விலை: ₹380.00 INR*·
பதிப்பகம்: எதிர் வெளியீடு
இப்புத்தகத்தை வாசிக்கையில் ஆழ்மனத்திற்குள் பிராண்டிக் கொண்டிருந்த ஒரே விஷயம், நாம் படிப்பதற்கே இவ்வளவு அச்சப்படுவதாய் இருக்கிறதே, இதை களத்தில் நின்று சேகரித்த எழுத்தாளருக்கும், அத்தகைய சிரிய மக்களுக்கும் வாழுகின்ற வாழ்வு எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும் என்பதுதான்!
எந்த புத்தகம் வாசித்தாலும் ஏதோவொரு உணர்வு எல்லைக்குள் நாம் நீந்திச் செல்வதுண்டு. ஒன்று ஊக்கப்படவோ, மகிழ்ச்சி கொள்ளவோ, உந்தப்படவோ அல்லது துயரப்படவோ.. ஆனால் குற்ற உணர்ச்சிவயப்படுகிற ஒரு உணர்வால் என்னை நெருக்குகிறது இப்புத்தகம்.
யாத்வஷேம் நாவலில் வருகிற, “இவ்வளவு மக்கள் ஆஸ்விட்ச் முகாமில் நச்சுப் புகையால் அலரித் துடித்து மரணிக்கையில் இந்த தேசமே வேடிக்கைதான் பார்த்ததா???” என்கிற ஒற்றை வாக்கியம் இன்றுவரையிலும் என்னை அலைக்களிப்பதைப் போல இப்புத்தகம் கைகாட்டுகிற சிரிய மக்களின் சிதைந்து போகிற அகோரங்களை நாமும் கண்காட்சியைப் போல பாப்கான்களை கொரித்தபடியே தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சிக்குள்ளும் விழவே வேண்டியிருக்கிறது.
நேற்று சர்ச்சில் பிரசன்னம் செய்கிற தோழமையுடன் பேசிக் கொண்டிருக்கையில், “தோழரே, மனிதன் தன் மீதான நம்பிக்கையை இழக்கையில், சக மனிதன் மீதான நம்பிக்கையும் பொய்யாகையில், அத்தனையும் கடந்து அது கடவுள் நம்பிக்கையாக பரிணாமம் கொள்ளுகையில், மேலும் அது மதமாக உருமாற்றம் கொள்ளுகையில், அது கிட்டத்தட்ட மதவாதமாக தீவிரத் தன்மை கொள்ளுகையில் கடைசியில் மனிதன் ஆரம்ப நிலைக்கே வந்துவிடுகிறான். அவன் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடவுளின் ஆசீர்வாதம் அன்பு தான் என்றால் நாம் அதைத் தவிர எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
அதிகாரம் மத நம்பிக்கையின் மேலே தான் கட்டி வளர்த்தெடுக்கப்படுகிறது. இது வரலாற்றில் எங்கும் எப்போதும் நடப்பவை. ஆனால் அந்த நம்பிக்கையின் வழிபற்றி வாழுகிற மக்களின் மீது அதிகார வன்மத்தோடு மத தீவிரவாதமும் திணிக்கப்படுகையில் மக்களின் வாழ்நிலையோ மிகவும் துரதிஷ்டவசமானது.
இப்புத்தமெங்கிலும் பீரங்கிகளால் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சுவர்கள், பீப்பாய் குண்டுகளால் பள்ளத்தாக்குகளான தெருக்களும் சந்தைகளும், அந்த பள்ளத்தாக்குகளெங்கும் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களால் புதைக்கப்பட்ட மேட்டு நிலங்களும் என நாம் கற்பனையால் உருவாக்க முடியாததொரு தேசமாக காட்சியளிக்கிறது.
அத்தனை துயரத்திலும் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கும், அதை எதிர்க்கும் முனைப்பில் எழுகிற அதி தீவிரவாத அமைப்புகளுக்கும், இதன் சாதகமாய் உருவான கூலிபடைகளுக்கும் இடையே தங்களுக்கு தங்கள் வாழ்வு வேண்டும் என்று புரட்சியில் இறங்கிய மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலடியில் குண்டுகள் விழுந்த போதிலும் அங்கேயேதான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை சுதந்திரமும், ஜனநாயகமும் மட்டுமே. அப்படிப்பட்டவர்களை சந்தித்து பேட்டி கண்ட அனுபவமே இப்புத்தகம்.
சிரிய நிலத்தின் ஒரு முகத்தை பத்திரிகையாளராக தான் மேற்கொண்ட பயணத்தின் வழியே இப்புத்தகத்தோடு வெளியுலகிற்கு கொண்டு வந்திருக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என அவர் திரும்ப திரும்ப மேற்கொண்ட பயணங்கள் அதன் வழியே அவர் சந்தித்த மனிதர்கள், கண்ட பேட்டிகள், பட்ட பெரும் இன்னல்களின் வழியே இப்புத்தகம் கள அனுபவமாக அந்நிலத்தின் சாட்சியமாக விரிகிறது.
இப்புத்தகத்தை வாசித்து முடிக்கையில் எப்பேர்ப்பட்ட மனிதகுலத்தின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் எழுகிறது. எங்கோ நடக்கிற மத தீவிரவாத, அதிகார அத்துமீறல்கள் நம்மைச் சுற்றியும் நம் காலத்திலோ நம் பிள்ளைகளின் காலத்திலோ நடக்கக்கூடும் என்று நினைக்கும் போது வருகிற பதட்டத்தை தவிர்க்க முடியவில்லை.
நாம் மனிதர்களாக வாழ்வதும் சக மனிதன் மீது அன்பு கொண்டு நேசிப்பதும் மட்டுமே மனிதகுலத்தின் நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கும். இறைத்தூதர்களும், கடவுளர்களும் விரும்பியதும் அதுதானே!