பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்

பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்




பழங்குடியின மக்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். கீழே பதிவாகியுள்ள கவிதைகளில் பெரும்பாலும் ஊடுருவி நிற்பது அவர்களின் முன்னோர்கள் பற்றிய நினைவுகளும் அதற்கான படையல் முயற்சிகளும்…. அவர்களுடையது எதார்த்தமான இலக்கியம். அவர்கள் தான் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் என்று தங்கள் வாய் மொழி இலக்கியம் மூலம் நிரூபணம் செய்கிறார்கள். கலை விமர்சகர் இந்திரன் அவர்களின் பதிவுக்கு நன்றி.
-நா.வே.அருள்
கவிதை ஆசிரியர்
புக்டே இணையஇதழ்

சிங்கப்பூர்
Kavignar nepolean பதிவு28. வாசிப்பில் ஈர்த்த வரிகள்…
( சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2016ற்காக )
——————————————-
கடவுள்
முதலில் வானத்தையும் பூமியையும் படைத்தார்
பிறகு பெண் மயிலைப் படைத்தார்
அது ஒரு முட்டை இட்டது
அந்த முட்டை உடைந்தது
முட்டை ஓட்டிலிருந்து
கெரியா மலைவாழ் ஆதிகெரியாக்கள்
தோன்றினார்கள்
முட்டையின் வெள்ளைக் கருவிலிருந்து
மயூர்பஞ்சின் புராண மலையினமும்
மஞ்சள் கருவிலிருந்து
மயூர்பஞ்ச ஆளும் பஞ்சாகுடும்பமும்
தோன்றின
முட்டைத் தோலிலிருந்து
ஓரெயன் மலையின
முன்னோர்கள் தோன்றினர்
மயூர்பஞ்ச் பிரதேசத்தின்
பஞ்சயூர் பகுதியில்
இது நிகழ்ந்தது
– ஒரிசாவின் கெரியா மலைப்பகுதியின் பாடல்
***************

கட்டளை
பழங்காலத்தில்
பாறைகள் நகர்ந்துகொண்டிருந்தன
அனைத்தும் உயிரோடு இருந்தன
சூரியதேவன் அவற்றிடம்
சொன்னான்
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்
நான் இப்போது
மனிதர்களை உலகத்துக்கு அனுப்புகிறேன்
அவர்கள் வாழிடங்களை அமைப்பார்கள்
நீங்கள் அவர்களுக்கு நிழல் தருவீர்கள்
இப்போது நிலையாக நின்று விடுங்கள்
நீங்கள் நிலைத்து நிற்காவிடில்
நதி எப்படி கீழே உருண்டு வரும்?
உங்கள் பிளவுகளில்
புற்களும் புதர்களும்
எப்படி வளரமுடியும்
உங்கள் சரிவுகளிலும்
பாதங்களிலும்
காடுகள்
எப்படி செழித்து வளரமுடியும்?
– பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியின் ஆதிவாசிப் பாடல்
***************

பிறப்பு
சிவன் பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா
நீங்கள்
இயேசு பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா?
நீங்கள்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்
நாங்கள்
கடவுள்களுக்கு
முன் பிறந்தவர்கள்
– தெற்கு பீகார் பகுதியின் கோயல் கேரோ அணைக்கட்டுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பாடப்பட்ட ஒரு ஆதிவாசி பாடல்
***************

நிலம்
நமது நிலம்
நமது ஆசிரியர்
நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்
நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
பிரார்த்தனை மூலம் மழையை வரவழைப்பது பற்றியும்
பயிர்களை கவனிக்கும் முறைகளையும்
கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுவது பற்றியும்
எப்போ எப்படி அறுவடை செய்வது என்பபது பற்றியும்
நமது அரசு அதிகாரிகளுக்குத் தெரியும்
நமது நிலத்தோடு நமக்குள்ள உறவு
ஆனாலும்
அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை
– சலோமி எக்கா, 46 வயது பெண், பட்குச்சுனு, ஒரிசா
**************

பூக்களின் திருவிழா
ஓ வீட்டின் வாசற்படியே
உனக்குப் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்கள்மீது கருணையோடிரு
எங்களின் தானியக் குதிர்களை
தானியங்களால் நிரப்பு
இது பூக்களின் திருவிழா
நாங்கள் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்களின் வீட்டு வாசலுக்கு
புதிதாய் பிறக்கப்போகும் வருடத்தில்
கடவுள்கள் வாழ்த்தட்டும்
உங்களது தானியக் குதிர்கள்
நிரம்பி வழிகிற வரை அவை நிரம்பட்டும்
உங்கள் பயிர்கள் வளர்ந்து செழிக்கட்டும்
பருவ காலங்களும் மாதங்களும்
திரும்பி வரட்டும்
பூக்கள் மீண்டும் மீண்டும் மலரட்டும்
நாம் இங்கேயே தொடர்ந்து வாழ்வோமென்றால்
பூக்களின் திருவிழா
மறுபடி வரட்டும்
– கார்வாலி மலையினப் பாடல், ஒரிசா
***************

படையல்
அன்பான முன்னோர்களே
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்?
நீண்ட பகலிலா, முடிவற்ற இரவிலா,
பாறையின் மீதான உச்சி வெயிலிலா
காட்டின் மழைக்கால மாதங்களிலா
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்
இன்று திரும்பி வந்து
எங்களது குறைவான
படயலை ஏற்றுக்கொள்ளுங்கள்
எங்கள் மகிழ்ச்சியைக் காணுங்கள்
பழமையான நிகழ்வை
மகிழ்ச்சியின் கொண்ட்டாட்டத்தை
தயவு செய்து காணுங்கள்
– ஹேமா மலையினப் பாடல்
***************

கனவுகள்
நாங்கள் கனவு காண்கிறோம்
எங்களின் மூதாதையர்கள் பற்றியும்
ஆவிகள் பற்றியும்
வாழும் முறை பற்றியும்
எதிர்காலம் பற்றியும்
இறந்தகாலம் பற்றியும்
கனவுகள் காண்கிறோம்
எங்களின் ஒவ்வொரு கனவிலும்
எங்கள் நிலத்தைக் கனவு காண்கிறோம்
எங்கள் நிலத்தில் வாழவில்லையெனில்
நாங்கள் மரணத்தைத் தழுவுகிறோம்
எங்கள் நிலத்திலிருந்து கிடைக்காத
ஆரோக்கியம் என்ற ஒன்று
எங்களிடம் இல்லை
எங்களின் மரணத்திற்குப் பிறகு
மூதாதையர்களாக நாங்கள் வாழமாட்டோம்
எங்கள் குழந்தைகள்
எப்படி ஒன்றுகூடி வாழ இயலும்
பயிர் செய்பவன் அழிந்துவிடுவான்
நாங்கள் முடிந்போவதை
அவர்கள்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அவர்கள் அதற்காக
காத்திருக்கிறார்கள்
– தர்கேரா ஆதிவாசிப் பாடல்
***************

கருப்பு இயேசுநாதர் / லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

இயேசுவானவர்ஒரு கருப்பனாக திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத
தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப் படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கு வாயில்கள்’ மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரியதே தவிர
சமயம் அல்ல.
ஆனால்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே!
நீர்
நிச்சயமாக
மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்கள்.
***************

சிரிக்கக் கற்றுக் கொடு மகனே / கேபிரியல் ஒகாரா / நைஜீரியா
முன்னொரு காலத்தில்
மகனே
அவர்கள் இதயத்தோடு சிரிப்பார்கள்.
கண்களால் சிரிப்பார்கள்.
ஆனால் இப்போது பற்களால் மட்டுமே சிரிக்கிறார்கள்.
அவர்களது பனிக்கட்டி மூடிய சில்லிட்ட கண்கள்
என் நிழல்களுக்கு பின்னாலும் துழாவுகின்றன.
அவர்கள் தங்கள் இதயங்களோடு
கை குலுக்கிய காலங்கள் இருக்கத்தான் செய்தன.
என் மகனே குழந்தாய்
இப்போது அவர்களின் வலது கை
இதயமில்லாமல் குலுக்குகிறபோது
இடது கை
எனது காலி சட்டைப் பாக்கெட்டுகளைத் துழாவுகின்றன.
“உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள்”
“மீண்டும் வருக” என்று சொல்கிறார்கள்.
ஆனால் நான் மீண்டும் வந்து
தன் வீடாக நினைக்கிறபோது
ஒரு முறை இரு முறை
மூன்றாவது முறை இருக்கப் போவது இல்லை.
ஏனெனில் கதவுகள் எனக்காக மூடிக் கொள்கின்றன.
நான் பலவற்றை கற்றுக் கொண்டேன்
மகனே நான் முகங்களை
அணியக் கற்றுக் கொண்டேன்.
அடிக்கடி மாற்றும் உடைகளைப் போல
வீட்டு முகம், அலுவலக முகம்
நடுத்தெரு முகம், விருந்து முகம்
மது அருந்தும் முகம் என்று
படங்களில் நிலையாக இருக்கும் சிரிப்புகளைப் போல
உறுதி அளிக்கும் சிரிப்புகள்.
என்னை நம்பு மகனே
நான் உன்னைப் போல இருந்த போது
எப்படி இருந்தேனோ
அப்படியே இருக்க விரும்புகிறேன்.
இந்த ஊமைச் செய்திகள் அனைத்தையும்
மறக்க விரும்புகிறேன்.
சிரிப்பது எப்படி என்று
மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்- 1982
***************

காற்றில் ஒரு முத்தம் / கிரிஸ்டோபர் ஒகிக்போ

நம் இருவருக்கிடையில் நிலா எழுந்தது.
ஒன்றை ஒன்று வணங்கிக் கொள்ளும்
இரண்டு பைன் மரங்களுக்கிடையில்
நிலாவுடன் சேர்ந்து காதலும் மேலெழுந்தது.
நமது தனிமையின் அடித்தண்டை
மேயத் தொடங்கி விட்டது.
நாம் இப்போது
ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் இரண்டு
நிழல்கள்.
ஆனால்
காற்றை மட்டுமே
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் 1982

– கவிஞர் இந்திரன் ✍ எழுத்தாளர், கலை இலக்கியப் பண்பாட்டுத் திறனாய்வாளர் & மொழிபெயர்ப்பாளர். ஆதிவாசி கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘ ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ என்று முதன்முதலில் நூலாகக் கொண்டுவந்தவர் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன். நன்றி : ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’, ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூல்கள், அந்திமழை இணையத்தளம் & இந்திரனின் முகநூல் பக்கம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *