“பாதை” சிறுகதை
கர்ணன் ஒரு கிராமத்து இளைஞன். அவன் தனது வாழ்க்கையை வீடு, பள்ளிக்கூடம் என்று கழித்தான். ஒருகட்டத்தில் அவன் இனிமேலும் ‘கிணற்றுத்தவளை’ போல் இருக்கக் கூடாது. புதிதாக ஒன்றைக் கற்று திறமைகளை வளர்த்துக் கொண்டு திறமைக்கான மதிப்பையும் பெற வேண்டும் என்று நினைத்து நகரத்திற்குச் செல்லலாம் என்று முடிவு எடுக்கிறான்.
தொடர்வண்டி நிலையத்திற்கு சென்று நகரத்திற்குச் செல்லக் கூடிய வண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்று மட்டுமே யோசித்தான். எந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும், அந்த நகரத்தில் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது கர்ணனைப் பார்த்து ஒருவன் அருகில் வருகிறான். வந்தவன் “என் பெயர் அர்ஜுன்” என்று அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு கர்ணனிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறான் கர்ணனும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “தெரியவில்லை” என்கிறான். “என்னுடைய வண்டி இப்போது வந்து விடும். வருகிறாயா?” என்று அர்ஜுன் கேட்கிறான். கர்ணன் யோசித்துவிட்டு, “முகம் தெரியாத நபர்களுடன் நான் எப்படி வருவது’’ என்று பதில் கூறுகிறான். அதற்கு, “உனக்குத் தான் எங்கு செல்ல வேண்டும் என்று தெரியவில்லையே! என்னுடைய வண்டி நகரத்திற்குத் தான் செல்கிறது. உனக்கும் நகரம் தான் செல்ல வேண்டும். நீ என்னுடன் வரவேண்டாம், நான் போகும் வண்டியில் வா” என்கிறான். கர்ணனுக்கும் அது சரிதான் என்று பட்டது. சிறிது நேரம் கழித்து அர்ஜுன் செல்ல வேண்டிய வண்டி வந்தது. அர்ஜுன் பேச்சைக் கேட்டு கர்ணனும் அந்த வண்டியில் ஏறினான்.
வண்டியில் அர்ஜுனின் நண்பர்கள் இருந்தார்கள். அவன் அவர்களைக் கர்ணனுக்கு அறிமுகப்படுத்தினான். கர்ணனும் அறிமுகமாகிக்கொண்டு அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவர் அனைவரிடமும் பயணச்சீட்டு கேட்டார். பயணச்சீட்டு காண்பித்த பிறகு அவரிடம் கர்ணன் தான் நகரத்திற்குச் செல்லும் காரணத்தைக் கூறுகிறான். ஆனால், ‘‘அந்த நகரத்தில் உன்னிடம் இருக்கும் திறமைக்கு மதிப்பு கிடைக்காது. உன்னால் புதியதாக ஒன்றைக் கற்கவும் முடியாது’’ என்கிறார். அப்போது “நான் எங்கு செல்ல வேண்டும்?” என்று கர்ணன் அப்பாவியாகக் கேட்கிறான். அவர் சரியான பாதையைக் கூறுகிறார். இந்த வண்டி அங்கே போகுமா என்று கர்ணன் கேட்டதற்கு, “போகாது, நீ அடுத்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி அந்த இடத்திற்குச் செல்லக் கூடிய வண்டியைப் பிடி” என்று சொல்லிவிட்டு, வண்டியின் பெயரையும் அது எப்போது வரும் என்பதையும் சொல்லிவிட்டுப் போனார்.
சில வினாடிகளில் அடுத்த தொடர்வண்டி நிலையம் வந்ததும் கர்ணன் இறங்கச் சென்றான். அப்போது அர்ஜுனும் அவனது நண்பர்களும் கர்ணனை இறங்காதே என்றார்கள்.
“இல்லை, நான் போக வேண்டிய இடத்தை முடிவு செய்துவிட்டேன். இந்த வண்டி அந்த இடத்திற்குச் செல்லாது. எனவே, நான் இறங்கத்தான் வேண்டும்” என்கிறான் கர்ணன்.
அர்ஜுனும் அவனது நண்பர்களும் அவனிடம் அன்பாகப் பேசுவது போல் ஆசை வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைப் போகாதே என்கிறார்கள். கர்ணனும் அவர்களது பேச்சைக் கேட்டு யோசித்தான். இவர்கள் எல்லோரும் என்னை நண்பனாகப் பார்க்கிறார்கள். இதுவரை பள்ளிக்கூடம்,.வீடு என்றே இருந்துவிட்டேன். நண்பர்கள் கிடையாது. பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களுடன் விளையாடச் சென்றது கிடையாது. இப்போது எனக்கு நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் அவனுடைய நோக்கத்தை மறந்து அதே வண்டியில் இருந்து விட்டான்.

வண்டி கிளம்பியது. அர்ஜுனும் அவனது நண்பர்களும் அதை எடுத்துக் கொடு, இதை எடுத்துக் கொடு. அது வாங்கிட்டு வா, இது வாங்கிட்டு வா என்று அவர்கள் அனைவரும் இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் உட்கார்ந்துகொண்டு கர்ணனை மட்டும் வேலை வாங்கினார்கள். கர்ணனும் நண்பர்கள் தானே என்று அவர்கள் சொன்ன வேலையெல்லாம் செய்கிறான்.
இரண்டு மணிநேரம் அப்படியே போனது. வேலை சொல்வது மட்டும் இல்லாமல், “கர்ணா! உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்கள்.
“எனக்கு சிலம்பம், வளரி மற்றும் சில தற்காப்பு கலைகள் தெரியும். அது மட்டும் இன்றி நயங்கள் அமைத்து பாடல் வரிகளை உருவாக்கி நானே பாடுவேன்.”
“என்ன! கம்பு சுத்த தெரியுமா? எப்படி… கம்பை நடுவில் ஊணி அதை சுற்றுவாங்களே, அப்படியா?” என்று சொல்லி சிரித்தார்கள்.
ஒருவன் மட்டும் “பாடத் தெரியுமா? எங்கே பாடு” என்றான். கர்ணன் சில நிமிடம் எடுத்துக் கொண்டு நயங்களை அமைத்து, பாடல் வரிகளை எழுதிப் பாடத் தொடங்கினான். அனைவரும் அவன் பாடிய வரிகளைச் சொல்லிக் கேலி செய்து சிரித்தார்கள். கர்ணன் நான் நன்றாகப் பாடவில்லையோ என்று நினைத்து கவலைப்பட்டான். அப்போது ஒருவன், “இரு நான் பாடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சினிமா பாட்டு ஒன்றைப் பாடினான். கர்ணனுக்கு அந்தப் பாட்டு வரிகள் ஒன்றும் புரியவில்லை. அவன் குழம்பிப் போனான். அவன் பாடி முடித்ததும் யாரும் அவனைப் பாராட்டவில்லை. கர்ணனுக்குப் புரியவில்லை என்றாலும் அவன் திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அவனிடம் “நீ நன்றாகப் பாடினாய்” என்று கூறிப் பாராட்டினான். ஆனால், அவனோ திமிருடன், “நான் நன்றாகப் பாடினேன் என்பது எனக்குத் தெரியும். நீ ஒன்றும் என்னைப் பாராட்ட வேண்டாம். போய் உட்கார்” என்றான். அனைவரும் மொத்தமாகச் சிரித்தனர்.
கர்ணனுக்கு குழப்பம். நான் என்ன தவறாகச் சொன்னேன் என்று யோசித்தான். அவர்கள் அனைவரும் தற்காலிகமாகக் கிடைக்கும் சந்தோசத்தில் பொழுதைக் கழிக்கிறார்கள். இப்போது நம்மைக் கேலி செய்து சந்தோசமாக இருக்கிறார்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களைப் போல இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாமோ என்று நினைத்து அவர்களைப் போலவே நடந்துகொள்ள முயற்சிக்கிறான்.
மற்றவர்களைக் கேலி செய்வது, பொழுதைக் கடத்துவது என்று அந்த இரயில் பயணம் நீண்டது. கர்ணனும் அவர்களைப் போலவே நடந்துகொண்டான். அருகில் இருந்தவர்கள் அவனைத் திட்ட ஆரம்பித்தனர். மோசமான பையன், மரியாதை தெரியாத பையன் என்றனர். அர்ஜுனும் அவனது நண்பர்களும் செய்ததைத்தானே நானும் செய்தேன். பிறகு ஏன் என்னை மட்டும் தூற்றுகின்றார்கள் என்று யோசித்தான்.
கர்ணனுக்குக் கவலையாக இருந்தது. சரியாகச் செய்தாலும் கேலி செய்கிறார்கள், அவர்களைப் போல் இருந்தாலும் மற்றவர்கள் தூற்றுகின்றார்கள். ஏன் இப்படி நடக்கிறது என்று வருத்தப்பட்டான். சிறிது நேரம் கழித்து மனதை அமைதிப்படுத்தி எங்கு தவறு செய்தேன் என்று சிந்திக்கிறான்.
அப்போது அவனுக்குப் புரிந்தது. தவறான பாதையில் செல்லக் கூடிய வண்டியில் ஏறி விட்டேன். டிக்கெட் பரிசோதகர் சரியான பாதையைக் காட்டியும் நான் கேட்கவில்லை. தற்காலிகமாகக் கிடைக்கும் சந்தோசத்துக்காக நண்பர்களுடன் சேர்ந்து எனது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது எப்படி இந்த வண்டியை விட்டு இறங்குவது என்று பலவாறாக யோசித்தான்.
ஆழ்ந்த யோசனையுடன் கதவுக்கு அருகில் நின்று கவலையுடன் வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறான். அப்போது யாரோ ஒருவர் கர்ணனை வண்டிக்கு வெளியே தள்ளிவிட்டான். அவன் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். சில மணி நேரம் கழித்து கண் முழித்து எழுந்திருக்க முயற்சி செய்கிறான். உடம்பில் பயங்கர வலி. சில இடங்களில் இரத்தம் கட்டி வலிக்கிறது. நான் எப்படி கீழே விழுந்தேன் என்ற கேள்வியை அவனுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான்.
எங்கிருந்தோ குளிர்ச்சியான காற்று அவன் மேல் திடீரென்ற் வீசியது. அது அவனுக்கு ஆறுதல் கூறி எழுந்திரு, வலிகளை மறந்து தொடர்ந்து செல் என்று சொல்வதாக அவனே நினைத்துக்கொண்டான்.
கர்ணன் உடனே எழுந்து சிறிது தூரம் வலியுடன் கடின முயற்சி செய்து நடந்து சென்றான். சற்றுநேரத்தில் அவன் கண்ணில் தொடர் வண்டி நிலையம் தெரிந்தது. அங்கே ஒரு வண்டி கிளம்பப் தயாராகிக் கொண்டு இருந்தது. அவன் செல்ல வேண்டிய நகரத்தின் பெயரைச் சொல்லி ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். அருகில் இருந்த பரிசோதகர் ஒருவரிடம் அந்த வண்டியை விசாரித்து, ஓடிப்போய் ஏறிவிட்டான்.
சற்றுநேரம் கழித்து வந்த டிக்கெட் பரிசோதகரிடம் இது சரியான வண்டிதானே என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். காலியாக இருந்த சீட்டில் அமர்ந்த அவன் தன் பையில் இருந்த தனது குறிப்பேட்டை வெளியில் எடுத்து, தான் செய்த தவறு என்ன? அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? என்பதை எழுதத் தொடங்கினான்.
எழுதியவர் :
✍🏻 – க.செல்வமாதவன்
கணிதத்துறை முதலாமாண்டு
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
கிருஷ்ணன்கோவில்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
