பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்

கருங்குகையின் கதைகள்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5

 

உழைப்பவர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஓட்டாண்டி ஆக்குகிறார்கள். உழைப்பவர்கள் செய்த பாவமே அவர்களின் கஷ்ட நஷ்டத்திற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். கோயிலைக் கட்டுகிறார்கள். மத குருமார்களை முன் நிறுத்துகிறார்கள். பலனை எதிர்பாராமல் உழைத்துக் கொண்டே இருங்கள் என்கிறார்கள். ஆண்டவனின் கருணைக்கேற்ப பலன் கிடைக்கும் என்கிறார்கள். எப்பொழுது யாருக்கு என்ன தரவேண்டும் என்பது பற்றி அவருக்கு மிக நன்றாகத் தெரியும் என்கிறார்கள். மௌனமாக கடவுள் கொடுக்கும் எல்லாச் சோதனைகளையும் ஏற்பவர்களுக்கே சொர்க்கம் கிட்டும் என்றார்கள்.

– சுரங்கம் நாவலுக்குள் கு. சின்னப்ப பாரதி..
பேசும் சொற்றொடர் தொகுப்பு.

உலகெங்கும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வின் துயரங்கள் யாவும் விதிப்பயனால் விளைந்தவை. ஒருபோதும் அதற்கு நீங்கள் பொறுப்பல்ல. உங்களுடைய. பிறவிப்பயன். . முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த செயல்களுக்கான உபவிளைவு. முற்பிறவியின் துயரகற்ற நீங்கள் இந்தப் பிறவியில் கடுமையான வாழ்வினை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி அவர்களின் துயரங்களுக்காக்கூட அவர்களை யோசிக்கவோ சிந்திக்கவோ அனுமதிக்காத முதலாளித்துவ சமூகத்தின் குணக்கேடுகளின் மீதான ஆழமான தர்க்கமே எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியின் நான்காவது நாவலான சுரங்கம். தமிழ் இலக்கிய உலகில் முன் மாதிரியில்லாத தனித்த இலக்கியக்காரர் தோழர் கு. சின்னப்ப பாரதி. தன்னுடைய படைப்பின் நோக்கத்தை அவர் அளவிற்கு பகிரங்கமாக வெளியிட்டவர்கள் எவரும் இல்லை. “வறுமை ஒழிப்பிற்கான பணி என்பதுதான் ஒர் எழுத்தாளனின் மகத்தான சேவையாக இருக்க முடியும். அதல்லாமல் குஷ்டத்திறற்கு புணுகு பூசுவதுபோல வாழ்வின் குரூரத்தை அகற்றுவதற்கு தம் படைப்பை உட்படுத்தாமல் அதை மூடி மறைக்கும் சித்து வேலைகளில் ஈடுபடுவது எழுத்து தர்மம் ஆகாது. வறுமை என்பது மனித குலம் இதுவரை உருவாக்கி வைத்திருக்கும் எல்லா மேன்மைகளையும் களங்கப்படுத்தும் அவமானம் ஆகும். அறிவுலகம் நாண வேண்டிய அசிங்கமும் ஆகும். .எங்கே சுரண்டப்படுகிற மனிதன் வாழ்வின் தாகத்துக்காக அன்னாந்து நோக்குகிறானோ அங்கெல்லாம் எனது நாவல்கள் தாகம் தீர்க்கும் தெளிந்த நீராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.”

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

தோழர் கு.சி.பா மட்டுமல்ல இலக்கியம் எழுத வருகிற எல்லோருக்குள்ளும் முளைவிடும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று நான் ஏன் எழுதுகிறேன். அல்லது என் எழுத்து என்ன செய்யும் என்பதும்தான். அதற்கு விதவிதமான பதில்களையும் அவர்களே தன்னுடைய எழுத்துக்களின் ஊடாகவோ அல்லது தனித்த கட்டுரைகளாகவோ எழுதி நான் ஏன் எழுதுகிறேன் என்பதை பகிரங்கப்படுத்தவே செய்கிறார்கள். அது எழுத்திலக்கியம் துவங்கிய நாட்களில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழில் கு. சின்னப்ப பாரதி தன்னை பாட்டாளி வர்க்கத்திற்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் எழுதுகிறவன். வர்க்கங்களுக்கிடையே நிகழும் மோதலையும் முரண்களையும் அதனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமூக வளர்ச்சியையும் தன் எழுத்தில் கொண்டு வருவதே என்னுடைய நோக்கம். அதற்காக மட்டுமே நான் எழுதுகிறேன்.

நான் வர்க்கக் கதைப்பாடால்களை எழுத வந்த கலைஞன் என தன் எழுத்தின் நோக்கத்தை பகிரங்கப்படுத்தியவர் தோழர் கு.சி.பா. அவருடைய எழுத்து பிரச்சார எழுத்து. அதற்கு கலை வெகுமதி இல்லை என அந்நாளைய இலக்கிய சட்டாம்பிள்ளைகள் கருத்துரைத்த போதிலும் அதனை தன் நாவல்களின் வழியே புறந்தள்ளினார் கு. சின்னப்ப பாரதி. தாகம், சர்க்கரை, சங்கம், பவளாயி, தலைமுறை மாற்றம் என அவருடைய படைப்புலகம் விரிவடைந்தது. தோழர் கு.சி.பா வின் நாவல்கள் இந்திய மொழிகளான வங்கம், மலையாளம், குஜராத்தி, இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளிகளில் மட்டுமல்லாது, பிரெஞ்சு ஆங்கிலம் போன்ற சர்வதேச மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருடைய நாவல்களுக்கான இலக்கியத் தகுதிக்கு அவைகள் யாவும் உலகெங்கும் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுமிருப்பதைத் தவிர வேறு என்ன சாட்சிகள் வேண்டும்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

நாவலினை எழுதுவதற்கு முன்பாக அந்த நாவல் நிகழும் புலத்திற்குச் சென்று தீராத களப்பணியில் அக்கறையுடன் ஈடுபட்டு தன்னுடைய நாவலுக்கான கச்சாப் பொருளை உருவாக்கிக் கொள்வது தோழரின் எழுதுதல் முறையில் மிகவும் முக்கியமானது. அது அவருடைய எல்லா நாவல்களுக்கும் நடந்திருக்கிறது என்பதை அவருடைய நாவல்களிள் முன்னுரைகளை வாசித்தாலே புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய படைப்புகளை எழுதவந்த கதையையும் சேர்த்தே தோழர் அவருடைய ஒவ்வொரு நாவலின்போதும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அப்படி சுரங்கத் தொழிலாளிகளின் ஒப்பற்ற தலைவராக காலம் உருவாக்கி தந்த தோழர் பிகாஷ் சௌத்ரியுடன் நிகழ்ந்த தற்செயலான சந்திப்பே சுரங்கம் என்கிற இந்த நாவலை எழுதுவதற்கான காரணமாக அமைகிறது. நாவலும்கூட ஒருவிதத்தில் தோழர் பிகாஷ் சௌத்திரியின் தன் வரலாற்றைப் போலவும் அமைந்து விடுகிறது. எளிய விவசாயக் குடும்பத்தின் மகனாகப் பிறந்த பிகாஷ் செளத்ரி நகரம் நோக்கி நகர்ந்து, சுரங்கத் தொழிலாளியாகிய கதையையும் அதன் பிறகு அவர் தொழிற்சங்க தலைவரானதையும் நாவல் நேரடியாக விவரித்துச் சொல்லவில்லை. நாவலின் எழுதாத அந்தப் பக்கங்கள் கு.சி.பா சுரங்கம் நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையின் வழியாக வாசகர்கள் மனதினில் விரியவே செய்யும.

எந்த ஒரு நாவலும் கட்டி எழுப்பப்படுவது ஒரு விரிந்த நிலத்தின் மீதுதான். நாவலை தொடரும் வாசகன் நாவல் நிகழும் களத்திற்குள் தன்னை மமுழுவதுமாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது மட்டுமே வாசிப்பு தொடரும். வாசிப்பு அயற்சியினால் மூடிவைக்கப்பட்ட நாவல்கள் தவறவிட்ட மிக முக்கியமான இடம் இதுதான். எழுத்தாளன் எந்த நிலத்தின் அல்லது தனித்த இடத்தின் கதையை சொல்ல விழைகிறானோ அதற்குள் வாசகன் லகுவாக நுழைந்து தன்னைக் கச்சிதமாக பொருத்திக் கொள்ளும் வகையில் நாவலில் துவக்கம் அமைந்திருக்க வேண்டும். சுரங்கம் நாவலின் துவக்க அத்தியாயங்கள் அப்படி கச்சிதமாக அமைந்திருக்கின்றன. யார் இவர்கள்?. பஞ்சைப் பராரிகள். உடல் உழைப்பினை விற்றுப் பிழைத்திட மட்டும் விதிக்கப்பட்டவர்கள். எங்கிருந்து வந்தவர்கள்?. அருகாமை கிராமங்களில் இருந்து வந்த விவசாயக்கூலிகள். அங்கும் அவர்களுக்கு கையகல நிலம்கூட சொந்தமில்லை. நில உடமையாளர்களின் கொடுமைகள் தாங்க முடியாமல் நகரத்தை நோக்கி ஓடி வந்தவர்கள். அங்கு நில உடமையாளர்கள் என்றால் இங்கு ஆலை முதலாளிகள். ஒடுக்குபவன்தான் மாறுகிறானே தவிர. ஒடுக்கப்படுபவர்கள் உழைப்பை விற்றுப் பிழைக்கும் எளிய பாட்டாளிகள் மட்டுமே. இந்தக் காட்சிகள் சுரங்கம் நாவல் (Surangam Novel) நிகழும் மேற்கு வங்கத்தின் சுரங்கப் பகுதிகளின் கதை மட்டுமல்ல. உலகெங்கும் நிலப்பிரபுத்துவத்தின் அழிவிழிம்பில் முதலாளித்துவம் சூழ் கொள்ளத்துவங்கிய காலத்தின் காட்சிகள்.

சுரங்கத் தொழிலாளிகளின் மனதோடு ஒட்டிக்கிடக்கும் பெருங்குரல் சங்கொலி. சங்கொலி கேட்டவுடன் தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுரங்கத்தை நோக்கி புற்றீசலாக படை எடுக்கிறார்கள். அவர்களுடைய குடியிருப்பு கதவுகளற்ற, வீசும் காற்று வலுவானால் தாங்க முடியாத மேற்கூரை கொண்ட வீடுகள். சூரிய ஒளியும் மழை நீரும் தயக்கமேயில்லாமல் உள்நுழைந்து தன்னை நிரப்பிக் கொள்ளும் தரைகள். இருளின் மிகக்குறைந்த ஒளியில்தான் அவர்ளுடைய மகிழ்வின் துளிகள் வெளிப்படுகிறது. அவர்களுடைய ஒரே சொத்தான கயிற்றுக்கட்டில்கள் பகலில் நிதானமாக இருப்பதற்கும், இரவில் தங்களுடைய ஆசாபாசங்களை நிறைவேற்றிக் கொள்ளும் யந்திரமாகவும் பயன்படுகிறது. வீடு என்று ஒருபோதும் பெயரிட முடியாத இந்தக் குடில்களில் இருந்துதான் அவர்கள் வெறிகொண்ட வேட்டை நாய்களைப் போல சுரங்கங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறார்கள். வேலை, வேலை தீராத வேலை. எப்போது ஆலையின் நிறைவு மணி ஒலி கேட்கும் என அவர்களின் உடலும் மனமும் தவிக்கும் . மனத்தவிப்பு தாங்க முடியாமல் போகும் போது அந்த மணி ஒலி கேட்கத் துவங்கிவிடும். ஆலைச் சங்கொலி எனும் பிசாசுக் குரலுக்கும் ரட்சகனான மணி ஒலிக்கும் இடையில்தான் சுரங்கத் தொழிலாளிகளின் அன்றாட வாழ்க்கை அல்லாடுகிறது. இந்த இரண்டு ஒலிகளுக்கும் இடையிலான அவர்களின் உழைப்பின் பொழுதுகளையே சுரங்கம் எனும் நாவலாக்கியிருக்கிறார் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி. தேவதைக் கதைகளில் வரும் பாதாள லோகமல்ல சுரங்கம். அரக்கர்கள் சூழ்ந்திருக்கும் பாதாள லோகமது. இங்கும் மைனிங் முன்ஷியும், மைனிங் சர்தாரும் அரக்கர்கள் அல்ல ராட்சச அரக்கர்கள். அவர்கள் தொழிலாளிகளை கசக்கிப் பிழியும் வரம் பெற்று சுரங்கம் எனும் பாதாள லோகம் வந்தவர்கள். வன்முறைகள், வசவுகள், உழைப்புச் சுரண்டல்கள் என தங்களுடைய முதலாளிகள் கொழுப்பதற்காக சேவகம் செய்யும் மகா அரக்கர்கள்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)
கு. சின்னப்ப பாரதி

சுரங்கத்தின் வடிவமைப்பு பேரச்சமூட்டும் தன்மையிலானது. சுரங்கத்தின் வாயிலை அடைந்த மறுநொடியில் தொழிலாளிகள் வேறு ஒருவராக உருமாறுகிறார்கள். அவர்கள் தலையில் ஏறும் ஹெல் மெட்களும், டார்ச் லைட்டுகளும் பிரத்யேக உடைகளும் அவர்களின் மனதிற்குள் இருட்குககைக்குள் பிரவேசிக்கும் மன பலத்தை தந்து விடுகின்றன. கருப்பு இருட்டான பெரும் சுவர்களுக்குள்அவர்கள் உள்ளிறக்கப்படுகிறார்கள். ராட்சச லிப்ட்களுக்குள் மூட்டை மூட்டைகளாக தொழிலாளிகள் ஏற்றி இறக்கப்படுறார்கள். இருள் குகைக்குள் இருக்கும் மாபெரும் தூண்களில் ரகசியமாக பதுங்கியிருக்கும் நிலக்கரிப் புடவுகளைக் கண்டறிந்து அவற்றை வெட்டியெடுத்து தொட்டிகளில் நிறைக்கும் பணியே அவர்களின் பிரதான வேலை. இழுத்து மூச்சு விட முடியாத இறுக்கம் நெஞ்சை அடைக்கும் சூழல் நிகழும் தொழிற்களம் அது. அதனால்தான் சுரங்கத் தொழிலாளிகள் குறைந்த வயதிலேயே காசநோயும், மூச்சிரைப்பும் கண்டு மரணமடைகிறார்கள். சுரங்கத்திற்குள் அதன் பக்கச் சுவர்களில் இருந்து நீர்க்கசிவு அவ்வப்போது ஏற்படும். அப்படி ஏற்படும் நீர்க்கசிவுகள் கவனத்திற்கு வராமல் போனால் அவையே பெரும் மழையாக சுரங்கத்திற்குள் உருவெடுக்கும் ஆபத்துக் கொண்டது. தொழிலாளர்கள் திடீரென ஏற்படும் நீர்க்கசிவையும் அடைத்து தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட நிலக்கரித் தொட்டிகளை நிறைக்க வேண்டும்.

நாவல் நிகழும் காலத்தை கவனப்படுத்த வேண்டியது எழுத்தாளனினன் கடமை. பனிரெண்டு மணி நேரம் இருள் குகைக்குள் தங்களுடைய வாழ்வினை ஒப்புக் கொடுக்கும் உழைப்பாளிகளின் தினக்கூலி மூன்று ரூபாய். இந்த ஒற்றைத் தகவல் நாவல் நிகழும் காலம் விடுதலைக்குப் பிறகான துவக்க நாட்கள் என்பதைக் கோடிடுகிறது. வாய் பேச வகையற்றவர்களாக, கேள்வி கேட்டிட வக்கற்றவர்களாக ஏன் இவர்கள் இருக்கிறார்காள். பசிதான். பசித்துக் கிடக்கும் இந்த ஒட்டிய வயிறுகளே அவர்களுடைய உடல் அவயங்களை மட்டுமல்ல. மனதையும் இயக்குகிறது. நித்திய கண்டம் பூரண ஆயுசு எனத் தொடரும் இவர்களுடைய வாழ்க்கையில் சுபிட்சத்தை ஏற்படுத்திட எங்கிருந்தோ தேவ தூதர்கள் வரப் போவதில்லை. அவர்களுக்குள் இருந்தே அவர்களின் ரட்சகன் உருவாகிறான். காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் எப்படி தங்களுக்கான தொழிற்சங்கமான செங்கொடி இயக்கத்தையும், அதன் தலைவராக பிகாஷையும் உருவாக்குகிறது என்பதுமே நாவல். சமதளத்தில் சுரங்கத் தொழிலாளிகளின் அன்றாடத்தைக் குலைத்துப் போடும் சாராயத்தைப் பற்றியும், கந்து வட்டிக்காரர்களின் தீராத லாபவேட்டைக்கு தொழிலாளிகள் படும் அவஸ்தையையும் நாவல் காட்சிப்படுத்துகிறது. குத்தகைதாரர்களாக போலிஸ் அதிகாரிகள் துவங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரையிலும் பலரும் இருக்கிறார்கள். அடுத்த நாள் உழைப்பதற்கான பலத்தைப் பெறுவதற்காக மட்டுமே அவர்களுக்கான கூலி தரப்பட வேண்டும். அவர்கள் வறுமையின் பிடியில் இருந்தும், பற்றாக்குறையின் கிடுக்குப் பிடியிலிருந்தும் தப்பிவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ சமூகத்தின் லாபவெறி எந்த எல்லை வரையிலும் விளையாடும் என்பதனை நாவல் வாசகர்களுக்கு காட்சி காட்சியாகக் கடத்துகிறது.அது மட்டுமல்ல நிலவும் சூழலை உடைத்து மேலெலும் தொழிலாளிகளின் வர்க்கப்போராட்ட வரலாற்றையும் நாவல் காட்சிப்படுத்துகிறது..

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

நாவலுக்குள் முதல் எதிர்க்குரலை ஒரு தொழிலாளியின் குரலாக பதிவு செய்கிறார் எழுத்தாளர். அந்த தொழிலாளி வேறு ஒன்றும் பெரிதாக கேட்கவில்லை. வேலை நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு பதினைந்து நிமிடம் ஓய்வு இருந்தால் நல்லது. அடுத்தடுத்து வேலைகளை துரிதமாகச் செய்யலாம் என்கிறார். இதனை அவர் உரத்த குரலில் கேட்கவிலை. கோரிக்கையாகத்தான் முன் வைத்திருக்கிறார். முதலாளிகள் தங்களுக்கு எதிராக தொழிலாளிகள் மூச்சு விடுவதைக்கூட அனுமதிப்பதில்லயே. இப்படி தனக்கான உரிமைக்குரலை தொழிலாளிகள் எழுப்புவதை அனுமதிப்பார்களா?. எளிய கோரிக்கையை முன்வைத்த தொழிலாளி என்ன ஆனார் என்பது கடைசிவரையிலும், எவருக்கும் கடைசிவரையிலும் தெரியவே இல்லை. ஒருமுறை நீர்க்கசிவு ஏற்படுத்திய ஓட்டையை அடைக்க தன்னுடைய கையை வைத்து அடைக்க முயற்சித்த தொழிலாளிஅது முடியாமல் போகவே தன்னையே அந்த நீர்க்கசிவுப் பாதையில் முதுகுப்புறமாக அடைத்து நிற்கிறான். அவன் விலகினால் கழிவுநீர் மழை வெள்ளமாக பெருக்கெடுத்து சுரங்கத்தையே மூடிவிடும் அபாயம் தலை தூக்குகிறது. அப்போது மொத்த சுரங்கத் தொழிலாளிகளும் செய்வது அறியாது திகைக்கிறார்கள். சுரங்க மேலாளர் திகைகௌகவில்லை .அவன் சொல்கிறான்.” இப்போது யோசிக்க நேரமில்லை. சில நிமிடம் தாமதித்தால்கூட இங்கிருக்கும் எல்லோருடைய உயிரும் போய்விடும். அப்படியே அவனையும் சேர்த்து வைத்து சுவரோடு சுவராகப் பூசுங்கள். நமக்காவும், சுரங்கத்துக்காவும் உயிரைவிடும் தியாக சந்தர்ப்பம் அவனுக்கு கிடைத்திருக்கிறது”.அவ்வளவுதான் பர பரப்பாக இயங்கிய தோழர்கள் அந்த தொழிலாளியையும் சேர்த்துவைத்து பூசிவிடுகிறார்கள். இப்படி பலி எடுத்துக்கொண்டே இருக்கிறது சுரங்கம். ஏன்? எதற்கு? எனும் கேள்விகள் அந்தக் கருப்பிருட்டுக்குள் அனுமதிக்கப்படவேயில்லை. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா? தொழிற்சங்கம் அமைக்கும் சந்தர்ப்பத்தை தொழில் சூழலே அவர்களுக்கு உருவாக்குகிறது. பசியும் பட்டினியும் கேட்பதற்கு இருவேறு சொற்கள் போல தோற்றம் தருகின்றன. நிஜத்தில் பசித்திருக்கும் மனிதர்களுக்குள் போரின் தீ இறங்குவதேயில்லை. ஆனால் பட்டினி கிடக்கும் தொழிலாளிகள் வீரர்கள் ஆகிறார்கள். களப் போராட்டத்தை நடத்துகிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள்.

ஒரு தொழிற்சாலையின் நல்லது கெட்டதுகளுக்கான போராட்டம் மட்டுமல்ல. இது சமூக எழுச்சிக்கான போராட்டம் என்பதை அந்த ஊர் முழுவதையும் உணரச் செய்கிறார் தோழர் பிகாஸ். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயிகளைத் திரட்டுகிறார். “நீங்கள் சுரங்கத்திற்காக உங்களுடைய நிலத்தை தந்திருக்கிறீர்கள். ஆனால் முதலாளிகள் உங்கள் நிலத்திற்கான உரிமைத் தொகையை முழுமையாகத் தரவில்லை. அதனைக் கேட்டுப்பெற முடியாது. அதனைப் போராடித்தான் பெற முடியும். “ இப்படி தொழிலாளிகளையும், விவசாயிகளையும் ஒரு அணியில் திரட்டியதோடு மட்டுமல்ல. அந்த சுரங்கத்திற்குள் மட்டும் சுருங்கிக் கிடந்த அந்தப் போராட்டத்தை மாநிலந்தழுவிய சுரங்கத் தொழிலாளிளின் போராட்டமாக உருமாற்றுகிறார் பிகாஸ். வெறும் கூலிப் போராட்டமல்ல. இது.. இனி ஒருபோதும் சுரங்கத்தை தனியார் முதலாளிகள் நடத்தக்கூடாது. அரசே ஏற்று நடத்த வேண்டும் எனும் உரிமைப் போராட்டமாக மாறுகிறது இயக்கம்.நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு நிலக்கரி சுரங்கங்களில் உண்டு கொழுத்த தரகர்களும், முதலாளிகளும் அப்புறப்படுத்தப் படுகின்றனர். அரசே சுரங்கங்களை ஏற்று நடத்தத் துவங்குகிறது.

சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையிலும், அவர்களுடைய குடும்பத்தினர் வாழ்க்கையிலும் சந்தோசத்தின் ரேகைகள் துளிர்விடத் துவங்குகின்றன. சங்கம் சாதித்து தந்த சந்தோசத்தின் சிறுதுளிகளே அவர்களுக்கு பேரானந்தம் தருவதாக அமைகிறது. இது இடைக்கால வெற்றிதான். தரகர்களும்,
முதலாளிகளும் இருந்த இடத்தில் இப்போது அரசும் அதிகாரிகளும் இருக்கப் போகிறார்கள். இப்போதும் இடைவிடாத. போராட்டம் தொடரவே செய்யும். நம்முடைய முழுமையான லட்சியம் எல்லோருக்கும், எல்லாமும் கிடைப்பதில்தான் நிறைவு பெறும் எனும் அரசியல் கல்வியை தொழிலாளர்களுக்கு வழங்குகிறார் தோழர் பிகாஸ். சுரங்கம் நாவலின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் படித்துக் கடப்பதற்கு மாபெரும் மன தைரியம் வேண்டும். அதிலும் அந்த கொடூர சுரங்கத்திற்குள் முன்னூறுக்கும் அதிகமான மனித உயிர்கள் ஜலசமாதியான பெருந்துயரம் நாவலை வாசித்து முடித்த பிறகும் அச்சமூட்டுவதாகவும் நிலைகுலையச் செய்வதாகவும் இருக்கிறது….

(தோழர் கு. சின்னப்ப பாரதியின் (Ku. Chinnappa Bharathi) நான்காவது நாவலான சுரங்கத்திற்கு (Surangam Novel) எழுதப்பட்ட வாச்சியம்.)

கட்டுரையாளர்:

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

ம.மணிமாறன்

முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4 : சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *