்பிடுமாறும் கூறலாம். எது நடைமுறையில் சாத்தியம் எனப் பார்க்க வேண்டும். உயிர்க்கூளப் பொருட்கள் மூலம் எந்தளவு அளிக்க முடியும்? அதுவும் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் போதுமான எண்ணிக்கையில் கால்நடைகளை வைத்திருக்க முடியாது. நான் பாண்டிச்சேரி ஆரோவில்லிலும் அரவிந்த ஆஸ்ரமத்திலும் நல்ல உயிர்க்கூளப் பண்ணைகளைப் பார்த்தேன். ஆனால் அவர்களிடம் ஏராளமான எண்ணிக்கையில் கால்நடைகள் உள்ளன. நாங்கள் ஒருங்கிணைந்த உரப் பயன்பாட்டை பரிந்துரை செய்கின்றோம். உயிர்க்கூளப் பொருட்கள் வேதி உரங்கள் இரண்டிற்கும் பங்கு பாத்திரம் உள்ளது என்கின்றோம். ஏனென்றால் ஒரு டன் அரிசி சாகுபடிக்கு 20 கிலோ கிராம் நைட்ரஜன் தேவை; ஒரு டன் கோதுமை சாகுபடி செய்ய 25 கிலோகிராம் நைட்ரஜன் தேவை. அதைத் தவிர பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் நுன்சத்துகள் (micro neutrients) ஆகியவையும் தேவை. இதை எப்படி அளிப்பீர்கள். அனைத்தையும் உயிர்க்கூளப் பொருட்கள் மூலமாகவே அளித்து விட முடியுமா? முடியும் என்றால் அளிக்கலாம். ஆனால் பயிருக்கு இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

பசுமைப் புரட்சி’ நாட்களின்போதே நில உடமை நிலை குறித்து விவாதங்கள் முன் வந்தன. பசுமைப் புரட்சி ஏற்கனவே உள்ள நில உடமையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கும் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அந்த அச்சம் நியாயமானது என இன்று வரையிலான வரலாறு காட்டவில்லையா. மேலும் நீங்களே ‘ பசுமைப் புரட்சியின் இதயமான பகுதியே மிகுந்த சிக்கலில் உள்ளது (Science and Sustainable Food Security) என்று எழுதியுள்ளீர்கள். இவை குறித்து உங்களது இன்றைய கருத்து என்ன?

அது பசுமைப் புரட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்து இருக்கும் ஒரு விமர்சனம்தான். பசுமைப் புரட்சி நடவடிக்கைகள் சிறு விவசாயிகளுக்கு ஏற்றவை அல்ல எனக் கூறப்பட்டது. அவை செல்வ ஆதாரங்கள் குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டது. 1968-69 ஆம் ஆண்டுகளில் சிறு-குறு விவசாயிகளுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு இடுபொருட்களுக்கான கடன் வசதிகள் விரிவாக்கப்பட்டன. இடுபொருள் இல்லாது விளைபொருள் உருவாக்குவதற்கான திட்டங்கள் ஏதுமில்லை. இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகள் சிறு-குறு விவசாயிகள்தான். அவர்களுடைய ஈடுபாடு இல்லாமல் பசுமைப் புரட்சி வெற்றி பெற்றிருக்காது. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை மகசூல் சுமார் மில்லியன் டன் ஆகும். 2013 இல் இது 96 மில்லியன் டன் ஆகும். சிறு-குறு விவசாயிகளின் பங்கில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. உயர் விளைச்சல் ரகங்களை சிறு விவசாயிகளும் சாகுபடி செய்யலாம். பிரச்சனை நீர்ப் பாசன வசதிகள்தான். நீர்ப்பாசன வசதிகள் இல்லாத நிலம் வைத்துள்ள விவசாயிகள் இதனால் பயன் பெறமுடியாது என்பது உண்மைதான். நான் திட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்த 6 ஆவது திட்டத்தில் விவசாய உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தது. ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியே 5.5 சதவீதம்தான். ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் விவசாய உற்பத்தி வளர்ச்சி அதிகமாக இருந்தது அந்த ஒரு ஐந்தாண்டுத் திட்டகாலத்தில்தான். இதற்குக் காரணம் அந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 12.5 சதவீதம் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கப்பட்டது. பின்னர் இது தொடரவில்லை. நான் எனது பிற்காலப் பணிகளில் சிறு-குறு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளேன்.

வேதி உரங்களைத் தவிர்ப்பது இயலாது என்று எடுத்துக் கொண்டால், இன்றைக்கு இந்தியாவில் வேதி உரங்களின் கேட்பு- வழங்கல் (Supply and Demand) சமன்பாடு மிகவும் சீரற்றநிலையில் உள்ளது. ‘பசுமைப் புரட்சி’ நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டின் உரத் தேவையில் 50 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சூரத் நகரில் வந்த கிரிப்கோ உரத் தொழிற்சாலைக்குப் பிறகு பொதுத் துறையில் குறிப்பிடும்படியான தொழிற்சாலை ஏதும் வரவில்லை. தனியார் துறையிலும் பெரிய உற்சாகமில்லை. இது சற்று அச்சம் தரும் சூழல் அல்லவா?

நான் உங்களோடு உடன்படுகின்றேன். உர உற்பத்தியில் ஆரம்பத்திலிருந்தே ஏற்றத் தாழ்வு நிலவி வந்தது. முதலில் மிகுந்த உற்சாகம் இருந்தது. பின்னர் ஒரு தேக்கம் உண்டானது. இடையில் சிறிது முன்னேற்றம் இருந்தது. இப்போது மீண்டும் உற்பத்தி வளர்ச்சி இல்லாத நிலை உள்ளது. உர உற்பத்தி என்பது அரசுக் கொள்கையால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் நிலையான உரக் கொள்கை இல்லாமல் போனது. முதலில் எந்த உரம் (Product) என்பதன் அடிப்படையில் மான்யம் வழங்கப்பட்டது. அதுவும் விவசாயிகள் யூரியாவை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கும் வழிவகுத்தது. இப்போது சத்துகள் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

இந்தக் கொள்கைச் சட்டகத்திற்குள்ளேயேகூட சில நடவடிக்கைகள் சொல்லொண்ணா பாதகங்களை ஏற்படுத்துவதாக உள்ளன. இன்றைய உர மான்யக் கொள்கைகளின் விளைவாக யூரியா ஒரு மூட்டை ரூ285/ என்ற விலையிலும் டிஏபி ரூ1225/ விலையிலும் உள்ளன. இது நிலத்தில் சம்ச்சீரற்ற உரப் பயன்பாட்டிற்கு வழிவகுத்து எதிர்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளை நீண்டகாலத்திற்கு சரிசெய்யவியலாத வகையில் ஏற்படுத்திவிடாதா?

ஆம். நீங்கள் சொல்வது சரிதான் அது மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். விவசாயிகள் அனைவரும் தங்கள் வயலின் மண் குறித்த ஞானம், உரங்கள், சத்துகள் குறித்த ஞானம் உள்ளவர்களாக இருந்தால் சத்துகள் அடிப்படையிலான மான்யம் என்பது சரியாக இருக்கலாம். நாம் இப்போது ஒரு திரிசங்கு நிலையில் இருக்கின்றோம். உரத் தொழிற்சாலைகள் பல நலிவுற்றநிலையில் இருக்கின்றன. சில மூடப்பட்டு விட்டன. சில மூடும் நிலையில் உள்ளன. அரசுக் கொள்கை மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் நீண்டகால நோக்கு கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை.

அரசுக் கொள்கை மிக முக்கியமானது மட்டுமல்ல; அடிப்படையானது. வேறு வேறு உரங்களின் விலைகளில் இத்தகைய உயர்வு தாழ்வு இருப்பது, உரங்களை சரிவிகிதத்தில் பயன்படுத்துவதை தடுக்கும். உரங்களை சரியான விகிதங்களில் பயன்படுத்தவில்லை என்றால் அது மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். நான் மீண்டும் மீண்டும் சொல்வது ‘நாம் அடைந்த முன்னேற்றம் எல்லாம், அறிவியல் தொழில் நுட்பம் அரசுக் கொள்கைகள் ஆகியவை ஒத்திசைந்து உருவாக்கியவைதான். அன்று
சி.சுப்பிரமணியம், ஜெகஜீவன்ராம் போன்றோருக்கு இருந்த தொலைநோக்கும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த புரிதலும் மதிப்பும் இன்றைக்கு காணவில்லை. அதை விடுவோம். அரசுக் கொள்கை என்பதே ஒருங்கிணைக்கப்பட்டதாக இருப்பதில்லை. நித்தி அய்யொக் ஒரு புறம். பிறகு வேளாண்துறை அமைச்சகம் தனி, நீர்ப்பாசான அமைச்சகம் தனி, வேதிப் பொருட்கள் மற்றும் உரங்களுக்கான அமைச்சகம் தனி. அவற்றுக்கிடையேயான ஒருங்கிணைப்பு என்பது போதுமானதாக இல்லை.

நமது உள்நாட்டு உற்பத்தியும் பெருமளவிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருட்களான அம்மோனியா, எல்.என்.ஜி, நாப்தா, ராக் பாஸ்பேட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்றவற்றை நம்பியுள்ளது. இதனையும் கணக்கில் கொண்டால் இப்போதும் கப்பலிலிருந்து வாய்க்கு’ (Ship to Mouth) நிலைதானே தொடர்கின்றது? என்ன இப்போது உணவு தானியக் கப்பலுக்கு பதிலாக எண்ணெய் டேங்கர்… இதுதானே வித்தியாசம்? இந்தியா ‘உணவுப் பாதுகாப்பு’ பெற்றுல்லது எனச் சொல்வது சரியா?

அது உண்மைதான். ஆனால் எங்கிருந்து நாம் இறக்குமதி செய்கின்றோம்?

நாம் நம்முடைய உரங்களுக்கான கச்சாப் பொருட்களை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். கச்சா எண்ணெய், எல்.என்.ஜி ஆகியவற்றை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், இரான், ஒமான், கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் ராக் பாஸ்பேட், அமிலங்கள் போன்றவற்றை ஜோர்டான், மொராக்கோ போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்கின்றோம்.

எந்தவொரு நாடும் 100 சதவீதம் தன்னிறைவாக இருப்பது சாத்தியமில்லை. நாம் இந்தக் கச்சாப் பொருட்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம், அவர்கள் உணவு தானியங்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றார்கள். இந்திய மனிதவளம் என்பதும் அவர்களுக்குப் பயன்படுகின்றது. இப்படி பரஸ்பரம் கொண்டும் கொடுத்தும் பரஸ்பரம் சார்ந்திருப்பதற்கும், 1964 க்கு முன்புபோல் PL 480 க்கு அமெரிக்காவை சார்ந்திருப்பது என்பதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா? அவர்களிடம் எண்ணெய் வளம் உள்ளது. ஆனால் அவர்களது நிலம் விவசாயத்திற்கு ஏற்ற பூமி அல்ல. எனவே நம்மிடமிருந்து இறக்குமதி செய்கின்றார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுகூட இல்லை. மலேஷியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களே அரிசி சாகுபடி செய்யலாம், அவர்களது பூமி அதற்கு ஏற்றதுதான். ஆனால் அவர்கள் ரப்பர், கொக்கோ, பாமாயில் பயிர்களை அதிகம் சாகுபடு செய்கின்றனர். அரிசி போன்ற உனவு தானியங்களை தாய்லாந்து பொன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றனர். அது பொருளாதார ரீதியாக அதிகப் பயனுடையதென்று கருதுகின்றனர். ஒரு ஏக்கருக்கு வரும் வருவாய் என்பது இந்தவகையில் அதிகம் எனக் கணக்கிடுகின்றனர். நான் மலேஷியாவில் மஹாதிர் முகம்மது பதவியில் இருந்தபோது நடந்த ஒரு விவசாயம் குறித்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினேன். அப்போது அவரிடமே இது குறித்துக் கேட்டேன். அவர் கூறிய இந்தப் பொருளாதாரத் தர்க்கத்தை தவறென கூறமுடியுமா? உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் இன்னும் பலவற்றையும் சமன் செய்யும் வகையில்தான் அரசுக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதுள்ளது.

