கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

“அவரை நாங்கள் புதைக்க எடுத்துச் சென்றபோது, மரக்கட்டைகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டோம். ஆம்புலன்ஸை கற்களால் அடித்து நொறுக்கினர். அதன் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடன் சென்ற எங்கள் மீதும், குடும்பத்தார் சுகாதார ஆய்வாளர் என எல்லோரும் கட்டைகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டோம். அவரது மனைவியும் பதின்பருவ குழந்தைகளும் இறுதி மரியாதை செலுத்தக் கூட முடியாமல் அவ்விடத்திலிருந்து உயிர் தப்பி ஓடிடோடி வந்தோம். மருத்துவரின் உடலை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து விட்டோம்” இறந்து போன மருத்துவர் சைமனின் உற்ற நண்பர்கள் மருத்துவர்கள் பிரதீப் மற்றும் பாக்கியராஜ் கண்ணீரோடு கதறிக்கொண்டு பகிர்ந்து கொள்ளும் செய்திகள் இவை. இந்த செய்தி கல் நெஞ்சையும் கூட கரைத்து விடுகிறது. செய்வதறியாது விக்கித்து நிற்கிறோம்.

புதிய நம்பிக்கை மருத்துவமனையை உருவாக்கி (New Hope Hospital) அதன் மேலாண்மை இயக்குனராக நடத்திவந்த மருத்துவருக்கு தான் இந்த கதி. கொரானா நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையோடு சிகிச்சை அளிக்க முன் வந்த அவருக்கு, அந்த நோயிலிருந்து விடுபட முடியவில்லை. அவரது உடலும் உடன் சென்ற குடும்பத்தினரும் நண்பர்களும் அடைந்த வலியை, வேதனையை, வாழ்நாள் முழுவதும் அவர்கள் மறக்க முடியாது. அவர்கள் துக்கம் சுமக்கத் துவங்கி இப்போது 24 மணி நேரம் கடந்து விட்டு இருக்கிறது. இன்னும் அவர்கள் வாழ்நாள் எத்தனை இருக்கிறது?

மருத்துவர் சைமன் ஒரு நரம்பியல் நிபுணர். அறுவை சிகிச்சையில் வல்லவர். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதை எப்போதும் ஒரு பாக்கியமாக கருதுபவர். நோய் தொற்றுக்கு ஆளாகி, அப்பல்லோ மருத்துவமனையில் ஏப்ரல் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறு ( 19.04.20) இரவு ஒன்பது மணிக்கு இறந்து விடுகிறார். இறந்தவரை, கீழ்பாக்கம் அருகில் உள்ள டிபி சத்திரம் மயானத்திற்கு கொண்டு செல்ல தயாராகிறார்கள். ஆனால் அதற்குள், அந்த மயானத்திற்கு முன்பாக “நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டை ,கற்களோடு தாக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்” என்ற செய்தி வருகிறது. எனவே, அங்கு செல்லாமல் அண்ணா நகர் வேலாங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

Chennai: Mob denies burial of coronavirus-positive doctor, gets ...

