நந்திதா ஹக்சர் (தமிழில்: அப்பணசாமி) எழுதிய “பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) புத்தகம் | Payangaravaathi Ena Punaiyapataen Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நந்திதா ஹக்சர் (தமிழில்: அப்பணசாமி) எழுதிய “பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) – நூல் அறிமுகம்

“பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) – நூல் அறிமுகம்

நீதியின் பாதையில் நடந்த துயர வரலாறு
ஒரு இளைஞனின் பறிபோன இளமை

டெல்லியில் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இளைஞர் முகமது அமீர் கான். அவருடைய 19வது வயதில், இந்திய உளவுத்துறையால் கடத்தப்பட்டு, கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். பல குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியாகப் புனையப்பட்டு, தனது வாழ்வின் பொன்னான 14 ஆண்டுகளைச் சிறையில் கழித்தபின், அனைத்து வழக்குகளிலிருந்தும் மீண்டு வந்த அவரது அதிர்ச்சியூட்டும் வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது மனித உரிமை வழக்கறிஞரும், பன்முகப் புத்தகங்களின் ஆசிரியருமான நந்திதா ஹக்சர் எழுதிய FRAMED AS TERRORIST எனும் நூல்.

அந்நூல், தோழர் அப்பணசாமியின் அருமையான மொழிபெயர்ப்பில், “பயங்கரவாதி என புனையப்பட்டேன்” என்ற தலைப்பில் எதிர்வெளியீடாக வந்துள்ளது. மதுரை புத்தகக் கண்காட்சியில் இதை வாங்கி படிக்கத் துவங்கிய போது, எனக்குள் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

பக்கங்கள் நகரும் விறுவிறுப்பு

நூலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் முகவுரையில், குண்டுவெடிப்புகளில் சிறிதும் தொடர்பில்லாத அமீர்கான் குற்றவாளியாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதைப் படித்தபின், கதையினுள் நுழையும்போது, ‘எப்போது அமீர்கான் பிடிபடுவார்?’ என்கிற பதைபதைப்புடன் பக்கங்கள் மளமளவென்று நகர்கின்றன. முதல் அத்தியாயத்தில், ஆசிரியர் அவரை ஒரு அன்பும் ஆர்வமும் நிறைந்த சராசரி இளைஞனாக நம் மனதில் ஆழப் பதியவைக்கிறார்.
தோழர் அப்பணசாமியின் நேர்த்தியான மொழிநடை பயணிக்கிறபோது, “ஆங்கிலத்தில் இதை நந்திதா ஹக்சர் எவ்வாறு விவரித்திருப்பார்?” என்கிற ஆவலும் மேலிடுகிறது.

உளவாளியாகப் புனையப்பட்ட நிலை

அமீர்கான் உளவுத்துறையால் ஒரு ஒற்றனாகத் தேர்வு செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இதில் விநோதம் என்னவென்றால், தன்னை வேலைக்கமர்த்திய நபரின் எந்த அடையாளங்களும் அப்பாவி அமீருக்குத் தெரியாது. எந்த ஏஜென்சி பணிக்கமர்த்தியது என்பதும் அவனுக்குத் தெரியாது. கராச்சிக்குச் செல்வதன் வாயிலாக அங்குள்ள தனது சகோதரி குடும்பத்தைப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் அவன் பயணிக்கிறான்.

ஆனால், கராச்சியிலிருந்து தனக்கு இட்ட பணியைப் பயத்தினால் நிறைவேற்ற இயலாமல் திரும்பியவுடன்தான் அமீருக்குச் சோதனை ஆரம்பமாகிறது.

கடத்தலும், சித்திரவதையும், ஒப்புதல் வாக்குமூலமும்

தான் எதற்காகக் கைது செய்யப்படுகிறோம் என்பதைக் கூறாமல், கைது போலன்றி கடத்திச் சென்று, குடும்பத்தினருக்குத் தெரியாமல் தனி இடத்தில் வைத்துத் தொடர்ந்து துன்புறுத்திய நிலையில், “என்ன சொன்னாலும் கேட்பேன்” என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். வெற்றுத் தாள்களில் கையொப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் புனையப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, அவன் ஒவ்வொன்றாகப் பல குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறான்.

"பயங்கரவாதி என புனையப்பட்டேன்" (Framed as a Terrorist - Payangaravaathi Ena Punaiyapataen) புத்தகம், முகமது ஆமிர் கான் (Mohammad Aamir Khan) |
“பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist – Payangaravaathi Ena Punaiyapataen) ஆங்கில புத்தகம்

பொதுவாகத் தீவிரவாதக் குற்றம் என்ற பெயரில் எடுக்கப்படும் விசாரணைகளில், நீதிக்குப்புறம்பான பல அம்சங்கள் உள்ளன. ஊடகம், அரசியல் சூழல், நீதிபதியின் முன் முடிவுகள் (pre concluded notion) மற்றும் மக்களின் கண்ணோட்டம் எனப் பல கூறுகள் இதில் பிணைந்திருக்கின்றன என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக விவரிக்கிறார்.

சிறையில் அமர்ந்து, பார்வையாளர் பகுதியில் கண்ணீர் வடிக்கும் தனது பெற்றோரைக் காணும் காட்சிகள், ஒரு குற்றமே செய்யாத இளைஞனின் மனதை எப்படி நொறுக்கியிருக்கும் என்பதை வாசிக்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன.

சிறை நிகழ்வுகளும், குற்றப்பத்திரிக்கை புனைவுகளும்

சிறையில் சந்திக்கும் சூழல்கள், சக கைதிகள், உணவு, கழிவறைக்கு அருகிலேயே படுத்துறங்குவது எனச் சிறை நிகழ்வுகள் அத்தனையையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது எழுத்துநடை. காவல்துறையே ஒருவரை குற்றவாளியாகச் சித்தரிப்பது, சந்தர்ப்பச் சூழல்களால் ஒப்புக்கொள்ள வைப்பது என்பதெல்லாம் திரைப்படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்டவை. அதுவே நிஜக்கதையாகப் படிக்கிறபோது பேரதிர்ச்சிதான் மேலிடுகிறது.

குறிப்பாக, குற்றப்பத்திரிக்கையை வாசிக்கிறபோது, ஒரு சிறந்த நாவலாசிரியரின் திறமையைக் காவல்துறையிடம் பார்க்க முடிகிறது. ஜோடிக்கப்பட்ட அந்தக் குற்றப்பத்திரிக்கையைப் படிக்கும்போதே, “சொல்லப்பட்ட குற்றங்களோடு தொடர்புடையவரை உடனே தண்டித்துவிட வேண்டும்” என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு நயமான புனைவாக அது இருக்கிறது. அது மட்டுமல்லாமல், குற்றவாளிக்கு இரண்டு, மூன்று புனைபெயர்களைக் காவல்துறையே சூட்டுவது என்பது நடைமுறையாகவே இருக்கிறது என்பதையும் அறியும்போது நடுங்குகிறது.

தலைகீழான நீதியின் சுமை

இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முதல் பலி மனித உரிமைகள்தாம். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் குற்ற நிரூபணத்தின் சுமையை தலைகீழாக மாற்றின. அதாவது, குற்றவாளி என்று ஊகிக்கப்படும் நபர்தான், தாம் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என்ற இலக்கணம் நடைமுறைக்கு வந்தது.

அப்பணசாமி

சீக்கிய கலவரங்களின்போது மாட்டிக்கொண்ட அப்பாவிகளையும் அமீர் சிறையில் சந்திக்கிறார். அமீர்கான் 14 வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார் என்பதை நாம் முகவுரையிலேயே படித்துவிட்ட போதிலும், சித்திரவதைகள், சிறைத் தண்டனைக் காலங்களில் நடத்தப்படும் விதம், பின்னர் ஒவ்வொரு வழக்கு விசாரணைகளின் நடவடிக்கை ஆகியவற்றை அமிர் வாழ்வோடு ஒன்றிப்போய் வாசிக்கும்போது, “இன்னும் எத்தனை வழக்குகள் மீதமிருக்கிறது?” என்ற எதிர்பார்ப்புடன் பக்கங்கள் விறுவிறுவென்று நகர்கிறது.

நிம்மதிப் பெருமூச்சு

விடுதலையாகி வந்தபின், விரோதமாக, பயங்கரவாதியாகப் பார்த்த உறவுகள், அக்கம் பக்கத்தவர் மத்தியில், மெள்ள மெள்ளத் தான் குற்றமற்றவன், வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டேன் என்கிற நிலையைப் புரியவைக்கிறான். அதன் பின்னர் ஆலியா என்ற பெண்ணை அமிர் மணம் முடித்தவுடன், ஒரு வாசகனாகப் பெரும நிம்மதி மேலிடுகிறது. குற்றத்திற்குத் தொடர்பில்லாத யாருக்கும் இதுபோல் நேர்ந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலுடன் மனம் நிறைவடைகிறது.

இது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கட்டாயம் படிக்க வேண்டிய அருமையான புத்தகம். சிறைக்குச் சென்று வந்த அமீர்கான் தனது அனுபவங்களை நினைவில் வந்ததற்கேற்ப விட்டுவிட்டுத் தெரிவித்திருப்பார். ஆனால் அவற்றை ஒரு திரைப்படம்போல் நேர்த்தியாகத் தொகுத்து முன்னிறுத்திய நூலாசிரியர் தோழர் நந்திதா ஹக்சரும், அதைத் தமிழில் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்த தோழர் அப்பணசாமியும் நிறைவான பாராட்டுதலுக்குரியவர்கள். மொழிபெயர்ப்பிற்கு ஊக்கமளித்து, நேர்த்தியாக வடிவமைத்த எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் நன்றிகள்.

நூலின் விவரங்கள்:

நூல்: பயங்கரவாதி என புனையப்பட்டேன்
ஆசிரியர்: நந்திதா ஹக்சர்
தமிழில்: அப்பணசாமி
பதிப்பு: எதிர் வெளியீடு
விலை: ரூ.330

எழுதியவர் : 

✍️ – சம்பத் ஸ்ரீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *