பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை
தொடர் : 3 பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்
சினிமாவின் வழியே அரசியல் :
இந்த கட்டுரையை தொடங்குவதற்கு முன்பாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் சொல்லப் போகும் இந்த விஷயம் இந்த கட்டுரைக்குத் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். எனது தந்தை அரசியலில் மிகவும் நாட்டம் உடையவர். அரசியலை சிறிது நகைச்சுவை ஆகவும், கிண்டலாகவும் புரியாதவர்களுக்குக் கூட புரிய வைக்கும் ஆற்றல் அவருக்கு இருப்பதை நான் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். எனது சிறு வயதில் அதாவது அரசியலே என்னவென்று தெரியாத பருவத்தில் அவரது அரசியல் பேச்சை நான் கேட்டிருக்கிறேன். இந்த வகையில் அவர் எப்பொழுதும் ஒரு விஷயத்தை கிண்டலாகவே கூறுவார் “கோட்டையை பிடிக்கணும்னா கோடம்பாக்கத்துக்கு பஸ் புடிச்சா போதும் ” இதைக் கேட்டவுடன் மறுமுனையில் இருப்பவர்கள் ஒரு அலாதியான சிரிப்பை சிரித்து விட்டு நகர்வார்கள். நானும் இதைக் கேட்டு கூட்டத்தோடு கூட்டமாக சிரித்து சென்றிருக்கிறேன். ஆனால் இன்று இந்த கட்டுரையை எழுதும் பொழுது என் தந்தையின் அந்த வார்த்தைகள் தான் முதலில் எனது மூளையில் காலிங் பெல்லை தட்டியது..
சினிமாவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த தமிழ்நாடு சினிமா அரசியலின் வேரோட்டத்தை தோண்டி பார்த்தால் தான் இந்த வரிகள் உள்ளடக்கி இருக்கிற அர்த்தம் என்னவென்று புலப்படும். தென்னிந்திய மாநிலமான நம் தமிழ்நாட்டில் திராவிட அரசியலில் தமிழ் சினிமா முக்கிய பங்கு வகித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி திரைப்பட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்ட முதல் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) என்ற திராவிடக் கட்சி தான் இந்த ஊடகத்தை பிரச்சார நோக்கங்களுக்காக அதிகமாக பயன்படுத்தியது. நடிகர்களால் எப்படி அரசு அமையும்? என்று கேட்டால்… முடியும், திமுக சாத்தியமாக்கி இருக்கிறது. சினிமா போன்ற ஊடகங்கள் வழியாக பெரும்பான்மையாக இருக்கும் கிராம மக்களை எளிதில் திராவிட கட்சிகளால் அணுக முடிந்தது. இது தங்களின் கொள்கைகளைப் பரப்பிட உதவியது, இதுவே இவர்களின் வெற்றிக்கு வழி வகுத்தது…
“சினிமாவை அவர்கள் (காங்கிரஸ் கட்சி) கேவலப்படுத்தினர்.
நாங்கள் (திமுக) அதைப் பயன்படுத்தினோம்”
– கண்ணதாசன்- தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
“தி.மு.க படங்கள் வேறு வழிகளில்
அக்கட்சி ஒருபோதும் சென்றடையாத
பார்வையாளர்களுக்கு சேவை செய்தன.”
– பேராசிரியர் ராபர்ட் ஹார்ட்கிரேவ்
திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த ஏழு முதல்வர்களில் ஐந்து பேர் எழுத்தாளர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ தமிழ் சினிமாவில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் அன்றைய முதல்வராக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை இடம் பெறுகிறார்கள்.
மக்கள் திலகத்தின் வாழ்க்கையை மாற்றிய மக்கள் கவிஞன் :
காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் எம்ஜிஆர் சிறப்பாகவே நடித்து வந்திருந்தாலும் அவருக்கென்று பெரும்பான்மையான ஒரு ரசிகர் கூட்டம் அன்று அவருக்கு இல்லாமலே இருந்தது. எம்ஜிஆரை விட சிவாஜி கணேசனின் நடிப்பும், வசனங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தது. திரைப்பட விளம்பரங்களில் போது சிம்மக் குரலோன், மொழி அழகன் சிவாஜி நடிக்கும் என்று புனைப் பெயர்கள் சிவாஜி கணேசனின் பெயருக்கு முன்னால் எழுதப்பட்டு விளம்பரம் செய்த காலம். எப்படி இருக்க 1954- ஆம் ஆண்டில் எம்ஜிஆரின் மலைக்கள்ளன் என்ற திரைப்படம் ஒன்று வெளியாகிறது…

இந்தத் திரைப்படத்தில் ஒரு பாடல் “இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “ சமூகக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட இந்த பாடல் எம்ஜிஆரின் திரை உலகத்திலே ஒரு மைல்கல்லாக அமைத்தது. மக்களின் பார்வை எம்ஜிஆரின் பக்கம் மெல்லத் திரும்பியது. “நல்ல கருத்துக்களை பாடுகிறாரே… என்று ரசிகர்களால் போற்றப்பட்டார் எம்ஜிஆர். இதுவே தனது வெற்றிக்கான வழியாக மாற்றிக் கொன்றார் எம்ஜிஆர் அவர்கள். இனி வரும் திரைப்படங்களில் எல்லாம் மக்களுக்கான கருத்துக்களை முன் நிறுத்திய பாடல் ஒன்றை தனது திரைப்படங்களில் இடம்பெறுவதை கட்டாயமாக்கினார். இது போன்ற பாடல்களை எழுதுவதற்காகவே ஒரு பாடலாசிரியரையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இப்படி இருக்க எம்ஜிஆரின் நண்பரின் ஒருவரின் வழியாக தமிழ் சினிமா திரையுலகத்தில் புதிதாக அறிமுகமாயிருக்கின்ற, குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியைத் தொட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) அறிமுகமாகிறார்.
அந்த காலங்களில் பொதுவாக திரைப்பட போஸ்டர் விளம்பரங்களில் நடிகரின் பெயர்களும், இயக்குநரின் பெயர்களுமே இடம் பெரும், ஆனால் பட்டுக்கோட்டையின் வருகைக்கு பிறகு திரைப்பட விளம்பரத்தில் ஒரு பாடலாசிரியரின் பேரும் வரத் தொடங்கியது என்பது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) என்ற ஒரு கவிஞன் மக்கள் மனதில் எந்த அளவுக்கு நின்றான் என்பதையே வெளிப்படுத்தியது. பாடலுக்காகவே திரைப்படம் ஓடியது என்றால் அதை கல்யாணத்சுந்தரம் அவரது வாழ்வில் நிரூபித்திருந்தார். பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) என்று திரையில் எழுத்துக்கள் பார்க்கும் போதெல்லாம் பாமர மக்களும், சாமானியர்களும் அந்த கவிஞனைக் கொண்டாடி தீர்த்தார்கள். தனது பெயரைச் சுருக்கி புனைபெயரை வைத்துக் கொள்ளும் கவிஞர்களின் மத்தியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற நீண்ட பெயரையே இவர் பயன்படுத்தினார். இதை பற்றி ஒருவர் கல்யாணசுந்தரத்திடம் ஏன் நீங்கள் புனைபெயர் வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்ட பொது, “அவர்கள் வாழ்வில் பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர்கள், பெயர் சிறிது ஆனால் செயல் பெரிது. நான் அப்படி எதுவும் பெரிதா செய்யவில்லை, அதனால் என் பெயராவது பெரிதாக இருக்கட்டும் என்று வைத்துள்ளேன், என்று நகைச்சுவையாக கூறிவிட்டு சென்றார்.
“கல்யாணசுந்தரம் என்று ஒரு புது பையன் வந்திருக்கிறான், என்னம்மா பாட்டு எழுதுகிறான், வேண்டுமென்றால் எம்ஜிஆர் பிக்சர்ஸ் இந்த பையனை பயன்படுத்திக்கோங்களேன்” என்று எம்ஜிஆரின் காதுகளில் விழ, எம்ஜிஆரும் கல்யாணசுந்தரத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்கிறார். இந்த நேரத்தில்தான் எம்ஜிஆர் அவரே இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் தயார் நிலையில் இருந்தது. எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆரே இயக்கி நடித்த நாடோடி மன்னன் வெற்றி பெற்றால் தான் மன்னன் என்றும், தோல்வியடைந்தால் நாடோடி என்றும் எம்ஜிஆர் கூறியிருந்தார். இதற்காகவே இதில் வரும் பாடல்களையும் காட்சிகளையும் ஒவ்வொன்றையும் பலமுறை பரிசோதிக்கிறார் மாற்றம் செய்கிறார்.

இந்த நேரத்தில்தான் எம்ஜிஆர் பட்டுக்கோட்டை சந்திப்பு நிகழ்கிறது. கல்யாணசுந்தரத்தை திறனாய்வு செய்யும் வகையில், ஒரு பாடலை எழுதி தருமாறு எம்ஜிஆர் கேட்கிறார். கல்யாணசுந்தரமும் அவர் எழுதிய பாடல் ஒன்றை அங்கிருந்த மேசையைத் தட்டிய படி அவரே அதற்கு மெட்டு இசைத்து அவரே பாடினார்….
“சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பல் இல்லாம ஏறு ஒட்டி…..
பாடல் முடிந்ததும் எம்ஜிஆருக்கு அலாதியான சந்தோஷம், “மிகப்பெரிய கருத்தை இந்தக் கவிஞன் ஒரு பாடலிலே பாடிவிட்டாரே, இவரை அல்லவா நாம் தேடிக் கொண்டிருந்தோம்” என்று எம்ஜிஆர் அன்று எண்ணியிருக்க வேண்டும். இந்தப் பாடல் காட்சியானது அவர் இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் முதலில் இடம் பெறவில்லை, இதைக் கேட்ட பிறகு தான் இந்தப் பாடலுக்கே என்றே ஒரு காட்சியை உருவாக்கி, திரைக்கதையில் திருத்தல் செய்து பாட்டை இடம்பெறச் செய்தார் எம்ஜிஆர். தனது திரைப்படத்துக்கு இந்த பாடல் மிக முக்கியம் என்று எம்ஜிஆர் அன்று கருதினார். அப்படி என்ன பெரிதாக எழுதி இருப்பர் அந்த பாமரரின் கவிஞர்..
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி :
நாயகனும் நாயகியும் ஒரு மாட்டுவண்டியில் போகும் பொழுது பாடும் பாடல் தான் அது. அவர்களுக்கிடையிலான ஒரு உரையாடல்.

பெண் : ”’ சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு”’
என்று இருவரும் மாட்டு வண்டியில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி பாடி செல்கிறார்கள். இதுல என்ன புதுசா இருக்கு? என்று நீங்கள் யோசித்தால்….. அடுத்த வரியிலேயே அந்த பெண் கூறுகிறாள் :
பெண் : ”அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்”
எல்லா வளங்கள் இருந்தும், தகுந்த முறையில் உழைப்பைக் கொடுத்ததும் , விவசாயிக்கு என்ன பலன் கிடைத்து இருக்கிறது, அவனின் கையும் காலும் தான் மிச்சம் என்று ஆரம்பிக்கிறது இந்த பாமர கவிஞனின் சமயோசித புத்தி.
இதற்கு பிறகுதான் பொதுவுடைமை கருத்துக்களை போற்றப் போக்கில் அல்லி தெளித்துச் செல்கிறார் இந்த கம்யூனிஸ்ட் கவிஞர்..

பெண் : ”மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்? ”
ஆண் : “அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி.”
பெண் : ”பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்?”
ஆண் : “தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி”
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது, சிந்தித்து முன்னேற வேண்டும் என்று தொழிலாளிகளைச் சிந்திக்கத் தூண்டுகிறார், கிளைச்சியை உருவாக்குகிறார்.. இந்த பாடலுக்கான சுட்டிவேஷன் இன்றைய ஒரு கவிஞனின் கொடுத்து இருந்தால் இந்த பாடல் ரொமான்டிக் சோங் ஆக சிம்லா , ஊட்டி என்று போயி இருக்கும். ஆனால் நம் கவிஞரோ சமூகத்தின் மூலக்கூறு பிரச்சனைகளை என்ன என்பதை அறிந்து , அதை ஆணையும் பெண்ணையும் (இரு பாலினத்தாரயம்) கலந்து ஆராய்ந்து யோசிக்க வைத்து, ஆராய்வது மட்டும் இல்லாமல் அதற்கான தீர்வையும் சொல்லி இருக்கிறார்.
இந்த பாடல் இறுதியில் வரும் வரிகள் இவை :
“நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்”

எம்ஜிஆர் அவர்கள் திரையில் இந்த வரிகளுக்கு வாயசைத்த பொழுது தன்னை எதிர்காலத்தின் தலைவராகவே எண்ணி இருக்க வேண்டும்…ரசிகர் கூட்டங்களும் அதையே பின்பற்றி இருக்க வேண்டும். ஆம் எழுதியது ஒரு பொதுவுடைமை கவிஞன் (பொதுவுடைமை கருத்துக்களும் சிந்தனைகளும்) ஆனாலும் திரையில் பார்ப்பது திராவிட கலைஞன் தானே…. எம் ஜி ஆரே கூறியதாக ரசிகர் பட்டாளங்கள் கை தட்டி வரவேற்றது. இதன் பிறகு அந்த திராவிட கலைஞனுக்கு தன் கொள்கை பரப்புவதற்காக இந்த பாடலை பயன்படுத்தத் தயக்கம் வருமா என்ன? சற்றும் யோசித்து இருக்க மாட்டார்……பொதுவுடைமை எனும் விதையில் திராவிடம் அதன் வேறுகளை வளர்த்தது, பிறகு திராவிட இயக்க மலராக மக்கள் திலகம் மலர ஆரம்பித்தார். தேவர் மகன் திரைப்படத்தில் வரும் சிவாஜி கணேசன் சொல்லும் வசனம் போல “வித நான் போட்டது (பொதுவுடைமை கவிஞன்)”
கல்யாணசுந்தரத்தின் திறமையைக் கண்டு வியந்த எம்ஜிஆர் அதே திரைப்படத்தில் இன்னொரு பாடலை எழுதித் தரவும் கூறினார். அதுதான் “தூங்காதே தம்பி தூங்காதே” என்ற பாடல்…
நாடோடி மன்னன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) எழுதிய இரண்டு பாடல்களுமே பட்டி தொட்டி எல்லாம் தீயாக பரவியது. தொடர்ந்து வெளியான எல்லா திரைப்படங்களிலும் கல்யாணசுந்தரத்தின் ஒரு பாடல்களாவது இடம் பெற்றிருக்கும். தனது வெற்றிக்கு கல்யாணசுந்தரத்தின் வரிகள் தேவை என்று எம்ஜிஆர் நம்பினார். அதுவே உண்மையும் ஆகும். எம்ஜிஆருக்கு மக்கள் திலகம் என்று பெயர் வர எமது மக்கள் கவிஞனின் பாடல்களும் ஒரு பலமே.
மக்கள் கவிஞனின் வரிகளால் எம்ஜிஆர் என்று நடிகர் தனது திரை உலகத்திலும், அரசியல் பாதையிலும் ஒரு சேர வளர காரணமாக மாறியது. மக்கள் கவிஞனின் வரிகள் எம்ஜிஆர் என்ற நடிகரை எல்லா பாமர விவசாய கூலித் தொழிலாளி மக்களின் வீடுகளிலும் கொண்டு போய் சேர்த்தது.

கிளர்ச்சி தொடரும்….
“பாட்டாளி கவிஞனின் பாடல்கள் சொல்லும் கதைகளும் கருத்துக்களும்”
இந்த கட்டுரைக்கான தரவுகள் :
நன்றி
1. தமிழ் சினிமாவும் திராவிட அரசியலும்
2. List of chief ministers of Tamil Nadu
3. Periyar, Dravidian Ideologues, and Tamil Cinema
4. வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ‘ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
எழுதியவர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

