பாட்டாளி எழுதிய "தீராக் களம்" நாவல் புத்தகம் | Pattali's Theera Kalam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பாட்டாளி எழுதிய “தீராக் களம்” நாவல் – நூல் அறிமுகம்

தோழர் பாட்டாளி அவர்களின் ‘’கீழைத் தீ’’ புதினம் படித்துள்ளேன். அதில் உள்ள அனல் காற்றை விட அதிகம் வெப்பத்தை தருவது தீராக் களம். இது போர் முனைக்கு தேவையான சூடு. குருதி ஓடும் களம் இது. இவர் படைத்துள்ள நான்கு தலைமுறை பாத்திரங்கள் என்னை பொறுத்தவரை கற்பனை நாயகர்கள் அல்ல. உண்மையில் யதார்த்தத்தில் வாழ்ந்தவர்கள். உடலில் உயிருடன் வாழ்ந்தவர்கள் உதிரம் கொட்டியவர்கள். தம் தம் காலத்து பிரதான முரண் பாட்டில் நீதியை சார்ந்து நின்று களத்தில் போரிட்டவர்கள். கஞ்சமலை, தில்லை வாசகம், முனியாண்டி, சிங்காரவேலன்.

கஞ்சமலை நிலப்பிரபுக்களுக்கு எதிராக போர் தொடுக்கிறார். களத்தில் வீழ்கிறார். அடுத்த களம். மக்களின் போதை. மதம். மத வழிபாட்டில் எந்த மொழி பயன்படுகிறதோ அதுவே மக்கள் மொழியாக இருக்கும். தமிழ் எந்த வகையிலும் சம்ஸ்கிருதத்திற்கு பின் தங்கியதல்ல மாறாக தமிழே மூத்தது, முதிர்வானது. கடவுளை பாட, துதிக்க தமிழினும் உயர்ந்த இசை இல்லை என பாடுகிறார் ஆடுகிறார் தில்லை நாயகம். இவர் இல்லையெனில் நாம் இல்லை. நம் முற்போக்கு இலக்கியங்கள் இல்லை. வேதம் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் வகுப்பு எடுக்கிறார். தமிழை காக்கிறார். இந்த தமிழே வளர்ச்சி போக்கில் நமக்கு புரட்சி இலக்கியம் படைக்க உதவும் கருவியாக கிடைக்கிறது. தில்லை நாயகம் போன்றோர் பாதுகாத்து கொடுத்த தமிழையே நாம் கூர்மை படுத்தியுள்ளோம். தன் கால குடும்ப வாழ்வு தமிழ் பணிக்கு உதவாது என அவர் மறைகிறார். களத்தில் மறைகிறார்.

முனியாண்டி அறுபதுகளின் தொழிற்சங்க போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர். ஆலை முதலாளியின் கொடூர சதிக்கு வீழ்கிறார். கஞ்சமலை போலவே போர்க் களத்தில் வீழ்கிறார் முனியாண்டி. நான்காம் தலைமுறை நாயகன் முனியாண்டியின் மகன்  சிங்காரவேலன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குண்டடி பட்டு போர்க் களத்தில் வீழ்கிறான். இவர்கள் அனைவரும் வாழ்ந்து களத்தில் வீழ்ந்தவர்கள். போர் முடியவில்லை இது தீராக்களம்.

நம்மை ஒரு கால ஊர்தியில் உட்கார வைத்து பாட்டன் காலத்திற்கும், முப்பாட்டடன் காலத்திற்கும் 1960 களில் நடந்த தொழிற் சங்க மற்றும் மொழிப் போராட்டங்களுக்கும் அழைத்து செல்கிறார் நண்பர் பாட்டாளி. நாம் வரலாற்றை நேரிடையாக பார்க்கிறோம். கடந்த கால போராடங்களை குறித்து பலமுறை நாம் படித்திருப்போம் ஆனால் தீராக் களம் வாசிக்கும் போது வரலாற்றை நேரில் காண்கிறோம்.

தனிப்பட்ட முறையில் என்னை கண்ணீர் கசிய வைத்த புதினம் இது. ஏனெனில் இந்த கதையில் வரும் களங்கள் அனைத்தும் என் புவி. சோழவந்தான் , திருவேடகம், பசுமலை, பைக்காரா, காடுபட்டி இவை அனைத்தும் நான் பிறந்து வளர்ந்த முள்ளிப்பள்ளத்தை சுற்றி உள்ள இடங்கள். இறுதியாக சிங்காரவேலன் நடந்தே தியாகராசர் கல்லூரி சென்றான் என படித்த போது அழுதுவிட்டேன். ஏனேனில் மதுரை இரயில் நிலையத்தில் இருந்து தியாகராசர் கல்லூரிக்கு எம் ஏ ஆங்கிலம் படிக்கையில் இரு கல்வி ஆண்டுகள் நடந்து சென்றவன் நான். ஆகவே தான் கூறுகிறேன் நான்கு தலைமுறை நாயகர்களும் கற்பனை பாத்திரங்கள் அல்ல. உயிருடன் உடலுடன் வாழ்ந்து குருதி கொட்டியவர்கள். நமது கால அநீதிகளை இனம் கண்டு போராட்ட களத்தில் முன் செல்ல கடந்த கால அநீதிக்கு எதிரான போராட்டங்களை படிக்க வேண்டும். தோழர் பாட்டாளி அவர்கள் கடந்த கால போராட்ட களத்திற்கு நம்மை இட்டு செல்கிறார்.

நண்பர் பாட்டாளி அவர்களின் தீராக்களம் முதல் அத்தியாயம் எனக்கு ஆங்கில நாவல் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் இரு நகரங்களின் கதையை நினைவூட்டியது எனக் கூறினால் அது மிகையாகாது. பாட்டாளி அவர்களின் கதை ஒரு நகரத்தின் கதை. சார்லஸ் டிக்கன்ஸின் கதை இப்படி துவங்குகிறது, ‘’அதுவே மிகச் சிறந்த காலம் அதுவே மிக மோசமான காலம். பாட்டாளி அப்படி துவங்கவில்லை. ஆனால் மிகச் சிறந்ததையும் மிக மோசமானதையும் ஒரு சேர காட்டுகிறார்.

பஞ்சாலை நிர்வாகமும் வீட்டு வசதி வாரியமும் சேர்ந்து மில் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கின்றன. பிற்பட்ட வீர சாதிக்கு கீழ் வீடு தாழ்த்தப்பட்டவருக்கு மேல் வீடு என ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு ஆத்திரம் அடைந்து ஒரு தொழிலாளி பேசுகிறார். அவர் தாழ்த்தப்பட்டவனுக்கு கீழே வாழ முடியாது என வீட்டை மறுத்து மாற்று அல்லாட்மெண்ட்டுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனா மேல் சாதி முனியாண்டியோ தாழ்த்தப்பட்டவருக்கு கீழ் வீட்டில் தங்க எந்த தயக்கமும் காட்டவில்லை. அவர் தொழிற்சங்க தலைவர். இப்போது நாம் இருவரை பார்க்கிறோம் ஒருவர் தலித் வீட்டிற்கு கீழே வசிக்க மறுப்பவர். மற்ற ஒருவர் தலித் வீட்டிற்கு கீழே மகிழ்ச்சியுடன் வசிப்பவர். அதாவது மிகச் சிறந்த மனிதனையும் மிக மோசமான மனிதனையும் நம் முன் நிறுத்துகிறார் பாட்டாளி. இது மட்டுமா இந்த வீடு ஒதுக்கீடு கால கட்டத்தில் சீன இந்திய போரும் மூழ்கிறது. பிரதான கன்னியாகுமரி சாலையில் மதுரை நகரில் போர் குறித்து தேநீர் கடையில் மில் தொழிலாளர்கள் பேசுகிறார்கள். தலாய்லாமா சீனாவை எதிர்த்தது குறித்தும் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது குறித்தும் பேசுகிறார்கள். இந்த முதல் அத்தியாயம் சார்லஸ் டிக்கன்ஸினை முறியடிக்கிறது. பாட்டாளி சார்லஸ் டிக்கன்ஸின் மாணவன் எனக் கூறினால் மிகையாகது. ஆசிரியரை மிஞ்சிய மாணவன். ஆசிரையரை பார்த்திராத எகலவ்ய மாணவன் பாட்டாளி ஆவார்.

இதே முனிடாண்டி ஆலை முதலாளியின் கூலி அடியாட்களால் கொல்லப்படுகிறார். நாவல் நான்கு தலைமுறை கதையை மன்னிக்கவும் வரலாற்றை காட்டுகிறது. கஞ்சமலைப் பிள்ளை. தில்லை வாசகம் பிள்ளை. முனியாண்டி. சிங்கார வேலன். கவனியுங்கள். முதல் இரு தலைமுறைக்கு பின் இருந்த பிள்ளை எனும் வால் மூன்றாம் தலைமுறை முனியாண்டிக்கும், நான்காம் தலைமுறை சிங்காரவேலனுக்கும் இல்லை. காலத்தை மாற்றுகிறார் பாட்டாளி, மாறாத காலத்தையும் காட்டுகிறார் பாட்டாளி. வில்லியம் ஃபாக்னர் என்ற ஆங்கில எழுத்தாளர் இவ்வாறு கூறியுள்ளார்,

’’கடந்த காலம் எப்போதும் இறக்கவில்லை அது கடந்த காலமும் இல்லை; படியுங்கள், படியுங்கள், படியுங்கள். செவ்விலக்கியம் , நல்ல இலக்கியம், சுமாரான இலக்கியம் எல்லாவற்றையும் படியுங்கள். இவற்றை எப்படி படைத்தார்கள் என கண்டறியுங்கள். பயிற்சியாளனாக பணி புரியும் ஒரு தச்சன் ஒரு நாள் நிபுனன் ஆகிறான். படியுங்கள் உள் வாங்குங்கள் பின்பு எழுத துவங்குங்கள்’’’’

ஆம் வில்லியம் ஃபாக்னர் கூறுவது ஒரு நல்ல அறிவுரை. பாட்டாளியை படியுங்கள். புதினம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையத்தில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் மையத்திற்கு சற்று பின்னே முடிகிறது. இல்லை முடியவில்லை. இது தீராக்களம். கஞ்சமலைப்பிள்ளை விவசாயிகளை திரட்டி நிலப்புரபுக்களை எதிர்த்து போரை துவக்குகிறார். இந்த போரில் பிரிட்டிஷ் அரசு நிலப் பிரபுக்களை ஆதரிக்கிறது. கஞ்சமலையும் அவருடன் களத்தில் நின்றவர்களும் வீர மரணம் அடைகிறார்கள். அவர் மகன் தில்லை வாசகம் தமிழை காக்கிறார், வளர்க்கிறார். திருவேடகம் கோவிலில் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கிறார். குடும்ப மற்றும் சமூக சூழ்நிலை அவரை விரட்டுகிறது. கதி இழந்த தில்லை வாசகத்தின் குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரை வருகிறது

இளைஞன் முனியாண்டி பஞ்சாலையில் தொழிலளி ஆகிறான், தொழிற்சங்க தலவனும் ஆகிறான். பெரும் பேரங்கள் நடக்கின்றன. ஒரு சிறு பகுதி தொழிலாளர்கள் ஆலை முதலாளியுடன் சமரசம் செய்ய முன் வருகிறார்கள் அனால் முட்டுக்கட்டை முனியாண்டி. ஆள் வைத்து முனியாண்டி கொல்லப்படுகிறார். தீவிரமான தொழிற்சங்க போராட்டம் நம் கண் முன்னே நடக்கிறது.  நாம் வருடம் 1962 க்கே போய் விடுகிறோம். விரைவில் மூன்றே வருடங்களில் 1965 வருகிறது. சுமாராக வரவில்லை காட்டமாக வ்ருகிறது. சனவரி 25 ஆம் தேதி துப்பாக்கி சூட்டுடன் வருகிறது.

சனவரி 26 ஆம் தேதிக்கும் சனவரி 25 ஆம் தேதிக்கும் உள்ள பெரும் வேறுபட்டை அறிய இந்த புதினத்தை இன்றைய மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். ஐநூறு வருடங்களுக்கு முன் முளைத்த மொழி பல்லாயிரம் வருடங்களாக செவ்விலக்கியம் படைத்து கொண்டிருக்கும் மொழியை பின்னுக்கு தள்ள முயற்சிப்பதை எதிர்த்து மாணவர்கள் கொந்தளிக்கின்றனர். தங்களது மண்ணில் தங்கள் மொழியை காக்கும் மாணவர்கள் தங்கள் ஆட்களே துப்பாக்கி சூடு நடத்துகின்ற்னர்.

ஒரு பெரும் ஆசான் கேள்வி எழுப்பினார். இந்தியர்களை அடிமையாக வைத்திருப்பது ஒரு படை, அதில் போர் வீரர்கள் அனைவரும் இந்தியர்கள். அந்தப் படைக்கு உணவு செலவுக்கு வரி எனும் நிதி தருவதும் இந்தியர்கள். இந்தியர்களை மட்டுமே கொண்ட ஒரு படை, இந்தியர்களின் பணத்தில் வயிறு நிரப்பும் படை இந்தியாவை அடிமையாக வைத்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று ? (முதல் இந்திய சுதந்திர போர் – சிப்பாய் கலகம் குறித்து கார்ல் மார்க்ஸ்) இதே கேள்வி தீராக் களத்தில் எழுகிறது. இந்த நூலை படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த கேள்வி எழும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் காக்க அந்நிய மொழி தினிப்பை எதிர்க்க தமிழ் மாணவர்கள் போராடுகையில் தமிழக காவலர்கள் அந்த போராட்டத்தை நசுக்க துப்பாக்கியால் சுடுகின்றனர். நான்காம் தலைமுறை சிங்காரவேலன் குண்டடி பட்டு தமிழ் மண்ணில் விதைக்கப்படுகிறான். சுட்டது தமிழ் போலீஸ், சுடப்பட்டது தமிழ் மாணவர்கள். இது எவ்வாறு சாத்தியாமாயிற்று ?

கஞ்சமலைப் பிள்ளை ஆங்கிலேய துப்பாக்கி சூட்டிற்கு பலியாவதற்கும் அவர் மகன் தில்லைவாசகம் தலைமறைவாதற்கும் இடையே ஒரு தலைமுறை  இடைவெளி உள்ளது. ஆனால் முனியாண்டி அடியாட்களால் கொல்லப்படுதற்கும் அவர் மகன் சிங்காரவேலன் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்படுவதற்கும் இடையே உள்ள இடைவெளி சில நாட்களே. ஏன் ? ஏனெனில் வர்க்கப் போராட்டத்தையும் மொழிப்போராட்டத்தை ஒரே கொடியில் நெய்கிறார் எழுத்தாளர் பாட்டாளி. மாநிலம் முழுதும் பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் இந்த நூலை படிக்க வழி வகை செய்தால் தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் மட்டுமல்லாது திராவிடத்தையும் காத்து அடுத்த தலைமுறையை காக்கலாம். அப்படி செய்யாவிட்டால் தமிழ் நாடு தமில் பிரதேஷ் ஆகிவிடும். இந்தியில் ழ இல்லை ல மட்டுமே உள்ளது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “தீராக் களம்” நாவல்
ஆசிரியர்:
வெளியீடு:
விலை: ₹.490 (Offer Price ₹.440)
அறிமுகம் எழுதியவர்:  
இராமன் முள்ளிப்பள்ளம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *