பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்

முத்ரா வாக்கியங்களின் முழக்கம்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7

வாழ்க்கையைப் பற்றிக் கடந்த காலக் காவியங்களோ நிகழ்காலக் கதைகளோ என்ன போதிச்சு வருதுன்னா வாழ்க்கையில் அதற்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்காக வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் மனித லட்சியமே இருக்குது என்பதான பிரம்மையை தோற்றுவிப்பதில்தான் ஈடுபட்டிருந்தது. ஒரு சீதையை வச்சுத்தானே இராமாயாணம்?. ஒரு துரோபதையை வச்சுத்தானே மகாபாரதம்?.ஒரு மாதவியை வச்சுத்தானே சிலப்பதிகாரம்? அன்னத்தை வைத்துத்தானே பாண்டியன் பரிசு?..எல்லாமே காதலின் பெயரால். என்றுமே அழியாத மெய்க்காதலின் பெயரால் என்றுதானே உன்னையும் இந்த உலகத்தையும் நம்ப வைத்திருக்கிறார்கள்…

இந்த நீண்ட உரையாடல் தோழர் கு.சின்னப்ப பாரதியின் (Ku. Chinnappa Bharathi) தாகம் நாவலுக்குள் (Thagam Novel) சுழன்றுவரும் சொற்றொடர்கள். இந்தக் கேள்விகள் யாவும் அவரின் நாவலுக்குள் வருகிற கதாபாத்திரங்களின் உரையாடல்கள். ஒருவிதத்தில் எழுத்தாளர் இந்த சமூகத்தோடு நடத்த விரும்பிய உரையாடல்களின் தொகுப்புகள்.உண்மையில் ஒரு எழுத்தாளர் தனக்குள் எழுகிற கேள்விகளையும், அதற்கு தன் வாழ்வனுபவத்தில் இருந்து பொருத்தமான அல்லது பொருத்தத்திற்கு நெருக்கமான பதில்களையும் சொல்லிப் பார்ப்பதில் இருந்தும்தான் அவருடைய படைப்பிலக்கியமே உருவாகிறது. அப்படி எழுத்தாளர் கு.சி.பா தனக்கு நெருக்கமாக இருந்த விவசாயக்கூலிகளின் வாழ்க்கையில் விடிவேற்படாதா எனக் கேட்ட கேள்விகளே அவரை தாகம் என்கிற நாவலை வடித்தெடுக்க வைத்தது. அறுபதுகளில் தமிழ் நிலத்தில் மிகவும் குறிப்பாக கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களையும், அவர்கள் தங்களுக்குள் ஒன்றாக திரண்டெழுந்த கதையையுமே எழுத்தாளர் கு.சி.பா நானூறு பக்கங்களில் தாகம் எனும் நாவலாக வடித்தெடுத்திருக்கிறார். அடித்தால் திருப்பி அடிபோம் எனும் முழக்கம் விவசாயத் தோழர்களிடம் வந்து சேர்ந்த காலத்தின் கதைதான் தாகம். சங்கம்,சர்க்கரை, தாகம் பவளாயி, சுரங்கம் என ஐந்து நாவல்களைத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கு தந்திருப்பவர் கு.சி.பா. கு.சி.பாவின் முதல் நாவல் தாகம்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்
தாகம் நாவல்

பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் என தனி மனிதர்களின் குடும்ப வாழ்க்கையை படைப்பாக்கித் துவங்கியதுதான் தமிழ் நாவல் உலகம். அதனுடைய பயணம் இன்றுவரையிலும் இந்த பாதையிலும் நீடித்துத் தொடர்கிறது. பிறகான நாட்களில் நிலங்களின் கதைகளை எழுதவும், ,தனித்த பிரதேசங்களையும் அதன் இருட்குகை வாழ்வினையும் எழுதி மகிழ்ந்திருந்தனர் எழுத்தாளர்கள். இப்போதெல்லாம் தனிமனிதர்களின் இருள்குகையெயெனும் அவர்களுடைய மனதினை விட்டு வெளியேறாமல் உள் நோக்கிய பயணத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எளிய பாட்டாளிகளின் கதைகளை எழுதிட அப்போதிருந்து மட்டுமல்ல, இப்போதும்கூட தயங்கித்தான் கிடக்கின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் சிறுகதைகள் எழுதினார்களே தவிர நாவல்கள் எழுதவில்லை. பாட்டாளிகளின் வாழ்வை தமிழ் நாவல் உலகம் தனக்குள் படைப்பாக்குவதற்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுவரையிலும் காத்திருக்க வேண்டியிருந்தது. எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் இந்தப் போக்கினில் பெரும் உடைப்பினை ஏற்படுத்திய படைப்பு. அதனைத் தொடர்ந்து வந்த டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலின் தொடர்ச்சிதான் தாகம். தாகம் நாவலைக்குறித்த சிட்டி சிவபாத சுந்தரத்தின் கனிப்பு மிகவும் முக்ககியமானது. “ நாற்று நடுதல், களை எடுத்தல்,ஒரு கன்றின் பிறப்பு போன்ற நடவடிக்கைள் ஆழ்ந்த கவனத்துடன் தாகம் நாவலுக்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டு கிராம வாழ்கையில் அந்த மண்ணின் மணம் வீசி, வாசகரை அந்தச் சூழ்நிலையுடன் ஒன்றச்செய்து விடுகிறது. கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சியைத் தாக்குகிறது. சின்னப்ப பாரதி தாகம் நாவலுக்குள் தான் படைத்த கதை மாந்தர்களை பிரமிப்பூட்டும் கட்டுப்பாட்டுடடன் நடத்திச் செல்கிறார். இத்தகைய கலை வண்ணம் நிறைந்த இந்தப்படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அரிய சாதனை. நூற்றாண்டு வளர்ச்சியில் சிறந்த பத்து தமிழ் நாவல்களைத் தேர்ந்தெடுத்தால் அவற்றில் ஒன்றாக தாகம் இருப்பது இலக்கிய வரலாறு” இதனை சிட்டி தன்னுடைய இலக்கிய வரலாறு எனும் விரிந்த கட்டுரைக்குள் எழுதியிருக்கிறார். சிட்டி மட்டுமல்ல எழுபதுகளில் நாவல் குறித்த வியாக்கியாணம் எழுதுகிற எவரும் தாகம் நாவலை குறிப்பிடாமல் இருந்ததில்லை. எழுத்தாளர் சுந்தரராமசாமி பட்டியல் தயாரிக்கும் வழக்கம் கொண்டவரல்ல. ஆனாலும் தனக்குப் பிடித்த சிறந்த நாவல் தாகம் என்கிறார். பட்டியல்கள் தயாரிக்கும் வழக்கத்தை தமிழ் இலக்கியப் புலத்தில் விடாது செய்து கொண்டிருந்த க.நா.சுவின் பட்டியலிலும் தாகம் இருந்திருக்கிறது. . புத்தாயிரத்தில் நாவல் என்று தனித்தொரு புத்தகம் எழுதி தமிழ் நாவலாசிரியர்களுக்கு அதிர்ச்சியளித்த எழுத்தாளர் ஜெயமோகனின் நூலில் மட்டும் கு.சி.பாவின் பெயரோ, தாகம் நாவலைப்பற்றிய நேர்மறையான குறிப்புகளோ இல்லை. இந்த பின்புலத்தை விளக்குவதன் நோக்கம் கு.சி.பாவின் தாகம் நாவலை வாசகர்கள் கவனித்து வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான..

ஒரு கதாபாத்திரம் எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதற்கான தனித்த அடையாளம் தாகம் நாவலுக்குள் வருகிற மாரப்பன். கையகல நிலம், வாழ்க்கையை சிக்கலின்றி நகர்த்திட பசுவும், காளையும், கோழிகளும் நிறைந்திருக்கும் ஐம்பதுகளின் விவசாயக்குடும்பம். அவனுடைய மனைவி மாரக்காள், மகன், இரண்டு மகள்கள் என கச்சிதமான கொங்கு பிரதேச கிராமத்தில் வாழ்கை. வாழ்க்கை தருகிற சிக்கல்களை மாரப்பன் எப்படி எதிர் கொள்கிறான் என்பதே நாவல். தமிழகத்தின் சமூக அசைவியக்கத்தைப் புரட்டிப் போட்ட மிக முக்கியமான நிகழ்வுகள் பெரும்பஞ்சங்கள். தாது வருஷப் பஞ்சம், மக்காச்சோளப் பஞ்சம் என அடுத்த வேளை சாப்பாட்டிற்கு உழுகுடிகளைக்கூட கையேந்தி நிற்கச் செய்த பஞ்சங்களைக் குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். தாகம் நாவலுக்குள் கு.சி.பா எழுதியிருப்பது இதனை வேறு ஒரு தொனியில். ஒரு கொடும் பஞ்சம் எப்படி ஒரு விவசாயக் குடும்பத்தை நிர்மூலமாக்கும் என்பதை அவர்களின் குடும்ப வாழ்வின் ஊடாக கதைகளாக்கிக் கடத்துகிறார். . வயிறாற சாப்பிட தன் குடும்பத்திற்கு ஆதாரமாயிருந்த நிலத்தையே விற்று முதலாக்கி கடன் அடைக்க வேண்டிய நிர்பந்தத்தில் சிக்குகிறது மாரப்பன் வாழ்க்கை. பஞ்சத்திற்குச் சமமாக பண்ணையாரின் சூழ்ச்சியும் அப்போதைய கிராமங்களின் குணமாக இருந்த சாதிய மனமும் சேர்ந்தே மாரப்பனை நிலத்தை விற்றிடும் நிலைக்குத் தள்ளுகிறது என்பதையும் சேர்த்தே நாவல் கவணப்படுத்துகிறது..

இதனை ஒற்றை வரியில் நிச்சயம் கடந்து போக முடியாது. இப்போதைய வாசக மனம் நாற்பது ஐம்பதுகளில் இப்படியெல்லாம் இருந்திருக்குமா என ஒருவேளை யோசிப்பார்கள். சாதியும் அது சார்ந்த அதிகாரமும் தண்டனை முறைகளும் சேர்ந்து வடிவமைக்கப்பட்டவைதான் நாற்பது ஐம்பது காலத்தைய கிராமப்புற தமிழ்நிலம் என்பதற்கான ஆதாரக் காட்சிகளை தாகம் நாவலுக்குள் கு.சி.பா வார்த்தை வார்த்தையாக வடித்து தந்திருக்கிறார். பண்ணையார்கள் குதிரை வண்டிகளிலோ அல்லது காரிலோ வீட்டை விட்டு வெளியேறி வரும்போது எதிர்ப்படும் விவசாயக்கூலிகளள் அப்படியே நிலத்தில் விழுந்து அவனை வணங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிட்டால் அவனுக்கு சாட்டையடிகள் உறுதியாகக் கிடைக்கும். வணக்க முறைகளிலும்கூட சாதியின் பெயரிலான பாகுபாடு மிக மூர்க்கமாக அப்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. வேளாளர் சாதியினர் அவர்கள் நிலமற்ற கூலியாக இருந்தால் நிற்கிற இடத்தில் இருந்தே பண்ணையாரை வணங்கி வழிவிடலாம். ஆனால் உழுகுடிகளான பள்ளர், பறையர் சமூகத்தவர் பண்ணை வருகிறபோது மரநிழலில் இருந்தால் அவர்கள் அப்படியே நின்ற இடத்தில் இருந்தே வணங்கக்கூடாது.நிழலில்லாத வெயிலுக்குள் வந்துதான் அவனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். தன்னிடம் வேலை பார்க்கும் பண்ணையடிமை கல்யாணம் செய்யும்போது அவனுக்கான துணையை அவனே தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. பண்ணையார் தன்னுடைய உறவினனான அருகாமை கிராமத்துப் பண்ணையாரின் நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்ணையே தேர்வு செய்யச் சொல்வார். பண்ணையார்கள் திருமணச்சடங்கு எனும் ஒன்றை நீண்டகாலம் வைத்திருந்திருக்கிறார்கள். புதுமணப்பெண் பண்ணை வீட்டிற்கு சாணியள்ள அனுப்பி வைக்கப்படுவதும், அப்போது அவன் பெண்ணை வன்புணர்வு செய்வதும் கேள்வி கேட்பாரற்ற நடைமுறையாகவே இருந்திருக்கிறது. கூலிகள் என்பதாலும், சாதிய அடுக்கினில் தீண்டத்தகாதவர்கள் என்பதாலும் உரிமைகள் அற்றவர்களாகவே அங்கு நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்த எளிய மக்களிடம் இருந்து சின்ன எதிர்ப்பு முனுமுனுக்கப்படும்போது கொடுக்கப்படும் தண்டனைகள் நாகரீக மனித சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்திருக்கிறது. வேலைத்தளத்தில் சிறுநீர் முட்டினால்கூட அதனை வெளியேற்ற முடியாது. வேலை பார்த்துக்கொண்டே ஆண்களும், பெண்களும் அவர்களின் உடல் உபாதைகளை வெளியேற்ற வேண்டும். இதற்காக அசூசைப்பட்டு விதி மீறினால் அவர்களுக்கு சாணிப்பாலும், சாட்டையடியும்தான் மிஞ்சும்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்
கு.சின்னப்ப பாரதி

மாரப்பனின் மகன் கந்தனுக்கு பாப்பா எனும் பறையர் சமூகத்துப் பெண்ணுடன் காதல் முகிழ்க்கிறது. அப்போது வேளாளர் சமூகத்தவர்கள் இது ஒன்றும் தவறில்லை பிடித்திருக்கு அவகூட போயிட்டுப் போறான். நீயும் நானும் அல்லது பண்ணையாரும் செய்யாததையா கந்தன் செஞ்சுட்டான். விட்டுத்தொலை மாரப்பா என்கிறார்கள். பறையர் சமூகத்தைப் பெண்டாளுவது சாதி எனக்குத் தந்திருக்கும் உரிமை என்கிற வேளாளர் சமூகத்தவரின் மனநிலையயில் மாற்றம் வரவே உழைப்பாளி மக்கள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. கந்தன் தாகம் நாவலுக்குள் அப்படியான போராட்டத்தை துவக்குகிறான். நான் பாப்பாவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தப் போகிறேன் என்று வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மாரப்பன் அப்போது மூர்க்கமாகிறான். அவனுக்குள் நிறைந்திருக்கும் சாதியவேட்கை நீ மகனே இல்லை என அவனச் சொல்ல வைக்கிறது. சாதிக்கூட்டத்தில் பண்ணையார் மகனின் தவறுக்காக மாரப்பனுக்கு கொடுத்த தண்டனைக்கான தண்டத் தொகையை கட்டத்தான் நிலத்தையே விற்கிறான். தன்னுடைய நிலத்தினை மிராசுதாருக்கு விற்று விட்டு விவசாயக்கூலியாக வேலைக்குச் செல்கிறான். அரைகுறையாகவாது குடும்பத்தை காக்க வேண்டுமே. மாரப்பனைப் போலத்தான் ஒரு நூறு விவசாயிகள் இருக்கிறார்கள். நாம் மட்டும் நித்தத்தைக் கடத்திட இவ்வளவு கஷ்டமும் துயரமும் அடைகிறோம். ஆனால் மிராசுதர் எப்படி அவனுடைய அப்பன்,பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து மிராசுகளாகவும், செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள் என்கிற கேள்வி மாரப்பனுக்குள் எழவேயில்லை. மாரப்பன் அவ்வப்போது நினைத்துக் கொள்கிறான் அல்லது கோமாளிக் கிழவன் எனும் கதாபாத்திரம் வந்து அவருக்கும் அவரைப் போலான விவசாயைக்குடிகளுக்கும் நினைவூட்டுகிறது. இது காலம் காலமாக இருக்கும் நடைமுறை. நீ இவ்வளவு கஷ்டமும் துயரமும் கொண்டு உழல்வதற்கு நீ காரணமில்லை. விதிப்பயன் அல்லது கடந்த காலத்தில் அதாவது முன்பிறவியில் நீ செய்த தீமைதான் உன்னை இப்படி துன்பத்திலும் துயரத்திலும் உழலச் செய்திருக்கிறது. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும் எனும்போது மாரப்பன் பரிபூரணமாக நம்புகிறான். நீங்கள் படுகிற துயரங்களுக்கு நீங்கள் காரணமல்ல அது விதி என கடவுளின் பெயராலும் மதங்களின் வழியாகவும் அவை சார்ந்த நம்பிக்கைகள் ஊடாகவும் தொடர்ந்து இன்றுவரையிலும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறதே, அதற்கு மிக நீண்ட வரலாறு இருப்பதையே நாவல் வாசகனுக்கு எடுத்துரைக்கிறது.மாரப்பனின் கண்களை கட்டியிருந்த சமூகத் தடைக்கயிறால் அவனுடைய மகனான கந்தனின் கண்களைக் கட்ட முடியவில்லை. கந்தனுக்கு ஏற்படும் தொடர்புகள் அவனுக்கு நிஜத்தைப் புரிந்து கொள்ளும் சாவிகளை கையளிக்கிறது.

மாரப்பன் மிகவும் நல்லவன். சக மனிதர்கள் துயரப் படுகிறபோது அவர்களின் கஷ்டங்களுக்காக கண்ணீர் சிந்துகிறவன். அவனை வாழ்கை விவசாயக் குடிகளை மேற்பார்வையிடும் கங்காணியாக மாற்றுகிறது. நாவலின் கடைசிப்பகுதியில் அவன் கைகளுக்கு சாணிப்பால் சட்டியும், வேலைத்தளத்தில் விதியைப் பின்பற்ற மறுக்கும் விவசாயிகளை அடித்து நொறுக்கி எடுத்திடும் சாட்டையும் வருகிறது. அப்போதும்கூட மாரப்பன் அந்த தண்டனைகளை நிறைவேற்றவில்லை, மாறாக மேஸ்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு மனம் வெதும்பி கண்களை மூடிக் கொள்கிறான். அவ்வளவு நல்லவன் மாரப்பன். மாரப்பனின் மகன் கந்தன் பறையர் சமுகத்துப் பெண்ணைத் திருமணம் செய்வதை மட்டும் அவனால் ஏற்றுக்கொள்ளவவே முடியவில்லை. அறுபதுகளின் குடியானவர்களின் மனதினில் பதுங்கியிருந்த சாதித்துவேத்தின் குறியீட்டு சாட்சி மாரப்பன். சாதியக் கட்டமைப்பும், சாதிசார்ந்த நடைமுறைகளும் சாஸ்வதமானவை மாற்ற முடியாதவை எனும் நம்பிக்கைககள் இன்றுவரையிலும் கடவுளின் பெயராலும், ஐதீகங்கள் மற்றும் குலமரபு வழக்கங்களின் பெயராலும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதை நாவல் காட்சி, காட்சியாக வாசகனுக்குள் கடத்துகிறது. இவையாவும் மாற்றவேமுடியாத உறுதிப்பாடுகள் அல்ல என்பதையும் நாவலின் கடைசிப் பகுதிகளில் கிளர்ந்தெழுகிற மக்கள் எழுச்சியின் வழியாக கட்டமைத்துக் காட்டுகிறார் எழுத்தாளர் கு.சி.பா..

சட்டென ஒற்றைப்புள்ளியில் கூடித் துவங்குவதல்ல இயக்கம். அதற்கான காலக்கனிவு மிகவும் முக்கியமானது. கால மாற்றங்களை மிக மிக துல்லியமாக பதிவு செய்வதற்கான பரப்பினைக் கொண்டது நாவல். வாழ்க்கையின் முழுமையை, சமூக அசைவியக்கங்களின் முழுமையை முழுவதுமாக கற்க விரும்புகிறவர்களின் கைக்கருவியாக தேர்ந்த நாவல்கள் எப்போதும் இருந்திருக்கின்றன. மாயாண்டி எனும் பறையர் சமூகத்து இளைஞன் ஊருக்குள் வருகிற காட்சி மிக முக்கியமானது. இளம் வயதில் பண்ணையாரின் தண்டனையில் இருந்து தப்பிக்க காடோ பரதேசமோ என தெறித்து ஓடியவன். சிங்கப்பூரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து ஊர் திரும்புகிறான். பெட்டி படுக்கைகளோடு ரயில்க்கடியில் இறங்கியவன் குதிரை வண்டியில ஏறுகிறான். பயண அழுப்பில் வண்டியில் தூங்கியும் போகிறான். வண்டி மாயாண்டியின் தோற்றத்தைக் கணக்கில்கொண்டு பண்ணையார் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கிறது. அப்போது விழித்த மாயாண்டி என்னப்பா இங்க கொண்டு வந்திட்ட கீழத்தெருவுக்குப் போ என வண்டியில் இருந்து குதித்து இறங்குகிறான். தன்னுடைய மூதாதையார்கள் நடக்க அஞ்சிக் கிடந்த தெருவினில் தரையதிர நடந்து போகிறான் மாயாண்டி. பண்ணையார் கோபம் கொண்டு மாயாண்டிப் பறையனை அழைக்கிறான். எப்படி நீ குடியானவர் தெருவிற்குள் வரலாம். அதுவும் செருப்பு போட்டு,மேல்சட்டை போட்டுக் கொண்டு வந்த துணிச்சல் அவனுக்கு எப்படி வந்தது. இதை இப்படியே விடமுடியாது. சம்பிரதாயங்களும், நடைமுறைகளும் மீறக்கூடாதவை. மீற முடியாதவை என்கிறான் பண்ணை. அப்போதைய மாயாண்டியின் எதிர்வினைதான் மாற்றத்தின் புள்ளிகள் துளிர்விட்ட காலத்தின் சாட்சிகள். எனக்குத் தெரியும். மனதின் குரலையும் அதற்குள் நொதித்துக் கொண்டிருந்த கசப்பின் சொற்களையும் வெளிப்படையாக சொன்னததால்தானே என்னுடைய அப்பாவை அடித்துக் கொன்று வாய்க்காலில் வீசினார்கள். அவர் என்ன பெரிதாகச் சொல்லிவிட்டார். கள் குடித்துவிட்டு வேலைத்தளத்தில் பண்ணையார் மேல்பார்க்கும் வீட்டைக் கடக்கும்போது கூட வந்த மற்றொரு விவசாயி சொல்கிறான். “டே எசமா நிக்கிறாரு”.” எசமா எங்கடா இருக்காரு. எனக்கு நாந்தான்டா எசமான் என்று உரத்த குரலில் சொன்னதற்காகத்தானே என் அப்பனைக் கொன்றீர்கள். என்னை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மாயாண்டி தனித்த ஆளில்லை. இப்படியான துணிச்சல் அவனுக்கு வந்ததற்குக் காரணம் உலகம் சுற்றி வந்ததினால் அவனுக்குக் கிடைத்த ஞானம். அதன்பிறகு அவன் கந்தனோடும், இயக்கத் தோழர்களோடும் கரம் கோர்க்கிறான். விவசாயக்கூலிகளை சங்கமாக திரட்டுகிறார்கள்.

எந்த ஒரு எழுத்திலக்கியம் குறித்த அபிப்ராயத்தையும் யார் சொல்கிறார்கள். எதற்காக என்பதை கவனிப்பது மிகவும் முக்கியம். சிட்டிக்கும், க.நா.சுவிற்கும் தாகம் தமிழில் மிக முக்கியமான நாவல் எனும் முடிவேற்படக் காரணமாக இருந்தது நாவலின் முதல் பாகம். முதல் பாகத்தின் இருநூற்றைம்பது பக்கங்களிலும் கொங்கு வட்டார சொல் வழக்குகள் பொங்கி வருகிறது. அதிலும் கோமாளிக் கிழவன் எனும் கதாபாத்திரம் குல மரபு வழக்கங்கள் என பலவற்றை மமுன் வைக்கிறது.மனிதர்களுக்கு எப்போதும் நல்லதோ கெட்டதோ தங்களுக்கு முன்பாக கடந்து போன வாழ்வின் பகுதிகளை நினைத்து நினைத்ப் பார்ப்பதில் பெரும் விருப்பம் இருக்கவே செய்யும். “ அந்தக்கால வாழ்க்கை இருக்குதே அதுபோல இனியொரு செம்மத்திலும் வராது. ரூபாய்க்கு பதினெட்டு வள்ளத்தவசம் வித்தது. கூலியோ ஆம்பளைக்கு முக்காப்பணம், பொம்பளைக்கு அரைப்பணம். அன்னைக்கெல்லாம் நெல்லஞ்சோறுங்கிறத தினமும் பார்க்க முடியாது.ஏதாச்சும் நோம்பின்னா ஒருவேளை சோறு கிடைக்கும்.சோளத்த தொவச்சு சுட்ட பணியாரந்தான் நான் கண்டது. இன்னைக்குத்தா இட்டிலி என்ன, தோசை என்ன, வடை பாயாசமென்ன, ரட்டு என்ன..என்னென்னமோ வழங்குது இதையெல்லாம் சொல்லக்கூட வாயி வர மாட்டேங்குது…”இப்படி நாவலின் முதல் பாகம் முழுக்க வாழ்கை அது சார்ந்த அனுபவங்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகள். திருமண ஏற்பாட்டு நடைமுறைகள். கால்நடைகளுக்கும் அவர்களுமான உறவுகள், நிலத்தோடு மல்லுக்கட்டி தெள்ளுத் தெறிக்கும் இந்த வாழ்கையை லயித்து மகிழ்ந்து வாழும் அவர்களுடைய நடைமுறைகள் என யாவும் காட்சியாகிறது. இருப்பதை அப்படியே ஏற்கிறார்கள். இருப்பதை இயல்புவாத நோக்கில் அடுக்கியிருக்கும் முதல்பாகம் அவ்வளவு ரசமானது என விதந்தோதும் சுத்த இலக்கியவாதிகள் இரண்டாம் பாகத்தை பிரச்சாரம் என்கிற சொல்லால் கடக்கிறார்கள். நமக்கு இரண்டாம் பாகம் மிகவும் முக்கியமானது. கால மாற்றத்தின் காட்சிப்பதிவுகள் அவை.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்
கு.சின்னப்ப பாரதி-ன் படைப்புகள்

விவசாயக்கூலிகளான தொழிலாளத் தோழர்களுடன் சங்கம் அமைக்க வந்த சம்பந்தம் எனும் கம்யூனிஸ்டின் தர்க்க ரீதியிலான உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. “ உங்க பண்ணையாருக்கு இவ்வளவு பெரிய வயற்பரப்பு எப்படி வந்து சேர்ந்ததுன்னு நீங்க எப்பவாவது எண்ணிப் பார்த்ததுண்டா?” மீண்ம் காத்தன் கேட்டான் எப்படி வந்ததுன்னு நீங்களே சொல்லுங்க. “ அஒரு குடும்பம் வேலை செய்யிற இடத்தில எவ்வளவு விளையும்? . “ஆத்துப்பாசானம் உள்ள இடத்தில ஐம்பது மூட்டை விளையும்.” “ அந்த ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க? “ “ஒரு நாலு மூட்டை கொடுப்பாங்க. “ மூட்டுவளிச் செலவு எவ்வளவு ஆகும்?” பத்து மூட்டை ஆகும்?” “ அப்படின்னா செலவு போக முப்பத்தாறு மூட்டை மிச்சம்.” “ஆமா” “வூட்டுல உட்காந்திருக்கிற பண்ணையார் கைக்கு எந்த உழைபப்பும் இல்லாம முப்பத்தியாறு மூட்டை கெடைக்குது எப்படி?”.. இப்படியான எளிய கேள்விகளால் நிகழ்த்தபப்பட்ட உரையாடல்கள் உழைப்பாளி மக்களை சங்மாக ஒன்றினைக்கிறது.இதனையே இரண்டாவது பாகம் முழுக்க எழுதியிருக்கிறார் எழுத்தாளர் கு.சி.பா.சங்கமானவர்கள் சாதிய துவேசத்திற்கு எதிராக பண்ணயடிமை முறைக்கு எதிராக கொந்தளித்து எழுகிறார்கள். வாழ்க்கையின் மீதான சுதந்திர தாகம் இதுவரையிலும் சரியென்றும், இது விதிதான் என்று அதிகாரவர்க்கம் நடைமுறைப் படுத்தியிருந்த எல்லாக் கீழ்மைகளையும் அடித்து நொறுக்கி முன்னேறுகிறது. அப்போது அவர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்டிருந்த தெருவின் பாதைகளில் உரத்து முழக்கமிட்டுச் செல்கிறார்கள்.

சாட்டை அடியை நிறுத்து.
சாணிப்பால் கொடுப்பதை நிறுத்து
ஈயத்தட்டில் சாப்பிடும் உரிமை வேண்டும்.
இடுப்பில் வேட்டி கட்டும் உரிமை வேண்டும்.
அடிமைப் பணி செய்யோம்.
ஆடு மாடுகள் போல அடங்கோம்.
வாடி என்றால் வாடா என்போம்.
அடித்தால் திருப்பி அடிப்போம்.

இந்த முத்திரை முழக்கங்களை நோக்கிய எளிய பாட்டாளி மக்களின் வாழ்க்கைப்பாடலின் தொகுப்பே தோழர் கு.சி.பா எழுதியிருக்கும் தாகம் எனும் நாவல்.

(தோழர் கு.சின்னப்ப பாரதியின் (Ku. Chinnappa Bharathi) தாகம் நாவல் (Thagam Novel) குறித்து எழுதப்பட்ட வாச்சியம்)

தாகம் நாவலை பெற: https://thamizhbooks.com/

கட்டுரையாளர்:

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

ம.மணிமாறன்

முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 6:-ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *