சமூகம் ஏற்றத்தாழ்வுடையதாக இருந்தாலும் சமத்துவத்தோடு பழகும் ஒருகளமாக விளங்குவது கல்வி வளாகங்களே. அத்தகைய கல்விவளாகத்திறகுள் சமூகம் முழுமைக்குமான சமத்துவத்திற்காக போராடும் இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் வேரூன்றும் காலத்தில் நடந்த கல்வி வளாக அரசியலை இந்நூல் பேசுகிறது. ஒரு மாணவர் சங்க அமைப்பினர் எப்படி கல்வி வளாகத்திற்குள்ளேயும், வெளியேயும் நடந்து கொள்கின்றனர் என்றும் வலதுசாரி சிந்தனையை உடைத்து, கல்லூரி முழுவதும் இடதுசாரி சிந்தனையை உயர்த்திப் பிடித்தனர் என்பதையும் படம்போல் பதித்துள்ளார் இந்நாவலில் ஆசிரியர்.
பொதுவாக படிக்கும் காலத்தில் அரசியல் எதற்கு, படித்து வாழ்க்கையில் முன்னேறும் வேலையைப் பார், இதெல்லாம் வெட்டி வேலை என்று கூறுபவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் எப்படி இருப்பார்கள் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மாணவரும் இவ்வமைப்பிற்குள் நுழைந்து வெளியே செல்லும்போது ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பேச்சாளராக, ஆளுமைக் கொண்டவராக பற்பல தறமைகளோடு வெளிவருவதை இப்புதினம் அழகுற காட்சிப்படுத்துகிறது.
எல்லா கல்லூரி வளாகத்திலும் ஒரு மரம் இருக்கும் அது அந்தக் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து அரசியல் பழக, மற்ற எல்லாவற்றுக்கும் பொதுவானதாக இருக்கும். அதுபோல, இந்நாவலில் வரும் “முத்தச்சி” மரம் பல தலைமுறைகளைக் கடந்து அவர்களின் அனுபவத்தை கடத்தி செல்கிறது. கூச்சம், பாலின வேறுபாடுகள் கடந்து மனிதனை மனிதனாய் நேசிக்கும் மனோபாவத்தை இந்த மாணவர் சங்கம் எவ்வாறு செய்கிறது என்பதை நாவல் பேசுகிறது.
பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் “சகாவு” என்ற தோழமை உணர்வால் இந்நூல் சூழப்பட்டிருக்கிறது. “கடுங்காப்பிக்கும் காதல் அந்த புரட்சிகாரனோடு தான்” என்ற வரிகள் களத்தில் தோழர்களோடு இணைந்து செயல்பட்ட பணிகளையும், அப்போது சுவைத்த தேநீரையும் கண்முன் நிறுத்துகிறது.
“அமைப்பும் அரசியலும் நிம்மதியான உறக்கத்தை தரும்”
என்பதை சுப்புவின் கதாபாத்திரம் கண்முன் நிறுத்துகிறது.
“அறிவார்ந்த சமூகத்தில் அறிவு தளத்தில் இயங்கி அச்சமூகத்திற்காக அர்ப்பணிப்பது தானே மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் கடமை” என்ற வரி சமூக நலன் சார்ந்து போராடும்போது வரும் சவால்களைக் கடந்து ஒரு அறிவார்ந்த முற்போக்கு சமூகத்திற்காக போராடுவதின் தேவையை உணர்த்துகிறது.
அரசியல் தலைவர்களை நாடிய காலம் தாண்டி, சினிமாவுக்குள் தலைவர்களை தேடும் சமூகத்தை பற்றிய கேள்விகள் கேட்கும் இந்நாவலாசிரியரின் வார்த்தை யோசிக்க வைக்கும் இச்சமூகத்தை. எல்லாத்துறைகளிலும் கிடைக்கும் மதிப்பு படைப்பாளியான எழுத்தாளனுக்கு இச்சமூகம், காட்டும் மௌனத்தை பற்றி உணரச்செய்யும் கேள்விகள் என கலந்துரையாடல்களோடு இந்நாவல் விளங்குகிறது.
தூரத்தில் இருட்டின் நடுவில் இடதுசாரி தோழர்கள் சமத்துவ ஒளியை ஏந்தி பிடித்திருக்கிறார்கள். சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் அவ்வொளியை ஏந்தி பயணிப்பவர்களுக்கு உந்துசக்தியாக இந்நாவல் விளங்குகிறது.
சமத்துவ்வாழ்வை இனிதென உணர்த்துகிறது.
“செங்கொடி உயரும்போது
செங்கதிர் சூரியனும் தலை வணங்கும்
இடிமுழக்கம் வியந்து போகும்
எங்கள் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் கேட்க
மின்னலும் உறைந்து நிற்கும்
எங்கள் சகாக்கள் வீரநடை போட
தலைமுறைகள் கடந்தும் போராட்டம் தொடரும்
இறுதி இலட்சியம் அடையும் வரை.
“சுதந்திரம் ;ஜனநாயகம் ;சோசலிசம்”
“இன்குலாப் ஜிந்தாபாத்”
புத்தகம் பெயர்: பதிமுகம்
ஆசிரியர் பெயர்: செழியன் கோ
விலை:150
பக்கம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்