பயணி தரன் எழுதிய "விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி?" புத்தகம் ஓர் அறிமுகம் | Payani Tharan's Vidhai Ellam Maramaagum (Or) Karpathu Eppadi Book Review | www.bookday.in

பயணி தரன் எழுதிய “விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? – அறிவியல் சொல்லும் உண்மைகள்” – நூல் அறிமுகம்

புத்தகம் : விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? – அறிவியல் சொல்லும் உண்மைகள்

நம் கற்கும் திறமைக்கு எல்லையென்பது வெளியே இல்லை; அது நம் உழைப்பால் நாம் நமக்குள் வளர்க்கும் விதை! அதை முளைவிட வைத்துச் செடியாக்கி கிளைவிட வைத்து மரமாக்கி விழுதுவிடும் அளவுக்கு வளர்க்க முடியும்.

இத்திறமை எந்தத் தேர்வையும் சமாளிக்கும் இடத்தை நமக்குத் தரும். அத்தேர்வு உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருந்தாலும் இதுதான் உண்மை!! என்ற பேருண்மையுடன் தொடங்குகிறார் ஆசிரியர் திரு. பயணி தரன் அவர்கள்.

“அடிச்சோறு ஆனை பலம்!” என்பதை ஒவ்வொரு முறையும் என் மகளுக்கு உணவை ஊட்டி முடிக்கும் கடைசி வாய் சாதத்திற்குச் சொல்லி வழித்து ஊட்டுவேன். அதுபோல இந்நூலில் விளக்கப் பெற்ற கற்கும் முறைகளும் அதையொற்றிய கருத்துகளும், அதற்குப் பக்கபலமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் ஆசிரியர் திரு. பயணி தரன் விவரித்த பாங்கும் வியக்க வைக்கிறது. பல உலகளாவிய நூல்களை தேடிப் பி(ப)டித்து அதன் சாராம்சங்களை மட்டுமே இணைத்து இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு அபாரமாக விளக்கி உள்ளார்.

கதிர் மற்றும் தளிர் கதாபாத்திரங்களின் மூலமாக நான் என்னுடைய பால்ய காலத்திற்குச் சென்று வந்தேன். இன்றைய நாளில் என் வீட்டிற்குளிருந்து வாழ்ந்து பார்த்திருக்கிறாரோ என்ற எண்ணத்துடனே ஒவ்வொரு பக்கத்தின் பிரம்மிப்பையும் பகிர நினைக்கிறேன்.

புத்தகம் ஒரு தியானக் கவசமாகும். புத்தக வாசிப்பே நம் அறிவை ஒருமுகப்படுத்தி சரியான திசையில் பயணிக்கச் செய்ய முடியும் என்பதை தரணி முழுதும் பயணியாக வலம் வரும் திரு. பயணி தரன் அவர்கள் நிரூபிக்கிறார். தேர்வுத் தாளின் வெளிப்பாட்டுக்கான மதிப்பெண் வேறு, உள்ளிருக்கும் திறமைக்கான மதிப்பு வேறு என்று தனது நிலைப்பாட்டை பல்வேறு உத்திகள் மூலம் விளக்கி உள்ளார்.

ஒரு பக்கத்தில் ஏதேனுமொரு பத்தியில் வாக்கியம் ஒன்று நம்மை பாதித்ததாகவோ அல்லது வழிகாட்டும் மேற்கோளாகவோ அமைந்திருக்கும். அதை நமது குறிப்பேட்டில் குறித்து வைப்போம். அதை அவ்வப்போது வாசித்து ஸ்லாகிப்போம்.

இப்புத்தகத்தில் மட்டுமே தளிரின் குறிப்பேட்டு வடிவில் ஒவ்வொரு பாடத்தின் பின்னும் ‘Points To Ponder’ பகுதியைப் போல் அதிமுக்கியமான பகுதிகளை அக்குறிப்பேட்டின்‌ வாயிலாக அற்புதமான வகையில் அளித்திருப்பது தனித்துவமானது!!

“நூலில் அடிக்கோடிடுவது அந்நாலின் ஆசிரியருக்கு கைக்குலுக்குவது போன்றது”. என்ற கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளைப் போன்று நான் ‘End of history illusion – வரலாறு முடிந்து விட்டது என்னும் மாயை’, தலைமுறை தலைமுறையாக புத்திசாலித்தனம் உயர்தல் – Flynn Effect, Priming, Behavioural Psychology, Words can change our Action, BDNF,பல வகைக் கற்றல் மற்றும் உத்திகள், மூளையின் சேமிப்பு, Meta Cognition, மூளை யானை, ஞாபகப் பின்னல், மூளையின் Selfie, கஷ்டம்தான் கதவு, Decide & Pesticide தொடர்பு, Dunning Kruger Effect & FailCon, Physical Beats Mental, Attention Residue, Hook & Pomodoro, Feynman Techniques போன்ற பகுதிகளின் அனைத்துப் பக்கங்களிலும் பெரும்பாலான பத்திகளில் பயணி தரன் அவர்களுடன் கைக்குலுக்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

மூளையிடம் நிறைய கேள்வி கேட்டுக் குடைதலின் மகத்துவம் பகுதி மிக ஆழமாக
விளக்குகிறார். அரவிந்த் ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் நடந்த பேட்டியில், Perplexity AI குறித்து பேசும்போது, Curiosityதான் முன்னேற்றத்திற்கான இயந்திரம் என்று கூறினார். கேள்விகள் இல்லாமல் ஆராய்ச்சி, முன்னேற்றம், புதுமை எதுவும் ஏற்படாது.

இருவரின் கருத்திலும் ஒரேஅர்த்தம்தான் தெரிகிறது. கேள்விகள் சாதாரண சந்தேகங்கள் அல்ல, அவை கற்றலும் வளர்ச்சியையும் தூண்டும் ஆர்வத்தின் தீப்பொறிகள்.

பின்னிணைப்பில் 22 வகையான புத்தகங்களின் பெயர்களைப்‌ பார்த்ததும் பயன்பாட்டு உளவியல் கல்வியைக் கற்றவளாக, நான் என் வாழ்நாளில் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நூல்களின் சாரப் பொக்கிஷத்தை என் உள்ளங்கையில் பொத்திப் பாதுகாக்கச் சொல்லித் தந்திருக்கிறார்.

சமீபத்தில் நான் வாசித்த நூல்களில் என்னை மிகக் கவர்ந்த நூலென்றால் இதைத்தான் கூறுவேன். அதற்குப் பிரதான காரணம், ஆசிரியரின் அனைவருக்கும் புரியும்படியான ஆகச்சிறந்த எழுத்து நடை, பக்கங்களின் வடிவமைப்பு, நனிச்சிறப்பான முறையில் பிழை திருத்தம் செய்து அச்சிலேற்றம் போன்றவையாகும்.

நூலாக்கம் செய்த பாரதி புத்தகாலயம் திரு. நாகராஜன் அவர்களுக்கும் எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகத்தார்க்கும் என் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதின்ம வயது பிள்ளைகளுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இப்புத்தகம் கையேடாகப் பயன்படும். அனைத்துப் பொது நூலகங்கள் மற்றும் பள்ளி நூலகங்களில் இப்புத்தகத்தை முகப்படுக்கில் வைக்க வேண்டும். கற்கும் முறையில் உத்வேகத்துடனான முன்னேற்றம் வேண்டுவோர் இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

நன்றி.

நூலின் விவரங்கள்:

புத்தகம் : விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? – அறிவியல் சொல்லும் உண்மைகள் | Vidhai Ellam Maramaagum (Or) Karpathu Eppadi
ஆசிரியர் : பயணி தரன்
பதிப்பகம் : எஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம் (பாரதி புத்தகாலயம்)
விலை: ரூ.190 (11% சலுகை விலையில் 170.00)
புத்தகம் வாங்க: thamizhbooks.com

எழுதியவர் : 

✍🏻 செல்லா வித்யா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *