நூல்: பதினெட்டாவது அட்சக்கோடு நாவல்.
ஆசிரியர்: அசோக மித்திரன்.
வெளியீடு: காலச்சுவடு (கிளாசிக்கல் நாவல் வரிசையில்)
விலை: ரூ. 250
இந்த பூமியின் புறவெளியைக் கணக்கீடு செய்யும் கற்பனைக் கோடுகள் அட்சரேகையும் தீர்க்க ரேகையும் ஆகும். பூமியின் கிழக்கிலிருந்து மேற்காகக் கிடைமட்டமாக ஓடி பூமியை இருகூறாக வகைப்படுத்துகிறது அட்சரேகை. பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும். இங்கிலாந்தின் கிரீன்விச் பகுதியே பூஜ்யம் டிகிரியாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 180 அட்சக்கோடுகள். (தீர்க்கக் கோடுகள் 360) ஒவ்வொரு அட்சக் கோட்டுக்கும் இடைவெளி 111 கிலோமீட்டர். பூஜ்யத்திலிருந்து வடக்காகத் தொண்ணூறும் தெற்காகத் தொண்ணூறும். இந்திய நிலப்பரப்பு தெற்கு அட்சக்கோட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது. ஆந்திர-தெலுங்கானாப் பகுதிகள் 18ஆவது அட்சக்கோட்டில் அமைந்திருக்கின்றன. அந்த அமைவிட்த்தின் கோட்டையே தலைப்பாக்கி நாவல் படைத்திருக்கிறார் அசோகமித்திரன். தமிழ் இலக்கியப் புலத்தில் புதுமைப் புனைவுகள் செய்வதில் முன்னணியில் நிற்பவர் அவர்.
எழுத்தாளர் அசோக மித்திரன் எழுதிய முதல் நாவல் 18ஆவது அட்சக்கோடு. 1977ல் முதல் பதிவு கண்ட இப்படைப்பு 2011ல் “கிளாசிக்” நாவலாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக வெளியிடப்பட்டது.
அசோகமித்திரன் தமிழ் இலக்கியப் புலத்தில் வித்தியாசமான படைப்புகளைத் தந்தவர். மனசை உருக வைப்பதும் உடம்பை வார்த்தைகளால் வசீகரப்படுத்துவதும் அவர் நோக்கமல்ல. நேரடியாய் நிலைகுலையாத வார்த்தைகளால் சம்பவங்களைச் சொல்வது அவருடைய கதை மரபு. “ஒற்றன்” “இன்று” போன்ற படைப்புகளை அவர் நாவல் என்று சொன்ன போதும் பெரும்பாலான வாசகர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. ஆனால் ஆழ்ந்து ருசிக்கும் ரசனையாளர்கள் வியந்து நோக்கிப் பாராட்டுகின்றனர். “தண்ணீர்” நிழல்கள்” போன்ற நாவல்களை வழிவழியாய் வந்த மரபுப்படி எழுதியிருக்கிறார்.
பின்னால் வந்த “ஒற்றன்” “இன்று” போன்ற படைப்புகளை வேறு பாணியில் எழுதிப் பார்த்திருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் வியந்து பார்த்து வரவேற்றிருக்கிறது. ஆழ்ந்த ரசனையாளர்கள் அது அவர் பலம் என்று பாராட்டுகின்றனர். சாமான்ய வாசகர்கள் புரியாப் படிமங்களுடன் கூடியது என விழிக்கின்றனர். வித்தியாசமான பாணியைக் கையாண்டு தமிழ் இலக்கியத்தைச் செழுமைப் படுத்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
”18ஆவது அட்சக்கோடு” நாவல் களம் ஹைதிராபாத் நிஜாம் ஆட்சிக்கு உட்பட்ட சிகந்திராபாத் நகரம். இந்துக்களும், கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கிறார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இன்றைய பாகிஸ்தான், பாங்களாதேஷ் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ரூபாய் என்ற ஒரே நாணயப் புழக்கம் இருந்தபோது. நிஜாம் ஆட்சிப் பகுதியில் வேறு நாணயப் புழக்கம். அதற்கு ‘ஹாலி’ என்று பெயர்.
தம்படி, அணா, ரூபா என ஆங்கில இந்திய நாணயம் வகைப்படுத்தப்பட்டிருந்தது என்பதை இன்றைய வயதான பெரியவர்கள் அறிவார்கள். இந்தியாவின் நாலணாவுக்கு ஹாலி நாணயத்தில் ஐந்தணா தரவேண்டும். அந்த அளவுக்கு நிஜாம் ஆட்சி சுதந்திரமாக 300 ஆண்டுக்காலம் இயங்கியது. இது ஒரு வரலாற்று நாவல். மேல்மட்ட அதிகார பீடத்திலிருந்து அல்லாமல் சாமான்யக் குடிமகனின் பார்வையில், அதுவும் ஒரு கல்லூரி மாணவனான சந்திர சேகரன் பார்வையில் நாவல் நடைபோடுகிறது.
நாவலின் முற்பகுதி முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு நுட்பமாக விவரிக்கப்படுகிறது. போலிங், ஃபீல்டிங், பேட்டிங் எனக் கிரிக்கெட் வர்ணனையாளரைப் போல விவரித்துச் செல்கிறார் ஆசிரியர். நாஸிர் அலிகான் என்ற மாணவன் தான் கேப்டன். அவன் யாரை விளையாட அழைக்கிறானோ அவனுக்குத்தான் விளையாடும் குழுவில் இடம். நிறைய மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டு தங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஏங்கியிருந்த சூழலில் சந்திர சேகரன் பெருமுயற்சி செய்து குழுவில் இடம் பெறுகிறான். ஆயினும் முழுமையாக விளையாட முடியவில்லை. உடல் காயம் படும்படியாய் போலிங் போடுகிறார்கள். அல்லது பேட்டிங் செய்யும்போது பந்தை எடுத்து பௌன்சர் போடுவதுபோல் தலைமேல் எறிகிறார்கள். ஸ்டம்பில் எறிவதாய்ப் பாவித்துக் காலைக் காயப் படுத்துகிறார்கள். சந்திர சேகரனின் விளையாட்டு விருப்பம் தேய்ந்து அழிந்துவிடுகிறது. இது இந்து முஸ்லிம் முரண்பாட்டின் அடையாளமாக அமைகிறது. இஸ்லாமியர்கள் அல்லது ரஜாக்கர்கள் இந்துக்களை வெறுக்கிறார்கள் என ஓர் இந்து மாணவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவேளை கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் அல்லது நுட்பம் தெரியாதவர்கள் இந்நாவலை வாசிக்கத் தொடங்கினால் முதல் பாகம் முடிவதற்குள் புத்தகத்தை மூடிவைத்து விடுவார்கள். (மூன்று பாகங்கள் கொண்டது நாவல்)
ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த உடனேயே ஹைதராபாத்தை இந்திய ஒன்றியத்துக்குள் இணைத்துவிட பெருமுயற்சி செய்தது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திய ஒன்றியத்தின் மற்ற நாடுகள் இந்தியாவோடோ, பாகிஸ்தானோடோ இணைய ஒப்புக்கொண்ட போது காஷ்மீரும், ஹைதராபாத்தும் தனித்து இயங்க விரும்பின. பாகிஸ்தான் படையெடுப்பிலிருந்து தப்பிக்க, காஷ்மீர் மன்னர் இந்தியாவோடு உடன்படிக்கை செய்துகொண்டு தனித்துவம் மிக்க மாநிலமாக இயங்கும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் ஹைதராபாத் உடன்பட மறுத்தது.
கல்லூரி மாணவர்கள் “குவிட் காலேஜ் மூமெண்ட்” நடத்தி இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஊர்வலமாகச் சென்று நிஜாமுக்கு எதிராக முழக்கமிட்டனர். நிஜாம் போலிஸ் விரட்டி விரட்டி அடிக்கிறது. சந்துகளிலும் பொந்துகளிலும் சிதறி ஓடுகின்றனர். சந்திரசேகரன் ஒரு வீட்டுக்குள் ஓடி ஒளிகிறான். அது ஒரு இஸ்லாமியர் வீடு. அங்கு வாழும் மூதாட்டி அவனுக்கு அடைக்கலம் தருகிறாள்.
நாவல் நாயகன் சந்திர சேகரன் ஒவ்வோர் இடத்துக்கும் கால் நடையாகவே சென்று தரிசித்து தன் வாழ்வோடு அந்த நிலத்தைப் பிணைத்துக்கொள்கிறான். டாங்பாண்ட், மோண்டா, பஷீர்பாக், ரெஜிமெண்டல் பஜார், கிங்ஸ்வே, ஃபதே மைதான், அப்புறம் அங்கு நெடிதோடிக் கிடக்கும் ஆலமரம் எல்லாமும் அவன் தரிசனத்தின் வழியாக நம் அந்தரங்க மனசில் பதிகின்றன. இவையெல்லாம் உயிருள்ள பாத்திரங்களாகவே உயிர்த் துடிப்போடு சித்தரிக்கப் பட்டுள்ளன.
நிஜாம் தேசம் வளமான பகுதி. இந்தியாவின் பிற பகுதிகளில் பஸ் போக்குவரத்து ஆரம்பகட்டத்தில் இருந்தபோது ஹைதராபாத்திலும் சிகந்திராபாத்திலும் அலுங்காமல் குலுங்காமல் இயங்கிய அடுக்குமாடிப் பேருந்துகள் ஓடின. சுதந்திரமடைந்த மறுநாளே நிஜாம் பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபா கடன்கொடுத்தான். இவையெல்லாம் வளமான ராஜ்யத்தின் அடையாளங்கள். (இந்த வளம் சாதாரண உழைப்பாளிகளைச் சுரண்டியதால் கிடைத்தவை என்ற வரலாற்று உண்மை பதியமாகவில்லை.)
மூன்று மதத்தினரும் அன்யோன்யமாக வாழும் சூழல் அண்ணல் காந்தியடிகளின் படுகொலைக்குப் பின் நிர்மூலமாகிறது. அவரை ஒரு முகம்மதியன் கொன்றுவிட்டான் என வதந்தி பரப்பப்படுகிறது. (ஓர் இந்து பிராமணன் அந்தக் கொலையைச் செய்தான் என்று ஒரு இடத்தில்கூடப் பதிவு செய்யப்படவில்லை.) இந்துக்களெல்லாம் காங்கிரஸ் கட்சியையும், இஸ்லாமியர்கள் நிஜாமையும் ஆதரித்துக் கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள். சந்திரசேகரன் காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவாக ரத்தக் கையெழுத்துப் போடுகிறான்.
கல்லூரிகள், பாடசாலைகள் இயங்கவில்லை. ரேஷன் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்திய அரசு நிஜாம் எல்லைக்குள் அரிசி, கோதுமை சர்க்கரை போன்றவை செல்லத்தடை விதித்துவிட்டது. வெறும் சோள ரொட்டியைப் பாலில் தொட்டு சாப்பிட வேண்டிய நிலை. என்னதான் பணம் இருந்தாலும் உணவுப் பொருள் கிடைக்காதபோது இயல்பாக நிஜாம் ஆட்சியின்மேல் மக்களுக்குக் கோபம் கொப்புளிக்கிறது. நிஜாமுக்கு எதிரான மக்கள் இயக்கமும், சர்தார் வல்லபாய்ப் பட்டேல் தலமையிலான இந்தியப் படையெடுப்பும் நிஜாமைப் பணியவைக்கிறது.
நிஜாமின் இந்த வீழ்ச்சிக்கு லம்பாடிகள் என்று சொல்லப்படுகிற மலைவாழ் மக்களின் போராட்டமும் ஒரு காரணியாகிறது. (லம்பாடிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் சோஷலிச யுத்தம் நடத்தினார்கள் என்பது வரலாறு. இந்த நாவலில் அது பதிவு செய்யப்படவில்லை.) இந்தியப் படைகள் நவீன ஆயுதங்களுடன் ஹைதராபாத்துக்குள் நுழைந்தபோது இரண்டாயிரம் பேர் கொண்ட ரஜாக்கர் படை எதிர்த்து நிற்கிறது. பழமையான ஆயுதங்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தன.
அப்போது கம்யூனிஸ்டுகள் நிஜாமுக்கு எதிராக சோஷலிச் யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார்கள். வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. அதனால் இந்தியப் படைகள் நிஜாம் பகுதிக்குள் நுழைவதை அவர்களும் விரும்பவில்லை. அந்த நிலைபாட்டைத் தப்பாகப் புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு உதவுவார்கள் என்று நிஜாம் நினைத்தான். அந்தக் கணக்குத் தப்பாகிப் போனது.
இந்தியப் படைகள் ஹைதராபாத்துக்குள் நுழைந்தபோது சிகந்திராபாத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்கள் வீட்டுக்குள் ஒளிந்துகொள்ள இந்துக்கள் நகரெங்கும் வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் நடத்துகின்றனர். ரயில்வே பஜாரில் ரேடியோ கேட்டுக்கொண்டிருந்த சந்திர சேகரன் என்னமோ ஏதோ என்று பயந்துபோய் வீதி வீதியாய் ஓடிக் களைத்து சுவர் ஏறி ஓர் இஸ்லாமிய வீட்டுக்குள் குதிக்கிறான். அவன் ஓர் இந்து எனப் புரிந்துகொண்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயந்து நடுங்குகிறார்கள். பதினாறு வயது நிரம்பிய இளம்பெண் ஒருத்தி “எங்கள விட்டுடு” என்றபடி அவன்முன் வருகிறாள். தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகிறாள். ”என்னய எடுத்துக்கிட்டு மத்தவங்கள் விட்டிடு” என்கிறாள். பயந்து போன சந்திர சேகரன் எந்தச் சுவறேறிக் குதித்தானோ அப்படியே வெளியேறி ஆலமரத்தடிக்கு வந்து சேர்கிறான்.
ரஜாக்கர் படை மட்டுமே இந்தியப் படைக்கு எதிராகப் போராடியது. இந்தியப் படையில் உயிர்ச்சேதம் இல்லாத நிலையில் ரஜாக்கர்கள் இருபதுபேர் கொல்லப்படுகின்றனர். மற்றவர்கள் சிதறி ஓடிவிட்டனர். பணிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அசாதாரணச் சூழலில் தோற்றுப் போவதைவிட சமாதானம் செய்துகொள்வதே நல்லது என நிஜாம் முடிவெடுக்கிறான். வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறான்.
“சமீப காலமாகவே நம் சமஸ்தானமும், நம் பக்கங்ளும் மிக நெருக்கடியான நிலையை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். இதை இனியும் நீடிக்கவிடாமல் ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். இதுவரையில் பதவியிலிருந்த பிரதம மந்திரியும், அவருடைய் சகாக்களும், இன்று காலை தங்கள் ராஜினாமாக்களைச் சமர்ப்பித்து விட்டார்கள். நம் ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைந்திருக்க முடிவு செய்திருக்கிறோம். இது சார்பில் முதல் ஆணையாக நமது துருப்புக்களையும், மற்ற படைகளையும், இந்திய ராணுவக் குழுவிற்கு எதிராகச் செயல்படுவதை உடனடியாக நிறுத்தச் சொல்லியிருக்கிறோம். கூடிய விரைவில் பொறுப்பன சிவில் அரசு அமைப்பு ஏற்படுவதற்குத் தக்க முயற்சிகள் எடுத்துக்கொள்ளக் கட்டளையிட்டிருக்கிறோம்.
அதுவரை ஆட்சி இந்திய அரசு நியமிக்கும் பிரதிநிதியிடம் பொறுப்பளிக்கப்படும். மீண்டும் சமஸ்தானத்தில் சகஜநிலை ஏற்படுவதற்கு முதல் நடவடிக்கையாகக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் எல்லா அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய உத்திரவிட்டிருக்கிறோம். இந்த வார முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டமும் மற்ற பாதுகாப்பு உத்தரவுகளும் உடனே ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
நமது சமஸ்தானம் அதன் நீண்டகால சிறப்பும் கௌரவமும் எவ்வகையிலும் குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்படுவதை நமது பிரஜைகள் தங்கள் கடமையாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறோம். யாம் நெருக்கடியைத் தவிர்த்து சுமூகமான இம்முடிவுகளைத் தெரிந்தெடுக்க உதவிய இந்திய கவர்னர் ஜெனரலும் எனது நண்பருமான சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரி அவர்களுக்கும் இங்கு நம்முடன் கடந்த சில மாதங்களாக இந்திய ஏஜண்ட் ஜெனரலாகப் பணியாற்றி வரும் கே. எம் முன்ஷி அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.”
இவ்வாறாகத் தென்னகத்தின் நிஜாம் ஆட்சி முடிவுக்கு வந்தது. அண்ணல் காந்தியடிகள் கொலையுண்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்த வரல்லாற்றுச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக நாவல் பதிவு செய்திருக்கிறது.
இந்த நாவலை வாசித்து முடிக்கும் போது வாசக மனதில் ஏற்படும் சில கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
அண்ணல் காந்தியடிகள் ஒரு இஸ்லாமியனால் கொல்லப்பட்டான் என வதந்தி பரப்பப்படுகிறது. ஒரு சாமான்யன் தனக்குக் கிடைத்த செய்தியை நம்புகிறான் என்பதோடு ஒரு புனைவு இலக்கியவாதியின் கடமை முடிந்து விடுகிறதா? கொன்றது முகம்மதியன் இல்லை; ஓர் இந்து மதவாதி என்பதை ஏதாவது ஓர் இடத்தில் பதிவு செய்திருக்க வேண்டாமா? இந்த நாவலில் வரும் இந்து விரோதப் பாத்திரம் சையது. அவர் சதாசர்வ காலமும் ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய ஒரே நோக்கம் சமஸ்தானப் பகுதியிலிருந்து இந்துக்கள் விரட்டியடிக்கப் படவேண்டு என்பது. அவர் மூலமாக கொலைகாரன் ஓர் இந்து என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்க முடியும். வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் போனது சரியா?
இன்னொரு கேள்வி. பத்தாண்டு காலமாக நிஜாம் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கம்யூனி/ஸ்டுகளும் மலைவாழ் மக்களும் போராடினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் களத்தில் இறங்கி சமூக மற்றும் அரசியல் விடுதலைக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்தார்கள். நிபந்தனையற்ற முறையில் நிஜாம் சரணடைவதற்கு அந்தப் போராட்டம் ஒரு முக்கியக் காரணி. இந்த வரலாற்று உண்மை நாவலின் எந்த இடத்திலும் பதிவாகவில்லையே ஏன்?
அழகியலைப் பேசுவது மட்டுமல்ல; அழகியலை உண்மையோடு கலாப்பூர்வமாகப் பொருத்துவதுதான் புனைவு. அத்தகைய காலநேர்த்தியைத் தவற விட்டிருக்கிறார் அசோகமித்திரன் என்றே கணிக்கத் தோன்றுகிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.