பரஸ்பரச் சார்பு என்பதை தன்னிறைவின் ஒரு வடிவம் என்று வைத்துக் கொள்ளலாம். நாம் நமது உரத்திற்கான கச்சாப் பொருளைப் பெருமளவில் இறக்குமதி செய்யும் மத்திய கிழக்கு நாடுகள் உணவுப் பொருட்களுக்கும் மனித ஆற்றலுக்கும் இந்தியாவைச் சார்ந்து உள்ளது. எனவே இந்த நிலை இன்னும் சில காலம் நீடிக்கும் ( வேறு சக்திகள் குறுக்கிட்டு தடைகளை உருவாக்காவிட்டால்) எனக் கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அங்கும் முடியவில்லையே. இந்தியா இறக்குமதி செய்யக் கூடியதும், இந்திய விவசாயத்திற்கு இன்றியமையாததாக இருக்கக் கூடியதுமான இந்தக் கச்சாப் பொருட்கள் சாசுவதமானவை அல்ல. எண்ணெயும் எரிவாயும் இன்னும் 30/40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுபோல இறக்குமதி செய்வது அநேகமாக இயலாது எனத் தெரிகின்றது. பாஸ்பேட், சல்ஃபர் இருப்பும்கூட காலாகாலத்திற்கு சாசுவதமில்லை. இந்தக் கச்சாப் பொருட்களையும் இவைகொண்டு உற்பத்தி செய்யப்படும் வேதியியல் உரங்களையும் சார்ந்துள்ள இந்திய விவசாயத்தின் எதிர்கால நிலை எவ்வாறு இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

உண்மைதான். இவையெல்லாம் மறுசுழற்சியில் உற்பத்தியாகாத கனிம வளங்கள்தாம். இவற்றை மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இன்றைய உடனடித் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு அதீத அளவுகளில் பயன்படுத்துவது சரியல்ல. நைட்ரஜனையாவது நாம் வேறு வகையில் உற்பத்தி செய்வது சாத்தியமாகலாம். பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கும் வேறு சில நுண்சத்து இடுபொருட்களுக்கும் இந்தியாவில் வழியில்லை. நாம் இறக்குமதி செய்துதான் ஆகவேண்டும்.

இன்றைக்கு பிரபலமாக உள்ள கோதுமை, அரிசி வகைகளைவிட குறைவாக வேதி உரங்கள் தேவைப்படும் வகைகள் ஏதுமில்லையா?

நாம் அவற்றை உருவாக்க வேண்டும். இன்றைக்கு உள்ள கோதுமை, அரிசி வகைகளைக் காட்டிலும் உரங்களை, நுண்சத்துகளை திறனுடன் பயன்படுத்தும் பயிர் வகைகளை உருவாக்க வேண்டும். மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகிவற்றை மிகவும் திறனுடன் உட்கொள்ளும் பயிர்வகைகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மிகக் குறைவான அளவில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் தேவைப்படும் பயிர்வகைகளை உருவாக்கும் திசையில் வேளாண்மை அறிவியல் ஆய்வுகள் நடக்க வேண்டும்.

அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று சொல்கின்றீர்களா?

சாத்தியம் உள்ளது என்பது மட்டுமல்ல. தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. கோதுமையில் மிகக் குறைவான அளவுகளில் உரங்கள், நுன்சத்துகள் தேவைப்படும் வகைகள் உருவாக்கப்படுள்ளன. அதுதான் இன்று ஆய்வின் இலக்காக இருக்க வேண்டும்.

காற்று வெளியில் இருக்கும் நைட்ரஜனை வேர்களில் இருத்திவைப்பது, அதாவது பருப்பு பயறு வகைகளில் இயற்கையாக நடப்பதை செயல்படுத்தும் கோதுமை, அரிசி வகைகளை உருவாக்கும் ஆய்வுகள் எந்தநிலையில் உள்ளன. அந்தத் திசைவழியில் கிடைக்கும் வெற்றிகள் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் அல்லவா?

ஆம். அந்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்கள், அவற்றை அறிமுகம் செய்வதில் உள்ள ஆபத்துகள் எல்லாம் நாம் ஓரளவு அறிந்ததுதான். அவையெல்லாம் சரியான பாதுகாப்புடனும் ஒரு சுயேட்சையான ஒழுங்காற்று வாரியத்தின் வழியாகவும் அல்லாது நடைமுறைப்படுத்தினால் பாதகங்களே அதிகம் விளையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது அல்லவா? நீங்கள் பல ஆண்டுகாலமாக ஒழுங்காற்று வாரியம் குறித்து பேசி வருகின்றீர்கள். அந்த முயற்சி இன்று எந்த நிலையில் இருக்கின்றது.

என்னைப் போன்றவர்கள் வெகுகாலமாக கேட்டு வருகின்றோம்; ஆனால் இன்றுவரையில் ஒழுங்காற்று வாரியம் ஏதும் இன்னும் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அதற்கான ஒரு மசோதாவை அறிமுகம் செய்யவைத்தோம். துரதிர்ஷ்ட்ட வசமாக அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமுன்பே அந்த மக்களவை முடிந்துபோனது. இப்போது புதிய மக்களவையில் ஒரு புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட வேண்டும். ஒரு வலுவான ஒழுங்காற்று வாரியம் இல்லாமல் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக மருத்துவ மரபணு பரிசோதனைகள் போன்றவையெல்லாம் பல அறம் சார்ந்த வினாக்களைக் கொண்டுள்ளன. உயிரியல் ஆபத்துகள், சூழல் ஆபத்துகள் நிரம்பிய இந்த முயற்சிகளுக்கு ஒரு சுதந்திரமான வலுவான ஒழுங்காற்று வாரியம் முன்நிபந்தனை ஆகும். இது அணு ஆற்றல் அரங்கம் போன்றதுதான். ஃபுக்கூஷிமா பெருவிபத்திற்குப் பிறகு அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியத்திற்கும் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியத்தின் கதை நம்பிக்கை அளிப்பதாக இல்லையே? 1994 ஆம் ஆண்டு வியன்னாவில், சர்வதேச அணு ஆற்றல் முகமையில் இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் கையெழுத்திட்டபடி இது எப்போதோ உருவாகியிருக்க வேண்டும். கனடா, ஃபிரான்ஸ் போன்றவை உருவாக்கி விட்டன. ஆனால் இந்தியாவில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கிடப்பில் உள்ளது. அந்த மசோதாவும் ’புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதாக இருக்கின்றதே?

உண்மைதான். ஒழுங்காற்று வாரியத்தின் தலைவர் அணு ஆற்றல் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்றுதான் உள்ளது. அப்படி இருந்தால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. இது குறித்து அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர். டாக்டர்.ஏ.கோபாலகிருஷ்ணன் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள விவரங்கள் மிகவும் முக்கியமானவை. நாம் ஒழுங்காற்று வாரியங்களின் விசயத்தில் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளோம். அதைப்போலத்தான் உணவுத் தரம் நிர்ணயத்திற்கான ஒழுங்கமைப்பு வாரியமும் முக்கியம். நான் அறிவியல் சுற்றுச்சூழலுக்கான மையம் என அழைக்கப்படும் CSE யின் தலைவராக இருந்தேன். அது சுனிதா நாராயண், அனில் அகர்வால் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் ஆய்வு மையம். அப்போது கொக்கொகோலா, பெப்ஸிகோலா, பிஸ்லேரி ஆகியவற்றில் பூச்சி மருத்துகள் அதிகம் கலந்திருப்பதிக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தோம். முதலில் அதனை யாரும் நம்பவில்லை. அந்த தரவுகளை நாங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவில் பிரிட்டனில் இன்னும் சில ஐரோப்பிய ஆய்வுக்கூடங்களிலும் சோதனை செய்தோம். எந்தவிதத்திலும் தவறான முடிவோடு பொதுத் தளத்தில் பேசக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தோம். அந்தக் கோலா நிறுவனங்கள் வழக்குப் போடுவதாக அச்சுறுத்தினர். நான் வழக்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறினேன். இந்த பணிகளை உணவுத் தரக்கட்டுப்பாடு அமைப்பே செய்ய வேண்டும்.

நாம் உணவு தானியங்களில் நம்முடைய உயிர்ப் பண்மைத்துவத்தை இழந்துள்ளோம். குறிப்பாக நெற்பயிரில் இருந்த ஏராளமான வகைகளை நாம் இழந்துள்ளோம் என ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. பசுமைப் புரட்சி இதற்கான ஒரு முக்கியமான காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தக் கருத்து இந்தியாவின் சூழலியல், சுற்றுச் சூழல் நிலைகள் குறித்து அக்கறை கொள்ளும் சில இளம் உள்ளங்களை சென்று சேர்வதாகவும் உள்ளது. இது குறித்து நீங்கள் கூறும் விளக்கம் என்ன?

உயிர்ப் பன்மம் அடிப்படையில் இரு வேறு வகைகளில் இழக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக நான் கட்டாக்கில் பணியாற்றிய காலத்தில் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் சுமார் 3000 வகை அரிசி சாகுபடி செய்யப்பட்டது. இப்போது சுமார் 300 வகைகள்தான் உள்ளன. அவர்கள் பயிர் செய்யும் வகைகளை மாற்றுகின்றனர். நிலப் பயன்பாடு மாறும்போதும் இதில் பல இழக்கப்பட்டது. விவசாய நிலம் தொழிற்சாலைகளுக்காக அல்லது அலுவலகங்களுக்காக அல்லது குடியிருப்புகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும்போது சிறு அளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் வகைகள் இழக்கப்படுகின்றன. மறுபுறத்தில் மகசூல் அதிகம் கிடைக்கும் வகைகள் அறிமுகம் ஆகும்போது விவசாயிகள் அதற்கு மாறுவதும் நடைபெறுகின்றது. விவசாய விரிவாக்க ஊழியர்கள் அவ்வாறு மாறத் தூண்டுகின்றனர். தனிப்பட்ட விவசாயிகளுக்கும் அது நலம் பயப்பது என்பதால் அவர்களும் மாறுகின்றனர். சில சமயம் உணவு தானியங்களைக் காட்டிலும் வேறு பயிர்கள் லாபகரமாக இருக்கும்போது அவற்றுக்கு மாறுகின்றனர். விவசாயம் அவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதால் இதனை நாம் எப்படித் தவறு எனச் சொல்வது? இந்த (MSSRF) எங்கள் ஆய்வு நிறுவனமும் ஏனைய கல்வி , ஆய்வு நிறுவனங்களும் உள்ள இந்த பூமி ஒரு காலத்தில் நெல்வயல்தான். என்ன வகை நெல்வகையை இழந்தோம் எனத் தெரியவில்லை. ஆனால் இழப்புதான். மறுபுறத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றும் விவசாயிகள் உருவாக்கிய புதிய வகைப் பயிர்களின் விதைகளை உயர்குளிர் (Cryogenics) நிலையில் எங்கள் மரபணு வங்கியில் (Gene Banks) சேமித்து வைத்துள்ளோம். அவற்றின் உரிமம் அந்த விவசாயிகளிடம்தான் உள்ளது. அதே போல தேசிய பயிர் மரபணு வள வாரியம் (NBPGR – National Beuro of Plant Genetic Resources) இந்தியா முழுவதும் இருந்து விதைகளை, மரபணுப் பொருட்களை சேமித்துப் பாதுகாத்து வைத்துள்ளது. நார்வே வடதுருவப் பகுதியில் அமைத்துள்ள ஸ்வால்பால்ட் (Svalbard Global Seed Vault) சர்வதேச விதைப் பெட்டகத்தில் சுமார் 50 லட்சம் பயிர்வகைகளின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டு பராமரிக்கப் படுகின்றன.

அவை இந்திய மக்களுக்கு மீண்டும் கிடைக்குமா? வேண்டும் என்றால் எப்படி வாங்குவது?

யார் அந்த விதைகளை மரபணுப் பொருட்களை அளித்தார்களோ அவர்களது ஒப்புதல் இருந்தால் மட்டுமே பெறமுடியும். இந்தியாவின் விதைகள் NGPGR மூலம்தான் சென்றிருக்கின்றன. அவர்கள் மூலம் பெறமுடியும். அதே முறைபாடுதான் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) சேமிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள நெல்விதைகளுக்கும் உள்ளன. அங்கு சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் வகை நெல்விதைகள் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

அவற்றில் இந்தியாவிலிருந்து சென்ற விதைகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்? விதைகளின் உரிமை யாரிடம் இருக்கும்? விதை வங்கியின் உரிமையாளர் யார்? இந்திய விதைகளை நாம் விரும்பினால் மீண்டும் பெற முடியுமா?

இந்தியாவிலிருந்து சென்ற விதைகளின் எண்ணிக்கை இப்போது என்ன என சரியாகச் சொல்ல இயலவில்லை. சுமார் 20 – 15 ஆயிரம் வகைகள் இருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் நீங்கள் அவர்களது இணைய தளத்தில் இந்த விவரங்களைப் பெறமுடியும். விதைகளின் உரிமை விதைகளைத் தந்தவர்களிடம்தான் உள்ளது. அந்த நிறுவனம் ஒரு பொது வங்கிதான். ஒரு சர்வதேச ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலில் இயங்குகின்றது. அங்கிருந்தும் NBPGR மூலமாக விதைகளைப் பெற முடியும்.ஏற்கனவே நம்மிடம் இல்லாது போன வகைகளின் விதைகளை அங்கிருந்து மீண்டும் பெற்றிருக்கின்றோம். 1988 ஆம் ஆண்டு, கம்போடியாவில் (இன்றைய கம்பூச்சியா) போல்பாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, நான் அங்கு சென்றேன். கம்போடியப் பிரதமர் ஹுன்சுன் அவர்களையும் அவர்களது வேளாண்துறை அமைச்சரையும் சந்தித்தேன். தொடர்ந்து நடைபெற்ற இந்தோசீனப் போர், கம்போடிய உள்நாட்டு யுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் தங்கள் நாட்டின் நெல் வகைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறினார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் நாட்டின் 300 நெல்வகைகளின் விதைகள் IRRI இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. எனவே அவற்றைப் பெற்று அவர்கள் நெல் சாகுபடியை மீண்டும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். இவையெல்லாமே பொது வங்கிகள்; வணிகரீதியான விதை வங்கிகள் இல்லை.

ஆக, நாம் நம்முடைய பாரம்பரியமான நெல் வகைகளை நிரந்தரமாக இழந்துவிட்டோம் எனச் சொல்ல முடியாது என்கின்றீர்களா?

நாம் இழந்துவிடவில்லை. இந்தியா விரும்பினால் NBPGR மூலம் அவற்றைப் பெறலாம். இந்தியாவில் ஹைதராபத்தில் உள்ள ICRISAT மரபணு வங்கியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேலான விதைகள் சேமித்துப் பராமரிக்கப்படுகின்றன. நம்முடைய கம்பு, கேழ்வரகு (Bajra, Jowar,) வகைகளும் அங்கு பராமரிக்கப்படுகின்றன. அங்கிருந்து விதைகளைப் பெறவும் அதே வழிமுறைதான். எனவே நாம் இழந்துவிட்டோம் எனக் கூறுவது தவறு. மாறாக இந்த நடவடிக்கைகள் மூலம் நமது மரபணு செல்வ வளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் செலவு அதிகம் ஆகக் கூடிய நடைமுறை. எனவேதான் இந்த சர்வதேச கூட்டு நிறுவனங்களின் மூலம் இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அப்படியென்றால் மரபணுத் திருட்டு, மஹா மரபணுத் திரட்டு என்பதெல்லாம் என்ன?

அதெல்லாம் மிகவும் தவறான கருத்து. இந்த நிறுவனங்கள் நமக்காக மரபணு வகைகளைப் பாதுகாத்து வருகின்றார்கள்.

மற்ற நாடுகளின் மரபணு வளங்களை நாம் பெற்றுள்ளோம் என்பது உண்மையா? இன்று நாம் உண்ணும் உருளைக் கிழங்கு, தக்காளி, கேரட், முட்டைகோஸ், மிளகாய், வெங்காயம் எல்லாம் வெளியில் இருந்துதான் வந்தது எனச் சொல்வது சரியா?

சரிதான். அவை மட்டுமல்ல, இன்று நாம் சாகுபடி செய்யும் பயிர்வகைகளில் பெரும்பான்மை இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவைதான். நம்முடைய உயர் விளைச்சல் வகை நெல், கோதுமை மட்டுமல்ல; நமது சிறு தானியங்களும் வெளியிலிருந்து வந்தவைதான். இன்று நாம் பெருமளவில் சாகுபடி செய்யும் கேழ்வரகு கானாவிலிருந்து வந்தது; கம்பு எத்தியோப்பியாவிலிருந்து வந்தது. கோதுமை துருக்கிப் பகுதியைச் சேர்ந்தது. நெல் பெருமளவு நம்முடைய பயிர்தான்.

ஆனால் தமிழ் இலக்கியங்கள் கூறும் சாமை, தினை போன்றவை இந்த மண்ணின் பயிர்கள் தானே?

ஆமாம். அவை உட்பட சிறுதானியங்களில் இந்தியாவில் தோற்றம் கண்ட பயிர்களும் இருக்கின்றன. ஆனால் இன்று சாகுபடி செய்யப்படும் சிறுதானியங்களில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை.

ஆனால் இந்த சிறுதானியக் கலாச்சாரம் அழிந்துவிட்டன அல்லவா? பசுமைப் புரட்சியின் உயர் விளைச்சல் ரகங்களின் வெள்ளத்தில் சிறுதானியங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனவே? நெல்லுச் சோறு கலாச்சாரம் கம்மஞ் சோறு கலாச்சாரத்தை புறம் தள்ளிவிட்டதே?

ஆம். அதனால்தான் இந்த மையத்தின் நோக்கங்களில் ஒன்றாக சாமை, திணை, பனிவரகு, கேழ்வரகு ஆகிய சிறுதானிய வகைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதையும் பரவலாக்குவதையும் எடுத்துக்கொண்டுள்ளோம். கொல்லிமலைப் பகுதியில் நாங்கள் மக்களின் பாரம்பரிய உணவு தான்யப் பாதுகாப்பு முறைகளை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம். அவர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களில் ஒருவர் தானியங்களை இந்த மையத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நானும் எங்கள் மையத்தில் உள்ளவர்களும் அவர்களிடம் சிறுதானியங்களை வாங்குகின்றோம். சந்தைப் படுத்தல்தான் சிறுதானியங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நான் அவற்றை உணவுப் பாதுகாப்பு மசோதாவிலும் பொது விநியோக அமைப்பிற்குள் சேர்க்க வழி வகுத்தேன். ஆனால் பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகம் செய்யத் தேவையான அளவிற்கு இந்தச் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுமா எனும் சிலரால் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் சாகுபடி செய்யப்படும் தானியங்கள் வாங்கப்படும் சாத்தியம் இருந்தால்தான் விவசாயிகள் அவற்றின் சாகுபடியில் ஈடுபடுவார்கள். எனவே அரசாங்கம்தாம் முன்கையெடுக்க வேண்டும் என விளக்கினோம். அதிர்ஷ்டவசமாக நான் அப்போது நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராகவும் இருந்தேன். ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையானோருக்கு உணவு தானியங்கள் என்றால் அது கோதுமையும் அரிசியும் மட்டும்தான். நான் நாடாளுமன்ற தேர்வுக் குழுவிலும் இருந்ததால் நான் இதனைச் செய்ததோடு, 2018 ஆம் ஆண்டை ஐ.நா, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுஷ்டிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தோம்.

ஆனால் இன்று அரிசி கோதுமை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கின்றனவே? இது எதனால்? அவற்றின் சாகுபடி செலவு அரிசி கோதுமை ஆகியவற்றை விட அதிகமா? ஒரு அலகு சிறுதானியங்களின் உற்பத்திக்கு தேவைப்படும் சராசரி ஆற்றல் அளவு கோதுமை, அரிசிக்கு தேவைப்படுவதைவிட அதிகமா?

இல்லை, இல்லை, பற்றாக்குறை காரணமாகத்தான் விலை அதிகம் உள்ளது. எடுத்துக்காட்டாக கர்நாடகா மாநிலத்தின் உணவு தானியங்களுக்கான கமிட்டிக்கு நான் தலைமை வகிக்கின்றேன். அங்கு இப்போது கேழ்வரகுக்கான கேட்பு மிக அதிகமாக உள்ளது. நடைபெறும் சாகுபடி அந்தத் தேவையை சமாளிக்க இயலவில்லை. கேழ்வரகு விலை மேலும் மேலும் அதிகரித்தவாறு உள்ளது. எங்கள் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று, அவர்கள் கேழ்வரகு சாகுபடிப் பரப்பையும் உற்பத்தியையும் அதிகரிக்க ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதாகும். சிறுதானியங்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் அரிசி, கோதுமைக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் குறைவு. தேவைப்படும் நீர் குறைவு; தேவைப்படும் உரங்களின் அளவு குறைவு. நான் ஒரே More Crop A Drop ( ஒரு துளி தரும் தாணியம் அதிகம் என்பேன்.) அவை இந்தியாவின் வறட்சியைத் தாங்கி நிற்கும் ஆற்றலும் அதிகம் கோண்டவை. அவற்றை நாங்கள் Climate Smart என்றும் கூறுவோம். அவற்றின் சாகுபடியால் ஏற்படும் புவி வெப்பமாதல் மற்றும் ஏனைய சூழல் மாசுபடுதலும் அரிசி, கோதுமை ஆகியவற்றைக் காட்டிலும் குறைவு.

மகசூல் அளவும், ஒரு ஏக்கருக்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயும் குறைவாக இருக்குமா?

இல்லை இல்லை. அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை சந்தைப் படுத்தல்தான். உண்மையில் பசுமைப் புரட்சி ஐந்து தானியங்களில் உயர் விளைச்சலைக் கொண்டு வந்தது. கோதுமை, அரிசி, மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவை அந்த ஐந்து. ஆனால் கோதுமையும் அரிசியும் பெற்ற வெற்றி மற்றவை பெறவில்லை. பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படைப் பிரச்சனை சந்தைப் படுத்தலில் உள்ள பிரச்சனைதான். கொல்லிமலைப் பகுதியில் அவர்கள் முதலில் சிறுதானியச் சாகுபடிக்கு மாறுவதற்கு மிகவும் தயங்கினர். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்யும் தானியங்கள் வாங்கப் படுவதற்கு ஏற்பாடுகள் இருந்ததால் அது லாபகரமான சாகுபடி என்பதை உணர்ந்தனர். எனவே இப்போது அவர்கள் பல வணிகப் பயிர்கள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடியிலிருந்து சிறுதாணியச் சாகுபடிக்கு வேகமாக மாறி வருகின்றனர்.

அப்படியென்றால் நமது உணவுக் கலாச்சாரத்தில் ஒரு மாற்றம் அவசியம் என்று சொல்லலாமா?

ஆம்! உணவுக் கலாச்சாரத்தின் மாற்றமும் சிறுதானியங்களின் சந்தைப் படுத்தல் சாத்தியங்களும் அவசியம். இப்போதைய கலாச்சாரம் பிரிட்டிஷ் காலனிய கருத்துகளும் சாதி அமைப்பும் உருவாக்கியதுதான். பிரிட்டிஷார் அவற்றை ‘Coarse Cereals’ – கச்சா தானியங்கள் – என்று அழைத்தனர். சாதி அமைப்பிற்குப் பழக்கப்பட்ட நமக்கு சில தானியங்களை கச்சா தானியங்கள் என்றும் சில தானியங்களை ‘Fine Cereals – மென்மையான தானியங்கள் என அழைப்பதிலும் தவறேதும் தெரியவில்லை. நான் ஐ.நா சபையின் FAO வில் (Food and Agricultural Organization – உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு) போராடி Neutri Cereals – சத்துத் தாணியங்கள் என அழைக்க வைத்தேன். எங்கள் மையத்தில் நாங்கள் அவற்றை ‘Climate Smart Neutri Cereals’ ’பருவகால பொருத்தம்கொண்ட சத்துத் தானியங்கள்’ என்றே குறிப்பிடுகின்றோம்.

பயிர் விளைச்சல் பாதிப்பு, பருவநிலை மாற்றப் பிரச்சனைகள், பூச்சிகளாலான தொற்று நோய் ஆகியவற்றின் வரலாறு குறித்து எழுதியுள்ளீர்கள். உண்மையில் இவையெல்லாம் பொதுத்தளத்தில் பேசு பொருளாய் ஆகாத காலத்திலிருந்தே பேசி வருகின்றீர்கள். இன்றைக்கு பூச்சி மருந்து அதன் பாதிப்புகள் போன்றவை குறித்து – உண்மையான பிரச்சினைகளோடு சில அதீதப் பூச்சாண்டிகளும் கலந்து உள்ளன என்றாலும் – ஒரு விழிப்புணர்வு வந்துள்ளது எனலாம். ராக்கேல் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ இந்தத் திசையில் ஒரு மைல்கல் எனலாம். நான் பணியாற்றிய நிறுவனம் வேம்பைப் பயன்படுத்தி உண்ணாத பூச்சி மருந்துகளை (Antifuedelan) தயாரிக்கும் ஆய்வுகளில் இருந்தது. ஆனால் இன்றைய தாராள மயம், தனியார்மயம், உலகமயம் சூழலில் இந்திய நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாடு (R&D) என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பூச்சி கொல்லிகள் குறித்த உங்களது கருத்து என்ன?

உண்மைதான். தாவரப் பொருட்களிலிருந்து பூச்சித் கொல்லிகளை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் ஆதரவளிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும், வேம்பு அந்தவகையில் ஒரு நல்ல பூச்சிக்கொல்லி. அதைப்போலவே புகையிலையும் நல்ல பூச்சிகொல்லி பண்புகள் கொண்டது. ஆந்திரா, தெலுங்கானாப் பகுதிகளில் புகையிலை விவசாயம் ஒரு முக்கியமானப் பயிர். புகையிலைப் பயன்பட்டிற்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. புகையிலைக்கு வேறு மாற்றுப் பயன்பாடுகள் கண்டறியப்படவேண்டிய அவசியமும் உள்ளது. நான் ICAR இன் இயக்குநர் நாயகமாக ஆனபோது, ராஜமுந்திரியில் உள்ள புகையிலை ஆய்வுக் கழகத்தில் அவர்களிடம் இதனை எடுத்துரைத்தேன். இல்லையென்றால் புகையிலை விவசாயமும் அழிந்துவிடும். இவையெல்லாம் ஆதரித்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நான் பேசி வரும் ‘Ever Green Revolution’ என்பதில் இது ஒரு அம்சம்தான். ’கிருஷி விஞ்ஞான் கேந்திரா’ எனும் விவசாய அறிவியல் மையங்கள் அமைக்கப்பட நான் உதவியுள்ளேன். அங்கும் பல வேளாண்மைப் பல்கலைக் கழகங்களிலும் இது குறித்து நான் தொடர்ந்து பேசி வருகின்றேன்; எழுதி வருகின்றேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல சரியான தொலைநோக்குள்ள அரசுக் கொள்கைகள் இல்லாமல் பெரிய அளவிலான மாற்றம் என்பது சாத்தியமில்லை.

தங்களது கடும் அறிவியல் எதிர்ப்பு கருத்துகளோடு டாக்டர்.கிளாட் அல்வாரஸ் போன்றவர்கள் டாக்டர்.ரிச்சாரியாப் பெயரை மீண்டும் மீண்டும் எழுப்புகின்றனர். மக்கள் அறிவியல் இயக்கங்களில் பணியாற்றும் நாங்கள் இது போன்ற வாதங்களை அவ்வப்போது எதிர்கொள்கின்றோம். இந்த விவகாரம் குறித்து நீங்கள் பதில் கூறியுள்ளீர்களா? உங்கள் தரப்பு என்னவென சற்று விளக்க முடியுமா?

அவையெல்லாம் சரியல்ல; உண்மையுமல்ல. கிளாட் அல்வாரஸ் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதலில் எழுதினார். அவர் என்னைக் குறித்து மாத்திரம் அல்ல; இந்தியாவில் பால் உற்பத்தியில் ’வெண்மைப் புரட்சி’ என அழைக்கப்படும் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்குக் காரணமாக இருந்த வர்கீஸ் குரியன் குறித்தும் இதே போல அவதூறுகளை எழுதினார். அது ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழில் ‘வெள்ளைப் பொய்’ என்ற பெயரில் அட்டைப்படக் கட்டுரையாகவே வந்தது. எழுதியவருக்கும் பதிப்பித்தவருக்கும் என்ன நோக்கம் என எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் அதற்கு எதிர்வினையாற்றவில்லையா?

அது ஒரு பெரிய கதை. நாங்கள் அதற்குப் பதிலளிக்க முயற்சித்தபோது அது எளிதில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிறகு நான் இதழை வெளியிட்டு வந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தின் தலைவரான ஜெயின் அவர்களிடம் எல்லாம் முறையிட்டேன். குரியன் ஒரு நல்ல பதில் எழுதினார். நானும் எழுதினேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ‘Fact and Fiction’ – உண்மையும் ‘புனைகதையும்’ என்ற பெயரில் ஒரு அட்டவணையும் கொடுத்திருந்தேன். அந்த அட்டவணையைப் பிரசுரிக்கமாட்டோம் என்றார்கள். அதற்கும் போராட வேண்டியிருந்தது.

அப்படியா? நான் அதனைப் படித்ததில்லையே?

பார்த்தீர்களா? நீங்கள்கூட குற்றச்சாட்டுகளைப் படித்திருக்கின்றீர்கள்; ஆனால் பதிலைப் படிக்கவில்லையே?

என்னைப் போன்றோரின் தவறுதான். ஆனால் குற்றச்சாட்டுகள் கொண்ட கட்டுரை மீண்டும் மீண்டும் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம் உலா வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பதில் எங்கும் கிடைக்கவில்லையே. நான் படித்த உங்கள் கட்டுரைத் தொகுப்புகளிலும் இல்லையே.

நான் இதுபோன்றவற்றை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தால் வேறு ஏதேனும் பணி செய்ய முடியுமா?

இல்லை. அது எங்களைப் போன்றோரின் தவறுதான்.

நான் மறைப்பதற்கு ஏதுமில்லை. விமர்சனங்கள் வரும்போது எல்லாம் நான் பதில் கூறியுள்ளேன். சில அறிவுபூர்வமான விமர்சனங்கள்; சில மிகவும் உள்நோக்கம் கொண்டவை. எப்படியிருந்தாலும் நான் பதில் கூறியே வந்துள்ளேன். உள்நோக்கம் குறித்தெல்லாம் நான் பேசியதில்லை. இதுதான் குற்றச்சாட்டு; இதுதான் பதில் என்றவகையில்தான் நான் எழுதியுள்ளேன்.

இல்லை, இதில் ஏதேனும் தொழில்ரீதியான போட்டி பொறாமைகள் உள்ளனவா? டாக்டர். ரிச்சாரியாவிற்கும் உங்களுக்கும் அதுபோல ஏதேனும் பிரச்சனை இருந்ததா? நிறுவனங்களில் அதுபோன்ற பிரச்சனைகள் இயல்புதானே?

டாக்டர்.ரிச்சாரியாவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனக்கு டாக்டர்.ரிச்சாரியா மீது மதிப்புள்ளது. அவருக்கும் என்மீது மதிப்பிருந்தது. நானும் அவரைப் போல கேம்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவன் என்பதால் அதனையெல்லாம் பெருமையாகக் கூறுபவராகவே இருந்தார். அவரது மகனுக்கு நான் தனிப்பட்ட முறையில் சில உதவிகள் செய்திருந்தேன். அவர் தன் தந்தையின் பெயரை இதற்கு பயன்படுத்திவிட்டனரே என வருத்தப்பட்டு, டாக்டர்.ரிச்சாரியா என் மீது கொண்டிருந்த மதிப்பையெல்லாம் எடுத்துக் கூறி எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். டாக்டர்.ரிச்சாரியாவிற்கும் எனக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. அவர் ICAR இன் தலைவராக ஆக வாய்ப்பு இருந்தது. அப்போது அவருக்குப் பதிலாக டாக்டர்.பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது அன்றைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலான தேர்வுக் குழுவின் முடிவு. அது சரியான முடிவுதான் என்பதே எங்கள் தொழிலரங்கத்தில் இருந்த பல நிபுணர்களின் கருத்தாகவும் இருந்தது. ஆனால் இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை. இது 1966 ஆம் ஆண்டு நடந்தது. நான் 1974 ஆம் ஆண்டுதான் ICAR இன் தலைவராக ஆனேன். ஆனால் நான் டாக்டர்.ரிச்சாரியாவின் பதவியைப் பறித்து விட்டேன் என்பது ஒரு குற்றச்சாட்டு. இது ஒரு எடுத்துக்காட்டு.

டாக்டர்.ரிச்சாரியா, உங்கள் மீது ஏதும் குற்றச்சாட்டு கூறியதாக படித்த நினைவில்லை. மேலும் கோட்பாட்டுரீதியாக அவருக்கும் உங்களுக்கும் உயர் விளைச்சல் ரகவிதைகள், நவீன அறிவியலை விவசாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவது, வேதியியல் உரப் பயன்பாடு ஆகியவற்றில் பெரிய கருத்து வேறுபாடு ஏதுமில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

இல்லை. அறிவியல் தொழில்நுட்ப விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் வருவதில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு மேலாக ஏதும் நோக்கமில்லை. குற்றச்சாட்டுகள் பல திசைகளிலிருந்தும் வரும். நான் எந்த தேர்வுக் குழுவிலும் இருந்ததில்லை. ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்தையும் தென்னிந்தியர்களைக் கொண்டு நிரப்பிவிட்டேன் என்பார்கள். ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி இந்தத்துறையில் பணியாற்றும் சக நிபுணர்களின் மதிப்பையும் மரியாதையையும் அவர்களது பாராட்டுகள் பரிசுகளையும் தொடர்ந்து பெற்று வந்தேன். இவற்றால் என் பணிகள் பாதிக்கப்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

இன்றைய சூழலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற மக்கள் அறிவியல் இயக்கங்களின் வகிபாகம் குறித்து நீங்கள் என்ன ஆலோசனை கூறுவீர்கள். உங்களது MSSRF ( எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகம்) போன்ற நிறுவனங்களோடு எந்த வகையில் அவர்கள் இணைந்து பணியாற்ற முடியும்?

நீங்கள் சரியான அறிவியல் கருத்துகள் மக்களிடம் சென்று சேர உதவலாம். முன்னர் நாம் பேசியபடி அறிவியல் தொழில்நுட்பம் – அரசுக் கொள்கைகள் இரண்டிற்கும் இடையில் இருக்க வேண்டிய ஒத்திசைவு குறித்த விழிப்புணர்விற்காக பிரச்சாரம் செய்யலாம். நிலைப்புறு மேம்பாட்டின் அவசியம் அதில் உள்ள பிரச்சனைகள் குறித்து விளக்கலாம். சிறுதானியப் பயன்பாடு போன்ற கலாச்சார மாற்றத்திற்கு ஒரு வினையூக்கியாக இருக்கலாம். எங்கள் மையத்திற்கு அடிக்கடி வாருங்கள். இங்கு நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கு பெறுங்கள். நாங்கள் கொல்லி மலை மற்றும் வேறு சில இடங்களில் செய்யும் பணிகளைப் பார்வையிடுங்கள்.

மொத்தத்தில் உங்கள் தலைமுறையினரின் மகத்தான செயல்பாடுகள் பங்களிப்புகள் என்பவற்றை எல்லாம் தாண்டி இன்றைக்கு இந்திய வேளான்மை பிழைத்திருக்கப் போராடும் அபாயகரமான நிலையில்தானே இருக்கின்றது. இந்த நிலையில் உடனடியான கொள்கை முடிவுகள் என எவற்றைச் சொல்வீர்கள்?

இந்திய வேளாண்மையின் சிக்கல் பருவநிலை மற்றும் சந்தை ஆகிய இரண்டும் சேர்ந்து உருவாக்கியுள்ளது. அரசு பல பயிர் வகைகளுக்கும் குறைந்த பட்ச விலையை நிர்ணையித்திருந்தாலும் நடைமுறையில் அது கோதுமை, அரிசி இரண்டிற்கும்தான் செயல்படுகின்றது. பருவநிலையும் இந்திய விவசாயத்தை பெரிதும் பாதிக்கின்றது. அதுபல வட இந்தியப் பகுதிகளிலும் மகாராஷ்ட்ராவிலும் இப்போது பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. அரசுக் கொள்கைகள் குறித்த பரிந்துரைகள் என சுருக்கமாகக் கூறுவது சிரமம். எனது சமீபத்திய நூல் ’பட்டினியை எதிர்கொள்ளல்’ (Combating Hunger’ – Cambridge University Press – 2015) அரசுக் கொள்கைகளின் பல அம்சங்கள் குறித்துப் பேசுகின்றது.

புத்தகம் பேசுது : நன்றி. உங்கள் நேரத்திற்கும் என்னிடம் நீங்கள் காட்டிய பொறுமைக்கும் நன்றி. உங்களுடனான உரையாடல் பல சந்தேக மேகங்களை அகற்றியுள்ளது. வாசகர்களுக்கும் அந்தவகையில் அமையும் என நம்புகின்றோம்.

எம்.எஸ்.சுவாமிநாதன் : இந்த உரையாடல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மிகவும் முக்கியமான வினாக்கள் குறித்து பேசியுள்ளோம் என நினைக்கின்றேன். இல்லஸ்ரேட்டட் வீக்லி குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் நீங்கள் கேட்டது நல்லதுதான். ஆனால் நீங்கள் அதற்கான பதில்களை வாசித்ததில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது.

புத்தகம் பேசுது : அது என்னைப் போன்றோரின் தவறுதான். அதனை நாங்கள் சரி செய்ய முயற்சிக்கின்றோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *