பெண் உணர்வுகளும் அவளின் மனசும் அவளின் ஆசைகளும் எப்பொழுதுமே இங்கு ஆண்களால் உதாசீனப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. வெளிப்படுத்த முனையும் பொழுது அவள் குறித்த கீழான பார்வை ஆண்களால் பரப்பப்படுகிறது அல்லது அவளின் உறவு துண்டிக்கப்படுகிறது. அவளைத் தனிமைப்படுத்த ஆண் தன்னால் முடிந்த அனைத்து சாகச வேலைகளை நடத்திட தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இவைகளையும் மீறி சுய கௌரவத்தோடும் மரியாதையோடும் வாழ நினைக்கும் பெண்களும் எல்லா பிரச்சனைகளையும் நேர் எதிர் கொண்டு வாழ்ந்து தான் வருகிறார்கள், தொடர்ந்திருக்கும் ஆணாதிக்க சமூகத்தில்.
இப்படியான கதைகளைத் தான் எழுத்தாளர் புலியூர் முருகேசன் தற்போது வெளிவந்திருக்கும் பீ தணக்கன் தொகுப்பிலும் பேசி இருக்கிறார்.
பெண் மனதின் துயரங்களை வேதனைகளை பதிவாக்கி இருக்கிறார். பெண்களின் மன உறுதியைப் பேசியிருக்கிறார் இந்தத் தொகுப்பில் இருக்கும் மூன்று கதைகளுக்குள்ளும்.
மூன்று கதைகளுமே ஆண்கள் பெண்களும் அவர்தம் காதலும் பிரியங்களும் பாசமும் அவர்கள் மனதில் எப்படி கட்டமைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேர்த்தியாக சொல்லி முடித்திருக்கிறார்.
அவருடைய சிறுகதைகளில் எப்பொழுதுமே குடும்ப உறவுகளில் நடைபெறக்கூடிய அன்பின் தவிப்பு, ஊசலாட்டம், பேச முடியாத வலி..
செங்கொடி தோழர்களின் தியாகம்..
போராட்டம் இவைகளை புனைவுகளோடு எளிய வார்த்தைகளில் கவித்துவமும் அழகியலும் கைகோர்த்து படைத்து வரக்கூடியவர் தோழர் புலியூர் முருகேசன்.
பீ தணக்கன் தொகுப்பில் இரண்டு கதைகள் வழக்கமான கதைகளில் இருந்து இன்றைய நுகர்வு கலாச்சாரம் எல்லோரையும் கொன்று தின்று கொழுத்து இருக்கக்கூடிய சூழலில் பேரன்பின் பெயராலும் நேசத்தின் முகமூடி அணிந்தும் காதலை கைகொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அன்பினை மறந்து வஞ்சகத்தோடு தன்னை மட்டுமே தங்களை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து கொண்டு வருவதில் ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து என்பதைக் கதையாகச் சொல்லி இருக்கிறார்.
“திசையெங்கும் இடது கை தழும்புகள்” என்கிற சிறுகதையில்
தங்களின் சுயநலத்திற்காக “அவனுக்குள்” காதல் தீயை மூட்டி; “அவனை” அதற்குள் இழுத்துத் தள்ளி, தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக “அவனிடம்” இருக்கும் வசதியை வஞ்சனையான வார்த்தைகளைப் பேசி, தன்னை ஒருவர் காதலிப்பதாக நாடகம் நடத்திய காதலர்கள்தான் சந்திரன் காயத்ரி. இந்த இருவரிடமும் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம், தன்னை காதலிக்காத ஒரு காதலியின் பெயரால் என நினைத்திடும் பொழுது “அவனின்” மனம் வேதனையின் வலியின் ஆழத்தில் துடித்துக் கொண்டிருக்கும் – காதலை பேசிக் கொண்டிருக்கும் சமூகத்தை நினைத்து.. நிஜமான நேசம் மிகுந்த காதலர்களை அவனின் மனசு இனி எப்படி எல்லாம் உற்று நோக்கும் என்பதை கதை வாசிப்பவரின் அனுபவத்திற்கே விட்டு விடுகிறார் கதை ஆசிரியர்.
அது சரி “அவன்” யார்.? “அவனை” அறிந்தவர் எழுத்தாளர் புலியூர் முருகேசன் மட்டுமே.
அப்படியான “அவனை”.. “அவர்களை” நாமும் பல இடங்களில் பார்க்க நேரிடும், பார்த்துக் கொண்டிருப்போம்.
எல்லா உணர்வுகளும் எல்லா உரிமைகளும் இங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே என்று பலர் பேசிக் கொண்டிருந்தாலும் ஆண் எப்பொழுதுமே பெண்ணை தன்னுடைய சொத்தாகவே பாவிக்கிறான். தன்னுடைய எல்லா விதமான நிகழ்ச்சி நிரலுக்கும் அவன் சார்ந்திருக்கும் பெண்கள் அனைவரையும் வசியப்படுத்தியோ, வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றியோ அல்லது அடக்கு முறையை கைக் கொண்டோ பெண்ணை சம்மதிக்க வைக்கிறான். முற்போக்கு பேசிக் கொண்டு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் ஆண் கூட தன்னை பவ்யமாக ஜனநாயகத்தின் பெயரில் தன்னுடைய மனைவி விருப்பப்படுகிறார், தன்னுடைய அம்மா கேட்டுக்கொள்கிறார், தன்னுடைய பாட்டியின் கண்டிப்பான விருப்பம் இது என்று தன்னை வசமாக மறைத்துக் கொள்கிறார்.
பெண் உணர்வுகளை நசுக்கி கொண்டே அவளின் உரிமைகளை கருவறுத்துக் கொண்டே. தன்னுடைய எல்லாவித அருவருப்பான செயல்களை பாதுகாத்துக் கொள்ள.. எதிரியை நோக்கி பெண்களை ஈட்டியாகவும் தேவையான இடங்களில் கேடயமாகவும் கைக் கொள்கிறான். இப்படியான ஈனச் செயல்கள் மிகுந்த ஆண்களும் பொதுச் சமூகத்தில் நிறையவே இருக்கிறார்கள். அப்படியான ஒருவன் தான் இங்கே தன்னுடைய காதலியையும் காதலையும் கையில் எடுக்கிறான். இருவரும் நிஜமாக காதலிக்கிறார்கள். நேர்மையாகவும் பழகுகிறார்கள்.
தனிமையில் அவர்கள் சந்திக்கும் இடங்களை மௌன மொழிகளால் காதல் வெளி எங்கும் அன்பால் நிரப்பிக் கொள்கிறார்கள். காலத்தின் கரங்களால் இருவருமே பிரித்து வெவ்வேறு இடங்களில் வீசப்படுகிறார்கள். அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். உடல்கள் மாறினாலும் உள்ளம் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே. 10 வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு தகவல் வருகிறது அவனின் காதலியிடமிருந்து, “உன்னை நான் சந்தித்து உன்னோடு பேச வேண்டும்” என்று. தன்னுடைய காதல் நிஜம் நிறைந்தது நேர்மையானது உடல் ஈர்ப்பு அற்றது. அதனால் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவள் நம் மீது அன்பை செலுத்த காத்திருக்கிறாள் என்று திமிர் கொள்கிறான்.
அவளுக்கு திருமணம் நடந்தது அவனுக்கத் தெரியாது.. அவளுடன் இருந்த அவளின் அம்மாவும் இப்பொழுது உடன் இருக்கிறாரா என்பதும் அவனுக்குத் தெரியாது. அவளோடு நம்முடைய உறவை புதுப்பித்துக் கொண்டு தொடர வேண்டும் என காதல் அவனை உந்தித்தள்கிறது.. இதற்கு தன்னுடைய மனைவியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அவளைப் பார்க்கச் செல்கிறான். அவனும் அவளும் ஏற்கனவே இருந்த அதே வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அவளின் அம்மா இல்லை. இடைப்பட்ட காலத்தில் இறந்து போயிருக்கிறார். இருவரும் சந்தித்துக் கொள்ளும் அதே இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். இப்பொழுதும் மௌனம் தான் அவர்கள் இருவரின் காதல் மொழியாக இருக்கிறது. கடந்த கால நினைவுகள் எல்லாம் அவர்களுக்குள் மீண்டும் பிச்சுப் பூவின் வாசமாய் கிளர்ந்தெழுகிறது. அரை எங்கும் அன்பின் வாசம் நிறைந்து காணப்படுகிறது.
காட்டுப் பூக்கள் ஆங்காங்கே மொட்டவிழ்ந்து அசைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் காதல் காட்டில் அடர்ந்து கிடக்கும் பச்சை மரங்களின் இலைகளும் காற்றும் உரசிக் கொள்ளும் சத்தம் மட்டுமே இருவருக்கும். அமைதியான நாழிகைகள் அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. மௌனத்தால் காதல் பேசியே இருவரும் மகிழ்ந்து கிடக்கிறார்கள். அன்றைய பிரிவின் நேரம் அவனை நெருங்கிட அவளிடம் அவன் சொல்லிவிட்டு கிளம்பும் முற்படும்பொழுது அவள் பேசுகிறாள்.
எனக்கு திருமணம் ஆகியிருந்தாலும் உன்னுடைய காதல் மௌன மொழியும் தேவைப்படுகிறது அதனால் “உன்னோடும்” நான் இருக்க ஆசைப்படுகிறேன்.. அடிக்கடி இங்கு வந்து போ என்கிறாள்.
உன்னுடைய மௌனம் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறது. அந்த மொழி எனக்கு உற்சாகம் தருகிறது. “உன்னோடும்” நான் இருக்க விருப்பப்படுகிறேன் இனி எப்பொழுதும்.
அவசியமாக வா என்று முடிக்கிறாள்.”உன்னோடவும்” என்கிற வார்த்தையை கேட்டமாத்திரத்தில் அவனுக்குள் வெப்பம் வெடித்து கிளம்புகிறது.. அதிர்ச்சி அவனுடைய முகத்தில் நீர்த் திவாலைகளை முளைக்கச் செய்கிறது.
அவளின் அன்பை அறுத்தெறிந்து அந்த நிமிடத்திலேயே அவன் வெளியேறுகிறான்.
தன்னுடைய செயலுக்கு ஒரு நியாயம் கற்பிக்கும் ஆண்.. தன்னுடைய மனைவியின் சம்மதத்தோடு முன்னாள் காதலியை தன்னோடு நிறுத்திக் கொள்ளலாம் என நினைக்கும் அவன்..
அதே செயலை அவனின் காதலி செய்ய முற்படும் பொழுது அதை ஏற்றுக்கொள்ள அல்லது தாங்கிக் கொள்ள அவனது உடலும் மனதும் ஒத்துழைக்க, ஏற்க, சம்மதிக்க மறுக்கும் எண்ணத்தை செயலை அவனுக்குள் யார் கட்டமைத்துச் சென்றது? மனசும் காதலும் ஆண் பெண் இருவருக்கும் ஒன்றுதானே காதல் உணர்வு என்பது ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் இருப்பது இயற்கையில்லையே.. ஆனாலும் அப்படி இருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொல்லி இந்த ஆணுக்கு யார் கட்டளையிட்டது?
ஆண் பெண்ணின் சம்மதத்தோடு எத்தனை பெண்ணோடும் உறவு
வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதே செயலை ஒரு பெண் செய்ய முற்பட்டால் அவளை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது? ஆண் மனது அவரை எப்படி எதிர்நோக்குகிறது?
இப்படியான கேள்விகளை வாசக நெஞ்சங்களுக்குள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கதை ஆசிரியர்.
“அறுபடும் நூலிழைகளை நெய்யும் கசடன்” மிக முக்கியமான கதையாகப் பார்க்கிறேன்.
உலகமே நிலைகுலைந்து போனாலும் பெண் மனது உறுதியானது. அந்த உறுதிக்கு முன்னால் எந்த ஒரு வார்த்தையும் நிற்காது என்பது தான்
“களத்துவூட்டம்மாவும் அயிரை மீன் குழம்பும்” . யாரிடம் நேர்மையை எதிர்பார்த்து காத்திருக்கிறோமோ அவரே நம்முடைய நடத்தையையும் செயலையும் அசிங்கப்படுத்தி உதாசீனப்படுத்தி வலி மிகுந்த வார்த்தைகளை பேசி வீசிவிடும் பொழுது அந்த வலி உயிர் போகும் வரை மனதை விட்டு விலகாது. அழிக்க முடியாத அடையாளமாக மனசுக்குள் அறுத்துக் கொண்டே இருக்கும் உயிர் மூச்சு நின்று போகும் வரை.
கதை எழுதும் பாங்கு, சொல்லும் முறை வித்தியாசமாக இருக்கும் இந்தக் கதையில்.
காணொளிகளில் நாம் இரட்டை வேடத்தைப் பார்க்க முடியும். ஆனால் இந்தச் சிறுகதையில் செய்து காட்டி இருக்கிறார் எழுத்து வழியாக கதையாசிரியர். வாசிப்பின் கடைசியில்தான் தெரியும் களத்துவூட்டம்மாவும் மீனாட்சியும் ஒருவர்தான் என்று.
களத்துவூட்டம்மா என்கிற மீனாட்சியின் இளமைக்கால துள்ளலை விளையாட்டுகளை ஆண் பிள்ளைகளுக்கு சமமாக கழனி காடுகளிலும் தெருக்களிலும் நின்று விளையாடியதை.. பின்நினைவுகளை அசைபோடும் எழுத்துக்களாக கதைக்குள் கொண்டு வந்திருப்பார். ஓடையில் துள்ளி ஆடிய , எகிறி குதித்த அயிரை மீன், இவள் வசத்தால் மீன் சட்டியில் குழம்பாக கொதிக்கும் பொழுது தெருவே மணக்கும்.
திருமணமான புதிதில் மரு வீட்டிற்குச் சென்ற மீனாட்சி தன் கணவனுக்காக மல்லிகா அக்கா கொண்டு வந்து கொடுத்த அயிரைமீனை குழம்பாக்கி, சோறு கொடுக்கிறாள். புது மனைவிக்கு என்று ஒரு மீன்கூட வைக்காத அவளின் கணவன் தின்று முடித்ததும் மீனாட்சியின் முகத்தைப் பார்த்து” மீன் அவ்வளவுதானா.. தனியா நீ தின்பதற்கு எடுத்து வைத்துக் கொண்டாயா.? பொட்டச்சிக்கு நாக்கு ருசி கூடாது.. அதை அடக்கி வைக்கணும்.. அடக்க வில்லை என்றால் தெருவெங்கும் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலையும்” என்று அசிங்கமாக பேசி அவளை பார்ப்பான்.
அன்று அவன் பேசிய அந்த ஒற்றை சொல் தான் களத்துவூட்டாம்மாவின் வாழ்நாளின் இருப்பு வரை குடும்ப உறவுகளான மகன் மருமகள், மகள் மருமகன் பேரக்குழந்தைகள் இப்படி எல்லோருக்கும் அயிரை மீனை ஆக்கிப் போட்டாலும் தான் மட்டும் தொடாமல் உறுதியாக இருக்க வைத்தது ரோஷம் மிகுந்தவளாக சுயமரியாதை மிகுந்த மீனாட்சியாக. கதையினை வாசிக்கும் பொழுது கொழம்பு சட்டியில் கொதிக்கும் மீனாக மனசு கொதித்துக் கிடக்கும். அயிரை மீன் குழம்பு மீனாட்சி மனசின் வலி மிகுந்த வாசமாக நம்மை தீண்டிச் செல்லும்.
ஆதிக்க சாதி சாமியாடியாக இருக்கும் பொழுது ஊரில் ஏமாற்று வேலைகளை செய்வதோடு அல்லாமல் நல்ல எண்ணம் கொண்டவர்களை நேர்மையாளர்களை தைரியமானவர்களை கிராம மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் அவர்களையும் வஞ்சகமாக வரவைத்து விபத்தாக்கி கொலை செய்யும் பாதகச் செயல்களை
பீ தணக்கன் கதையில் விரிவாக பதிவாக்கி இருக்கிறார் ஆதிக்க வெறிகொண்ட சாதியின் அத்தனை அடையாளங்களோடும் தோழர் புலியூர் முருகேசன்.
காதல் திருமணங்கள் பஞ்சாயத்திற்கு வரும் பொழுது கீழ் சாதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் மட்டுமே பஞ்சாயத்திற்கு வந்த இரண்டு மூன்று நாட்களில் இறந்து போவார்கள். சாமி ஆடி மந்திரித்து கொடுக்கும் தீர்த்தம் தான் இந்த மரணங்கள் அனைத்திற்கும் காரணமானது என்பது எவருக்கும் தெரியாமல் இருக்க கடவுள் நம்பிக்கைகளை பயன்படுத்திக் கொள்வது. பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும் குன்றின்மணி தீர்த்தத்தோடு சேரும் பொழுது விஷமாகி கொல்லும் கொடூரம்.
அழகும் வண்ணமும் அதன் வனப்பும் எவர் கைகளுக்குள் அடையும் பொழுது அழகாகவும் வண்ணமுமாகவும் வனப்பு மிகுந்ததாகவும் தெரியும் என்பதை பூடகமாக சொல்லி இருக்கிறார் கதை ஆசிரியர் மனிதர்களும் அப்படித்தான் என்பதை.
எளிய உழைக்கும் மக்களின் வாழ்வினை மேம்படுத்த தொடர்ந்து களத்தில் நின்று சமர் புரியும் கம்யூனிஸ்ட்களின் உயிர் வாழும் சமூகத்திற்கு அவசியமானது என்பதை கதை சொல்லும் உத்தியில் புதிய பாங்கோடு நுழைத்து இருக்கிறார் எழுத்தாளர் புலியூர். எதிர்பாராத விபத்து ஒன்றில் இளம் வயது தோழனின் மரணத்தை உள்வாங்கிய பதைபதைப்பில் அவனின் இருப்பென்பது, ஆதிக்கத்தால் அதிகாரத்தால் தினம் தினம் வலிபடும் சமூகத்திற்கு, தேவையின் மகத்துவத்தை உணர்த்தி இருக்கிறார் எழுத்தாளர்.
தொகுப்பில் எட்டு கதைகள் இருக்கிறது எட்டு கதைகளும் வெவ்வேறு தளங்களில் நமக்கு கதை ஆசிரியரின் அனுபவத்தோடு கொடுத்திருக்கிறார்.
வாசிக்க வேண்டிய விவாதம் செய்ய வேண்டிய கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பீ தணக்கன்
தோழர்கள் அவசியம் இதனை முன்னெடுக்க வேண்டும். வாசிக்க வேண்டும்.
அன்பும் மகிழ்ச்சியும் தோழர் புலியூர்.
கருப்பு அன்பரசன்.
நூலின் பெயர்: பீ தணக்கன் [சிறுகதைத் தொகுப்பு]
ஆசிரியர்: புலியூர் முரு
பதிப்பகம்: குறி வெளியீடு.
பக்கங்கள்:96
விலை: ரூ 100/-