செழியன் கோ எழுதியுள்ள பதிமுகம் நாவல் தமிழக கேரள எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் இடதுசாரி மாணவர் அமைப்பு எப்படி இயக்குகிறது என்று துல்லியமாக விவரிக்கிறது.
நாவலில் எனக்குப் பிடித்த விஷயங்கள்.
அழகியலும், உளவியலும், புரட்சிகர இயந்திரங்களில் வாழ்க்கையும் சேர்ந்து ஒரு பர்ஃபெக்ட் பிளெண்டாக உருவாகியுள்ள வித்தியாசமான நாவல்.
இடதுசாரி மாணவர் இயக்கம் என்பது ஒரு மாணவர்கள் எழுச்சியோ, திடீரென்று நடக்கும் வெடிப்போ அல்ல. திட்டமிட்டு உருவாக்கப் படும் அமைப்பு அது. இடதுசாரி இயக்கம் மாணவர் அமைப்பை கல்வி நிலையங்களின் பிரிக்க முடியாத அம்சமாகப் பார்க்கிறது. எப்படி தொழிற்சாலைகளுக்கு தொழிற்சங்கங்களோ அதே போல கல்வி நிலையங்களில் ஜனநாயகத்தை ஓரளவாகவது நிலைநாட்ட மாணவர் அமைப்பு அவசியம் என்ற நிலைபாட்டின் அடிப்படையிலேயே இடதுசாரி மாணவர் அமைப்புகள் கட்டப்படுகின்றன என்பது அழுத்தமாக நாவலில் பதிவாகியுள்ளது. புத்திசாலித்தனமான ஆழமான எழுத்து.
அடுத்து தமிழ் மாணவர்கள் கேரள கல்லூரிகளின் அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலில் அடையும் கலாச்சார அதிர்ச்சி நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது.
இடதுசாரி சங்கங்கள் தங்கள் சாதனை பற்றிய பிரச்சாரம் செய்வது சில மாணவர்களின் ஆளூமையைச் சீண்டி எதிர்நிலைக்குத் தள்ளும் உளவியல் மிக மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் இறுதிவரை மார்க்சிய லெனினியத்தின் உன்னத குணாம்சங்களை ஏற்றுக் கொண்டு திருந்துவதில்லை என்பது நாவலின் சிறப்பு. இந்தக் கொடூர குணத்துக்காக செழியன் கோவுக்கு ஷ்பெஷல் வாழ்த்துக்கள்.
மாணவர் அமைப்பாளர்களின் திட்டமிட்ட அறிவுபூர்வமான செயல்பாடுகள், ஹாஸ்டலுக்குச் செல்லும் இருளடர்ந்த பாதை, முத்தச்சி மரம் . . .மழையில் நனைந்து பாசிபடிந்த சுவர்கள் . . . புரட்சிகர இயந்திரங்களுக்கு இடையே உருவாகும் காதலுக்கும், தோழமைக்கும் இடையேயான சிக்கலான உறவுகள் . . . கட்சிசார்ந்த இடதுசாரி எழுத்தை செழியன் கோ போன்ற தோழர்கள் மேம்பட்ட நிலைக்கு நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது நாவல்.
SFI ஐ அடிப்படையாகக் கொண்டு தமிழில் வரும் முதல் நாவலும் இதுதான்.
பதிமுகம்
செழியன் கோ
பாரதி புத்தகாலயம் வெளியீடு.
Whatsapp: 📞 87780 73949 Show Room: ☎ 044 2433 2924 Email: 📧 [email protected]