ஜேசிபி எந்திரத்தின் உதவியோடு ஆறு அடி தோன்டிக் கொண்டிருக்கும் போது, ஐம்பது அறுபது பேர் கொண்ட ஒரு கும்பல் கட்டைகள் கற்களால் ஓடிவந்து தாக்கத் தொடங்குகிறது. ரத்தம் சொட்ட சொட்ட உடலை அப்படியே வைத்துவிட்டு உயிரை தற்காத்துக்கொள்ள அழுது கொண்டே ஓடி வந்துவிடுகிறார்கள். மீண்டும் மருத்துவர் பிரதீப், சுகாதார துறையில் தனக்கு தெரிந்தவர்களை அழைத்துப் பேசி, காவல்துறையின் உதவியோடு இரவு 11 மணிக்கு சென்று காவல்துறையினரும் மருத்துவரும் கைகளால் மண்ணைத் தோண்டி அள்ளிப் போட்டுவிட்டு, அதில் தனது பிரியமான நண்பனின் உடல் மீது மண் அள்ளிப்போட்டு மூடி வைத்துவிட்டு வந்திருக்கிறார். இறந்துபோன மருத்துவர் சைமன் ஒரு நல்ல கொடையாளர்.சிறந்த மருத்துவர். ஒரு மருத்துவமனை மேலாண்மை இயக்குனர். கொரானா சிகிச்சைக்கு தைரியமாக தன்னை முகம் கொடுத்தவர். இத்தகைய மனிதர்களுக்கு நிகழ்ந்த அவலத்தை பார்க்க, படிக்க மனதில் ஏற்படும் ரணங்களைக் கொட்ட வார்த்தைகள் இல்லை. நாமும் அழுகவும் அசைவற்று அமர்ந்திருக்கவுமே நம்மால் முடிகிறது.

“ஏன் இந்த தொழிலுக்கு வந்தோம் என்று நினைத்து வெட்கி தலை குனிகிறேன்” என்று மருத்துவர் பாக்யராஜ் பேச்சின்றி கதறி அழுதும் போது, அவரோடு சேர்ந்து நாமும் சேர்ந்து கதறி அழுத்தான் முடிகிறது. மருத்துவர் சைமனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஏற்பட்ட இந்த அவலம் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நிரந்தரமானது. இந்த அவமானம் அவலம் அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தில் உள்ள ஒட்டுமொத்தமான மக்களுக்கு உரியது. அரசும் மக்களும் இந்த நிலைக்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். வேதனைப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் அவர்கள் மட்டுமா, பயம் பீதி தடுக்க தவறிய அனைவரும் குற்றவாளிகள். இந்த குற்றத்தை, அவமானத்தை எப்படி போக்கிக் கொள்ளப் போகிறோம்?

Doctor denied dignified funeral in TN, sparks outrage from medicos

மார்ச் 22ஆம் தேதி, நாடு தழுவிய ஊரடங்கு. “இது, மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், கொரானா போராட்டத்தில் எதிர்த்து நிற்கும் அனைத்து மக்களுக்குமானது” என்றார் பிரதமர். இதன் உச்சகட்டமாக, அன்றிரவு மாடியில் நின்று கை தட்டுங்கள். கிடைத்த பண்ட பாத்திரங்களை எடுத்து ஒலி எழுப்புங்கள் என்று அறைகூவல் விடுத்தார். எப்படி ஒலி எழுப்பினார்கள் என்று நாடே நன்கு அறியும். ஆனால், அந்த ஒலி அலைகள் மனதை விட்டு நீங்காத முன்பே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வீடு தர மாட்டோம் என்று வீட்டு உரிமையாளர்கள் மிரட்டுவது ஒலி காதில் கேட்டது. மீண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு,இதையே காரணமாகக் கூறி “தீபம் ஏற்றுங்கள்” என்றார் பிரதமர்.

இந்தியா முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டது. ஒரு ஊரில் ஒரு குடிசையில் ஏற்றப்பட்ட தீபத்தில் அந்த குடிசையும் அதில் இருந்த மூன்று பேரும் சாம்பலாகிப் போனார்கள். என்ன பயன்? மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் பணியின் மீது என்ன கௌரவம் போர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் கொரானா மரணம் என்று சந்தேகிக்கப்பட்ட பல மரணங்கள் பல மயானங்களில் புறக்கணிக்கப்பட்டது. இதில் இன்னும் சில மருத்துவர்களும் அடக்கம். இந்த மரணங்களின் உறவினர்கள், நண்பர்கள், கொடும் துயரத்திற்கு ஆளாகினர். குறிப்பாக மருத்துவர் சைமனின் மரணம் அந்த அவலம் மொத்த மருத்துவர்கள், செவிலியர்கள் என் எல்லோரையும் செயலற்று தவிக்க வைத்துள்ளது. “மருத்துவர் தொழில் கடவுளுக்கு நிகரானது. என்றோ போகும் உயிரை சற்று தாமதித்து அனுப்புபவர் மருத்துவர்” என்ற வார்த்தைகள் மகிமையெல்லாம் அற்றுப் போனது.

அவர்கள் உடல்கள் அல்லல் பட்டதை எந்த ஒலி ஒளியும் (கைதட்டல் & தீபம்) காப்பாற்ற முடியவில்லை. கொரானா தொற்று நோயால் இறக்கும்போது, எப்படி அவர்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் ? ஏன் அது மயானத்துக்கு அருகில் குடியிருப்போரை கிஞ்சிற்றும் பாதிக்காது? கொரானாவில் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர் உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்படும்? ஏன் அது மிகவும் பாதுகாப்பானது? என்ற கேள்விகளுக்கு விடை கூறி ஏன் விழிப்புணர்வு உருவாக்கப்படவில்லை? ஒவ்வொரு மயானத்தின் முன்பும் ஏன் அந்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விதிமுறைகள் எழுதி வைக்கப்படவில்லை? எல்லாவிதமான விழிப்புணர்வையும் மீறி கட்டுப்படுத்த முடியாத பீதியால் சடலத்தை தடுக்க முனைவோருக்கு முன்னெச்சரிக்கையாக தக்க நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? இதற்கு மத்திய மாநில அரசுகள் பதில் கூற கடமைப் பட்டவை.

A burial that was not: Chennai doctor's last rites see attacks ...

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சுற்றறிக்கை மிகத் தெளிவாக இருக்கிறது. 1)இறந்தவரின் உடல் முதலில் ஒரு உரையில் மூடப்பட வேண்டும். அதன் வெளிப்புறம் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்படவேண்டும். இதன் பின்னர் இந்த உடலை கையாள்வதில், கொண்டு செல்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை. 2) உடலை எடுத்துச் செல்வோர் உயிருடன் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது போட்டுக்கொள்ளும் கவசம் கையுறைகள் ஆகியவற்றை அணிந்து கொண்டால் போதும். கொண்டு சென்ற வாகனம் உடன் சென்ற மனிதர்கள் அடக்கும் செய்யப்பட்ட பின்னர் 1 விழுக்காடு சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினி கொண்டு உடலையும் வண்டியை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். மயானத்தில் உள்ளவர்களுக்கு, இந்த நோயால் பாதிக்கப்பட்ட உடல் எந்தவித பாதிப்பையும் உருவாகாது என்று அச்சம் நீக்கப்பட்டு உணர்வூட்ட வேண்டும்.

முன்னெச்சரிக்கையாக பயம் போக்க அவரும் கவசம் அணிந்து கொள்ளலாம். அடக்கம் செய்யும் முன்பு குடும்பத்தினர் நண்பர்களுக்கு முகத்தைக் கூட நீக்கிக் காட்டலாம். அவரவர் மத சடங்குகளை பின்பற்றலாம். உணர்வு மேலிட்டு கட்டி அணைத்தல் முத்தமிடுதல் மட்டும் கூடாது. இறுதியாக, உடல் தகனத்தில் பங்கேற்றவர்கள் தனிநபர் சுத்தம் பேணுவது போல பேணினால் போதுமானது. இவ்வளவு எளிமையாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ஏன் இந்த விளக்கம் விளம்பரம் செய்யப்படவில்லை? கை தட்டலும் தீபம் ஏற்றலும் விளம்பரம் செய்யப்பட்ட அளவுக்கு இந்த விதிமுறைகள் ஏன் விளம்பரம் செய்யப்படவில்லை? கை தட்டலின் போதும் தீபம் ஏற்றப்பட்ட போதும் உருவாக்கப்பட்ட கட்டற்ற போலி அறிவியல் பிரச்சாரங்கள் ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை? போலி அறிவியல் பிரச்சாரங்கள் வதந்திகள் மூடநம்பிக்கைகள் தானே இந்த இழி செயலுக்கு அடிப்படை காரணம்.

ஏன் இது போன்ற அதிமுக்கிய விஷயங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை? இறுதியாக, மருத்துவர் சைமனுக்கும் அவரது குடும்பத்தினர் உற்ற நண்பர்கள் ஒட்டு மொத்த மருத்துவ சமூகமும் அடைந்த வேதனை, வலி, கண்ணீர், அவலம் கையறு நிலை கல்லெடுத்து எறிந்தவர்களை கைது செய்தால் மட்டும் போதுமா? மருத்துவர் சைமன், கொரானா என்ற கொடிய நோய்த் தொற்றை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர். ஆனால் அவர் இறந்த பின்னரும் பட்ட அவமானத்திற்கு , அரசு என்ன செய்யப் போகிறது? அவருக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி எது? தமிழக முழுவதும் ஒருநாள் துக்கம் அனுஷ்டித்தல், அந்த நாளில், நம்மிடம் மண்டிக்கிடக்கும் இந்த மூடநம்பிக்கைகளை ஆழக்குழி தோண்டி புதைக்கலாம்.

New Hope Hospitals Dr.Simon Hercules (2018) latest interview - YouTube

மக்கள் தங்கள் வாட்ஸ்அப், முகநூலில் அவரது படத்தை வைத்து கொண்டாடி, அஞ்சலி செலுத்தலாம். நாங்களும் உங்கள் துயரில், நீங்கள் பட்ட அவமானத்தில் பங்கு பெறுகிறோம். பகிர்ந்து கொள்கிறோம். இப்படியான ஒரு சூழ்நிலைக்கு இனிமேல் இந்த மனித சமூகத்தை தள்ள மாட்டோம் என்று சபதம் ஏறக்கலாம். இது அவர்களுக்கு மட்டுமல்லாது தற்போது பணியில் இருக்கும் ஒட்டுமொத்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. மருத்துவர் சைமனின் நண்பர்கள் பிரதீப் பாக்கியராஜ் அவரது குடும்பத்திற்கு உங்கள் துயரில் பங்கேற்கிறோம் என்ற செய்தி சென்று சேர வேண்டும். செய்வோமா?

Show 3 Comments

3 Comments

  1. Murugan

    பக்கம் பக்கமாக கட்டுரை எழுத தெரிந்த உங்களை போன்றவர்க்கு கூட கைதட்டல் தீபம் ஏற்றுதல் ஆகியவை ஏன் ஏற்படுத்த பட்டன.. என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கேலிகிண்டல் பண்னும் போது சதாரன கல்வி அறிவு பெற்றிராத மக்களை குறைசொல்வதை விட்டு விட்டு அந்த தெளிவு பெற உங்களை போன்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சியுங்கள் அரசே வாயில் ஊட்டிவிட வேண்டும் என்பதை கைவிடுங்கள்

  2. Annamalai S

    Doctors are God for patients who are in death bed. Even if God is in the place of doctor status qua will be maintained by ungreatful human beings.
    Mani, your article will touch every reader’s heart. Authority might have awakened earlier when they haven’t allowed in Keelpauk burial ground. Too late.

  3. Parameswari Murugesan

    மக்களுக்கு எந்தவித விழிப்புணர்வம் வந்து விட்ட கூடாது என்பதால் தானே ஆண்டிகளின் அரசு கை தட்டவும் தீபம் ஏற்றவும் சொல்கிறது. வன்முறையில் ஈடுபட்ட இந்த மக்கள் அனைவரும் கை தட்டி விளக்கேற்றியவர்கள் தான் …. விழிப்புணர்வு அற்ற விளிம்புநிலை மக்கள்…

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கையிலே அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே…. எனும் பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது…. விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமை அறிவியல் இயக்கம் அதை முன்னெடுக்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *