பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 4: சுழித்தோடும் கதையாறு | டி. செல்வராஜ் (D.Selvaraj) | "மலரும் சருகும்" நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன்

சுழித்தோடும் கதையாறு

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4

வரலாற்றை முன் உணர்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் உலகைக் கவனிக்கிறார்கள். உலகியல் மாற்றங்கள் இப்படி நடக்க சாத்தியமிருக்கிறது என்பதைக் கண்டுணர்கிறார்கள். அதிலும் குறிப்பாக புனைவெழுத்தாளன் தன்னுடைய படைப்பிற்குள் இதனை பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நெற்களஞ்சியம் என விதந்தோதப்படும் கீழத்தஞ்சையின் அழியாப் பெருந்துயராக காலத்தின் பக்கங்களில் படிந்திருக்கிறது கீழவெண்மணி. 1968ல் நடந்த வரலாற்றியல் பெருந்துயரம் வெண்மணி. அரைப்படி நெல்மணி கூலியாக கூடக் கேட்டதாலே வெண்மணி வெந்தது என்பது அரைகுறைப் புரிதல் மட்டுமே. நில உடமையாளர்களிடம் மூர்க்கமாகியிருநந்த சாதிய வன்மமும் சேர்ந்துதான் துள்ளத்துடிக்க 44 விவசாயத் தொழிலாளிகளின் உதிரத்தைக் குடித்தது. இந்த சரியான புரிதல் மிகக் கால தாமதமாகவே தமிழ்ச்சமூகத்திற்கு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக களத்தில் சண்ட மாருதம் செய்த தோழர்களுக்கே மிகக்காலதாமதாகவே புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

நேற்று வரையிலும் தலை வணங்கி இடுப்பில் துண்டு கட்டிக் கிடந்த மனிதக்கூட்டம் எப்படி தலை நிமிர்ந்தது. இந்த மனத்துணிச்சலும் தைரியமும் விவசாய சங்கமும், செங்கொடியும் கொண்டு வந்த சேர்த்த காலத்தின் காட்சிகள். இதனை நீங்களோ அல்லது நானோ தோழர் டி.செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் நாவலை வாசித்திருந்தால் நிச்சயம் நம்மிடம் புரிதலின் மொழி கைவசமாகியிருக்கும். அப்போது களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அல்லது அரசியல் இயக்கங்கள் மலரும் சருகை கவணித்திருந்தால் கூட இப்போது வந்திருக்கும் கீழத்தஞ்சையின் இயக்கத்திற்குள் உறைந்திருக்கும் கலாச்சார புள்ளிகளை கண்டு உணர்ந்திருக்க முடியும். காலத்தைத்தான் கலைஞர்கள் கண்டுணர்ந்து படைப்பாக்கியிருக்கிறார்கள். கீழதஞ்சையில் விவசாய எழுச்சியின் வீச்சு அங்கு மட்டும் பரவியிருக்கவில்லை. அது நிலம் கடந்து தென்கோடி நிலமான நெல்லை கிராமங்களிலும் படர்ந்திருந்தது. அதற்கான வரலாற்று சாட்சியமே மலரும் சருகும். ஒரு விதத்தில் வெண்மணியை முன் உணர்ந்த வரலாற்றுப்பிரதி எனவும் டி.செல்வராஜ்-ன் மலரும் சருகும் நாவலை குறிப்பிடலாம்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 4: சுழித்தோடும் கதையாறு | டி. செல்வராஜ் (D.Selvaraj) | "மலரும் சருகும்" நாவல்

வெண்மணிப் பெருந்துயர நிகழ்வு நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே 1966ல் டி. செல்வராஜ் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஒருவிதத்தில் அப்போது தமிழகத்தின் கிராமங்களில் உழுகுடிச் சமூகம் தன்னுள் உரம் பெற்று வளர்ந்த கதையையும் சேர்த்தே எழுதியிருக்கிறார் எழுத்தாளர் டி. செல்வராஜ்.

இதர இலக்கிய வடிவங்களைப் போன்று ஒரு மனிதனுடையவோ, ஒரு சம்பவத்தினுடையவோ சிறு பகுதியையோ அல்லது ஒரு கோடியையோ சித்தரிப்பதன்று நாவல் இலக்கியம். அது அந்த சமுதாயத்தினுடைய மாற்றத்தையும் இயக்கத்தையும் முழுமையாகச் சித்தரிக்கும் தன்மையும் வன்மையும் கொண்டது. நாவல் இலக்கியத்தின் வரையறையாக இதுவே ஏற்கப்பட்டிருக்கிறது. மனிதனது வாழ்க்கை, அவனது குடும்ப உறவு, பண்பாடு, அன்பு, பாசம் அனைத்தும் பொருளாதார, சமுதாய, அரசியல் விளைவுடன் இரண்டற பின்னிப் பினைந்து கிடக்கின்றன. இந்தப் பின்னல் அசேதன நிலையில்லாதது. சதா தங்களுக்குள் முரண்பட்டு மோதி வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கின்றன. நம்முடைய கிராம வாழ்க்கையும் இந்த முரண் மோதல்களுக்கு அப்பால் நிச்சயம் இருக்க முடியாது. இந்திய விடுதலைக்குப் பிறகான ஒரு தென் தமிழகத்தின் கிராம விவசாயக் குடிகளின் வாழ்க்கை வழியாக இதனை பரிசோதித்து பார்த்த கதையிது..

தோழர் டி.செல்வராஜ் தன்னுடைய முதல் நாவலான மலரும் சருகும் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் சிறிய பகுதியிது. தன்னுடைய முன்னுரையில் எதனை முன்வைத்தாரோ அதனையே கச்சிதமாக நாவல் முழுக்க எழுத்தாக்கியிருக்கிறார். இந்த நாவலை சோசலிச யதார்த்த நாவல் என்றே இலக்கிய உலகமும் ஆய்வாளர்களும் நாவல் முதலில் பதிப்பிக்கப்பட்ட 1966ல் மதிப்பிட்டார்கள். எழுத்தாளர் டி.எஸ்-ம் அப்பிடி மதிப்பிடப்படுவதையே விரும்பினார். அவர் ஏற்றுக் கொண்ட இலக்கிய கொள்கையும் கோட்பாடும் அதுதான். அதனை அவர் தன்னுடைய எல்லாப் படைப்புகளின் இலக்கியக் கோட்பாட்டு பின்புலம் இதுதான் என்பதில் உறுதியாகவும் இருந்தார். சாகித்ய அகாதமி விருது பெற்ற அவருடைய நாவலான தோல் வரையிலும் சமரசமின்றி இதில் உறுதியுடன் இருந்தார். நான் அவருடைய தோல் நாவல் குறித்து எழுதிய கட்டுரையில் தோழர் டி.செல்வராஜ்.. தன்னுடைய தோல் நாவலை சோசலிச யதார்த்த நாவல் என்றே எழுதியிருக்கிறார்.

தோல் | T.Selvaraj | Tamil novel | Sahitya academy award winning novel |

ஆனாலும் இது தமிழின் மிக முக்கியமான தலித் நாவல் என்று எழுதியிருந்தேன். கட்டுரை வந்த நாளில் என்னுடன் அலைபேசியிலும், நேரிலும் தர்க்கம் செய்தார். அவரவர் நிலைகளுக்கான நியாயங்களை இருவரும் தீவிரமாக முன் வைத்தோம். தோல் தமிழில் எழுதப்பட்ட பாட்டாளி வர்க்கமாக உருவாகியிருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வினைப் பேசிய தலித் நாவல் என்றே அந்த உரையாடலை நிறைவு செய்து அவரிடமிருந்து விடை பெற்றேன். இங்கே சாதியே வர்க்கமாக வடிவம் பெற்றிருக்கிறது எனும் என் தரப்பு நியாயத்தை அவர் முழுமையாக ஏற்கவில்லை. அது பகுதி உண்மைதான் என்றார். தோழர் முழுமையில் பகுதியைப் பார்ப்பதும், பகுதியை முழுமையை நோக்கி நகர்த்துவதையும் மார்க்ஸிய அழகியல் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது இல்லையா என்றேன். சின்னப்பயலே எனக்கு வகுப்பு எடுக்குறியா எனச் செல்லமாக கடிந்து கொண்டதோடமல்லாமல் என்னை மெதுவாக தன்னோடு அணைத்துக் கொண்டார்.

நான் இத்தனை நீளமாக அந்த சம்பவத்தை நினைவினில் இருந்து எடுத்துச் சொல்வதற்கான மிக முக்கியமான காரணம் இந்தக் கட்டுரையைப் படித்த மறுநிமிடமே தோழர் இப்போது இருந்திருந்தால் என்னுடன் உறுதியாக சண்டைக்கு வந்திருப்பார். தோழர் காலமாகியிருப்பதால் எங்கள் இருவருக்குமான உரையாடல் நிகழாது எனும் உத்ரவாதமெல்லாம் இல்லை. நிச்சயம் அவர் என்னவெல்லாம் தன் நிலை தர்க்கமாக முன் வைப்பார் என்பதை நானறிவேன். அந்த தர்க்க உரையாடல் நிச்சயம் நடக்கவே செய்யும். மலரும் சருகும் நாவலை தமிழின் முதல் தலித் நாவல் என நான் உறுதியிலும் உறுதியாக மதிப்பிடுகிறேன். பூமணியின் பிறகு நாவலை முதல் தலித் நாவல் என்கிறார்கள். பூமணியின் பிறகு நாவலுக்கு காலத்தால் முந்தையது டி.செல்வராஜ் எழுதியிருக்கும் மலரும் சருகும் நாவல். பின்னாட்களில் காலம மலரும் சருகும் நாவலையே தமிழின் முதல் தலித் நாவல் என்று மதிப்பிட்டுள்ளது. அதனை தோழர் டி.செல்வராஜ் உயிருடன் இருந்த நாள் வரையிலும் முழுமையாக ஏற்கவுமில்லை. மறுக்கவுமில்லை. காலம் தான் எல்லாவற்றையும் தன் பக்கங்களில் எழுதிப் பார்க்கிறது.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 4: சுழித்தோடும் கதையாறு | டி. செல்வராஜ் (D.Selvaraj) | "மலரும் சருகும்" நாவல்
எழுத்தாளர் டி.செல்வராஜ்

அறிவர் அம்பேத்கரின் பனுவல்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியில் கிடைத்த பிறகுதான் தமிழ் இலக்கிய உலகில் தலித் எனும் சொற்பதம் கவனம் பெற்றது. ஊரும் சேரியும் எனும் கன்னடப்பிரதியும் கலர் பார்பிள் போன்ற கருப்பிலக்கியப் பிரதிகளும் தமிழ்ப்படுதப்பட்டதும் அப்போதுதான் நடந்தது. தலித் அரசியல், தலித் இலக்கியம் போன்ற சொற்பதங்களை வெறும் அடையாள அரசியல் சொல்லாடல்களாக சுருக்கி மதிப்பிடக்கூடாது என்பதனையும் மலரும் சருகும் நாவலின் வாசிப்பின் வழியாக உணர முடியும். நாவலின் முதல் சொற்றொடர் இப்படித் துவங்குகிறது. ‘“என்னவே, சுதந்திரம் வந்திட்டா மேல் குலம் கீழ் குலமிங்கிறது எல்லாம் இல்லாமல் போயிருமோ?. காலை இணுங்கி கையில குடுத்துப்புடுவோம். எச்சரிக்கையா புழைச்சுக்கீங்க.” மாடசாமிக் குடும்பனைப் பார்த்து இவ்வாறு உறுமிவிட்டு மீசையைத் தடவி விட்ட வண்ணம் நின்றார் மூக்கையாத்தேவர். “ இந்தக் கிழட்டுப்பய என்னவே செய்வான். அவனுக்குன்னு வந்து பிறந்திருக்கே ஈசாக்குன்னு ஒரு பய. அது எட்டு வீட்டுக்குப் போனாலும் எழவு வீட்டுக்குப் போனாலும் சிலுவைய பார்க்கிறவுக நெத்தில இழுத்துக்கிட்டு அலையுது.” அப்பிடின்னாரு பிள்ளைவாள். . இப்படி துவங்கிய நாவலின் சொற்கள் காலத்தினைக் கட்சிதமாக காட்சிப்படுத்துகிறது. அங்கு எடுத்த கதையின் சீரான ஓட்டம் நாவல் நிறைவடையும் இருநூறாவது பக்கம் வரையிலும் நிற்கவேயில்லை.

பின் நவீனத்துவம் இலக்கிய வெளியில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட தொன்னூறுகளின் துவக்கத்தில் வாசகனுக்குள் விரிவான, வாசகப்பரவசத்தை ஏற்படுத்த வேண்டும் அதுவே இலக்கியப்பிரதி. அதனை பிளஷர் ஆப் டெக்ஸ்ட் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். என் வாசிப்பு புரிதலில் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் வாசகப் பரவசத்தை ஏற்படுத்திடும் முக்கியமான நாவல் மலரும் சருகும். கதையை கலையாக்கத் தெரியாதவர்கள் முற்போக்காளர்கள் என்பதை புறங்கையால் தள்ளி முன்னேறிய படைப்பு மலரும் சருகும்.

நாவலின் முதல் வாசிப்பில் இது மாடசாமிக் குடும்பனின் வம்ச சரித்திரம் எனும் புரிதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மாடசாமி ஆதிக்க சாதியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் 1920களின் மனிதன். சாதிய துவேஷத்தில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சமூகம் தேர்வு செய்த கருவி கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாவது எனும் நடைமுறை. அதன் அச்சு அசலான பாத்திர வார்ப்பு ஈசாக். மாடசாமியைப் போல அவன் வளையவில்லை. நிற்பதா அல்லது உட்காருவதா எனும் தடுமாற்றத்திலிருக்கிறான். அதே நேரத்தில் சாதிய மனோபாவத்திற்கு எதிராக குரல் எழுப்பவுமில்லை. ஈசாக் 1940களின் மனிதன். தடுமாற்றத்தில் இருந்த இரண்டாம் தலைமுறை மனிதர்களின் அடையாளம் ஈசாக். தந்தையும் மகனும் தங்களுடைய நிலத்தை அடமானம் வைப்பதற்காக நில உடமையாளரான காந்திமதி நாத பிள்ளையின் வீட்டிற்கு போகிற போது மாடசாமி நிலப்பிரபுவின் காலுக்கு கீழே உட்காருகிகிறார். ஈசாக்கிற்கு அப்படி சட்டென அமர முடியவில்லை. ஆனாலும் அதே நேரத்தில் ஏம்பா நீ இப்பிடி வளைஞ்சு குடுக்கிறன்னும் கேட்கவில்லை. ஆனால் மூன்றாம் தலைமுறையான மோசே ஏம்பா அப்பனும் பிள்ளையும் அடிமை சாசனம் எழுதிக்குடுக்கிறீங்களே. இது சரியில்லை என்கிறான். நாவலின் மிக முக்கியமான நிகழ்வான கள்ள மரக்கால் ஒழிப்புப் போராட்டம் எனும் கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறவனாகவும் வருகிறான். முத்திரை மரக்கால் போராட்டம் அல்லது கள்ள மரக்கால் ஒழிப்பு போராட்டம் எனும் அறுபதுகளின் விவசாய எழுச்சிக்கான வரலாற்றுப் பதிவாக மலரும் சருகும் நாவலை வடித்திருக்கிறார் டி. செல்வராஜ். சூழல் மனித மனங்களுக்குள் நிகழ்த்திய மாற்றங்களின் சாட்சியே இந்த மூன்று கதபாத்திரங்களும்.

மோசே மூர்க்கனாகவும் சாதிய வன்மத்தை கேள்வி கேட்பனாகவும் வருகிறான். பட்டாளத்து ரெங்கன் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞன். ரங்கனும் மோசேவும்ம் சேர்ந்து அந்த கிராமத்து இளைஞர்களையும் யுவதிகளையும் சங்கமாகத் திரட்டுகிறார்கள். முரடனாகவும், பெண் சகவாச விரும்பியாகவும் இருந்தவன்தான் ரெங்கன். ஒரு அடிதடியயில் சிறைச்சாலை சென்று திரும்புகிறான். அப்போதைய சிறைச்சாலைகள் மார்க்ஸியம் கற்றுத்தரும் கலா சாலைகளாக இருந்திருக்கின்றன. அங்கு சென்று திரும்பிய ரெங்கன் புத்தகங்களோடு வருகிறான். சாதி கடந்த வர்க்க அரசியலை பேசுகிறான். உழுகுடிகளை சங்கமாக திரட்டுகிறான். சங்கத்தில் பள்ளர், பறையர், மறவர் என எந்ந பேதமுமின்றி சங்கமாகின்றனர். படிப்படியாக ஊரின் எல்லா விவசாய நிலங்களையும் தன் வசமாக்கிய காந்திமதி நாத பிள்ளையால் இதனை ஏற்கவே முடியவில்லை. எப்படியாவது விவசாயத் தொழிலாளிகளிடம் சாதி வேறுபாட்டை மூர்க்கமாக்கிடும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே கிடக்கிறார். மோசேவின் திருமணத்திற்கு ஏற்பட்ட தடையை மிக எளிதாகக் கடந்துபோகும் சூழலை உருவாக்குகிறார் ரெங்கன். அந்த ஊர் அதுவரை அறிந்திருக்காத பதிவுத் திருமணத்தை நடத்தியும் வைக்கிறார். ஊரை மீறி நடந்த திருமணம் செல்லாது எனச் சொல்லும்படி பள்ளர் குடும்பங்களைத் தூண்டுகிறார் பிள்ளை. உங்க நியாயத்துக்குள்ள பட்டாளத்து ரெங்கனுக்கு என்ன சோலி. பள்ளர் விவகாரத்தில பறையன நுழைய விட்டீங்கன்னா காலம் காலமா நடைமுறையிலிருக்கிற சாதிக் கட்டுமானம் கலைஞ்சு போகும் என ஊரை எச்சரிக்கிறார். அவரவர் நிலத்தில் அவரவரை விவசாயம் பார்க்க வைக்கிறான் நில உடமையாளரான பிள்ளை. கூலியாக நெல்லைப் பெறுவதில் பெரும் போராட்டம் நடைபெறுகிறது. தேவர் போன்ற இடைநிலைச் சாதி உழைப்பாளிகள் சிலரை தன்னுடைய அடியாளாகவும் பயன்படுத்துகிறார்.

சங்கமாக சேர்ந்திருந்த கூலித் தொழிலாளிகள் நெல்லை அளக்க உங்களுடைய மரக்காலை பயண்படுத்த மாட்டோம். கள்ள மரக்காலை கைவிட்டு அரசாங்கம் தந்திருக்கிற முத்திரை மரக்காலை பயன்படுத்துங்கள் என்கிறார்கள் ரெங்கன் மற்றும் மோசே தலைமையில் திரண்டிருந்த செங்கொடி சங்கத்தார். சாதி மத முரண்களை மோதலுக்கான கருவியாக பயன்படுத்தியது செல்லுபடியாகவில். சும்மா இருக்குமா சுரண்டுகிற வர்க்கம். அரசதிகாரத்தின் கருவியான போலீஸை மக்களின் மீது ஏவி விடுகிறார். முத்திரை மரக்கால் போராட்டத்தின் வீச்சு அதிகாரத்தின் அடக்குமுறையையும் எதிர்த்து வெற்றி பெறும் எனும் நம்பிக்கையை வாசக மனதில் விதைத்து நாவலை நிறைவு செய்கிறார் டி. செல்வராஜ்..

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 4: சுழித்தோடும் கதையாறு | டி. செல்வராஜ் (D.Selvaraj) | "மலரும் சருகும்" நாவல்

மலரும் சருகும் நாவலின் கதாபாத்திர வார்ப்பு அதுவரையிலுமான நாவல் உலகம் சந்தித்திருக்காதது. இன்றைக்கு பேசு பொருளாகியிருக்கிற சாதிய மேலாதிக்க மனோபாவம் குறித்து தர்க்கம் செய்திடும் வகையிலான பாத்திரம் ரத்தினம். ரத்தினம் மாடசாமிக் குடும்பனின் மகள் வயிற்றுப் பேரன். கல்லூரிக்குப் போய் கல்வி கற்றுத் திரும்பும் மோஸ்தர் வாலிபன். கல்லூரியில் படிப்பதற்கான பணத்திற்காகத்தான் ரத்தினத்தின் தாய்மாமாவான ஈசாக் தன்னுடைய நிலத்தை அடமானம் வைக்கிறான். தன்னுடைய மகளான கன்னி மரியாவை திருமணம் செய்து கொள்வதாக அவனுடைய பெற்றோர்கள் வாக்களிக்கவும் செய்கின்றனர். ரத்தினம் துவக்கத்தில் இருந்தே இப்பிடி இங்க வந்து இந்த சாதியில பொறந்திட்டோமே என்று எரிச்சல் அடைகிறான். தன்னுடைய சாதி அடையாளத்தையும் பொதுவெளியில் வெளிக்காட்ட விரும்பவில்லை. ரத்தினம் கல்லூரி படித்த மறுநாளே காவல்துறையில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. காவல்துறை அதிகாரியான பிறகு அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினரின் மகளைத் திருமணம் செய்கிறான். தன் ரத்த உறவுகளைக்கூட அசூசையுடன் அனுகுகிறான். தங்களுடைய உறவினர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்கி ஒடுக்குற அதிகாரியாக நாவலில் வெளிப்படுகிறான். நியோ பிராமணிய மனம் என்பது ஒரு கருத்தியல் குறியீடு. மேல்நிலையாக்கம் எனும் விசித்திர குணத்தை அது சற்றே அடுத்த படி நிலைக்குப் போகிறவர்களின் மனங்களில் வரிக்கும். ரத்தினங்கள் எல்லா சாதித் திரள்களில் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை நிச்சயமாக நம்மில் பலரும் பார்த்திருக்கிறோம்.

நாவலில் வெளிப்படும் பெண் கதா பாத்திரங்களும்கூட அறுபதுகளில் சாத்தியமேயற்றவை. ரத்தினத்தின் அப்பாவான வேலாண்டி நாகூர் கனி ராவுத்தர் வீட்டில் வேலை செய்கிறான். நாகூர் கனியின் மகன் ஒன்னுக்கு மூனு மனைவிகளை கட்டினாலும் அத்தோடு நிற்காமல் மலேசியா, சிங்கப்பூர் என சுற்றியலைகிறான். நாவலில் அவரின் மருமகள் சார்பாக எழுத்தாளர் பேசும் சொற்கள் அந்த நாட்களில் முற்போக்காளர்கள் எழுதத் தயங்கியவை. ஒரு விதத்தில் எவரும் இப்படி எழுதியிருக்கவே மாட்டார்கள். “கணவன் இப்படி நடக்கும் போது மனைவிகள் மட்டும் எப்படி ஒழுக்கம் கெடாமல் இருக்க முடியும்” அந்த பெண்ணே! சொல்வதாகச் சொல்லும் வரிகளும்கூட அறுபதுகளில் சாத்தியமில்லாதவையே.” எனக்கு இப்போ ஒரு ஆம்பிள்ளை வேணும்… எனக்கு இப்போ ஒரு ஆம்பிளை தேவை எனக் கண்ணீர் மல்கக் கூறினாள்…

இன்னொரு கதாபாத்திரம் ரத்தினத்தின் மனைவியான சட்டமன்ற உறுப்பினரின் மகள். அதிகாரம் தலை உச்சியில் ஏறிவிட்டால் ஆம்பிள்ளைகள் தறி கெட்டலைவான்கள். அப்படித்தான் ரத்தினமும் அலைகிறான். மனைவி கண் எதிரிலேயே பழைய காதலியோடு கூடுகிறான். எரிச்சலுற்வளுக்கு மனம் பிறழ்விற்கு உள்ளாகிறது. மனம் பிசகியோ அல்லது நல்ல மன நிலையிலேயா என்ப் பிரித்தறிய முடியாத நிலையில் அவள் தன் கணவனின் காதலி மூக்கை ககடித்து துப்பி விடுகிறாள்.

இந்த நாவலின் அசாத்தியமான பெண் கதா பாத்திரம் கன்னி மரியா. இளம் வயதில் தனக்கும் ரத்தினத்திற்கும் நடக்க இருக்கிற திருமணம் குறித்த கனவினிலேயே இருக்கிறாள். ரத்தினம் அவளை துச்சமாக கடந்து போகிறான். தான் நேசித்தவனுடன் வாழ்கை லபிக்கவில்லை என தனிமரமாகிப் போகிறேன் என்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் ரத்தினத்தை பலி தீர்த்திட புத்திக் கூர் இல்லாத ஒருவனை மணம் செய்கிறாள். அவனை தைரிய மனிதனாக உருமாற்றுகிறாள். அவன்தான் மோசேவையும் அவனுடைய காதலியையும் ஊரைவிட்டு அழைத்துப் போய் பதிவுத் திருமணம் செய்து வைக்கிறான். நாவலின் கடைசிப் புள்ளியில் ரத்தினம் விவசாயக் கிளர்ச்சியில் ஈடுபடும் சங்கத்து ஆட்களை அடித்து நொறுக்கும்போது மரியாவின் கணவன் மூர்க்கமாக பன்னையாரையும் அவர்களுடைய அடியாட்களையும் அடித்து நொறுக்குகிறான். அதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியின் முன்னானிப் படையில் கன்னி மரியா தன்னை இணைப்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

கதையை கலையாக்கத் தெரியாதவர்கள் முற்போக்காளர்கள் என்று நம்மீது விமர்சனங்கள் வைத்துக் கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக டி. செல்வராஜ் 1966ல் எழுதியிருக்கும் மலரும் சருகும் நாவலை படித்திருக்க மாட்டார்கள்…

( தோழர் டி. செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் எனும் அவரின் முதல் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்..)

கட்டுரையாளர்:

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

ம.மணிமாறன்

முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3 : வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *