நினைவில் நின்றவர்கள் – சித்தார்த்தன் சுந்தரம்

Pavannan's book `Onbathu Kundru' review by Siddharthan Sundaram. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.சாகித்ய அகாதமி விருதாளர் பாவண்ணனின் புதிய நூல் `ஒன்பது குன்று’ சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடாக மே 2021 அன்று வெளியாகி அதன் வாசகர்களில் ஒருவனான என்னை சில நாட்களுக்கு முன்பு வந்தடைந்தது.

பனிரெண்டு கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் அவர் வெவ்வேறு காலகட்டங்களில் சந்தித்த சில சாமான்ய ஆனால் அவரது நினைவை விட்டு அகல மறுக்கும் அரிய மனிதர்களையும், அவர்களைச் சந்திக்க நேரிட்ட சூழலையும் பற்றி எழுதியிருக்கிறார்.

அவரது வார்த்தைகளில், `நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவது போல இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன’ என்கிறார். இதை வாசிக்கும் போது நாமும் நம் வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று நமக்கு அறிமுகமானவர்களை, நம்மோடு பழகியவர்களை நினைத்துப் பார்க்கும்படியான ஒரு நிலைக்கு எடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனால் எல்லோராலும் இவரைப் போல அந்த நினைவுகளை எழுத்தில் கொண்டுவர முடியுமா என்றால் அதற்கான பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும்.

கல்லூரி படிப்பின் போது சக வகுப்புத் தோழியும், நல்ல குரல் வளம் கொண்டதால் வாணி ஜெயராம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட ஆனந்தி குறித்த நினைவை பல ஆண்டுகளுக்குப் பிறகு இரவில் படுக்கச் செல்வதற்கு முன் தனது வீட்டுக் கதவுகள் ஒழுங்காகச் சாத்தப்பட்டிருக்கிறதா, தண்ணீர் குழாய்களை மூடியிருக்கிறார்களா என சரிபார்த்துக் கொண்டே வருகையில் சமையல்கட்டு சன்னலில் தெரியும் வானத்து நிலாவைப் பார்க்கையில் ஆனந்தியின் முகம் நினைவுக்கு வர அது `காற்றினிலே வரும் கீதமாக’ இவரது முகத்தை வருடிச் செல்கிறது.அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஊருக்குச் சென்றிருந்த போது சந்திக்கும் செல்லமுத்துவின் அம்மா வாயிலாக ஊரின் நிலையையும், செல்லமுத்துவின் வாழ்க்கை நிலையையும் ஆயா என்று ஆசிரியர் அழைக்கும்

செல்லமுத்து அம்மாவின் வாழ்க்கையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

தனது முப்பத்தேழாண்டு பணி காலத்தில் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்றிருக்கும் நூலாசிரியர் கர்நாடகாவில் நீண்ட காலம் வேலை பார்த்தவர் என்பதால் அவர் பணி நிமித்தம் சென்ற இடங்களில் பார்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ரெளடி என ஊராரால் அழைக்கப்பட்ட தேவகி, முப்பத்தேழாண்டு கால துயரமான தமிழாசிரியர் ஆக வேண்டுமென்கிற ஆசிரியரின் கனவை நினைவூட்டும் ஆசிரியர் ராமகிருஷ்ணன், எம்.ஏ. சோஷியாலஜி படித்தாலும் ஜே சி குமரப்பாவின் கிராமப் பொருளாதாரத்தால் உந்தப்பட்டு நகர வாழ்க்கையை நரகமாக நினைத்து கிராமத்திலேயே பனஞ்சாறு, மோர், தின்பண்டங்கள் விற்கும் திப்பெஸ்வாமி, ஒன்பது குன்று இருக்குமிடத்துக்கு இவரை அழைத்துச் சென்ற பசவலிங்கப்பா, வயதானாலும் தனது சுயமரியாதையை விட்டுத் தராமல் கடைசி வரை உழைத்து வாழ வேண்டுமென்கிற எண்ணம் கொண்ட கங்கய்யா, கெம்மணகுண்டியில் தொலைபேசித் துறைக்குச் சொந்தமான சர்க்கியூட் ஹவுஸில் தான் உபயோகிக்கும் ஊஞ்சல் படுக்கையை அறிமுகப்படுத்திய கேர்டேக்கர் மல்லப்பா, `என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜெண்டில்மேன் தாத்தா’ என பேரன் சொல்ல நடைப்பயிற்சியின் போது தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கவனித்து வியந்த சம்பவம், தான் வளர்க்கும் மரங்களை நேசிக்கும் ஷிவப்பா, பெங்களூரில் மூலை முடுக்கெல்லாம் முளைத்திருக்கும் தர்ஷிணிகள் (கல்லாவில் பணத்தைச் செலுத்தி கவுண்டரில் நாமே சென்று தேவையான உணவை வாங்கி பெரும்பாலும் நின்று கொண்டே சாப்பிடக்கூடிய உணவகங்கள்) குறித்த அறிமுகமும் பெங்களூரில் விஜயநகரில் தர்ஷணி நட்த்திய ஒருவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹாசனில் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்த தருணங்கள், இந்திராநகர் பார்க்கில் சந்தித்த பார்வதியின் `அப்பாவின் குர’லோடு இந்நூல் நிறைவடைகிறது.

ஒவ்வொருவர் குறித்த சம்பவத்தை நினைவுகூரும்போது தனது பணி குறித்தும், அரசு வேலையில் இருப்பவர்கள் கொஞ்சம் `மாத்தி யோசித்தால்’ என்ன மாதிரியான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டுமென்பதையும் (இடமாற்றம், பதவி உயர்வில் தாமதம் போன்றவை) நாசூக்காக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

தொலைபேசி இணைப்புக்கு கேபிள் புதைக்கும்போது இருக்கும் விதிகளைப் பற்றி அவர், `அளவுகோல் வைத்து கோடு இழுத்தமாதிரி நேராக இருக்க வேண்டும் என்பது முதல் விதி. பள்ளத்துக்கு இருபுறங்களிலும் காலை வைத்து எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் அது நேராகச் செல்ல வேண்டும். ஒன்றரை அடி அகலத்தோடும் ஐந்தரை அடி ஆழத்தோடும் பள்ளம் இருக்க வேண்டும் என்பதும் இரண்டாவது விதி’ என்கிறார். இது பெரும்பாலான வாசகர்களுக்கு ஒரு முக்கியமான தகவலாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அது போல, புதைக்கப்படும் கேபிள் மீது ஓரடி உயரத்துக்கு மட்டுமே முதலில் மண்ணைத் தள்ளி நிரப்ப வேண்டும். அதன் பின் அதன் மீது வரிசையாக செங்கற்களை அடுக்கிய பிறகு அடுத்த அடிக்குரிய மண்ணைத் தள்ளி நிரப்ப வேண்டும்.ஏனெனில் எதிர்காலத்தில் யாரேனும் அந்த இட்த்தில் கடப்பாரையால் தோண்ட நேரும் சூழல் ஏற்பட்டால் அந்தக் கடப்பாரைத் தாக்குதலை செங்கற்கள் தாங்கிக் கொண்டு கேபிளைக் காப்பாற்றும். வேலை நிமித்தம் காண்ட்ராக்டர் மூலம் செங்கற்களை வாங்குவதற்குப் பதிலாக நேரடியாக செங்கல் சூளையிலிருந்து வாங்க முயன்றபோது சந்தித்தவர்தான் `ரெளடி’ தேவகி. ஆனால் அவர் உண்மையில் அப்படிப்பட்டவர் இல்லை.தொழில் போட்டி காரணமாக ஊராரல் அவதூறுக்கு உள்ளானவர் என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நூலாசிரியரின் மனிதாபிமானமும், சமூக அக்கறையும், சாத்வீக குணமும், நேர்மையும், அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமும், இயற்கையின் மீது இருக்கும் அதீத நேசமும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் மேலதிகரிகளின் வெறுப்புக்கு ஆளானாலும் (மாத்தி யோசிக்கும் நூலாசிரியரிடம், `ஒங்களோட இதே பிரச்சனையா போச்சு, ஏதாவது மாத்தி மாத்தி சொல்லிட்டேயிருக்கீங்க….’ என்கிற பொருளில் மேலதிகாரிகளின் உரையாடல்) பணியில் இடையூறு ஏற்படாவண்ணம் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் பெரும்பாலான கட்டுரைகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக `மலர்ந்த முகம்’, `திருநீறு பூசிய முகம்’ என்கிற கட்டுரைகளில் அவை அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

இந்த நூலில் இருக்கும் பனிரெண்டு கட்டுரைகளை வாசிக்கும் போது நம்மையும் அவர் எழுத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பயணிக்க வைக்கிறார் என்கிற வகையில் இதை ஒரு பயணக் கட்டுரை நூலென்றும் சொல்லலாம்.

இந்நூலை வாசித்து முடிக்கும் தருணத்தில் முன்பே ஆர்டர் செய்திருந்த இவருடைய `வற்றாத நினைவுகள்”, `நான் கண்ட பெங்களூரு’ நூல்கள் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வந்து சேர்ந்தன.

ஒன்பது குன்று
பாவண்ணன்
சிறுவாணி வாசகர் மையம்
விலை: ரூ. 140இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.