ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 6
தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடகள், தமிழ்ச்சூழலில் இன்று கூர்மையாக நடந்து கொண்டிருக்கிறதே எதனால் என என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார். மார்க்சியம் தான் காரணம் என்றேன். இது அவருக்காக மட்டும் சொன்ன பதில் அல்ல. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இங்கு விதைக்கப்பட்ட மார்க்சிய சிந்தனை ஒடுக்கு முறையின் பல் வேறுபட்ட வடிவங்களையும், ஆதிக்க அதிகார சக்திகளின் நுட்பமான தந்திரங்களையும, பச்சையான சுயநலக்கூறுகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்கு துணைநின்றது. எனவே மார்க்சிய சிந்தனையின் நீட்சியாகவே தமிழ் இலக்கிய பரப்பினில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த விவாதங்களை நான் பார்க்கிறேன்.
இது தோழர் டி.செல்வராஜ் தன்னுடைய தோல் எனும் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் சிறுபகுதி. தோழர் டி. செல்வராஜின் மூன்றாவது நாவல் தோல்.
ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றார் பேராசான் மார்க்ஸ். எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் சார்பானவையே என்பதும் அந்த சொற்றொடருக்குள் பொதிந்திருக்கும் விளக்கம். எழுதுகிற எழுத்தாளனின் பின்புலமும், நோக்கமுமே அப்பிரதிகளை உருவாக்குகின்றன. வரலாறு என்று தொடர்ச்சியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் வரிகளுக்குள் ஓடிக்கொண்டிருப்பது எவரின் வரலாறு?. நிலத்தில் அல்லது உழைப்புத் தளத்தில் மல்லுக்கட்டி தெள்ளுத் தெறிக்கும் பாட்டாளிகளின் வாழ்வையா வரலாறு என்று வடித்து தந்திருக்கிறார்கள். இல்லையே. நிலத்தோடு இணைந்திட்ட பொழுதுகளில் நிகழ்ந்த எளிய உழைப்பாளர்களின் கதைகளைத்தான் வரலாறாக்கியிருக்க வேண்டும். நிலமும் பொழுதும்தான் தமிழர்களின் வாழ்வியல் எதார்த்தம் என்று பெருமை பேசுகிறோம். ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன?.

ஆதி திராவிடர், பழந்தமிழர், தாழ்த்தப்பட்டோர், பஞ்சமர், புலையர், அவர்னர், இழிசனர், புலையர், பறையர் மற்றும் திருக்குலத்தார் என இராமானுஜராலும், ஹரிஜனங்கள் என காந்தியாலும் பெயர் சூட்டப்பட்டு பல பெயர்களில் அழைக்கப்படும் உழைப்பாளர்களுக்கு வரலாற்றிலும் தமிழ் இலக்கியத்திலும் எங்காவது இடம் இருக்கிறதா?. தமிழர்களின் தொன்மையைச் சொல்லும் தொல்காப்பியமும் இதற்கு விதிவிலக்கல்ல. சமூக விதியைச் சொல்ல வந்த தொல்காப்பியன் எளிய மக்களை விலக்கி வைத்து விட்டுத்தான் “ மேலோர் முறைமை நால்வர்க்கு உரித்தே” என்று அடியோரையும் வினைவலரையும் விலக்கி வைத்துவிட்டே சமூக அமைப்பைச் சொல்லுகிறார். நிலமும் பொழுதும் இயல்பாக அமைந்திருக்காத அதன் அடையாளங்கள் துளிகூட நுழைந்திருக்க சாத்தியமற்ற கோட்டை, கொத்தளங்களுக்குள் அரங்கேறிய சூதையும், தந்திரத்தையும் விதந்தோதி வரலாறாக வடித்திருக்கிறார்கள். ஒரு பக்கச்சார்பான கதைகளின் தொகுதியையே கல்விக் கூடங்களுக்குள் வரலாறு என அச்சடித்து தந்து கொண்டேயிருக்கிறது சமூக அமைப்பு. நாம் வாசித்த வரலாற்றுக் குறிப்புகளுக்கும் வெகுஜன மக்களின் வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?.
இந்த அழுத்தமான கேள்வியைக் கேட்பதற்கும் கூட காலம் கனிய வேண்டியிருந்தது. தொன்னூறுகளின் துவக்கத்தில் அறிவர் அம்பேத்கரின் நூற்றாண்டில் அவருடைய எல்லா நூல்களும் தமிழ்ப்படுத்தப்பட்டதற்கும் இந்தக் கேள்விகள் அறிவுலகில் முளைத்து வந்ததற்கும் ஒரு தொடர்பிருக்கிறது. அப்போதுதான் விளிம்பு நிலைக் கதையாடல்களும், மையம் அழித்த விளிம்புகள் எனும் சொற்பதமும் பொதுவெளிகளில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. இந்தக் கேள்விகள் முளைப்பதற்கு முன்பாகவே தமிழில் ஒடுக்கப்பட்டோரின் இலக்கியம் பதிவாகியிருக்கிறது என்பதையும் சேர்த்தே வாசித்தறிய வேண்டும். அவையாவும் விதிவிலக்குகள். விதிகளை விலக்கி புதிய பாதையினை வடித்திட்ட நம்முடைய மூத்தோன் எழுத்தாளர் டி. செல்வராஜ். கரிசல் இலக்கியம் என நீங்கள் முன்வைக்கும் படைப்புகளில் எங்களின் வாழ்க்கை எங்கே எனும் எழுத்தாளர் பூமணியின் கேள்வியே அவரை பிறகு எனும் நாவலை எழுதத் தூண்டியது. பிறகுவிற்கும் மூத்ததது எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் எனும் நாவல்.

இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை தமிழில் பதிவு செய்த முதல் எழுத்து மலரும் சருகும் நாவல்தான். மலரும் சருகும் விவசாயத் தொழிலாளிகளின் எழுச்சியைப் பேசியது என்றால் அவருடைய தோல் தொழிற்சங்கமாகத் திரண்ட தொழிலாளிகளின் வாழ்வினைப் பேசுகிறது. தோல் நாவலுக்காக எழுத்தாளர் டி. செல்வராஜ் சாகித்ய அகாடமியின் விருதினையும் பெற்றார். டி. செல்வராஜ் அவர்களின் தேநீர் நாவலையும் நிச்சயமாக பாட்டாளிகளின் கதைப்பாடல்களின் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும்.
இதுநாள் வரையிலும் தமிழ்ப்புனைவு வெளிகளில் கவனப்படுத்தப்பட்டிருக்காத வாழ்வின் அசலான பகுதிகளைப் பதிவு செய்திருக்கிறது தோல். இந்த நாவலுக்குள் வருகிற உழைப்பாளர் கூட்டம் அடிமையாக தன்னை ஒப்புக் கொடுத்தவர்கள். விதியே என்று இந்த அடிமை வாழ்க்கையை தொடர காலம் அவர்களை அனுமதிக்கவில்லை. முறி எனும் அடிமைப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு தோல் துப்புரவுப் பணியிலும், ஆலை முதலாளிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து கிடந்த எளிய மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களின் கதைத் தொகுப்பே தோல். ஆண் ஆதிக்கத் திமிரோடும், முதலாளி என்கிற அறிவிக்கப்படாத உரிமையோடும் உழைக்க வந்த பெண்களின் மீது கேட்பாரற்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்த தோல் தொழிற்சாலை முதலாளிளை எதிர்த்து நிற்கும் பலத்தை தொழிலாளிகளுக்கு தந்தது எது என்பதன் அரசியல் பின்புலத்தையும் நாவல் வரிவரியாக விளக்குகிறது. தோல் நாவலை வாசித்து முடித்த பிறகு வாசகனுக்குள் கோட்டை பெருநகரமான திண்டுக்கல்லின் அரசியல், தொழிற்சங்க வரலாறும் அதனைக் கட்டியமைத்து களமாடிய எளிய மக்களின் போர்க்குணமும் படம் படமாக விரிகிறது.
தோல் பதனிடும் தொழிற்சாலைக்குள் உழன்று அதன் சுண்ணாம்புக் குழிகளுக்கு தங்களுடைய உடல்களைத் தின்னக் கொடுக்கிறார்கள் உழைப்பாளிகள். நினவாடை வீசும் ஆடு, மாடு போன்ற மிருகத் தோல்களை மிதித்து மிதித்து கால்கள் சுருங்கி, வளைந்து அரைகுறை மனிதனாகப் போகிற கொடூரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது பேகம்பூரில். தோல் பதப்படுத்த சுண்ணாம்போடு கலக்கப்படும் ரசாயனம் குரூரமாக கலைத்துப் போடுகிறது அவர்களின் வாழ்க்கையை. அரைவயிற்றுக் கூலிக்காக மரணக்குழியான சுண்ணாம்புக் குழிகளுக்குள் அல்லாடும் நித்தியம் கொண்ட உழைப்பாளிகளின் மீது முதலாளிகளும், அவர்களின் அடியாட்களும் நூறு சதவீத பாத்தியதை கொண்டாடுகிறார்கள். அதிலும் பெண் என்றால்? கேள்வி கேட்பாரில்லை. அப்போதெல்லாம் ஆண் வக்கிர மனதிற்குள் நிறம் சாதி, வீச்சம் என்ற எதுவும் துருத்தி முன்வருவதில்லை. இப்படியான குரூரக் காட்சி ஒன்றிலிருந்துதான் நாவலைத் துவக்குகிறார் தோழர் டி.எஸ். சபிக்கப்பட்டதாக அவர்களே நம்பிக்கிடந்த கொடூர கணங்களில் இருந்து மீண்டெழும் நம்பிக்கையை பெற்று அவர்கள் எப்படி மேலெழுந்தார்கள் என்பதையே எழுநூறு பக்கங்களில் தோல் எனும் நாவலாக வடித்து தந்திருக்கிறார் தோழர் டி. செல்வராஜ்.

தன் கண் எதிரே நடக்கிற அநீதிகளைப் பார்த்துக் கோபம் கொள்கிற, குமுறுகிற மனநிலை கொண்ட மனிதர்களால்தான் சமூகத்தில் சிறிய அளவிலான மாற்றமாவது நடைபெறுகிறது. நாவலின் எல்லாப் பக்கங்களில் இருந்தும் அதிகாரத்தைக் கைகொள்ள விரும்புகிற மனிதக்கூட்டம் திரள்கிறது. அவர்களுடைய அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுகிற மக்கள் திரளும் உருவாகிறது. சிறிது சிறிதாக முன்வரும் உழைப்பாளி மக்களின் ஒன்றினைவு அவர்களுக்கு ஆதர்சமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிற தொழிற்சங்கமாக வடிவம் பெறுகிறது. ஒரு தொழிற்சங்கம் எப்படி உருவாகி வளர்ந்து ஸ்திரப்பட்டு முதலாளிகளுக்கு அச்சமூட்டுவதாகவும் தொழிலாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதுமாக உறுதிப்படுகிறது என்பதை நாவலின் பகுதிகள் எளிய கதையாடால்களின் மூலமாக வாசகனுக்குள் நிறைக்கிறது. தொழிற்சங்த்தை கட்டியமைக்க களமாடிக் கொண்டிருக்கும் தொழிற்சங்க ஊழியர்கள் கற்றுத் தெளிய வேண்டிய ஆவணமாகவும் தோல் தன்னை வெளிப்படுத்துகிறது. ஒரு தேர்ந்த படைப்பு வாசகனின் மனதின் பக்கங்களை மிக லகுவாகத் திறந்துவிடும். தோலை வாசிக்கிற எல்லோருக்குள்ளும் அவரவர் நிலங்களின் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறுகள் பக்கம் பக்கமாக திரளும். ஒருவேளை அதனை யாராவது எழுதவும் கூடும். வாசகனை எழுத்தாளனாக்குகிற வித்தையையும் சேர்த்தே செய்கிறார் எழுத்தாளர் டி. செல்வராஜ் தோல் நாவலுக்குள்.
தோல் பதனிடும் தொழிற்சாலைக்குள் தங்கள் உடலைத் தின்னக் கொடுத்த எளிய மனிதர்களின் வாழ்வில் எல்லா ஆசாபாசங்களுக்கு இடம் உண்டுதானே. ஒசேப்பும், அருக்காணியும் தங்களுக்குள் காதல் வயப்படுகிறார்கள். ஆனாலும்கூட தங்களின் காதலை ஒருவரிடம் மற்றவர் வெளிப்படுத்தவேயில்லை. ரகசியமாக தங்களுக்குள் பொதிந்து வைத்திருக்கிறார்கள். காதலை வெளிப்படுத்தியிருந்தால் அவர்களுக்கு மண வாழ்கை கைகூடவே செய்திருக்கும். நிச்சயமாக அதற்கு எந்தத் தடையும் இருந்திருக்காது. ஆனாலும் அவர்கள் தங்களுக்குள் ரகசியமாக காதலைப் புதைக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான். எளிய மக்கள் அசாத்தியமான வாழ்வின் பக்கங்களை திறக்கும் பக்குவம் மிக்கவர்கள். அருக்காணி சொல்கிறாள் “ சங்கத்துக்காரர்கள் சுய ஒழுக்கம் இல்லாதவங்கன்னு ஊர் பேசிரும் ஒசேப்பு. நாம இத இப்பிடியே விட்டுறுவோம்” . தன் சுக துக்கங்களை விட எனக்கு சங்கமே முக்கியம் எனும் முடிவை நோக்கி உழைப்பாளிகள் மிக எளிதாக வந்து விடுகிறார்கள். இந்த பக்கங்களை வாசித்துக் கடக்கும் போது எனக்குள் எத்தனை அமரத்துவமான காதல்கள் பொது நோக்கிற்காக கைகூடாமல் போயிருக்கிறதோ எனும் சிந்தனையும், ஒருவிதமான மென்துக்கமும் துளிர்விடுவதை தவிர்க்க முடியவில்லை. கூடுதலாக அமைப்பா தனிநபரா எனும் தீராத கேள்விகள் விளையயும் தொழிற்சங்க களத்தில் பாட்டாளிகள் எப்போதும் அமைப்பையே பிரதானப்படுத்தினர் என்கிற புரிதலும் வருகிறது.

காலத்தை எழுதும் கலைதான் எழுத்திலக்கியம். தோல் நாவலுக்குள் வருகிற சங்கரன் எனும் கதாபாத்திரம் ஆளுமையாக ஒரு மனிதன் உருவாகி வளர்வதற்கு காலமும் சூழலுமே பிரதானமான காரணம் என்பதற்கான சாட்சியமாக இருக்கிறது. பிராமணியம், பார்ப்பணியம், பிராமண மேலாதிக்கத்திற்கான எத்தனங்கள் என இவை குறித்த விவாதங்கள் முன் எப்போதையும்விட இப்போது கூடுதலாக மேலெழுந்து வருகிறது. விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாட்டின் பக்கங்கள் இவை. இவற்றின் எதிர்பக்கத்தையும் கலைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சொந்த சாதிக்கு துரோகம் செய்கிற , தான் பிறக்க நேர்ந்திட்ட ஆதிக்க சாதி மன நிலையிலிருந்து விடுபட்டு மக்கள் பணி செய்கிறவர்களும் காலந்தோறும் இருந்திருக்கிறார்கள். அக்ரஹாரத்திற்குள் இருந்து கொண்டே சமூகச் செயல் பாட்டிற்குள் தங்களை கரைத்துக் கொண்ட எத்தனையோ மனிதர்களின் அசல் சாட்சியம் சங்கரன். அவரை நாவலுக்குள் எழுத்தாளர் பெருமிதமாக குறிப்பிடவில்லை . மாறாக காலம் எப்படி சங்கரன் எனும் தொழிலாளிகளின் நம்பிக்கைக்குரிய தலைவரை உருவாக்கியது என்பதைக் காட்சிப் படுத்துகிறார். புறச்சூழல்தான் மனித மனதின் அகத்திற்குள் மாற்றங்களை உருவாக்குகிறது. சங்கரனின் தந்தை மதுரை ஆலய நுழைவுப் போராட்டக்குழுவின் தலைவரான வைத்தியநாதய்யரின் நண்பர்.
அவருடனான பழக்கமே சங்கரனை தோல் ஷாப்புத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை நோக்கி நகர்த்துகிறது. கூலி உயர்வுக்கான, தொழில் பாதுகாப்பிற்கான போராட்டங்களை மட்டும் நடத்தவில்லை சங்கரன். அவர்களுடைய சுடுகாட்டுப் பாதைக்கான பெரும் போராட்டத்தையும் வழி நடத்துகிறார். நாவலுக்குள் சங்கரன் நடத்துகிற போராட்டங்களை எல்லாம் கூர்ந்து கவணிக்கிற போதுதான் நமக்கு எளிய உண்மை புலப்படுகிறது. தொழிற்சங்க இயக்கங்களை வெறும் கூலி பேரத்தினை நடத்துகிற அமைப்புகாள் என்று சுருக்கி புரிந்து கொண்டிருப்பதும் அதனை விடாமல் பொதுவெளியில் பரப்புவதும் ஒரு குயுக்தி. சமுக நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பாக சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் கவனம் செலுத்தியதில்லை எனும் குற்றச்சாட்டை இன்றுவரையிலும் பரப்பி கொண்டிருக்கிறார்கள். அவையாவும் குறை புரிதலுடைய குற்றச்சாட்டுகள் என்பதை தோல் நாவல் மிக. விரிவாக முன் வைக்கிறது..
ஒரு தனிமனிதன் எப்படி சூழல் தனக்கிட்ட சமூக விலங்கினை தகர்த்து மேலேறுகிறான் என்பதற்கான சாட்சியம் சங்கரன் கதாபாத்திரம். மேல்நிலையாக்கம் வெட்டிப் பெருமிதத்தை ஏற்படுத்தும் . தன்னை தன் சமூக நிலையை தலை குப்புற கவிழ்த்துவது எப்படி சாத்தியம் என்பதனையும் துளி துளியாக சங்கரனின் மன மாற்றம் வழியாக காட்சிப்படுத்துகிறார் தோழர் டி.எஸ். சங்கரன் தனக்குள் உருவாகி, உருமாறி, மனதிற்குள் விதவிதமான கேள்விகளைக் கேட்டு கேட்டு வளர்கிற வளர்ந்த தொழிலாளர் இயக்கத் தோழர்களின் குறியீட்டு அடையாளம். துப்புரவுத் தொழிலாளிகள் குடியிருப்புகளைக் கடந்து போக தடுமாறி தத்தளித்த மனநிலை. தன்னுடைய தாயிடம் எதார்த்தத்தை புரிய வைக்க முடியவில்லையே என்கிற தடுமாற்றம். தண்ணீருக்கு தீட்டை அழிக்கிற வரமிருப்பதாக நம்பியதால் வீட்டின் கொல்லைப் புறத்திற்குச் சென்று கால் கழுவி விட்டு வீட்டிற்குள் நூழைகிறான்.

இதெல்லாம் தன்னுடைய அம்மாவிற்காக என்று மனதினில் சமாதானம் கொள்கிறான். விடாத சமூகப்பணியும், தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளும், அதற்கான கல்வியும் சங்கரனுக்குள் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சாஸ்திரம் எனும் பெயரில் நிலைநிறுத்தப்படுகிற நடவடிக்கைகளின் போலித் தனத்தை விட்டொழிக்கிறார். அதுவரையிலும் தொழிலாளர்கள் வந்தால் சந்திப்பதற்காக வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த அவருடைய அலுவலகத்தை தலைவாசலுக்கு மாற்றுகிறார். இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றிய துவக்க காலத் தோழர்கள் தங்களுக்குள் தொழிற்சங்க நடவடிக்கையையும், சமூக நடவடிக்கையும் இணைத்தே நடத்தியிருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியத்தையும் நாவல் பகிர்கிறது.
நாவலுக்குள் தொழிற்சங்க இயக்கத்திற்குச் சமமாக கிறிஸ்தவத்தின் செயல்பாடுகளும் வரையப்பட்டிருக்கிறது. சனாதனம் நிறம் பார்த்து, பேதம் பிரித்து தனித்தொததுக்கிய மக்கள் திரளை தன் இருகரம் கூப்பி வரவேற்று தங்களுக்குள் அவர்களை ஐக்கியப் படுத்திக் கொண்டது கிறிஸ்தவம். அதனை வெறும் மத மாற்றம் என சுருக்கிப் புரிந்து கொள்வது அறிவீனம். தோல் நாவலுக்குள் காட்சிப்படுத்தப்படுகிற கிறிஸ்தவம் சற்றே வித்தியாசமானது. இருதயச்சாமி எனும் போதகர் அந்த மக்கள் திரளில் இருந்தே உருவாகிறார். ஊர் ஊராக போய் விரியன் பாம்புக் குட்டிகளே! என விரிந்த மதப் பிரச்சாரத்தையும் செய்கிறார். ஆனாலும் அவருக்குள் சின்ன நெருடல் இருந்து கொண்டேயிருக்கிறது.
எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் மிக்கது காலம்தானே. அவர் புரிந்து கொள்கிறார். கிறிஸ்துவுக்குள் தன்னை ஒப்புக் கொடுப்பதைக் காட்டிலும் மேலான பணி ஒன்று இருக்கிறது. தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டீருக்கிறோம் என்பதை அவர்களை உணரச் செய்வதும், அந்த தளையில் இருந்து முற்றாக அவர்களை விடுவித்திடும் போராட்டங்களில் அவர்களை பங்கேற்க வைப்பதும்தான் என்ற முடிவிற்கு வருகிறார். தொழிற்சங்கத்தை கட்டி வளர்ப்பதில் சங்ரனுடனும், சமூக நடவடிக்கைகளில் சோசலிஸ்ட் வேலாயுதத்துடனும் இணைந்து பணியாற்றுகிறார். மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரேயரின் புகழ் பெற்ற பிரகடனமே நாவலுக்குள் தங்கசச்சாமி பாதரையும், இருதயச்சாமியையும் வாசிக்கும் போது எனக்குள் நகர்ந்தது.
“நான் யேசுவிடம் சென்றேன். அவர் என்னை மக்களிடம் போகச் சொன்னார். நான் மக்களிடம் சென்றேன். மக்கள் என்னை மார்க்சிடம் போகச் சொன்னார்கள்” என்றார் பாவ்லோ பிரேயர்.

தோல் நாவல் மாபெரும் வரலாற்றுப் புனைவுலகம் தன்னை தனக்குள் நிறைத்து வைத்திருக்கும் காலப்பெட்டகம். இந்திய நிலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தின் காட்சிகளை நாவல் மிக விரிவாக பதிவு செய்கிறது. தலைமறைவு காலத்தின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி தமிழ்நிலத்தில் நடந்தது என்பதற்கான சம்பவங்கள் நாவலுக்குள் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படாத மக்களின் வரலாறுகள் அவையாவும் என்பதை தோல் நாவலை வாசித்தால் உணரலாம். ஒட்டு மொத்தமாக தொகுத்துப் பார்க்கிற போது தோல் நாவல் வாசகனுக்குள் கடத்த விரும்புது தமிழ் நிலத்தின் சிறு, பெரு நகரங்களில் நடந்த நடந்து கொண்டிருக்கிற தொழிற்சங்க இயக்க வரலாற்றைத்தான். கம்யூனிஸ்ட்கள் மீது அரசதிகாரமும், அதன் உதிரிப்பாகமான காவல் துறையும் எத்தகைய அடக்குமுறகளைக் கையாண்டது.
அவை எல்லாவற்றையும் கடந்து கம்யூனிஸ்ட்கள் எப்படி சிறைச் சாலைகளையும் கூட மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளைக் கற்றுத் தேரும் கலாசாலைகளாக உருமாற்றினார்கள் என்பதனையும் நாவல் காட்சிப்படுத்துகிறது. கொடும் பஞ்சங்களும், தீராத துயரங்களும் மனிதர்களை புலம் பெயரச் செய்து கொண்டேயிருக்கிறது. நாவலின் துவக்கத்தில் பேகம்பூரில் செத்து விழுந்த ஒசேப்பின் தாய் தன்னுடைய பூர்வீக நிலமான பாண்டிச்சேரியை நோக்கி கைநீட்டியபடி இறந்து போகிறாள் என்கிறார் தோழர் டி. செல்வராஜ். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பாண்டிச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதற்கான வராலாற்றுக் குறிப்பிது.
தோல் நாவலை ஒசேப்பின் வழியாகவே கடந்து போகிற வாசகனுக்கு இது சாதீய அடக்கு முறைக்கு எதிராக ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் நடத்திய மாபெரும் கிளர்ச்சிப் போராட்டம் என்னும் புரிதலும், அதன் அடிப்படையில் தோல் ஒரு மிக முக்கியமான தலித் நாவல் என்ற முடிவிற்கும் வரலாம். சங்கரன் முலமாக வாசிக்கிற போது இது இடதுசாரி இயக்கங்களின் வரலாற்று ஆவணம் எனும் முடிவினை நோக்கி வாசகன் நகர்வான். இரண்டுமே ஒரு பெருமரத்தின் இணைக் கிளைகள் என்பதே நிஜம். எழுத்தாளர் டி. செல்வராஜ் தன்னுடைய முன்னுரையில் தோல் நாவல் ஒரு சோசலிச யதார்த்தவாத நாவல் என்று முன் வைக்கிறார். அது அவருடைய கணிப்பு. ஒரு படைப்பினை ஒற்றைத் தன்மையில் புரிந்து கொள்து வழக்கொழிந்து விட்டது. நாவல் தனக்குள் பன்முகத் திறப்புகளை கொண்டுள்ளது. வாசகர்கள் அவரவருக்கான பாதைகளில் பயணிக்கலாம்.
(சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்)
கட்டுரையாளர்:

ம.மணிமாறன்
முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நன்றாக வந்து கொண்டிருக்கிறது. தொடருங்கள் தோழர்.