Pavalar Karumalai thamizhazhan Poems 2 பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள் 2

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




ஏழ்மையின் எதிர்பார்ப்பு
*******************************
வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்
எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் !

பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
நிறைவாழ்வு வாழ்ந்திடுவோம் வாய்ப்ப ளிப்பீர் !

மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற தைப்போல்
வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற
கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும் !

போனதெங்கே மனிதநேயம்
************************************
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம்
இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு
வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து
வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து
தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும்
துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும்
பாரத்தைப் பிறருக்காய்ச் சுமந்து நின்ற
பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே !

சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே
சேர்ந்தணைத்துக் கபடுகளைக் களைந்தெறிந்து
நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல
நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால்
வேற்றுமைகள் இல்லாத குடும்ப மாக
வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றி
போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த
போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !

காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்த
கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக்
கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக்
கொட்டிவந்த மழைவளத்தை அழித்த தைப்போல்
வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட
வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம்
பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப்
பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !

( 1 )
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூட
பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம்
துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்
துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம்
நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும்
நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம்
வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர்
வயிறதனில் அடிப்பதையே தொழிலாய்க் கற்றோம் !

பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம்
பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம்
பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது
பிசிறின்றிப் பேசிநிதம் கள்ள ராகப்
பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால்
பிறர்காலை வெட்டுவதில் வல்ல ரானோம்
சிரம்தாழ்த்தும் பழிதனக்கே நாணி டாமல்
சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !

சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம்
சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெடுத்தோம்
சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில்
சாதனையாய்ப் பகையுணர்ச்சி பெருக்கு வித்தோம்
வாதிக்கும் கருத்தெல்லாம் வாயா லன்றி
வாள்தடிகள் சங்கிலியால் மோதிக் கொண்டோம்
போதிக்கும் அன்புவிட்டு மதங்க ளென்னும்
போதையாலே மதம்பிடித்தே அலையு கின்றோம் !

( 2 )
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள்
அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி
அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம்
அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற
வெறியாலே உடன்பிறந்தோர் உடல்பி ளந்து
வீதியெல்லாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம்
நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும்
நேர்த்திக்கடன் கோயில்முன் செய்யு கின்றோம் !

வானத்தை நாம்வில்லாய் வளைக்க வேண்டா
வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும்
தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா
தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும்
தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம்
தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும்
மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில்
மன்பதையே அமைதிவீசும் நேயத் தாலே !

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *