நூல்: “யானை சவாரி” குழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்: பாவண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.40/-
புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/product/yanai-savari-3851/
இன்றைய நாட்களில் குழந்தைப் பாடல்கள் என்பதே அருகி வருகின்றன.
பல வீடுகளில் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவதற்கோ, அல்லது பெரியோர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்பதற்கோ, யூ-டியூபில் வரும் குழந்தைப் பாடல்களையோ, காட்சியுடன் கூடிய பாடல்களையோ போட்டு மகிழ்விக்கிறார்கள். பயணங்களோ என்றால், செல்பேசியில் இவற்றையே குழந்தைகளுக்குக் காண்பிக்கிறார்கள். பிரயாணம் செய்யும்போதும், மற்ற நேரங்களிலும் கூட குழந்தைகள் இப்படியே இருக்கிறார்கள்; இருக்க வைக்கப் படுகிறார்கள். குழந்தைகள், ஒரு காட்சியைப் பார்த்து அதை ஆனந்தமாக அனுபவிக்கவோ, மனதில் பதியும்படிச் செய்யவோ நம்மால் சொல்லித் தர முடியாது. அதை அவர்கள் கண்ணால் பார்ப்பதற்கோ, அதை மகிழ்ந்து ரசிப்பதற்கோ ஆன சந்தர்ப்பங்களை நம்மால் ஏற்படுத்தித்தர முடியும்.அதற்குப் பெரியவர்களும் மனதால் குழந்தைகளாக மாற வேண்டும். அப்படி குழந்தையாக மாறி பாவண்ணன் எழுதியிருக்கும் குழந்தைப் பாடல்களின் தொகுப்பு ‘ யானை சவாரி”.
பெரியவர்கள் பெரியவர்களுக்காக எழுதுவது கடினமன்று. ஆனால், பெரியவர்கள், குழந்தைகளுக்காக, குழந்தையாக மாறி எழுதுவது அவ்வளவு எளிதானதல்ல. தன் குழந்தையை மகிழ்விப்பதற்காகக் குழந்தையின் பெற்றோர் யானையாக மாறி துதிக்கை தூக்கி நடக்கவும், பூனை மாதிரி மியாவ் என்று கத்தவும், முதலை மாதிரி தரையோடு தரையாக நகரவும் செய்வது போல, பாவண்ணன், குழந்தையாகவே மாறி இந்தக் குழந்தைப் பாடல்களை, எழுதியுள்ளார்.” யானை சவாரி” என்று தலைப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகத்திலுள்ள பாடல்களை வாசித்துப் பாடும்போது ஐம்பது வயதைக் கடந்தவர்களும், குழந்தை கொள்ளும் உற்சாகம் கொள்ள முடிகிறது என்பதும், ஊக்கமும், உற்சாகமும் பன்மடங்கு பெருகுவதை உணர முடிகிறது என்பதும் இந்தத் தொகுப்பின் சிறப்பு கண்டேன். பாவண்ணனுடைய அவதானிப்பு, குழந்தைகளின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ளல் எல்லாம் பிரமிக்க வைக்கின்றன.
தலைப்புப் பாடலான “யானைச் சவாரி”, ஒரு குழந்தையை யானையில் ஏற்றி உட்கார வைத்தவுடன், அந்தக் குழந்தை கொள்ளும் பரவசத்தை மிக அழகாக வடிக்கிறார். எல்லாக் குழந்தைகளுமே யானை மேல் ஏறப் பயப்படும், ஆனால், ஏற வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஏறிய பிறகு இறங்க மனம் வராது. இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும். மலையும், மரமும், வானமும் எல்லாம் அருகில் வந்தது போலவே இருக்கும். இப்படி அந்தக் குழந்தைகள் அனுபவித்து உணர்ந்ததை, அவர்களே கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு, கண்ணை மலர்த்திக் கொண்டு சொல்வதை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். பாவண்ணன், அவரே ஒரு குழந்தையாக மாறி அவற்றை நம்மிடம் சொல்வது போன்ற ஒரு உணர்வு இந்தப் பாடலைப் பாடும்போது நமக்கு வருகிறது.
யானை முதுகில் ஏறும்போது
அச்சமாக இருந்தது
அசைந்து அசைந்து நடக்கும்போது
அச்சமெல்லாம் மறைந்தது.
திடீரென்று உயரமாக
வளர்ந்ததைப் போல் இருந்தது.
இரண்டு தோளிலும் இறகு முளைக்கப்
பறப்பது போலிருந்தது.
அங்கே இங்கே வானைப் பார்க்க
பரவசமாய் இருந்தது.
அந்தரத்தில் கையை நீட்ட
பூரிப்பாக இருந்தது.
ஏறி நின்றால் தென்னங்குலையைத்
தொடலாம் போல இருந்தது.
சிட்டுக் குருவிகள் தோளை உரசி
பறப்பதைப் போல இருந்தது.
யானை சவாரி நல்ல சவாரி
ஆனந்தமாக இருந்தது
நினைத்து நினைத்து உடல் சிலிர்க்கும்
அனுபவமாக இருந்தது.
குழந்தைகள், அவர்கள் அச்சத்தோடும், பரவசத்தோடும் எதிர்கொண்ட நிகழ்ச்சிகளை, அனுபவங்களை விவரிக்கும் அழகே அழகு. ஒரு சின்ன விஷயம் என்று பெரியவர்களுக்குத் தோன்றும்; அல்லது மற்றவர்கள் முன் அதை விவரித்து நம் அறியாமையை நாமே ஏன் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றி விடும். ஆனால், குழந்தைகள் அப்படியல்லர். எதுவாக இருந்தாலும், வெளிப்படையாகப் பேசுபவர்கள். (அப்படிப்பட்ட மனநிலை பெரியவர்களுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?) பாவண்ணன், “ தொலைந்ததும், கிடைத்ததும்” என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஒரு தம்பி, பந்தை உதைக்கிறான். அது விழுந்த புதரில் ஒரு நாய் இருந்திருக்கிறது. அது குரைத்தவுடன் அவன் பயப்படுகிறான். ஆனால், நாய் எழுந்து ஓடி விடுகிறது. அவன் பந்தை எடுத்து வந்து விடுகிறான். இதை ஒரு கதைப்பாட்டு போல அவர் எழுதியிருக்கும் விதம் மிகவும் அழகானது.
தம்பி உதைத்த பந்து
புதரில் ஓடி விழுந்தது.
எடுக்கப் போன இடத்திலே
நாய் உறங்கிக் கிடந்தது.
அக்கம் பக்கம் பார்க்காமல்
ஆட்டம் போட்ட வேகத்தில்
நாயின் வாலை மிதித்து விட்டான்
குரைத்ததும் உடம்பு நடுங்கி விட்டான்.
ஐயோ என்று அலறினான்
அடுத்த நொடியே ஓடினான்
எங்கோ சென்று திரும்பினான்
வேர்வை பெருக நோக்கினான்
குரைத்த ஓய்ந்த கருப்பு நாய்
முன்னும் பின்னும் அலைந்தது
புதரை விட்டு நடந்தது
ஊரைப் பார்த்துப் போனது.
நாய் நடந்த திசையைப் பார்த்து
நன்றி சொன்னான் மனத்திலே
தவறி விழுந்த பந்தோடு
திரும்பி வந்தான் நொடியிலே.
பெரியவர்கள் உலகத்தில் மற்றவர் பற்றிய கருத்துகளைப் பகிர்வதில் ஒரு வித தயக்கம் எப்போதும் இருக்கும். ஒருவரைப் பற்றி நாம் ஏதாவது சொல்லப் போக, அது வம்பில் முடியும் என்றோ, அல்லது அவர்களைப் புண்படுத்தும் என்றோ வெளியில் சொல்லாமல் விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், குழந்தைகள் உலகத்தில் இந்தத் தயக்கங்கள் எல்லாம் கிடையாது. தங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை உடனே சொல்லி விடுவார்கள். இது கூடத் தெரியாதா என்று அவர்கள் கேட்கும் அழகே அழகு. “பெரியப்பாவுக்கு எதுவும் தெரியாது” என்று பாடலை பாவண்ணன் மிக அழகாக எழுதியிருக்கிறார். மரமேறத் தெரியாது, படம் வரையத் தெரியாது, பாட்டு தெரியாது என்று அடுக்கிச் செல்லும் அவர், அந்தப் பாடலை, “எது கேட்டாலும் தெரியாது என்றால் எதுதான் தெரியும் பெரியப்பா” என்று முடிக்கிறார். இதையே, பெரியவர்கள் கேட்டால், அந்தக் கேள்வி, எதிராளி மனதைச் சோர்வடையச் செய்யும். தனக்கு ஒன்றும் தெரியவில்லையோ என்ற தாழ்வுணர்ச்சியைக் கொடுக்கும். ஆனால், ஒரு குழந்தை அதைக் கேட்கும்போது, நமக்கும் சிரிப்புதான் வரும். இந்த உணர்வை, மிக அழகாக பாவண்ணன் வடித்திருக்கிறார்.
மாமரத்தில் தொங்கும் பழத்தை
ஆசைப்பட்டுக் கேட்டபோது
மரமேறத் தெரியாதென்று
சிரித்துக் கொண்டே சொல்றீங்க
கிணற்றுக்குள்ளே விழுந்த பழத்தை
எடுத்துத் தரக் கேட்டபோது
கிணற்றில் இறங்கத் தெரியாதென்று
கெஞ்சும் குரலில் சொல்றீங்க.
ஓவியம் வரைந்து தாருங்கள் என்று
சுவடி ஒன்றை அளித்தபோது
ஓவியம் வரையத் தெரியாதென்று
தயங்கித் தயங்கிச் சொல்றீங்க.
ராகம் பிரித்துப் பாட்டை அறியும்
ஐயத்தோடு அணுகியபோது
இசையில் பயிற்சியே இல்லையென்று
இழுத்து இழுத்துச் சொல்றீங்க.
ஆட்டத்துணையாய் இல்லையென்றால்
ஆடுவது எப்படி பெரியப்பா
எது கெட்டாலும் தெரியாதென்றால்
எதுதான் தெரியும் பெரியப்பா?
கேள்வி ,பதில் வடிவிலான ஒரு பாடல் இந்தத் தொகுப்பில் மிக அழகாக இருக்கிறது. கர்நாடக இசைப் பாடகி திருமதி. அருணா சாய்ராம் குரலில் அனைவரையும் கவர்ந்த பாடல், ஊத்துக்காடு வெங்குடுசுப்பையரின் பாடல், “மாடு மேய்க்கும் கண்ணா” என்பது. இதில், விளையாட்டுக் கண்ணனின் அம்மா யசோதா, கண்ணனை வெளியில் செல்வதைத் தடுப்பதையும், அதற்கு கண்ணன் பொருத்தமான பதிலைச் சொல்வதையும் மிக அழகாக வடித்திருப்பார் ஊத்துக்காடு. பாவண்ணன், அதே பாணியில் ஒரு அம்மா தன் பையனைத் தடுப்பதையும், அதற்கு அவன் தரும் பதில்களையும் வைத்துப் பாடல் வடித்திருக்கிறார். “ விளையாட்டுப் பிள்ளை” என்ற இந்தப் பாடலை அம்மாவும், பையனுமாக மாறி மாறிப் பாட நாமே அப்படி குறும்புக் கார சிறுவனாக மாறிய இன்பத்தை அடைய முடிகிறது. இதே வடிவத்திலேயே “ஊஞ்சல்” என்ற பாடலிலும், ஊஞ்சலில் ஏறி ஆடும் ஒரு சிறுமியிடம், என்ன தெரிகிறது என்று கேட்பதாகவும், அதற்குப் பதில் சொல்வதாகவும் அமைந்த பாடலும் மிகவும் உற்சாகம் தரக் கூடியது.
ஊஞ்சல் ஏறிப் பறக்கும் பெண்ணே
என்ன பார்க்கிறாய்?
ஊருக்கப்பால் புளியமரத்தின்
உச்சி தெரியுது.
புளிய மரத்தின் உச்சியிலே
என்ன பார்க்கிறாய்?
உச்சிக் கிளையில் சிட்டுக்குருவி
ஊஞ்சல் ஆடுது.
ஊஞ்சல் ஆடும் குருவிகள் எத்தனை
எண்ண முடியுமா?
ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஐந்து ஆறம்மா.
குழந்தைகள் உலகம் என்பது விளையாட்டு, ருசியாகச் சுவைத்து உண்பது என்பது போன்ற மகிழ்ச்சிகளால் நிறைந்து விடுகிறது. வேறு எந்தக் கவலைகளுமற்றது. மாங்காயைச் சுவைத்தல் என்ற பாடல் ஒன்றைப் பாவண்ணன் எழுதுகிறார். திருட்டு மாங்காய் பறித்துத் தின்பதும் (மாங்காய் தின்றால் உடம்புக்கு ஆகாது என்று பெற்றோர் தடுப்பர் ) பிள்ளை விளையாட்டின் ஒரு அங்கம். அதைப் பறித்து, வீட்டிலிருந்து ஒளித்து எடுத்து வந்த உப்பும், மிளகாய்த் தூளும் தடவி, அதைத் தின்பது என்பது அலாதி இன்பம். பாவண்ணனின் இந்தப் பாடலைப் பாடும்போதே, நாவில் எச்சில் ஊறுகிறது. அம்மா வந்து பார்ப்பதற்குள் எழுத்து போகலாமா என்று முடிக்கிறார் பாடலை. நமக்குள்ளும் குழந்தையின் குறும்பு ஒரு கணம் ஓடி மறைகிறது. அதே போல, குட்டி இளவரசனின் கட்டளை என்ற பாடலும், மிகுந்த உற்சாகத்தையும், சிரிப்பையும் வரவழைக்கும் பாடல்.
மாமரத்தில் ஏறிச் சென்று
மாங்காய் பறிக்கலாமா?
துண்டு துண்டாய் நறுக்கி வைத்து
உப்பு தடவலாமா?
தட்டு நிறையத் துண்டை அடுக்கி
உலர வைக்கலாமா?
ஓரமாக மிளகாய்த் தூளை
தூவி வைக்கலாமா?
ஊற வைத்த மாங்காய்த் துண்டை
சுவைத்துத் தின்னலாமா?
அம்மா வந்து பார்ப்பதற்குள்
எழுந்து போகலாமா?
————-
குட்டி இளவரசனின் கட்டளை
நான்தான் ராஜா
நீதான் மந்திரி
நான் சொல்லும் பேச்சைக் கேட்டு
நடப்பது உனது கடமை.
இரண்டு தலை ஆட்டுக் குட்டி
ஓட்டி வரணும்
இலுப்பைத் தழையால் மாலை கட்டி
கழுத்தில் போடணும்
மூணு கொம்பு மாடு ஒன்றை
தேடிப் பிடிக்கணும்
கொம்பைச் சீவி கழுவி விட்டு
வண்ணம் அடிக்கணும்.
நாலு கண்ணு கோழிக் குஞ்சு
புடிச்சி வைக்கணும்
முறம் நிறைய கம்பு கொட்டி
முன்னால் வைக்கணும்.
அஞ்சு காலு யானை ஒண்ணு
கட்டி நிறுத்தணும்
வாழைக்குலை தென்னங்குலை
அதற்குக் கொடுக்கணும்.
———————-
வீட்டு விலங்குகளோடு விளையாடுதல், பொம்மைகளையே உயிருள்ளனவாக நினைத்துக் கொள்ளுதல், பொம்மைகளை வைத்தே ஒரு நிஜத்தைக் கட்டி எழுப்புதல் என்பன போன்றவை குழந்தைகள் உலகத்தில் மிகச் சாதாரணம். பொம்மை ரயில் கட்டி விளையாடுதல், பொம்மைக் கைப் பேசியை வைத்துக் கொண்டு, நிஜமான உரையாடல் நிகழ்த்துதல், பூனையையும், கன்றுக் குட்டியையும், ஆட்டுக் குட்டியையும் வைத்துக் கொண்டு அவைகளுக்குப் பெயர் சூட்டுவது, அவற்றின் அசைவுகளைக் கண்டு குதூகலிப்பது என்று குழந்தைகள் உலகத்தை அப்படியே சுவீகரித்து, பாடல்களாக வடித்திருக்கிறார் பாவண்ணன்.
பொதுவாக, குழந்தைப் பாடல்கள் என்பது, அவர்களுக்குப் போதனைகள் வழங்குவதாகவோ, அறிவுரை சொல்வதாகவோ, பெரியவர்களாகிச் சாதிக்க வேண்டும் என்பதைச் சொல்வதாகவோ, நாட்டின் பெருமைகளை அவர்களுக்குச் சொல்வதாகவோ இருக்கும். அது மாதிரியான பாடல்கள் அவர்களுக்கு புதிய சிந்தனையைக் கொடுக்கும்தான். மறுப்பதற்கில்லை. அவை, மீண்டும் பெரியவர்களுடைய அறிவுரை போன்று அவர்களுக்குச் சலிப்பைத் தரலாம். அவற்றோடு, அவர்கள் உலகத்தில் அவர்களை மகிழ்விக்கும் விஷயங்களையும் சொல்லும்போது அவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். அவர்களோடு இயைந்து, அவர்கள் உலகத்தில் நுழையும்போது, அவர்களோடு ஒரு நெருக்கத்தையும், அன்பு வலுப்படுவதையும் நாம் உணர முடியும். குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறி, அனுபவித்து, அவர்களையும் இப்படியான காட்சிகளை ரசித்து, ருசிக்கவும் , அனுபவிக்கவும் செய்யும்போது அவர்களுக்கான வாழ்க்கை ரசனையை நம்மால் ஊட்ட முடியும்.. வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு, அதன் மேல் புகாரோ, சலிப்போ வராதுதானே? அந்த ரசனையோடு, வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக எதிர்கொள்வதற்கு, குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் நல்ல விதைகளாக பாவண்ணனின் பாடல்கள் பதியும்..
அனைத்துப் பாடல்களுமே மிக அழகான தாளக் கட்டோடு, சுவை கூட்டும் இசைப் பாடல்கள் போன்று அமைந்திருப்பது மிகச் சிறப்பு. மிகுந்த பாராட்டுக்குரியது. பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். வயதில் மூத்தோருக்கும், குழந்தைகளுக்கும் பெரிய தேவை என்ன இருக்கப் போகிறது என்று பலரும் நினைக்கிறோம். மூத்தோருக்கு, அன்பான, அரவணைப்பான வார்த்தைகளும், ஒரு சின்னத் தொடுதலும் போதும். மகிழந்து விடுவார்கள். அது போலக் குழந்தைகளுக்கு, அவர்களோடு நாமும் குழந்தையாக மாறினால். அதுவே போதும். அவர்கள் மகிழந்து, குளிர்ந்து விடுவார்கள். அப்படியான பாடல்கள் நிறைந்த இந்தக் குழந்தைகள் பாடல் தொகுப்பினை அனைவருமே வாசித்து இன்பமடையலாம். குழந்தைகளோடு சேர்ந்து பாடலாம், ஆடலாம்.
தொகுப்பினை மிக அழகாக வடிவமைத்திருக்கும் பாரதி புத்தகாலயத்தினர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். அட்டைப்படம் கொள்ளை அழகு. பாடல்களுக்கு மிகப் பொருத்தமாக அழகான படங்களை வரைந்திருக்கும் ராமமூர்த்தி அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். குழந்தைகளுக்கான இலக்கியம் என்பது மிக அவசியம் என்று உணர்ந்து இந்தக் குழந்தைப் பாடல் தொகுதியைப் படைத்திருக்கும் பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
————————————————
நூல்: “யானை சவாரி” குழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்: பாவண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.40/-
புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/product/yanai-savari-3851/
எஸ். ஜெயஸ்ரீ, கடலூர்