Pathin பதின்

சிறுகதை, நாவல்,கட்டுரை,சிறார் நூல், மொழிபெயர்ப்பு என சிறந்த படைப்புகளை தனது பங்களிப்பாக தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் சாகித்ய அகாதமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதின் நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய வடிவமாகும்.

உலகம் சிறார்கள் விஷயத்தில் கடுமையானது என தனது முன்னுரையில் குறிப்பிடும் எஸ். ராமகிருஷ்ணன்,மரபான நாவல் வடிவங்களை தவிர்த்து,நினைவுகளின் தன்னிச்சையான போக்குகளை கால வரிசையின்றி கட்டி எழுதி இருக்கிறார்.

தமிழ் சமூகத்தின் புழங்குமொழிகளான சிறியவர், பெரியவர் என்பவை முரண் மொழியாகும். அளவீட்டு மொழிகளான இது,மேல் கீழ் என்கிற பாகுபாட்டை வெளிப்படுத்துபவை. குறைந்த வயதினரை குழந்தை, மழலை இளையோர் என்று குறிப்பிடலாம்; வயதில் முதியோரை மூத்தோர் என்று அழைக்கலாம். சிறியவர்,பெரியவர் என்றால் யார் எதில் சிறியவர்? யார் எதில் பெரியவர்? என்பதை இங்கே கவனித்தாக வேண்டும்.இளையோர் பெரியோராகவும் -மூத்தோர் சிறியவராகவும் விளங்கும் தருணங்கள் நிறையவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலும் பெரியவர் என்பது ஆண்பாலை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. சமூகமே ஒரு ஓரவஞ்சனையானது தானே! எவ்வளவு சிக்கல்கள் நம் சமூகத்தில் மலிந்துகிடக்கிறது!

இந்தப் புதினத்தில் நந்து என்பவன் முதன்மை கதாபாத்திரமாவான். நந்துவின் பார்வையிலேயே புதினம் விரிகிறது.சங்கர் என்பவன் பிரதானப் பாத்திரம் ஆவான். இவன் நந்துவின் மன-ஏக்கமாகவும் இருக்கலாம். காரணம்,நந்து வாழ்வில் கற்பனைக் கூட செய்து பார்க்கவியலாத சாத்தியங்களை சாத்தியமாக்கி காட்டுகிறவன் சங்கர். இப்புதினத்தின் காலவெளி 1970 -க்கு பிறகானதாகவும், நிகழ்களம் தமிழ்ச் சமூகத்து கிராமமாகவும் காட்டப்பட்டுள்ளது.

கிராம வாழ்க்கைக்கு உரியதான பாடுகள், சமூக ஏற்ற இறக்கங்கள், பொருளாதார பாகுபாடுகள்,மனித இடைவெளி என எக்காலத்திற்கும் உரியதான அகப்புற சிடுக்குகளை இளையோனான நந்துவின் பார்வையில் விவரணை செய்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இது தமிழ் கிராமத்தின் அப்பட்டமான சித்திரம் ஆகும். இளவயதில் நேரிடும் முதல் அனுபவங்களான முதல் நாள் பள்ளிக்கூடம், முதல் மரணத்தை சந்தித்தல், முதல் வீடு மாற்றம், முதல் காதல், முதல் திருட்டு, முதல் பொய், முதல் சண்டை போன்ற “முதல்” அனுபவங்களை விவரித்து,இந்த முதல் என்கிறது எம்மாதிரியான கிளர்ச்சியை உண்டு செய்கிறது என்பதை வாசிப்போர் உணரும் வகையில் சொல்லியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

காலச்சுழல் நமக்கு எதை உணர்த்துகிறது? 21-ஆம் நூற்றாண்டில் பெற்றோர் மனநிலை என்ன? குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வளர்கிறார்களா?

சமகாலத்தில் பொருளீட்டு இயந்திரமாக குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகள் மேல் முதலீடு செய்கின்றனர். முதலீடு லாபம் ஈட்டுகையில் குழந்தைகள் வெற்றியாளர்களாகவும், நஷ்டம் ஈட்டுகையில் குழந்தைகள் தோல்வியாளராகவும் பிம்பம் கட்டப்படுகின்றனர். வெற்றி, தோல்வி என்கிற இரண்டு முடிவுகளுக்கு உள்ளாக நிறுத்தி வைத்து இந்தப் புவி வாழ்வில் கடுகத்தனை கூட குழந்தைகளை “குழந்தைகளாக” வாழ விடாமல் செய்கிறது நமது சமூகம்.

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த பதின் நாவலை வாசிக்கையில் இளம் பிராயத்து நினைவுகள் அலை அலையாய் கிளம்பி வருகிறது. பூஞ்சோலையான இளவயது கிராம வாழ்வில் தான் எத்தனை எத்தனை இன்ப நினைவுகள். இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல இப் புதினத்திற்கு மரபான புதின வடிவம் என்பது கிடையாது . கிட்டத்தட்ட நினைவுக் கட்டுரை போலானது.ஆனாலும்,இவை கிளர்த்தும் நினைவுகள் அலாதியானது. இந்தப் புதினத்தை வாசிக்கையில் தமிழ் சமூகத்து முந்தைய இளம்பிள்ளைகளின் வாழ்க்கையை ஓரளவேனும் அனுமாணிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உலகப் புகழ்பெற்ற “குட்டி இளவரசன்”(Le Petit Prince) என்கிற பிரெஞ்சு புதினத்தில், அதன் ஆசிரியர் “ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி” இந்தப் புதினத்தை லெயோன் வெர்த் என்கிற முதியவர் ஒருவருக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருப்பார். மேலும், இந்த சமர்ப்பணத்திற்கான காரணமாக அவர் கூறுவது -பெரியவர், பெரியவராக வளர்வதற்கு முன் குழந்தையாக இருந்திருப்பாரல்லவா? அந்த குழந்தைக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன். பெரியவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே! இது போலவே பதின் நாவலும் மூத்தோர்க்கானது;ஆம் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த மூத்தோர்க்கானது.

நன்றி!

வாழ்வின் வசந்த காலங்கள்!

 

         நூலின் தகவல்கள் 

நூலின் பெயர் : “பதின்”

நூலாசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

பக்கங்கள் : 242

விலை : ரூ.235

வெளியான ஆண்டு 2017

 

             நூலறிமுகம் எழுதியவர்

       

                நந்தசிவம் புகழேந்தி
                    இலக்கிய ஆர்வலர்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *