பட்டாம் பூச்சியின் நினைவுகள்
(நா. முத்துக்குமாருக்கு)
…..
பட்டாம் பூச்சிகள்
பூவில் தேனருந்தும் நிலையில் பாலருந்தும்
குழந்தையென
சிறகுகளின் கால்களை அசைக்கின்றன.
பட்டாம் பூச்சிகள்
தனி அறையிலிருந்து
வனத்திற்கு
அழைத்து செல்கின்றன
கவிஞனை,
சிறகுகளில்
மஞ்சள் வெயிலேந்தி
பூ மரத்திற்கு மேலும் கீழம் பறந்து
தீப ஆராதனை காட்டுகின்றன
பட்டாம் பூச்சிகள்.
பிடிபடாமல்
குழந்தைகளுடன்
இப்பிரபஞ்சத்தின்
மடியில் குழந்தையாக
ஓடி விளையாடுகின்றன.
பட்டாம் பூச்சிகள்
மழை நாளில் பிறந்து
ஈரத்தில் ஊரும் சிவப்பு
நிற வெல்வட் பூச்சிகளிடம்
தன் காதலை நிறைவேற்ற உதவிடுமாறு
கேட்கின்றன.
கவிஞன் ஒருவன்
அவைகளை பாட்டின் ராகத்தில் வைத்ததற்கு
நன்றியின் பாடலை
சேர்ந்திசைக்கின்றன.
எழுதியவர்:
சீனு ராமசாமி
(நா. முத்துக்குமாருக்கு)

