இப்புவிக் கோளத்தின் சருமத்தில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்ப்புடன் உள்ளது. புழுக்கள் நூற்புழுக்கள் பாக்டீரியா பூஞ்சைக்காளான் என்பன இப்பரப்பில் தம் வாழ்வைப் பெருக்குகின்றன. அவை சிலவற்றை நொறுக்கித் தள்ளுகின்றன. சிலவற்றை கட்டியெழுப்புகின்றன. அவற்றில் உயிர்த்திருப்பவை மற்றும் மடிந்தவையால் தாவரங்கள் உரம் பெற்று வாழ்கின்றன. இந்த பூமி மேலடுக்கின்றி நமக்கு ஒன்றுமில்லை. தூய மணலை எண்ணிப் பார்க்கின்றேன். குவிந்த என்கைகளில் அதனை வைத்துக் கொள்ள விரும்புகின்றேன். ஒவ்வொன்றும் தனித்துவமிக்க கல்லாக மணல் மணிகள் பிரகாசிக்கின்றன. தகிக்கின்றன. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஈர மண் கட்டியை கையிலெடுக்குமுன் தயங்குகின்றனர். அது ரகசிய வாழ்வு நிரம்பியிருப்பதால், அவர்களைக் கவலைப்பட வைக்கிறது. இருண்ட ஈரப்பதமான மணிகளுக்குள்ளே ஏதோவொன்றிருக்கிறது, அது அவர்களை ஊக்கமிழக்க வைக்கிறது, அமைதியிழக்கச் செய்கிறது. அங்கே என்ன இருக்கிறது? அவர்கள் வினவுகிறார்கள்.
What the stones Remember/ Patrick Lane, pp.32
கனடாவின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான பாட்ரிக்லேன் (1939-2019) கனடாவின் இருபெரும் இலக்கிய ஆளுமைகளான மார்கரெட் அட்வுட் மற்றும் அலீஸ் மன்றோவால் பாராட்டப் பெற்றவர். கொந்தளிப்பான வாழ்க்கை நெருக்கடிகளால் பந்தாடப் பட்டு, குடியிலும் போதை மருந்திலும் தன் உடலையும் ஆன்மாவையும் இழந்து, மீண்டு வந்தவர். அப்படி அவர் மீண்டு வந்தபோது எழுதிய நினைவுக் குறிப்புகள் தான் What the stones Remember என்னும் புத்தகம்.
நீங்கள் மீண்டு வந்தபோது நீங்கள் புண்படுத்தி மறந்துபோனவற்றையும் உங்களால் இழைக்கப்பட்ட தீங்கால், உங்களை மன்னிக்க இயலாதுபோனவர்களையும் கண்டறிந்தீர்களா? அப்படியானால் இவை உங்களுக்குத் தடைகளாக இருந்தனவா? என மார்கரெட் அட்வுட் முன்வைக்கும் கேள்விக்கு, லேன் அளித்திடும் பதில் நெகிழ வைப்பதாகும்.
நண்பர்கள், குடும்பம், ….சக பணியாளர்கள் என பட்டியல் நீண்டது, ஆனால் நான் பார்க்கச் சென்ற ஒவ்வொருவரும் என் மன்னிக்கும் கோரிக்கைகளையும் அன்பையும் ஏற்றுக் கொண்டனர். இறந்தவர்களிடம் மன்னிப்புக் கோருவதுதான் சிரமமாயிருந்தது. அங்கும் கூட என் தாய்- தந்தையரின் சகோதரரின் கல்லறைகளில் மீட்பையும் சமாதானத்தையும் கண்டேன். நேரியதன்மை பணிவின் மூலம் குணப்படுத்தல் கண்டறியப்பட்டது.
20 கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள் நாவல் என்று வெளியிட்டுள்ள பாட்ரிக் லேனுக்கு, உடல்- உள சிகிச்சைக்குப் பின் ஆன்மாவை சீர் செய்வதாக இந்நூல் அவருக்கு அமைந்தது. நீண்ட உரைநடை கொண்ட பகுதிகளாக, ஒவ்வொன்றின் இறுதியிலும் கவிதையுடன் முடித்திருக்கிறார்.
என் வாழ்வை நிரந்தரமாக மாற்றிப் போடும் நிகழ்வுகள் நடக்க இருந்தன. ஆனால் எழுத்து தங்கியிருந்தது. உயல்நிலைப் பள்ளி தாண்டி எனக்கு ஆசிரியர்களோ, வழிகாட்டிகளோ, கல்வியோ எனக்கில்லை. ஆனால் எல்லாக் கலைஞர்களும் பெற்றிருந்தது எனக்கு இருந்தது. எனக்குள்ளிருந்து நான் கேட்ட குரலுக்கு பீடிப்புத் தன்மையதானதும் முழுக் கடப்பாட்டானதும் இருந்தது. ஆலைகள், முதல் உதவி, வறுமை, போராட்டம், ஆனந்தம்- கசப்புணர்வு என்ற காலகட்டத்தை எண்ணிப் பார்த்தேன். என்னை இயங்க வைத்திருடும் ஒரே விசயம், என்னை உயிர்ப்புடன் வைத்துள்ள ஒரே விசயம் கவிதை என்றறிவேன்.
50 ஆண்டுகளுக்கு மேலாக கவிஞராக விளங்கி வந்த கனடாவின் உயரிய விருதுபெற்றுள்ள பாட்ரிக் லேனின் தந்தை கொலை செய்யப்பட்டார் தாய் புற்றுநோயால் மடிந்தார். ஒரு சகோதரர் கோர மரணம் அடைந்தார். பாட்ரிக் லேனே பலமுறை தற்கொலைக்கு முயன்றவர். கைவிடப்படல், புறக் கணிப்பு, அவமதிப்பு, திடீர் மரணம், கொலை, விவாகரத்து, குடிப்பழக்கம் மற்றும் சகோதரர்கள், குழந்தைகள், மனைவியர், தாய், தந்தையரின் அளவிட முடியாத இழப்புகள் நிரம்பிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். திரும்பிப் பார்க்கையில், அவ்விழப்புகள் என் எல்லா எழுத்திலும் இருண்ட உட்பிரதியாக இருந்திருப்பதை அறிகிறேன். ஆனால் அவற்றை இந்நூலில் இடம் பெறச் செய்திருப்பதால், அச்சுமைகளிலிருந்து விடுபட்டிருப்பதாக உணர்கிறேன். 2001இன் ஆரம்ப மாதங்களில் நான் எழுதியபோது, சின்னச் சின்ன விசயங்கள் எனக்கு நிகழத் தொடங்கின.
இரண்டாண்டுகளுக்கு முன் அவரது எதிர்ப்பாற்றல் கடுமையாக பாதிப்புறவே, மருத்துவர்கள் திகைத்துப் போயினர். பத்து நாட்களே வாழ்வார் எனக் குறித்துவிட்டனர் என்பதை லேனே ஒரு நேர்முகத்தில் குறிப்பிட்டிருந்தார். (மார்ச், 2018 Calgaryheaald.com நேர்முகத்தில்) லேன் 2019 வரை உயிர் வாழ்ந்தார். அவரது கவிதைகளில் ஒன்று.
சூரியப் பயணம் வருகின்றது.
இடது கை ஆட்காட்டி விரலால் தட்டச்சு செய்கிறேன்
இன்று கவிதை மிகவும் மெல்ல வருகின்றது.
ஒரு நேரத்தில் ஓர் அட்சரம், ஒரு வார்த்தை, ஒரு வரி. இது
வல்லது எது.
நெருக்கமான ஊர்தலுக்குப் படிமங்கள் எவ்வளவு மந்தமாகின்றன என ஆச்சரியப்படுகிறேன்
ஒவ்வொரு வார்த்தையும் கல்லிலிருந்து எட்டிப் பார்க்கும் கலமாந்தர்.
இக்குளிர்கால மீன்கள் ஆவிகள், குளத்தின் கச்சித எண்ணங்கள்
என் வாயிலாக காலம் கடந்துபோகையில், இந்நிசப்பத்தை நேசிக்க முயலுகிறேன்
எதையேனும் ஆழ்ந்துணர்வது அரிது. நான் அனுமதித்தால் என் வாழ்க்கை ஒரு விருந்து.
மெல்ல விழும் மழை ஓய்வதில்லை. வேளைக்கு ஒரு துளியாக பனிக்கட்டியை உணர்கிறது.
இப்போதெல்லாம் என் உடல் இயக்கமிழந்து போகிறது.
என் வலக்கையை உயர்த்த முடியவில்லை.
மனங்களில் வாழ்ந்தபோது நானிருந்ததுபோல மெலிந்துள்ளன என் கவிதைகள்.,
உயர்மட்ட பனிகளிலிருந்து கீழே வந்தபோது ஏனைய நம்ப முயன்றேன்.
மரங்களின் பாதுகாப்பிலிருந்து நீரைக் கவனித்தேன் நெடு
அது எத்தகைய தினமென்று காணவைத்தது நேரமாக உயரும் குளத்துமீன், சிற்றலைதான்.
தோட்டம், குளம், மழை, பயணத்திலிருந்து மீளல், உடல் இயக்கம் இழந்து போதல், கவிதை எழுத முயலல் எனச் சிறு சிறு விசயங்கள் அடுக்கடுக்காக இடம் பெற்று, ஒரு நம்பிக்கைக் கீற்றுக்கான எதிர்பார்ப்பை மறைமுகமாக உணர்த்துகிறது இக்கவிதை. லேனுக்கு இது முக்கியமாக கவிதை உயர்நிலைப் பள்ளி படிப்பே அரை குறையாக முடிந்த நிலையில், மர அறுவை ஆலைப் பணியிலிருந்து முதலுதவி சிகிச்சையாளர்வரை பல்வேறு பணிகள் செய்து, கவிஞரான பின் பல்கலைக் கழக பேராசிரியராகி, சக பல்கலைக்கழக பேராசிரியை லோர்னாவை மணந்து கொண்ட பாட்ரிக் லேன், எது எப்படியாயினும் மொழியும் கவிதையும் மட்டும்தான் தான் சாரம், தன்மையும் என்று உணர்ந்து வந்துள்ளார். அவரது சகோதரர் ரெட் லேனும் கனடாவில் முக்கிய கவிஞர்.
எனக்கு 19 வயது. என்னுடன் என் வார்த்தைகள் இருந்தன. சப்தம் என்னுடன் இருந்தது. உரத்து வாசித்தேன் தனியே வாசித்தேன். வார்த்தையாக விரும்பினேன். உணவு- தூக்கத்தை விடவும் என் மனைவி- மக்களை விடவும் கவிதை எனக்கு முக்கியமானதாயிருந்தது. இவ்வுலகில் எனக்கான இடத்தை மொழியுடன் கண்டேன். மொழியினால் என்னைக் குணப்படுத்திக் கொள்ள இயலும், என்னைச் சூழ்ந்திருப்பவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதில் உறுதியாயிருந்தேன். வீடு எரிந்துபோனால் எனக்கு முக்கியமாயிருந்தது. மறுநாள் தீப்பிழம்புகளை எப்படி விவரிப்பேன் என்பதுதான். நேசம் எனக்கு கற்பிதமான இடங்களில் இருந்ததே அன்றி, நிஜ உலகில் அல்ல. மரணத்தின் ஒரே ஆதிக்கம் கவிதையில்தான்.
பாட்ரிக் லேன் பிரச்சனைகளைப் பேசவில்லை, கருத்துகளை விவாதிக்கவில்லை. தத்துவத்திற்குள் செல்வதில்லை. இருந்தும் இன்றைய வாசகனுடனும் அவரால் தொடர்புறுத்த, உரையாட முடிகிறது. நெருக்குண்டு தவித்து அல்லாடி மீண்டுவந்த அவரது மனமும் இருதயமும் ஆன்மாவும் விசாலமடைந்து விகசிப்புக் கொள்கையில் யார்தான் கவனிக்காது, கேட்காது இருக்க முடியும்..
கவிஞராகவே எதனையும் அணுகுகின்ற அவர், டி.எச். லாரன்ஸின் ஒரு படிமத்திலிருந்து அற்புதமான சித்திரத்தை தீட்டி விடுவார்.
நான் எனக்கான மரணக் காலத்தை நிர்மாணித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டி.எச். லாரன்ஸ். ஞாபகமறதியை நோக்கிய என் பயணத்தில் எனக்கு அது தேவைப்படும் என்கிறார். இலையுதிர்காலம், நிஜமானதும் கற்பிதமானதுமான மரணத்தின் பருவம். ஏழாண்டுகளுக்கு முன் கருப்பு வால்நட்டிலிருந்து எனது அம்மாவின் சவப் பெட்டியைச் செய்தபோது புரிந்து கொண்டேன். என் தாய் பயணிக்க சிறியதொரு மரணக் கப்பல். சவப் பெட்டியின் மேலே மெதுஸா போன்ற சுருள்களையுடைய பெண் தலையின் சிற்பத்தை ஒட்டியிருந்தேன். …… என் சகோதரன் மைக்கால் செதுக்கப்பட்டது. இருளில் அவளது பயணத்திற்கு வெளிச்சம்தர, மூடியினுள்ளே தீக்கல்லினை ஒட்டி வைத்தேன். அதனைச் செய்யும் என் வேலையை எளிதாக்கியது. கருப்புக் கட்டையினை மணல் பூசி எண்ணெய் தடவி பிரகாசமாக்கி என் தந்தையின் கல்லறை அருகே வைத்ததும், முழுமையினைக் கண்டேன்.
நான் குழந்தையாயிருந்ததுதொட்டே கவிஞராகவே எப்போதும் விரும்பினேன் என்று தன்னை வெளிப்படுத்தும் பாட்ரிக்லேன், கவிஞராகவே வாழ்ந்துள்ளார். அதுதான் அவரது வாழ்வில் பிரச்சனையும் கூட.
அதிர்ச்சிகள் அடுக்காக வந்து நிலைகுவைய வைத்து, வேதனைகள்- கொந்தளிப்புகள், விரக்தியிலிருந்து விடுபட்டு, தான் எழுப்பிய தியானத் தோட்டத்தில் புழுக்கள்- பூச்சிகள், வண்டுகள் -பறவைகள், கூழாங்கள்களிடத்தில் ஒன்றிவிடும்போது, மழை விழும் வேளையில் அவர் பதிவு செய்கிறார்.
இம்மழைக்கு ஒரு தந்தை உண்டா? அல்லது இம்மழைத்துளிகளைப் பெற்றெடுத்திருப்பது யார்? என்னிடம் பதில் இல்லை, ஆனால் என் தோட்டத்தின் ஆப்பிள் மரத்தினருகே நின்று, மழைக்குள் என் முகத்தை எட்டிப் பார்க்க வைத்து, அதன் சின்னஞ்சிறு கரங்களை என் சருமத்தில் உணர்ந்தேன். அதனை உணர்ந்து கொள்வதே போதுமானதாயிருக்கலாம். வோர்னாவுடன் சேர்ந்து நின்று, நாங்கள் இணைந்துள்ள வாழ்வையும் மழையையும் போற்றுவது போதுமானதாயிருக்கலாம்.
பாட்ரிக் லேன் கனடா தேசத்துக் கவிஞர் கொந்தளிப்பான வாழ்விலிருந்து கவிதையிடம் புகலிடம் கோரியவர். கவிதை அவருக்கு மருந்தாகி, குணப்படுத்தி சிகிச்சை அளித்ததாக உணர்ந்தார்.
ஆதாரங்கள்:
- What the Stones Remember, Patrick Lane Trumpeter, 2005.
- Confessions of an Indiosyncratic Hind Margaret Atwood in Conversation with patricklane, Deccan Chroniel, 30 October 2005
- Reading Magic/ canlit.ca.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.