ஏதோ ஒரு புத்தகம் உங்களை அதிகமாக அழ வைத்தும் , அவ்வப்போது சிரிக்க வைத்தும் , ஆழ்ந்து சிந்திக்கவும் வைத்தது என்றால் அதற்காக நீங்கள் செலவு செய்து நேரத்திற்கு அது தகுதியானதே!! அப்படியான புத்தகங்கள் வரிசையில் பவளக் கல்லாய் பதிந்து போனதுதான் இந்த பதிமுகம்.
அரும்பு மீசை
வரைந்த கோடுகளாய்
எட்டிப்பார்க்க,
குறும்புத்தனமோ
கொஞ்சம் விலகி,
பாலிய கனவுகள் முளைத்து,
புதிதாய் பூத்த மலர்களாய்,
புது உலகில் காலடி எடுத்து வைக்கும் கல்லூரி வாழ்வென்பது…..
இனம்புரியாத சந்தோஷத்தையும், வாழ்க்கை குறித்த பயம் கலந்த எதிர்பார்ப்பையும் நம்முள் விதைக்க கூடியது. அதில் கேலி ,கிண்டல், அரட்டை, இன்பம் ,துன்பம் ,காதல், கோபம், வெறுப்பு, பிரிவு ,சண்டை என பன்முக தன்மைகள் யாவும் கலந்தே பயணிக்கும். இவற்றையெல்லாம் படம்பிடித்து காட்டும் பல்வேறு இலக்கியங்களும் , திரைப்படங்களும் அவ்வப்போது பிறந்து “முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா” என பாடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ,உலகம் பேச மறந்த அல்லது பேச தேவையற்றதாக கருதும் இன்னொரு உலகம் மாணவர்களின் இதயத் துடிப்போடு கலந்து கல்வி வளாகங்களில் என்றும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது கல்வி வளாக அரசியல் என்று சொல்வது பொய்யாகாது. அப்படி ஒரு கல்லூரியான மலையூர் அரசு கல்லூரியின் கல்வி வளாக அரசியலை இலக்கிய பாணியில் வாசிப்போர் வசப்படும் வகையில் படைத்துள்ளார் செழியன் கோ.
சென்னையின் அடையாளமான ராணிமேரி கல்லூரியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றமாக மாற்ற முற்பட்டபோது வீரம் செரிந்த சமர் புரிந்து அதை காப்பாற்றிய ராணிமேரி கல்லூரியின் sfi மாணவிகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமன்றி நிகழ்கால எடுத்துக்காட்டாய் இரு வருடங்களுக்கு முன்பு கேரளாவின் மகாராஜா கல்லூரியில் மதவாதத்திற்கு எதிராக போரிட்ட மாணவர் சங்கத் தலைவர் அபிமன்யு கல்லூரி வாயிலிலே மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் நினைவுகளிலிருந்து ஒதுக்கிவிட முடியாது . இவ்வாறாக இந்தியாவின் ஒவ்வொரு அரசு கல்வி வளாகங்களிலும் உள்ள ஏதோ ஒரு செங்கலில் இந்திய மாணவர் சங்க தோழர்களின் ரத்தமும், தியாகமும் கலந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அப்படி ஒரு உண்மை சம்பவத்தை தழுவி கல்வி வளாக அரசியலை எழுத்துக்கள் மூலம் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆகச் சிறந்த பணியை செய்துள்ளார் செழியன் கோ . சகாவு விஜயன் சொல்லும் “ஆதியில் வந்த அவசானம் போகனும்” (first in last out) என்னும் வார்த்தைகள் தான் இன்னும் இளம் தோழர்களின் உயிர் நாடி. குமரனை முதலில் படி , பிறகு அமைப்பு வேலையை பார்! என்று விஜயன் கூறும் தருவாயில் படிப்போம்! போராடுவோம்!! என்ற கோஷம் காதில் ரீங்கார இசை பாடுவது போல் சட்டென்று ஒலிக்கிறது. அதானே, சங்கம் வளத்த புள்ள சரியில்லாமயா போகும்?” நிகழ்கால எடுத்துக்காட்டாய் முன்னாள் மாணவர் தலைவர் இந்நாள் மக்கள் முதல்வர் பினராயி விஜயன் உலகிற்கே வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.. கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லும் ஒரே கருத்து “கல்வி நிலையங்கள் ஒன்றும் சுயநல வாழ்க்கைக்கான உற்பத்திக் கூடங்களல்ல, சமூக வாழ்வியல் அரசியலை கற்பிதம் செய்யும் களம்” என்பதே அது.
கல்லூரி அரசியல் முதல் காபிகடை அரசியல் வரை முதலாளித்துவத்தோடு தொடர்புபடுத்தி அற்புதமாக விளக்குவதில் வெற்றி கண்டுள்ளார் செழியன் கோ. கண்ணுக்கு தெரிந்த பிரச்சனையை சரி செய்வதல்ல நம் வேலை, கண்ணுக்குத் தெரியாத பிரச்சினையை கண்டறிந்து அதனை ஒழிப்பது தான் நம் வேலை என வலதுசாரி பாவளா அரசியலையும் இடதுசாரிகளின் மக்கள் அரசியலையும் விளக்கியுள்ளார் செழியன். கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் இயல்பான பாலின ஈர்ப்பை காதல் என்ற வட்டத்திற்குள் நிறுத்தி குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் அன்பு என்று பெயர் சூட்டி அழகு பார்த்திருக்கிறார். அதே சமயம் புரட்சிக்காரனுக்கும் சாயாக்கடைக்கும், மாணவருக்கும் அரசியலுக்கும் உள்ள தீராக்காதலை தனக்கே உரித்தான இலக்கிய அடுப்பில் சுவையாக சமைத்துள்ளார். வாழ்வியலோடு பொதிந்துக் கிடக்கும் அரசியலைக் கற்பது மாணவ சமூகத்தின் அடிப்படை தேவை என்பதை ஆழமாக உணர்த்தியிருக்கிறார் ஆசிரியர். “அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்” எனவே அரசியல் பழக பதிமுகம் பயிலுவோம்…
பதிமுகம்
செழியன். கோ
முதற்பதிப்பு : அக்டோபர் 2019
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
சுபாஷ்
மாவட்டத் தலைவர். தென்சென்னை
இந்திய மாணவர் சங்கம்