pazanthamizhar vaazviyalum varalaarum book reviewed by prof.p.jambulingam நூல் அறிமுகம்: பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் - முனைவர் பா.ஜம்புலிங்கம்
pazanthamizhar vaazviyalum varalaarum book reviewed by prof.p.jambulingam நூல் அறிமுகம்: பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் - முனைவர் பா.ஜம்புலிங்கம்

நூல் அறிமுகம்: பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் – முனைவர் பா.ஜம்புலிங்கம்

முனைவர் ஆ. ராஜா எழுதியுள்ள “பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்” என்ற நூல் ஆலங்குடி வட்டாரப்பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப்படுகையில் நுண்கற்காலத் தடயங்கள், கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும், கீழடி அகழாய்வுகள், பல்லவர் கால மூத்த தேவி சிற்பம், அளவையியல் மரபில் மரக்கால், பெரியபட்டினத்தின் தொன்மையும் வரலாறும், இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம், கடல்சார் வரலாற்றைக் காட்டும் தொன்மையான நங்கூரங்கள், கலை பண்பாட்டுத் தளத்தில் சோமேசுவரர் திருக்கோயில், தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள், சேதுபதி கல்வெட்டுகள் காட்டும் முத்துக்குளித்தல் என்ற உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. கட்டுரைகள், தலைப்புக்கேற்ற வகையில் உரிய சான்றுகளுடனும், ஏராளமான தகவல்களுடனும், 50க்கும் மேற்பட்ட படங்களுடனும் உள்ளன. அனைத்தும் பழந்தமிழர் வாழ்வியலோடும், வரலாற்றோடும் தொடர்புடையனவாக உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

“……பரந்துபட்ட தமிழகத்தின் தொன்மைச்சிறப்புகளை வெளிப்படுத்தும் செய்திகளைக் கள ஆய்வு மற்றும் சேகரிப்பின் அடிப்படையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவா என்னுள். அதன் விளைவாக விளைந்ததே இந்நூல்” என்று ஆசிரியர் என்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய அவா ஓரளவிற்குப் பூர்த்தியடைந்ததைக் கட்டுரைகள் உணர்த்துகின்றன.

“ஆலங்குடி வட்டாரத்தில் கண்டறியப்பட்டுள்ள நுண்கற்காலப் பண்பாட்டிடங்களின் தன்மையை ஒப்புநோக்கும்போது இதற்கு முன்னர் இம்மாவட்டத்தில் கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த நுண்கற்காலப் பண்பாட்டு இடங்களை ஒத்துள்ளன…….” (ப.2)

“கொடுமணலிலுள்ள வாழ்விடப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டபோது, அகழாய்வுக்குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப்பகுதிகள், வீட்டுத்தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப்பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.” (ப.16)

“…கீழடி சங்க கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகும். இங்கு கிடைத்த சான்றுகள் சங்க கால மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் நமக்கு உணர்த்துகிறது….இப்பண்பாடானது கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதால், சிந்துச்சமவெளி நாகரிகத்திற்கு இணையாகவே கீழடி நாகரிகத்தைக் கருதலாம்.” (பக்.24, 33)

“மூத்த தேவி சிற்பம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன. இன்று வழிபாடு குறைந்த இத்தெய்வம் பல்லவர் காலத்தில் மூத்ததேவியாகவும், தாய்த்தெய்வமாகவும் வழிபாட்டு நிலையில் இருந்துள்ளது…..இந்த வகையான மூத்ததேவி சிற்பம் தமிழகத்தில் தற்போது பெரும்பான்மையான இடங்களில் ஊருக்கு வெளிப்புறங்களில் வைத்து வழிபடும் நிலையினைக் காணமுடிகிறது….” (ப.36)

“வேளாண்மையில் மரக்கால் என்பது நம்பிக்கை சார்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் அறுவடையின்போது தூற்றிக் குவித்த நெற்பொலியில் மரக்காலால் முதலில் நெல்லை அளந்து தெய்வத்திற்காக எடுத்து வைப்பர். அது நம்பிக்கை சார்ந்ததாகும்……” (ப.49)

“கடல் பயணத்தின்போது கலங்களை நிறுத்துவதற்கு நங்கூரங்கள் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இரும்பு நங்கூரங்கள் பயன்படுத்துவதுபோல் தொடக்கக் காலத்தில் கல்லிலான நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.” (ப.68)

“கி.பி.14-15ஆம் நூற்றாண்டுகளில் மரக்காயர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைக்கு அருகாமையிலுள்ள பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை அமைத்திருந்தனர் என்பதை இப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் உள்ள நாகூர், நாகபட்டினம், சுந்தரபாண்டியபட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மரக்காயர்களின் குடியேற்றங்கள் இருந்துள்ளன.” (ப.90)

“சங்க காலம் தொட்டே கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழக மக்கள் கடலில் மூழ்கி முத்துக்குளித்து, முத்துக்களைச் சேகரித்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். முத்துக்குளித்தலில் பழந்தமிழர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் முத்துக்குளித்தல் எனும் தொழிலானது பிரதானத் தொழிலாக சங்க காலத்திலும் அதைத் தொடர்ந்து இடைக்காலங்களிலும் இருந்துள்ளன.” (ப.96)

நூலாசிரியர், களப்பணி மூலம் பெற்ற தகவல்களை உரிய இடங்களில் சிறப்பாகத் தந்துள்ளார். முந்தைய அறிஞர்களின் கூற்றுகள் உரிய சான்றாக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. அவை விவாதப்பொருளுக்கு அதிகம் துணை நிற்பதை அறிய முடிகிறது. பழந்தமிழரின் வாழ்வியலையும், வரலாற்றையும் பல்வேறு கோணங்களில் நோக்கி, வடிவம் தர பெருமுயற்சி மேற்கொண்டு, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *