பதிப்பும் தொகுப்பும்: ஆவணம் – வரலாறு- மதிப்பீடு
– முனைவர் இரா. ஜானகி
ஆய்வுச்சுருக்கம்: கல்விச்சூழலில் பதிப்பியல் தொடர்பான பாடத்திட்டம் பரவலாக இல்லை. பதிப்பு தொடர்பான ஆய்வுகளும் பெருகவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு எந்தப் பதிப்பை பயன்படுத்த வேண்டும்? யார் உரையை பார்க்க வேண்டும்? என்பதில் தெளிவான வழிக்காட்டுதல் இல்லை. சிறப்பாக காலச்சுவடு பதிப்பகம், புத்தகம் பேசுது, உங்கள் நூலகம் போன்ற இதழ்கள் பதிப்பியல் தொடர்பான முயற்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் பதிப்பில் வெளியான புதுமைப்பித்தன் கதைகள் நூல் செம்பதிப்பாக வெளியிடப்பட்டது போல் பழந்தமிழ் பனுவல்கள் சிறப்பான பழைய உரையுடன் கூடிய பதிப்புகள் அச்சு வடிவம் பெறுதல் அவசியமானதாக உள்ளது. பழந்தமிழ் நூல்களின் முதல் பதிப்புரைகள் மற்றும் முகவுரைகள் ஆராய்ச்சித் தன்மையுடையவை,கருத்தியல் தொடர்புடையவை. பழந்தமிழ் செவ்விலக்கிய நூல்களான சங்க இலக்கியங்களின் முதல் பதிப்புகளில் (1887 முதல் 1923 வரை) பதிப்பாசிரியர்களின் முயற்சி, பதிப்பாளர்களின் அனுபவங்கள், பதிப்பாளர்களின் நேர்மை முதலியவற்றை முன்னிறுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது இக்கட்டுரை.
கருவிச்சொற்கள்: – சங்க இலக்கிய முதல் பதிப்புகள் – முதல் பதிப்புரை மற்றும் முகவுரையின் நோக்கும் போக்கும் – தொகுப்பு முயற்சிகள்.
முன்னுரை: உலக அளவில் அச்சுக்கலையின் வரலாறு மிக நீண்டது. சீனர், ஜெர்மானியர் என அச்சுக்கலையின் துவக்கம் ஜான் கூட்டன் பர்க்கு என்பவரிலிருந்து அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் அச்சுக்கலையின் தோற்றம் 1556 இல் தொடங்கியதை அறிய முடிகின்றது. ஆயினும் அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ்த் துண்டு வெளியீடு, லிஸ்பனிலிருந்து 1554 இல் ‘லூசோ தமிழ்ச்சமய வினாவிடை’ என்பதாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் நூலாக விளங்குவது 1557 இல் போர்ச்சுகீசியத் தலைப்பில் வெளிவந்த ‘தம்பிரான் வணக்கம்’ (Doctrina Christan en Lingua Malauor Tamul – Tampiran Vanakam) என்பதாகும். பழந்தமிழ் இலக்கணம் இலக்கியம் சார்ந்த பதிப்புகள், ஆரம்ப நிலையில் ஐரோப்பிய அறிஞர்களாலும் தமிழ் அறிஞர்களாலும் வெளிவந்துள்ளன. 1806 இல் வீரமாமுனிவரால் வெளியிடப்பட்ட ‘கொடுந்தமிழ்’ நூலும் 1829 இல் உருவாக்கப்பட்ட ‘சதுர் அகராதி’ நூலும் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன எனலாம். தொடர்ந்து 1812 இல் திருக்குறள் மூலப்பாடப் பதிப்பு, 1835 இல் நன்னூல் மூலமும் காண்டிகையுரை பதிப்பு, 1847 இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சர் பதிப்பு போன்ற பழந்தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டன எனலாம். குறிப்பாக 1835 இல் உள்நாட்டு மக்கள் அச்சிடும் உரிமை பெற்ற பிறகு ஏராளமான பழந்தமிழ் நூல்கள், விடுதலை, சமூகம், நீதி, பாடநூல் எனும் தன்மைகளில் பதிப்புகள் வெளிவரத் தொடங்கின எனலாம். இப்படியான தமிழ் பதிப்புச்சூழல் பின்புலத்தில் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டின் முதல் பதிப்புகள் 1887 முதல் 1923 வரை மொத்தம் 36 ஆண்டு கால இடைவெளியில் முழுமையான அளவில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
முதல் பதிப்புகளின் விவரங்கள்:
1887 – நல்லந்துவனார் கலித்தொகை, சி.வை. தாமோதரம் பிள்ளை.
1889 – பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், உ.வே. சாமிநாதையன்.
1894 – புறநானூறு மூலமும் உரையும், உ.வே.சா.
1903 – ஐங்குறுநூறும் பழையவுரையும், உ.வே.சா.
1904 – பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும், உ.வே.சா.
1915 – குறுந்தொகை மூலமும் சௌரிப்பெருமாளரங்கன் புத்துரையும்.
1915 – நற்றிணை, அ. நாராயணசாமி ஐயர் உரையுடன்.
1918 – பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், உ.வே.சா.
1918 – அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி.
1920 – அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும் இரண்டாம் பகுதியும்.
1923 – நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும்,
உ.வே.ரா.இராகவையங்கார் ஸ்வாமிகள்.
தொகையும் பாட்டும் கண்ட முதல் பதிப்பாசிரியர்கள் :
சங்க இலக்கியங்களில் முதல் நிலையில் 1834 இல் சரவணப் பெருமாளையர் மற்றும் 1850 இல் சண்முகசுவாமி, ஆறுமுகநாவலர் போன்றோர் திருமுருகாற்றுப்படையை முதல் நிலையில் (பார்வைக்கு கிடைத்த அளவல்) பதிப்பித்திருந்தாலும், அவை சங்க இலக்கியம் என்ற அடையாளத்தில் பதிப்பிக்கப்படாமல், பக்தி பாசுரமாகவே கருதிய அளவில் பதிப்பிக்கப்பட்டுள்ளன எனலாம்.எனவே சங்க இலக்கியம் என்கின்ற அடையாளத்தில் பதிப்பிக்கப்பட்ட பழந்தமிழ் நூல்கள் எனின் 1887 – 1940 என்ற காலவரையறைக்குள் வெளிவந்தவற்றையே குறிப்பிடுதல் அவசியமாகின்றது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு வரிசையில் தனி நூல்களாக சி.வை.தா. அவர்களின் கலித்தொகை தொடங்கி முழுமையாகக் கிடைக்கின்ற தன்மையில் 1923இல் வெளியிடப்பட்டுள்ள இராகவையங்கார் அவர்களின் அகநானூறு முடிய முதல் பதிப்புகள் வெளிவந்திருக்க தொகுப்பு முயற்சியாக முதல் நிலையில் சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்ற அடையாளத்தோடு 1940இல் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பேருதவியோடு வெளிவந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது.
ஓலைச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் நூல்களை முதன்முதலாக அச்சில் ஆவணப்படுத்துதல் என்பது எளிதான செயல்பாடு அல்ல. தொகையும் பாட்டும் அச்சில் கண்ட முதல் பதிப்பாசிரியர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை நோக்கின்
- சுவடிகளை கண்டறிய மேற்கொண்ட பயணங்கள் மற்றும் வழிமுறைகள்.
- கண்டறிந்த சுவடிகளை கையகப்படுத்த எதிர்கொண்ட சிரமங்கள்.
- கைவரப்பெற்ற சுவடிகளை முழுமைத்தன்மையில் உள்வாங்க மேற்கொண்ட முயற்சிகள்.
- பதிப்பிக்கத் தேடிய ஆதரவுகள்
என்பனவற்றைக் கூறலாம். அதேசமயம் சில பதிப்பாசிரியர்கள் தன் பெரும் முயற்சியில் கண்டறிந்த நூல்களை அச்சில் காண்பதற்குள் ஒவ்வாமையால் நோய் பெற்று வருத்தம் மேலுற காணாமலும் போயிருக்கிறார்கள். அச்சு வரலாற்றில் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை முதன்முதலாக பரிசோதித்து பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் எனும் வரிசையில் பின்வருபவர்களைக் காலவரிசை முறையில் அடையாளப்படுத்தலாம்.

- சி.வை. தாமோதரம் பிள்ளை
- உ.வே. சாமிநாதையர்
- சௌரிப்பெருமாளரங்கன்
- அ. நாராயணசாமி ஐயர்
- உ.வே.ரா. இராகவையங்கார்
- ச. வையாபுரிப்பிள்ளை
பதிப்புரை / முகவுரை
ஆவணங்களிலிருந்து வரலாற்றை நோக்குதல்:
முதல் நிலையில் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் என நோக்கின் காலவரிசை முறையில் புதுவை நயனப்ப முலியார், தாண்டவராய முதலியார், மழவை மகாலிங்கையர், சந்திரசேகர கவிராச பண்டிதர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றோர்களை மிக முக்கியமானவர்களாக குறிப்பிடலாம். அழியும் தன்மையில் இருந்த பழந்தமிழ் இலக்கண இலக்கிய வளங்களை காப்பாற்றுதல் எனும் முதன்மை நோக்கில் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவம் கொடுத்தவர்கள் மேற்கண்ட பதிப்பாசிரியர்கள் எனலாம். ஆரம்ப நிலை பதிப்புகளில் பெரும்பான்மையாக சந்தி பிரித்தல், அடிக்குறிப்பு தருதல், பாடவேறுபாடு முதலானவற்றை கவனத்தில் கொள்ளும் பழக்கத்தை காணமுடிவதில்லை. இவர்களைத் தொடர்ந்து உ.வே.சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்களை முக்கிய பதிப்பாசிரியர்களாக நோக்கும் வகையில், வாசகரின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, நூல் தொடர்பான அடிப்படைச் செய்திகளை தருதல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையில் சில நெறிமுறைகளையும் கருத்துகளையும் பதிப்பின் போது முன்வைத்தல் போன்ற மரபைக் காணமுடிகின்றது.
தமிழில் ஆரம்பகால பதிப்புகளில் முகவுரை மற்றும் பதிப்புரைகள் இடம்பெறவில்லை. பதிப்பாசிரியர்களின் தனித்துவமான திறன்களை, ஆராய்ச்சி தன்மைகளை முன்னிலைப்படுத்துவனவாக விளங்குபவை பதிப்பில் இடம்பெறும் பதிப்புரை மற்றும் முகவுரைகள் எனலாம். 1599 இல் ஹென்றிக்கஸ் பாதிரியார் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட ‘கிரிசித்தியானி வணக்கம்’ என்னும் 122 பக்கங்கள் கொண்ட நூலில்தான் சுருக்கமான வடிவத்தில் முதல் முகவுரை இடம்பெற்றுள்ளது என்பதை ‘அச்சும் பதிப்பும்’ (ப.48) என்னும் நூல் வழி அறியமுடிகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு நூலுக்கு முகவுரை எழுதும் மரபை தொடங்கியவர்கள் ஐரோப்பியர்கள் எனின் அது உண்மையாகாது. மாறாக முகவுரைகளைத் தொகுத்துக் காணும் சிந்தனை அவர்களுடையது எனலாம். தமிழில் முகவுரைகளின் தொடக்கத்தை பாயிரம் வடிவில் பழந்தமிழ் இலக்கண நூல்களில் காண முடிகின்றது.
“ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே” (இறையனார் களவியல் உரை 1939: 1)
“பாயிரம் கேட்டே நூல் கேட்கப்படும்” (இறையனார் களவியல் உரை 1939: 2)
என்றெல்லாம் பாயிரத்தின் இன்றியமையாமையை பல உவமைகளின் வழி களவியல் உரை எடுத்தியம்பக் காண முடிகின்றது. தொடர்ந்து ப.சரவணன் அவர்கள் தம் சாமிநாதம் பதிப்பில் தமிழில் முகவுரையின் தொடக்க நிலை குறித்து சொல்லியிருக்கும் கருத்தை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கக்காணலாம்.
ஏட்டுச்சுவடிகளின் இறுதிப் பக்கத்தில் இருந்த சுவடிக்குறிப்பு என்பதன் நவீன வடிவமே இந்த முன்னுரைகள்’ (ப.சரவணன்2014 :35)
பாயிரங்கள், சாற்றுக்கவிகள், உதவி உரைத்தல், நன்றிக்கூறல் என்பதாக இருந்த நூல் பற்றிய குறிப்புகள் சி.வை.தா., உ.வே.சா. போன்ற பதிப்பாசிரியர்களால் சுருக்க அளவில் இல்லாமல் விரிவான தன்மையில் பதிப்பு மற்றும் நூல் தொடர்பான பல செய்திகளை வாசகர்களுக்கு எடுத்தியம்பும் நோக்கில் முகவுரைகளை எழுதத் தொடங்கினர் எனலாம். அதன் விளைவாக 1881இல் வெளிவந்த யாழ்ப்பாணத் தமிழர் சி.வை.தா. அவர்களின் ‘வீரசோழியம்’ பதிப்பில் முதன்முதலாக பதிப்புரை இடம்பெறக் காணலாம். தமிழ்ப் பதிப்புச் சூழலில் சி.வை.தா. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு எளிய உரைநடையில் தனி அடையாளத்தோடு தம் முகவுரைகளை உ.வே.சாமிநாதையர் முன்னெடுத்தார் எனலாம். ஆனால் உ.வே.சா. வின் முதல் பதிப்பாக 1878 இல் வெளிவந்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்பதில் முகவுரை என்ற பெயரில் நூல் தொடங்காமல் வேணுவனலிங்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் என்பதாகத் தொடங்கப்பட்டும் முடிவில் ஆசிரியர் பெயர், இடம், ஆண்டு என எந்தக் குறிப்பும் இன்றியே பதிப்பு வெளிவந்துள்ளது. இதே நிலையை அவரது அடுத்த பதிப்புகளான திருக்குடந்தைப் புராணம் (1883), மத்தியார்ச்சுன மான்மியம் (1885) பதிப்புகளிலும் காணமுடிகின்றது. அடுத்ததாக சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் கொடுத்துதவிய ஏட்டுப்பிரதி உதவியால் 1887 இல் வெளிவந்த சீவகசிந்தாமணி பதிப்பில் முதன்முதலாக முகவுரை என்ற பெயரில் மேற்கோள் பாடல் ஏதுமின்றி நூல் தொடங்க முடிவில் வே.சாமிநாதையன் எனப் பதிப்பாசிரியர் பெயர் இடம் பெற முகவுரை அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. (முகவுரையின் முடிவில் இடம், ஆண்டு சுட்டப்படவில்லை). மேலும் 1889 இல் உ.வே.சா. அவர்களின் முதல் முயற்சியில் தொகுப்பாக வந்த பத்துப்பாட்டு பதிப்பில் “அண்டர்க ளுறுகண் விண்டிட முந்நீர் அலைகடல் குடித்தும் ..” என்னும் மேற்கோள் பாடல் இடம்பெற முகவுரை தொடங்கப்பட்டு முடிவில் “இங்ஙனம் உத்தமதானபுரம் வே.சாமிநாதையன் ” அவர்களின் பெயர் இடம்பெற முறையே கும்பகோணம் விரோதி வருடம் ஆனி மாதம் எனும் தகவல்கள் முதன்முதலாக குறிப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.எனவே காலந்தோறும் முகவுரை மற்றும் அதன் அமைப்பு முறையை தனியாக ஆராய்வது அவசியமாகின்றது.
சங்கப்பாடல்கள் வழி பழந்தமிழர்களின் வாழ்வியலை காலத்தோடும் சூழலியலோடும் பொருந்த ஒரு வரலாற்று ஆவணமாக உலகளவில் விளங்க முதல் காரணியாக இருப்பவர்கள் பதிப்பாசிரியர்கள். சங்க இலக்கியங்களின் முதல் பதிப்புகளில் காணப்படும் பதிப்புரை மற்றும் முகவுரை வழி அறியவரும் முக்கியத் தகவல்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- தமிழ் அச்சு சூழல்
- பழந்தமிழ் நூல்களை அச்சிட வேண்டியதின் அவசியம் (மொழித் தொன்மையை முன்னிலைப்படுத்தல்)
- பதிப்புச் சிக்கல்
- பதிப்பில் கையாண்ட நெறிமுறைகள்
- பதிப்பு நேர்மை
- ஆதரவு நல்கியோர்
- செய்ய வேண்டிய பணிகள்
ஆரம்ப நிலை பதிப்புகள் பெரும்பாலும் சமயம் மற்றும் கல்விப் பின்புலத்தை நோக்கமாகக் கொண்டு மட்டுமே வெளிவந்துள்ளன. முக்கியமாக செவ்வியல் நூல்கள்,சமகாலத்துக் கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தமிழ் நூல்கள் என்னும் வகைமையில் நூல்கள் பதிப்பிக்கப்பட்டன எனலாம். மேலும் பழந்தமிழ் பதிப்புகள் முழுமைத்தன்மையிலும் பாடத்திட்டத்திற்கு தேவையான பகுதிகளைச் சிறு நூலாக வெளியிடுதல் என்னும் தன்மையிலும் பதிப்புகள் வேறுபட வந்துள்ளன எனலாம். இப்படியான பின்புலத்தில் பல வரலாற்றுத் தகவல்களை உட்கொண்டதாக வந்த முதல் பதிப்புகள் மறுப்பதிப்பு காணும் போது பல சிக்கல்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
- முதல் பதிப்பைத் தொடர்ந்து வந்த மறுப்பதிப்பில் பதிப்பிற்கு உதவிய புலவர்கள் மற்றும் புரவலர்கள் பெயர்கள் விடுப்பட்டுப் போதல்
- சொல்லடைவு, பொருளடைவு முதலியன சேர்த்துப் பதிப்பித்தால் பக்கங்கள் கூடும், அச்சுச் செலவு கூடும் போன்ற காரணங்களால் நீக்கிவிட்டு பதிப்பித்தல்
- மறுப்பதிப்பில் அமைப்பு முறையில் செய்துள்ள மாற்றங்களை (நீக்கப்பட்டவை,திருத்தப்பட்டவை,சேர்க்கப்பட்டவை) பதிவு செய்யாமல் போதல்
முதலியவற்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகின்றது. வரலாற்று ஆவணமாக திகழும் பதிப்பின் செயல்பாடுகள் குறித்த எந்த அக்கறையும் இன்றி மறுப்பதிப்புகள் வெளியிடப்படுகின்றன என்பதை பெருமாள் முருகன் அவர்கள் விரிந்து கிடக்கும் வெற்றுவெளி என்னும் உரைவழி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தக் காணலாம்.
ஒரு பதிப்பில் நூலுக்கு முன்னும் பின்னும் எவை எவை இடம்பெற வேண்டும், அப்படி இடம் பெறுபவற்றை எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்பவை பற்றியெல்லாம் இன்று யாரும் கவலைப்படுவதில்லை (பெருமாள் முருகன் 2016:13)
எனவே பதிப்பாசிரியர்கள் நூலைப் பதிப்பிக்கையில் கவனத்தோடும் நூலைப் பயன்படுத்துபவர்கள் எந்தப் பதிப்பை வாங்க வேண்டும் என்பதிலும் அக்கறையோடு செயல்படுதல் அவசியமாகின்றது.
………
21-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பதிப்புச் சூழல் பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்களின் பணிகளை தனிநிலையிலும் வகைமை நோக்கில் படைப்புகளை தொகுத்தளிக்கும் தன்மையிலும் மீண்டும் ஆவணமாக்கும் பெருமுயற்சியில் செயல்படுவதைக் காணலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் மதுரைத் திட்டம் (1998 தமிழ் இணையக் கல்விக்கழகம் (2001), செம்மொழித் தமிழ் மின் நூலகம் (2006) போன்ற முக்கியமான மின்நூலகங்கள் வழி பழந்தமிழ் பனுவல்களை பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல், பரவலாக்குதல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. இதே சூழலில், நிதானமாக ஆவணங்களை பயன்படுத்தும் நோக்கில் அச்சு வடிவிலும் பதிப்புகள் அவசியம் கருதி வெளியிடப்படுவதைக் காணமுடிகின்றது எனலாம். 2010-க்குப் பிறகு, பதிப்பு, பதிப்பாசிரியர், பொருண்மை அடிப்படையில் தொகுப்பாக்க முயற்சிகள் பல நிலைகளில் விரிவடைந்துள்ளன. அதன் அடிப்படையில் கால வரிசைமுறையில் பதிப்புரை மற்றும் முகவுரைகளின் தொகுப்பு முயற்சிகளை பின்வரும் நிலையில் வரிசைப்படுத்தலாம்.
- 1971 – தாமோதரம், யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு, விற்பனைக்கழகம்.
- 2004 – தாமோதரம், மறுபதிப்பு, ப.தாமரைக்கண்ணன், குமரன் பப்ளிஷர்ஸ்.
- 2009 – செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு, கா.அய்யப்பன்
- 2010 – சங்க இலக்கியப் பதிப்புரைகள், இரா. ஜானகி
- 2014 – சாமிநாதம், ப.சரவணன்
- 2017 – தாமோதரம், ப.சரவணன் (முழுமைத் தன்மையில்)
செவ்விலக்கியப் பதிப்புரைகளின் தொகுப்பு முயற்சிகள்:\
தாமோதரம் (1971)

1971 இல் இ.செல்லதுரை அவர்களை தொகுப்பு ஆசிரியராகக் கொண்டு, சி.வை.தா. அவர்கள் பதிப்பித்த பதிப்புரைகளின் தொகுப்பாக ‘தாமோதரம்’ யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது.பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரன் அவர்கள் ‘தாமோதரம்’ நூலை சிறப்பிக்கும் வகையில் தன் ஆதரவை தெரிவித்துள்ளதின் வழி சி.வை.தா. அவர்களின் ஆராய்ச்சித் திறனையும் ஆவணமாக்கும் சிந்தனையையும் அறிய முடிகின்றது.
“சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் உரைநடைப் பிரதிகளைத் தொகுத்து ‘தாமோதரம்’ என்ற பெயரில் வெளியிடப்போவது கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். 1945-லேயே இப்படிப்பட்ட தொகுதி ஒன்று வருகிற காலத்தையே எதிர்பார்த்திருந்தேன். இப்போது அது வருகின்ற செய்தி தமிழ் அன்பர் உள்ளத்தை எல்லாம் மகிழ்விக்கும்.” (தாமோதரம்:1 / தெ.பொ.மீனாட்சிசுந்தரன்,1970 )
சி.வை.தா. அவர்களின் முதல் பதிப்பு வேலையாக அறியமுடிவது 1854-இல் CL.W. Kingsbury என்ற பெயரில் வெளிவந்த ‘நீதிநெறி விளக்கம்’ என்பதாகும். ஆனால் இந்நூலுக்கு பதிப்புரை எழுதப்படவில்லை. அடுத்ததாக 1868-இல் சி.வை.தா. அவர்களின் ‘தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் பதிப்பு வெளிவந்துள்ளது. இந்நூலுக்கும் பதிப்புரை சி.வை.தா. அவர்களால் எழுதப்படவில்லை. 1881-இல் வெளிவந்துள்ள ‘வீரசோழியம்’ என்ற நூலில் மட்டுமே, முதன்முதலாக சி.வை.தா. அவர்களால் பதிப்புரை எழுதப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ‘தாமோதரம்’ நூலில் விசு வருடம் (1881) வெளிவந்த வீரசோழியம் பதிப்புரை தொடங்கி 1885-இல் வெளிவந்த தொல்காப்பியம் பொருளதிகாரம் பதிப்புரை முடிய ஏழு நூல்களின் பதிப்புரைகள் மட்டும் தொகுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. (சி.வை.தா. பதிப்பித்த நூல்களின் பதிப்புரைகள் மட்டும்) மேலும், ‘தாமோதரம்’ நூலில் பதிப்புரைகள் காலவரிசை மற்றும் பொருண்மை அடிப்படையில் வைக்கப்படவில்லை என்பதையும் காணமுடிகின்றது.
தமிழ்ப் பதிப்புச் சூழலில் முதன்முதலாக செய்யப்பட்ட பதிப்புரைகளின் தொகுப்பாக ‘தாமோதரம்’ அமைவதோடு, சி.வை.தா. அவர்களின் பதிப்புரைகள் பின்வரும் செய்திகளை உலகறிய எடுத்துக்காட்டும் ஆவணமாக விளங்கியிருப்பதையும் அறியமுடிகின்றது.
1. தமிழ் மொழியின் தனித்துவம்
2. தமிழ் மொழியின் தொன்மைத் தன்மை
3. எழுத்துப்பயிற்சி, வாசிப்புப்பழக்கம், அச்சு அறிமுகம் போன்றவைகளின் காரணமாக கல்விச்சூழலில், புதிய நூல்களை பதிப்பிக்க வேண்டியிருந்ததின் தேவை.
4. ஓலைச்சுவடியிலிருந்து அச்சாக்கம் செய்வதில் இருந்த சிக்கல்.
5. அச்சு பெறும் நூலின் முழுமைத் தன்மையை அடைய மேற்கொள்ளப்பட்டுள்ள அணுகுமுறைகள்.
6. பதிப்புப் பணியை ஊக்கப்படுத்திய தமிழ் அறிஞர்களின் மனப்பாங்கு.
மேலும், தாமோதரம் நூலின் மறுபதிப்பு 2004-இல் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக பேரா.ப. தாமரைக் கண்ணன் (ஒப்பீட்டில் உதவியவர்) அவர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது.
செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு (2009)
2009-இல் கா. அய்யப்பன் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு காவ்யா வெளியீடாக இத்தொகுப்புரை வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு முயற்சியில் சங்க இலக்கியம் மட்டும் மையமாகக் கொள்ளப்படவில்லை. சங்க இலக்கியம் என்னும் பகுதியில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என ஒன்பது நூல்களின் பதிப்புரை மற்றும் முகவுரைகள் “நற்றிணை நல்ல குறுந்தொகை” என்னும் பாடல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அட்டவணை, அடிக்குறிப்பு, தமிழ் எண்கள் என மூலநூலில் உள்ளது உள்ளபடி அமையாமல் வேறுப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. நூலில் தலைப்பேடு இடம்பெற்றுள்ள முறையிலும் ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை எனலாம்.
சங்க இலக்கியப் பதிப்புரைகள் (2010)
(முதல் பதிப்புகள் மட்டும்)
2010 இல் இரா.ஜானகி அவர்களின் தொகுப்பாக்க முயற்சியில், ‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ளது.1887இல் வெளிவந்த கலித்தொகை பதிப்புத் தொடங்கி 1940 இல் வெளிவந்த சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் (முழுமைப் பதிப்பு அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன) என்ற பதிப்பு முடிய பத்து நூல்களின் பதிப்புரை மற்றும் முகவுரைகள் கால வரிசை முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.அகநானூறு 1918 மற்றும் 1920களில் முதல் பதிப்புகளை கொண்டிருந்த போதிலும், அப்பதிப்புகளில் முகவுரை இடம்பெறாத காரணத்தால், 1923 இல் வெளிவந்துள்ள அகநானூற்றின் பதிப்பு முகவுரையே இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.1918 இல் வெளிவந்ததாக அறியப்பட்ட அகநானூறு பதிப்பின் தலைப்பேடு (Title Page) இந்நூலில் முதன்முதலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ நூலில் தொகுக்கப்பட்டுள்ள பழம் பதிப்புகளின் பதிப்புரை மற்றும் முகவுரைகள் யாவும், பெரிதும் எந்த வகையிலும் மாற்றம் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.

சாமிநாதம் : உ.வே.சா. முன்னுரைகள் (2014)
2014-இல், ப.சரவணன் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு, உ.வே.சா. அவர்களின் முன்னுரைகள், காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. சாமிநாதம் என்ற இத்தொகுப்பு நூல் உ.வே.சா. பதிப்பித்தவை, எழுதியவை, பின்னிணைப்பு (மறைவுக்குப் பின் வெளிவந்தவை,தொகுப்பு நூலில் இடம்பெற்றவை,பாட நூலுக்கு எழுதிய முகவுரை,பிறர் நூலுக்கு எழுதிய முகவுரை) என மூன்று பகுதிகளாக உ.வே.சா.வின் அனைத்து பதிப்புகளின் முகவுரைகளும் காலவரிசையில் அமைக்கப்படாமல் பொருண்மை அடிப்படையில் அமைந்த முழுமைப் பதிப்பாக வெளிவந்துள்ளது. உ.வே.சா. அவர்களின் ஒவ்வொரு நூலின் முகவுரைக்கு முன்பாக அந்தந்த நூல்களின் தலைபேடு நகல் வடிவிலும் அச்சு வடிவிலும் தரப்பட்டுள்ளது.உ.வே.சா.அவர்களின் முதல் பதிப்போடு பிற பதிப்புகளின் முகவுரைகளும் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் மூல நூலின் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்க விளக்கங்கள், குறியீடுகள் குறித்த விவரங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன .இத்தொகுப்பு நூலில் நூல் பதிப்பித்த ஆண்டு, நூற்பெயரின் உண்மைத்தன்மைகள் முதலியன பிழை களைய ஆராயப்பட்டு தொகுத்து அளித்துள்ள தன்மையை ப.சரவணன் அவர்களின் மொழிவழி அறியமுடிகின்றது.
ஐயரது நூல்கள் எவைஎவை என்பதைக்கூட ஆராய்ச்சி செய்தே கண்டறிய வேண்டியிருந்தது.எந்தெந்த நூல்கள் எவ்வெவ்வாண்டில் வெளியாயின என்பதைக் கண்டறிவதற்கே “தாளம் படுமோ தறிபடுமோ” என்றாயிற்று..(சரவணன் 2014:65)
சாமிநாதம் உருவாக பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் பெரும் உந்துதலாய் அமைந்ததோடு மட்டுமல்லாமல் நூலுக்கு விளக்கமான அணிந்துரை வழங்கியிருப்பதும் சிறப்பு. பதிப்பாசிரியர்களின் முகவுரைகளைத் தொகுத்துப் பார்ப்பதால் தமிழ்ப் பதிப்பு மரபு இலக்கிய வரலாற்றில் சமூக வரலாற்றில் ஏற்படுத்தும் நன்மை அளப்பரியது என்றும் சாமிநாதம் தொகுப்பை ஆதாரத் தரவுத் தொகுப்பு நூல் என்றும் பெருமாள் முருகன் அவர்கள் சிறப்பித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
தாமோதரம் (2017)

2017-இல் ப. சரவணன் அவர்களை பதிப்பாளராகக் கொண்டு, சி.வை. தாமோதரம் பிள்ள அவர்களின் பதிப்புரைகள், காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. ஏற்கனவே, ‘தாமோதரம்’ என்ற பெயரில் 1971 மற்றும் 2004 இல் பதிப்புரைகள் வெளிவந்திருந்த போதிலும் முழுமைத் தன்மையில் சி.வை.தா. அவர்களின் பதிப்பு ஆளுமையை, தமிழ்ப் பதிப்புச் சூழலில் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் தன்மையில் ப. சரவணன் அவர்களின் தொகுக்கப்பாக்க முயற்சி அமைந்துள்ளது.
- சி.வை.தா. அவர்கள் முதன்முதலில் பதிப்பித்த நீதிநெறி விளக்கம் (1884) நூலின் விவரம் தொடங்கி ஏழாம் வாசக புத்தகம் (1918) முடிய சி.வை.தா. பதிப்பித்த மற்றும் இயற்றிய நூல்கள் (பார்வைக்கு கிடைத்த ஏழு நூல்கள்) குறித்த அனைத்து விவரங்களும் ‘தாமோதரம்’ நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
- சி.வை.தா. பதிப்பித்த நூல்களில் கிடைத்துள்ள பதிப்புரைகள் முழுமைத்தன்மையில் காலவரிசை முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
- புதியதாகக் கண்டெடுக்கப்பட்ட சி.வை.தா. அவர்களின் சில பதிப்புரைகள் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு நூலின் பதிப்புரைக்கு முன்பாக; அந்தந்த நூல்களின் தலைப்பேடு தரப்பட்டுள்ளது.
- வாசகர்களின் வசதிக்காக, தாமோதரம் பதிப்பில் செய்துள்ள மாற்றங்கள், கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் முதலியனவும் நேர்மைத் தன்மையோடு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
முடிவுரை:
கல்விச்சூழலில் பதிப்பியல் தொடர்பான பாடத்திட்டம் பரவலாக இல்லை. பதிப்பு தொடர்பான ஆய்வுகளும் பெருகவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு எந்தப் பதிப்பை பயன்படுத்த வேண்டும்? யார் உரையை பார்க்க வேண்டும்? என்பதில் தெளிவான வழிக்காட்டுதல் இல்லை. சிறப்பாக காலச்சுவடு பதிப்பகம், புத்தகம் பேசுது, உங்கள் நூலகம் போன்ற இதழ்கள் பதிப்பியல் தொடர்பான முயற்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் பதிப்பில் வெளியான புதுமைப்பித்தன் கதைகள் நூல் செம்பதிப்பாக வெளியிடப்பட்டது போல் பழந்தமிழ் பனுவல்கள் சிறப்பான பழைய உரையுடன் கூடிய பதிப்புகள் அச்சு வடிவம் பெறுதல் அவசியமானதாக உள்ளது. இப்படியான சூழலில் பதிப்புரை/முகவுரை தொடர்பான ஆவணமாக்கல் முயற்சிகள் வரவேற்கத்தக்கன. பதிப்பியலின் நேர்மையை, பதிப்புச்சிக்கல்களை, பதிப்பு அரசியலை முன்னிறுத்துவனவாக பதிப்பாசிரியர்களின் மொழிகள் உள்ளன என்பதை அறிந்துக்கொள்ள இத்தொகுப்பாக்க முயற்சிகள் பெரும் உதவியாக இருக்குமெனில் இக்கட்டுரையின் நோக்கம் தெளிவடையும்.
பயன்பட்ட நூல்கள்:
1. அய்யப்பன்,கா. (பதிப்பாசிரியர்) செம்மொழித் தமிழ்நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு- தமிழ்ப் பதிப்பு வரலாற்று ஆவணம், 2009, காவ்யா.
2. இளங்குமரனார்.இரா., தமிழ் வளர்த்த தாமோதரனார், மீள்பதிப்பு, 2022, தமிழ்மண் பதிப்பகம்,சென்னை.
3. இளங்குமரன், இரா. சுவடிப்பதிப்பு வரலாறு,1990 தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
4. இளமாறன், பா. பதிப்பும் வாசிப்பும், 2008,சந்தியா பதிப்பகம்.
5. கோவிந்தராஜமுதலியார,கா.ர.,வேணுகோபாலப்பிள்ளை,மே.வீ.(ப.ஆ.)இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும், 1939, பவானந்தர் கழகம்.
6. சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும்,1940, சைவ சித்தாந்த மகா சமாஜம், சாது அச்சுக்கூடம், சென்னை.
7. சஞ்சீவி, ந. சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்,1973,சென்னைப் பல்கலைக்கழகம்.
8. சம்பந்தன், மா.சு. அச்சும் பதிப்பும்,1997, மணிவாசகர் பதிப்பகம்.
9. சரவணப்பெருமாளையர்,திருமுருகாற்றுப்படை மூலபாடம், 1834, கல்விவிளக்கவச்சுக்கூடம், சென்னபட்டணம்.
10. சரவணன்,ப.(பதிப்பாசிரியர்), சாமிநாதம் (உ.வே.சா. முன்னுரைகள்),2014,காலச்சுவடு.
11. சரவணன், ப. (பதிப்பாசிரியர்), தாமோதரம் (சி.வை.தா. பதிப்புரைகள்) 2017, காலச்சுவடு.
12. சீனிவாசன்,இரா. இலக்கிய வரலாற்று வரைவியல்,2022,பரிசல்.
13. தமிழ்ப் புத்தக உலகம், (1800-2009),2009, புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலர்.
14. தாமரைக்கண்ணன், ப. (ஒப்பீட்டில் உதவியவர்) பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்புரைகளின் தொகுப்பு தாமோதரம், முதல் பதிப்பு :1931 (மறுபதிப்பு) 2004, குமரன் பப்ளிஷர்ஸ்
15. தாமோதரம் பிள்ளை,சி.வை. சி.வை. தாமோதரம் பிள்ளை எழுதிய (பதிப்புரைகளின் தொகுப்பு), தாமோதரம்,1971, யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு,விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம்.
16. நொச்சி –அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் : ஆய்வு – ஆவணம்,2014, பரிசல் வெளியீடு. 16. பெருமாள்முருகன், பதிப்புகள் மறுபதிப்புகள், 2016, காலச்சுவடு.
17. விசாலாட்சி, நா. சங்க இலக்கியப் பதிப்புகள்,1989, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம்.
18. வெங்கடேசன், இரா. தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், 2011, இராசகுணா பதிப்பகம்.
19. ஜார்ஜ், பு. பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப் பணி,2002, தி பார்க்கர்.
20. ஜானகி ,இரா.(தொ.),சங்க இலக்கியப் பதிப்புரைகள்,2010, பாரதி புத்தகாலயம்.
எழுதியவர் :
முனைவர் இரா. ஜானகி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை, வடபழனி வளாகம்
எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.