நூலாசிரியர் பாமயன் ஒரு இயற்கையை நேசிக்கும் ஆளுமை. இயற்கை உரமிட்டு விவசாயம் செய்து சாதிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர்.
 சிறிய நூலானாலும் செழுமையானச்செய்திகளை கொண்டுள்ள நூல்.
உலகிலேயே வாழ்நிலப்பகுதிகளை திணை மண்டலங்களாகப் பகுத்து அதை இலக்கணப்படுத்தியவர்கள் தமிழர்கள்
இன்று உலகம் முழுதும் பேசப்படுகின்ற அறிஞர் fukoka கூறுகின்ற உழாத வேளாண் முறையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே செய்தவர்கள் குறிஞ்சி நில மக்கள். அம்மக்கள் சிறுபகுதி காட்டை தீக்கிரையாக்கி அந்த இடத்தில் விதைத்தும், பன்றிகள் மண்ணைக்கீறி கிழங்கெடுத்த நிலத்திலும் விதைகள் தூவி அறுவடை செய்தவர்கள். மலைபடுகடாம் என்ற சங்க நூலில்
“தாய்யாது வித்திய துளர்படு துடவை “என்று கூறப்பட்டுள்ளது. மலை நிலத்திற்குத்தேவையானது சாம்பல் சத்தும் பொட்டாசியமும் அதனால்தான்  அக்குறிஞ்சி நிலத்தவர் நிலத்தை எரித்துவிட்டு  உழாது விவசாயம் செய்தனர்.
முல்லையில் கலப்பையின் வருகை தொடங்குகிறது. ஆனால் மருத நிலத்தில்  பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. அக்கலப்பையை இழுக்கும் வலிமையான மாடுகளை பகடுகள் என்று அழைக்கின்றனர். மிகுந்த முயற்சியுடையவனை  வள்ளுவர் “மடுத்தவாயெலாம் பகடன்னான் “என்று கூறுகிறார்.
ஒரே கைப்பிடிக்குள் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது. அவ்வளவு திரட்சியான காய்கள் இருந்துள்ளன.
வேதநூல்கள் மண்ணைக்கீறுவது பாவம் என்று உழவுத்தொழிலைக் குறித்தபோது தமிழ் நூல்கள் உழவை பெருமையாகக்கருதின.வள்ளுவரின் குறள் எல்லோருக்கும் தெரிந்ததே. கம்பர் உழவுத்தொழிலை
“மேழி பிடிக்கும் கை 
வேல்வேந்தர் நோக்கும் கை 
ஆழித்தரித்தே அருளும் கை 
சூழ்வினையை நீக்கும் கை 
என்றும் நிலைக்கும் கை 
நீடூழி காக்கும் கை ” 
என்று சிறப்பிக்கிறார்.
உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களையேச் சாரும்.தமிழகத்தில் இருந்துதான் அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ரோமப்பேரரசின் வாயிலாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் ஆனது.
அரிசி என்ற சொல்
அரபி மொழியில் அல்ருஸ்,
ஸ்பானிய மொழியில் அராஸ்,
லத்தின் மொழியில் ஒரைஸா,
இத்தாலியில் ரைசே,
பிரெஞ்சில் ரெய்ஸ்,
ஆங்கிலத்தில் ரைஸ்,
என்றும் வழங்கப்படுகிறது. இச்சொற்களின் மூலமாக லத்தீன் மொழி கூறப்படுகிறது என்பதுதான் வேதனை.
மழை எப்படி உருவாகிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்துள்ளனர் என்பதே பெருமையான விஷயம். பட்டினப்பாலையில்  “வான் முகந்த நீர் மலைப் பொழியவும், மழைப்பொழிந்த நீர் கடற்பரப்பவும் “என்று குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பூவுலகில் நீரின் அளவு மறுபாடின்றி உள்ளது என்றும் அறியப்படுகிறது.
அரிஸ்டாட்டில் போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத்தண்ணீருக்கும் ஆதாரம் என்று கூறியிருந்தனர். நிலம் அதை உறிஞ்சி வெளியே கொண்டுவந்து ஆறாக ஓடச்செய்கிறது என்று நம்பினார்கள். தமிழரின் அறிவியல் அறிவு வியக்கத்தக்கதுதானே.
வேறுபாடில்லாமல் எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டியது மன்னனின் பண்புகளில் தலையானது என்பது பண்டைய தமிழர்களின் கோட்பாடு. இதை விளக்கவந்த புலவர் மழையை மன்னனுக்கு ஒப்புமை படுத்துகிறார்.
“அறுகுளத்து உகுத்தும் 
அகல் வயல் பொழிந்தும் 
உறுமிடத்து உதவாத உவர்நிலம் ஊட்டியும் 
வரையா மரபின் மாரி “என்று பாடுகிறார்.
மழை வருவதற்கான அறிகுறியையும் தெரிந்தே வைத்துள்ளனர். முக்கூடற்பள்ளு என்ற நூலில் வரும் வார்த்தைகளை அனைவரும் அறிந்தேயிருப்பர்.
மருதநிலம்தான் பாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
எகிப்தில் நைல் நதியின் வெள்ள அளவை குறிக்க நைலோமீட்டர் என்ற கருவி இருந்துள்ளது.
உலகில் பழமையான நாகரிகங்கள் இருந்த இடத்தில் அணை கட்டும் பழக்கம் இருந்துள்ளது, ஆனால் அக்காலத்தில் கட்டி இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது கரிகாலன் கட்டிய கல்லணைதான். இந்தக்கட்டுமானத்தை கண்டு, தன் தொப்பியை கையிலெடுத்து வணக்கம் தெரிவித்தாராம் ஆங்கில பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்.
தமிழர் வேளாண்மை – Agriculturalist
ஆறுகளைத்தவிர்த்து செயற்கை குளங்களை அமைத்து பாசன வசதியை பெருக்கினார். தமிழர் நீர் நிலைகளுக்கு, “படுகர், தாங்கள், கேணி, பல்வலம், படு, பட்டம், மடு, உவளகம், பண்ணை, வாவி, வட்டம், தடம், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி, கண்மாய், சுனை, பொழில் “என்று பெயரிட்டு அழைத்தனர். என்ன நண்பர்களே மூச்சுவாங்குமே, படிப்பதற்கே இப்படியென்றால் பெயர் வைத்தவர்களை வியக்காமல் இருக்கமுடியுமா?
நீர் தேக்கத்தை தடுத்து நிற்பதை நாம் ஒற்றை வார்த்தையில் அணை என்கிறோம், அந்த அணைக்கு “வாரம், பாரம், கோடு, வரை, கூலம், தீரம் என்றும் பெயரிட்டுள்ளனர்.
ஆற்றிலிருந்து வயல்களுக்கு நீர் கொண்டு போகும் வாய்க்கால்கள், “கூற்றன் வாய், வாய்தலை, தலைவாய், முகவாய்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிற்காலச்சோழர்கள் காலத்தில் எண்ணற்ற ஏரிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதலாம் ராசேந்திரச்சோழன் காலத்தில் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டபோது, அந்நகருக்காக அப்பேரரசன் கங்கைகொண்ட சோழப்பேரேரியை உருவாக்கினான். இன்று திருச்சிமற்றும் தஞ்சை மாவட்டங்களில் அமைந்த ஏரிகள் கால்வாய்கள்(வாய்க்கால்கள் )எல்லாம் சோழர்களது நினைவைத்தாங்கி நிற்கிறது.
தமிழகத்தின் பாசன வரலாற்றில் பாண்டியப்பேரரசுக்குஅடங்கிய இலுப்பைக்குடி கிழவன் என்ற சிற்றரசனுக்கு மிகச்சிறந்த இடம் உண்டு. சாத்தூர், கோவில்பட்டி விளாத்திகுளம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் அடங்கிய “இருஞ்சோணாடு “என்ற பகுதியை ஆண்டவன். கிழவனேரி, மாறனேரி, திருநாராயண ஏரி, பெருங்குளம் போன்ற கண்மாய்களை உருவாக்கி அந்தப்பகுதியில் பசுமையை உருவாக்கியவன்.
ஆற்றில் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகளுக்கு நீர் கொண்டுசெல்லும் தொழில் நுட்ப அறிவு தமிழர்களுக்கு இருந்துள்ளது.
பாண்டியர் காலத்தில் உருவான சங்கிலித்தொடர் ஏரிகள் இன்றும் பலரை வியப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக எங்கள் ஊரையே நான் கூறலாம்.
மேற்கு தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள பூவலச்சேரி கண்மாய்க்கு அழகர்கோயில் ஓடை மற்றும் வரட்டாறு ஆகிய இரண்டு நீர்வழிகள் வந்து சேருகிறது. பூவலச்சேரி கண்மாய் பரவில் உள்ள வயல்களுக்குப் பாய்ந்து, அங்கிருந்து வெளியேறும் நீர் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கழுவாய் குளத்திற்கு வந்து சேருகிறது,அந்தக்குளத்தின் கீழுள்ள வயல்களில் பாய்ந்து அந்நீர் வெளியேறி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியார் கண்மாய்க்கு வந்து சேருகிறது, பின்னர் அங்கிருந்து வயல்களுக்குபாய்ந்து கலிங்கு வழியாக மீண்டும் வரட்டாறு சேர்ந்து முதலியார் கண்மாய்க்கு போகிறது, அதன் கீழுள்ள வயல்களுக்குபாய்ந்து பின்னர் வைகையில் கலக்கிறது. சொட்டு நீர் கூட வீணாக்காமல் நீரைப்போற்றிய நம் முன்னோர்களை நினைத்து பெருமைப்படலாம், நீரின் பயனறிந்து சிக்கனமாக செலவழிப்போம்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.
நூல் =பழந்தமிழர் வேளாண்மை 
ஆசிரியர் =பாமயன் 
பதிப்பு =பூவுலகின் நண்பர்கள் 
விலை =ரூ. 25/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *