நூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) –  சுப்ரபாரதிமணியன் ..

என் முதல் நாவல்  ” மற்றும்சிலர் ”  பற்றிய நகுலனின் அபிப்ராயங்களை கோவை சாக்கோ அவர்களின் சிறுகதைத் தொகுதியை முன்வைத்து யோசித்துப் பார்த்தேன். அவர் பிறப்பால் மலையாளி.

 என் முதல் நாவல்  ” மற்றும்சிலர் ”  ஹைதராபாத் நகரில் வசித்த என் அனுபவங்களைக் கொண்டது. மீண்டும் அந்த நகரத்தை மையமாகக் கொண்டு ஒரு நாவல் எழுத முயற்சித்து அந்த  ”  மற்றும் சிலர்  நாவலை மறுவாசிப்பு செய்து வருகிறேன்

அதில் உள்ள  அமரர்  நகுலன் எழுதிய  மற்றும் சிலர் : நாவல் பற்றிய சில வரிகள் :

சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக   நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.

இந்த  நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று.

என் முதல் நாவல்  ” மற்றும்சிலர் ”  பற்றிய நகுலனின் அபிப்ராயங்களை சாக்கோ அவர்களின் சிறுகதைத் தொகுதியை முன்வைத்து யோசித்துப் பார்த்தேன்.

நகுலன் சொல்வது போல்  சாக்கோவிடம் தென்பட்டதைப்  பட்டியலிட்டிருக்கிறேன்

  1. ( பல கதைகளின் தலைப்புகள் சிந்திக்க வைக்கின்றன.)  சிறுகதைகளின் எளிமையான தலைப்புகளே அவை
  2. (இதன் சீரான அனுபவ பூர்வமான குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை ) சாக்கோ எங்கும் குரலை உயர்த்தவில்லை. இயல்பாகவே சொல்லிச் செல்கிறார்
  3. (ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். ) எல்லாம் இளம் வயது பள்ளிப்பருவ கதாபாத்திரங்கள் . அப்படி பல பள்ளிசார்ந்த பாத்திரங்கள் நினைவில் வந்து போகிறார்கள்
  4. (. எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. ) இந்த தரிசனம் காட்சிகளின் விவரிப்பாக இருக்கிறது
  5. (படித்ததும் சிந்திக்கச் செய்யும் ) மாணவர்கள் சம்ப்ந்தப்பட்டது என்பதால் சிந்திப்பதற்காகவே கல்விச்சூழலில் சம்பவங்களை உருவாக்கி கதைகளைத் தந்திருக்கிறார் சாக்கோ.

ஒரு தொகுப்பு முழுக்க இப்படி பள்ளி மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டக் கதைகள் என்பது இத்தொகுப்பின் வித்யாசத் தன்மையாய் விளங்குகிறது.

அம்மாவின் மிக்சி கனவுமகனின் மிதிவண்டி கனவு .. யார் கனவுக்குள் யார் இருக்கிறார்கள்… குட்டி நாய் வாங்குவதில் அக்காதம்பிக்கு கனவு இருக்கிறது யார் அதற்குப் பெயர் சூட்டுவது என்ற கனவும்… சுமூகமாக நிறைவேறுகிறது. போதைப்பழக்கம் தங்களை சீரழித்து விடும் என்று திருந்து மாணவர்கள் இருக்கிறார்கள். மது பாட்டிலையும் தூக்கி எறிகிறார்கள். மதிய நேரத்தில் சாப்பாடு இல்லாமல் சில மாணவர்கள். உழவாரப்பணி நேரம் போல்  எல்லோரும் பங்கிட்டுக் கொள்கிற எளிமை அருமை. . உழவாரப்பணி கோவில்களில் நடப்பது மட்டும்தானா. இல்லை . பள்ளிகளில் நடப்பதும் கூட .இன்றையப்பள்ளிகளில் இவ்வகை உழவாரப்பணிகள் அவசியம் . கல்விக்கூடங்கள் சீர்கெட்டுக் கிடக்கையில் அங்கு இதெல்லாம் அவசியம்

பள்ளிப் பருவம் ஒரு வரம்.. அதைப்புரிந்து கொள்ளூம் மாணவர்கள் இக்கதைகளில் நிறையத் தென்படுகிறார்கள். 

Image

மாணவர்கள் தங்களுக்குள் பகையாக இருக்கிறார்கள். காயப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அன்பு என்ற மருந்து சிரஞ்சீவியாக இருக்கிறது. .குழந்தைகளுக்குப் பாதுகாப்பு காவல்துறையா வேண்டாம் … மாணவர்களும் சக குழந்தைகளும் பாதுகாப்பு என்று உணர்கிறார்கள். பிறந்த நாள் ஆடம்பரம் என்று உணரும் குழந்தைகள் பெற்றோருக்கு தரும் ஆசுவாசம் மலைபோன்றது.. கதை சொல்ல பாட்டிகள் இல்லாத உலகம். பாட்டிகள்தாத்தாக்கள்  முதியோர் இல்லத்தில் இருக்கக் கூடாது என்பதை  உணரும் பெற்றோர் குழந்தைகள் .

 விபத்தும் ஒரு அனுபவம்தான் என்கிற குழந்தைகள்.. நவீன யுகத்தில் முன்னேற்றமா சுற்றுச்சூழலா என்று அந்நிய செலவாணி ஊர்களில் பட்டிமன்றம் நடப்பதை போல் செல்போன் தேவையா இல்லையா பட்டிமன்றம் மாணவர்கள் தங்களுக்குள் நடத்தி விடைகளை பெற்றோருக்குத் தரும் அருமையான குழந்தைகள் .

  நீ உன்னையறிந்தால் என்று ஒரு கதையின் தலைப்பு இருக்கிறது.

பள்ளிச் செல்லும் குழந்தைகள் தங்களை யார் என்று அறிய கிடைக்கும் அனுபவங்களின் தொகுப்பே இக்க்கதைகள் . பெற்றோர்களும் தங்களை யார் என்று அறிய கிடைக்கும் நேர்த்தியான அனுபவங்கள். ஒரு வகையில் சிறுவர் கதைகள் போல் செய்திகள் மண்டிக்கிடந்தாலும் கசடான பள்ளிக் குழந்தைகளிப்பற்றி  பல கதைகள் காணக்கிடக்கிற காலத்தில் தெளிந்த  நீர் போன்ற தெளிவான அனுபவங்களைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளைப் பற்றி அறிவதும் அனுபவப்படுவதும் பாக்கியமே.. அந்த பாக்கியத்தை இக்கதைகள் சொல்கின்றன. எளிமையும்  நேரடித்தன்மையும் பற்றிய பல விசயங்களை சாக்கோவின் அடுத்தத் தொகுப்பின் போது கணித்துக்கொள்ளலாம்.

சாக்கோவை மலையாளத்திலிருந்து அபூர்வமாய் மொழிபெயர்க்கிறவர் என்பதும்ஜெராக்ஸ் நகல் கடை நடத்துகிறவர்  என்றும்தான் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர் என்பதை இக்கதைகள் மூலமே அறிந்தேன். 20 மணி நேர கடை வேலை மீறி எழுத வாய்ப்பும் மனநிலையும் வாய்த்திருப்பது மகிழ்ச்சிதந்தது.

முதல் தொகுப்பு என்ற வகையில் பலவீனங்களும்சட்டென விழும் அதிர்ச்சி அனுபவங்களும் கொண்டிருப்பதே ஒரு நல்லத் தொகுப்பின் அடையாளம். படைப்பிலக்கியத்தில் அடையாளம் பதிக்கும் கல் அல்லது மலை என்று அவரவரின் வாழ்த்துப் பார்வைக்கேற்ப சாக்கோவின் இத்தொகுப்பை எடுத்துக் கொள்ளலாம்

வாழ்க …பள்ளி அனுபவங்களுடன் .. புதிய மாணவர்களுடன்.

( வெளியீடு கனவு திருப்பூர் )

– சுப்ரபாரதிமணியன் .திருப்பூர்